கடந்த காலத்திற்கு பால்யகால நண்பர்களின் சாயல் இருப்பதாக எனக்குத் தோன்றும். அவர்கள் மட்டுமே அறிந்திருக்கும் நமது முகத்தை இப்போதும் இனி வரும் எப்போதும் ஒருவரும் அறிந்திடப் போவதில்லை. அவர்கள் வீட்டுக் கதவுகள் நமக்காக எவ்வேளையிலும் திறந்திருக்கும் என்று நமக்கும் தெரியும். ஆனாலும் அவர்களைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் பெரும்பாலும் தோன்றுவதில்லை. அவர்கள் இருந்தனர். நிறைவாக இருந்து முடித்து விட்டனர் என்னும் பிணைப்பின் நம்பிக்கையே இனி வரும் காலத்திற்கு போதுமானதாகிவிடுகிறது. வாழ்வின் ஒவ்வொரு கணத்திற்கும் நியாயம் செய்து வாழப் பழகியவர்கள், தாங்கள் கடந்து வந்த பாதைகளில் மீண்டும் பயணிக்க எண்ணுவதில்லை. அக்கணங்களை தங்கள் தோள்களிலேயே சுமப்பதால், அவை தந்த பாடங்களின் வாயிலாக ஒவ்வொரு பயணத்திலும் மறுபிறவியெடுத்தது போலவே அவர்கள் உணர்கிறார்கள்.
தென்மேற்கு பருவமழை தனது வருகையை கேரளாவில் பதிவு செய்து பொழியத் தொடங்கும் அதே நாள்களில் வடகிழக்கிந்தியாவிலும் பருவமழைக்காலம் தொ்டங்கி விடும். வனப்பகுதிகளிலும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் மேட்டு நிலங்கள் நோக்கிச் செல்வதைப் பார்க்கமுடியும். பிரம்மபுத்ரா பொங்கிப் பெருகிப் பாயும்போது ஏற்படப் போகும் சீரழிவுகளிலிருந்து மீள்வதற்கே சில மாதங்கள் ஆகுமென்று அவர்கள் நன்கு அறிந்தே தமது உடைமைகளையும் இல்லங்களையும் பிரிந்து செல்வர். அவர்களுக்கு இது வருடம் தோறும் நிகழும் போராட்டம். நீர் குளங்கள் நிறைந்து பேரெழில் கொஞ்சும் காட்சிகள் பருவமழைக் காலங்களில் அங்கு அநேகம் வாயப்பதுண்டு. நெளமியின் வீட்டில் மூன்றாவது தளத்தில் நான் வசித்திருந்த நாள்களில் அங்கிருந்துப் பார்த்தால் அல்லியும் தாமரையும் நிறைந்துத் ததும்பும் ஓர் அழகிய குளமொன்று இருந்தது. வருடத்தின் பெரும்பகுதி நாட்களும் அக்குளத்தில் மலர்களும் மீன்களும் வாத்துகளும் நிறைந்து காணப்பட்டன. வாரத்திற்கு ஓரிருமுறைகள் சிலர் வந்து அக்குளத்திலிருந்து தாமரை வேர்த்தண்டுகளைப் பறித்துச் செல்வதுண்டு. சேகரிக்கும் தண்டுகளையும் குளக்கரையில் வாழும் கொழுத்தத் தவளைகளையும் நத்தைகளையும் மூங்கில் கூடைகளில் நிரப்பி புதன்கிழமை சந்தைகளில் அவற்றை விற்று அப்பணத்தை எடுத்துக்கொண்டு தங்களது மலைகிராமங்களுக்கு சென்று விடுவார்களென நெளமி கூறுவாள். மீண்டும் அடுத்த புதன்கிழமை காலையில் அவர்கள் குளத்திலிறங்குவதைக் காண முடியும். அவர்களது வாழ்வில் அவசரம் பரபரப்பு என்ற பதங்களுக்கு பொருளிருந்ததா என்றுத் தெரியவில்லை. சில நாட்களில் மீன் வலைகளை குளத்தில் பைகள் போல் மூழ்கச் செய்துவிட்டு மாலை வேளைகளில் அவற்றில் குவிந்திருக்கும் மத்தி வகை மீன்களை சிலர் எடுத்துச் செல்வதுண்டு. இக்காட்சிகளெல்லாம் பழகிப் போகுமளவுக்கு நானும் அல்லிக் குளமும் நெருங்கிய நண்பர்களாகி விட்டிருந்தோம்.

இயற்கையை அதன் உண்மையுருவில் கண்டவர்களுக்குத் தெரிந்திருக்கும், மனிதன் தான் கண்டு அஞ்சியவற்றையெல்லாம் கடவுளாக்கித் தொழத் துவங்கினானென்று...
அமைதி, உவகை இவையெல்லாம் இயற்கையின் உபரிக் கொடைகள். அதன் வேர்க் குணம், பிரமாண்டம், ஆழம், சூனியம் இவையெல்லாம் சேர்ந்துத் தோற்றுவிக்கும் அச்சம். இயற்கை அப்பகுதிகளை அருகாமையில் வைத்திருப்பதாலேயே அவற்றின் நிலமும், மலையும் நதியும் வளமையால் செழித்தாலும் அவ்வபோது மனிதர்களை அவை துன்புறுத்திப் பார்ப்பதுமுண்டு.
பருவ மழை தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பே காஜிரங்கா வனப்பகுதி மூடப்படுவதாக அறிவிப்பு வந்துவிடும். அது அப்பகுதி மக்களுக்கான முதல் எச்சரிக்கை மணி. வனப்பகுதியைக் கிழித்துக்கொண்டு பாயும் பிரம்மபுத்ரா ஏற்படுத்தப்போகும் சீரழிவுகளைக் குறித்த உரையாடல்கள் அன்றாட பேச்சாகிப் போகும். எப்போதாவது ஏற்படும் வெள்ளத்துக்கும், புயல் சேதத்துக்கும் அஞ்சி ஆர்பரிக்கும் நம்மைப் போன்றவர்களின் கற்பனைக்கும் எட்டாத அளவில் இயற்கை தனது கோரத்தாண்டவத்தை ஒவ்வொரு வருடமும் அங்கு அரங்கேற்றிக் கொண்டுதானிருக்கிறது. நீரில் மிதந்து வந்து கால்வாய்களை அடைத்து விடும் மிருகங்களின் சடலங்களை அகற்றுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. மிருகங்கள் என்றால் நாய்களும் பூனைகளுமல்ல. காட்டெருமைகள், காண்டா மிருகங்கள், கடாமான்கள் யானைக் குட்டிகளென வனப்பகுதிகளிலிருந்து அடித்து வரப்படும் அவற்றின் உயிரற்ற கண்கள் நம்மை வெறித்துப் பார்த்தபடி சாலையோரங்களில் ஒதுங்கியிருக்கும். இயற்கையை அன்னை மடியென நினைத்துக் களிக்கும் மனிதர்கள் கூற்றுவனிடம் மன்றாடுவது போல வேண்டுவதும் பகைவனை சபிப்பது போல் சினங்கொள்வதும் அந்நேரங்களில் நிகழ்வதுண்டு.

நெளமி தாமரை வேர்த்தண்டை ஒருமுறை பக்குவமாக சமைத்துக் கொடுத்தாள். அதோடு சில தாமரை விதைகளையும் கொடுத்து மாடியிலிருந்த நீர்த்தொட்டியில் விதைத்துக் கொள்ளுமாறு கூறினாள். அவ்விதைகளை அவளிடமிருந்து வாங்கிய வேகத்தில் வீசியெறிந்து விட்டேன். நெளமி திகைத்தாள். தாமரை விதைக் காய்களை முதன்முறையாக அப்போதுதான் பார்த்தேன்.
காணுமிடங்களெல்லாம் தாமரை விதை கண்கள் போல் தெரிந்தன. உடல் வியர்த்து உணவு உட்கொள்ள முடியாமல் போகுமளவிற்கு அச்சமும் அசூயையும் அவ்விதைகளின் தோற்றம் என் உளவியலை பெருமளவு பாதித்து விட்டிருந்தது. மருத்துவ மொழியில் அதனை `Trypophobia' என்றார் மருத்துவர். சிறு துளைகளைக் காணும் போது உண்டாகும் அச்ச உணர்வு அது. தாமரை மலர்களை கையிலேந்தி பார்க்க வேண்டுமென்று விழையாத மனமே இருக்க முடியாது. நானுமே அல்லி மலர்க்குளத்திலிருந்து தாமரை மலர்களைப் பறித்து வந்து வீட்டில் நீர் வாளியில் மிதக்கச் செய்ததுண்டு. அழகும் வசீகரமும் குரூரத்தின் மொழிபெயர்ப்புகளே என்பதற்கு தாமரை மலர்களையும் அதன் விதைக் காய்களையும் பொருத்திக் கூறலாம். இப்போது இதனை பதிவிடும் போது என் உள்ளங்கையில் அச்சத்தின் வியர்வை படர்வதை என்னால் உணர முடிகிறது.

நெளமியின் வீட்டில் குடியிருந்த நாள்களில் என் ஆர்வத்தைத் தூண்டிய மற்றொரு விஷயம் அப்பகுதி வீடுகளின் உறுதியான கட்டுமானம். நிலநடுக்கங்களுக்கு வலுவிழந்து இடிந்து விடாமலிருப்பதற்காகவே பல அடுக்கு கற்கள் பொருத்தியப் பிறகே பூச்சு வேலைத் தொடங்கும். உறுதியான தூண்கள் அவ்வீடுகளைத் தாங்கி நின்றன. கடந்த ஏப்ரல் 2021-இல் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வலிமையான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அத்தகைய நிலநடுக்கங்கள் அங்கு வெகு சாதாரணம். நான் அங்கு வசித்தபோதே பலமுறை நிலம் அதிரந்து நடுங்கியிருக்கிறது.
அது தோல்வி மனநிலையில் நான் துவண்டிருந்த காலம். அப்போதெல்லாம் தனிமையை மட்டுமே துணைக்கு அழைத்துக் கொண்டு அமர்வேன். தோல்வி நிலை என்றால் ஏதோ தேர்வில் தோல்வியோ, காதல் தோல்வியோ, மணமுறிவோ என்ற பொருளில் இல்லை. வாழ்வின் கேள்விகளுக்கு பதிலேதும் கிட்டாத ஒரு தோல்வி மனநிலை. அடையாளங்களைத் துறந்த பின் ஏற்படும் சூனிய நிலை அது. எல்லொருமே நண்பர்களாகத் தெரிந்தாலும் யாரிடமுமே நெருங்க முடியாததொரு நிலை. கேள்விகளெல்லாம் உலகத்திடமில்லை மாறாக என்னுள்ளேயே நான் கேட்கத் தொடங்கியிருந்த காலம் அது. நான் ஏன் இந்நேரத்தில் இங்கு வாழ்கிறேன்.

எந்தத் திட்டமிடலுமின்றி நதி போகும் பாதையில் பயணிக்கும் கூழாங்கல் போல் வாழ்க்கை அதன் முழு வீரியம்கொண்டு என்னை செதுக்கிக் கொண்டிருந்த நேரமது. வலி நிறைந்த அம்மாற்றத்திற்கு தனிமை மட்டுமே அருமருந்தாக இருந்தது. பின்னிரவு நேரங்கள் பெரும்பாலும் அக்குளத்தை வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருப்பது வழக்கம். பகல் விடிந்ததும் கதிர்ப் போர்வை போர்த்திக்கொண்டு இளைப்பாறும் அல்லி மலர்கள் இரவு நேரங்களில் நிலவின் அமுதமுண்டு களிநடம் புரிவதுபோல் இதழ்விரித்து அசைந்தாடுவதை வேடிக்கைப் பார்ப்பது எனக்குப் பிடித்திருந்தது. வானில் கருமை நீலமாக மெல்ல மாறத் தொடங்கியதும் அல்லிக் குளமும் பசுமையாகத் தெரிந்தது. அக்காட்சியின் வர்ண ஜாலத்தில் மயங்கிப் போன மனமும் உடலும் காற்றினும் இளகி சிறகுகள் விரித்து படபடக்கத் தொடங்கின. அக்காட்சி அரங்கேறிக் கொண்டிருந்த போதே குளத்து நீரில் சுழல் வட்டங்கள் தோன்றின.

நான் கண்டுணர்ந்த முதல் நிலநடுக்கம் அது. இதயத்துடிப்பு அதிகரித்து விட்டிருந்தது. உறங்கிக் கொண்டிருந்த மகனை அள்ளியணைத்துக் கொண்டு மாடிப்படிகளில் இறங்கித் தடுமாறியபடி ஓடி தெருவில் கூடியிருந்த அனைவருடனும் சேர்ந்து நின்று கொண்டேன். நெளமியும் பத்மபென்னும் என்னை அரவணைத்துப் பிடித்துக் கொண்டனர். சுற்றி நின்ற அனைவரும் தத்தமது உறவினர்களும் நண்பர்களும் பாதுகாப்பாக இருக்கின்றனரா என்று அவர்கள் பெயரை கூச்சலிட்டு உறுதிப் படுத்திக் கொண்டனர். நிலைமையின் தீவிரமேதும் புரியாமல் துயில் கலைந்து என்னைப் பார்த்த மகனிடம் ``எர்த் க்வேக் டா" என்றேன். அவன் ``அப்படியா" என்று தலையசைத்து விட்டு மீண்டும் என் தோள்களில் உறங்கிப் போனான். நிலம் அப்போதும் மெல்ல அதிர்ந்து கொண்டுதானிருந்தது. எங்கள் வீட்டின் இரண்டாவது மாடியில் வசித்த புதுமணத் தம்பதியினர் மட்டும் கீழிறங்கி வரவில்லை. ஒரே போர்வைக்குள்ளிருந்து இருவரது தலைகள் மட்டும் தெரிந்தன. ``பைத்தியக்கார மோகம்" என்று பத்மபென் புலம்பினார். நெளமியும் மற்றவர்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அந்த புதுமணப் பெண் எனக்குப் பழகியவர்தான் என்பதால் நான் மட்டும் அவர்களை கீழே இறங்கி வருமாறு சைகையில் அழைத்தேன். அதற்கு அப்பெண் நாணம் குறையாமல் ``உடைகளைத் தேடியெடுத்து அணிவதற்குள் நிலநடுக்கம் நின்றுவிடும் இல்லையென்றால் கூரை இடிந்து தலையில் விழுந்துவிடும்" என்று சிரித்தார். அவர் கூறுவதும் சரிதானென்று தோன்றியது. மோகமெனும் பித்துநிலையில்தான் மனிதன் மரணத்தைக் குறித்து அஞ்சுவதில்லை.
அன்றைய நிலநடுக்கத்தின் அளவு 5.8 என பகல் நேரத்துச் செய்திகள் தெரிவித்தன. அனைத்து மாநில முக்கிய அரசியல், சினிமா மற்றும் பங்கு வர்த்தக செய்திகள் வாசித்து முடித்த பின்னர் சாவகாசமாக செய்தி வாசிப்பாளர் ``வடகிழக்கு மாநிலங்களில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது" என்று ஓரிரு வரிகளுடன் முடித்துக் கொண்டார். ஆனால் களத்தில் அந்நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து நாங்கள் மீண்டு வர வாரங்களாகின. சென்னையில் எனது உறவினர்களுக்கு நிலநடுக்கம் குறித்தத் தகவல் அளித்தபோது அவர்களால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் செய்திகளில் அவை பெரிதாகக் கூறப்படவில்லை. ஒரு நண்பர் ``அப்படியா, நியூஸ்ல வரலையே" என்றார்
மீடியா வெளிச்சம் விழாத போதும் அனுதினமும் இத்தகைய இயற்கைச் சீற்றங்களும், சமூக அவல நிகழ்வுகளும் அரங்கேறிக் கொண்டுதானிருக்கின்றன.
அவ்விடங்களிலெல்லாம் அரசாங்கங்களின் தலையீட்டிற்காகக் காத்திராமல் பொதுமக்களே தங்களது வாழ்விடங்களை சீரமைத்துக் கொள்கின்றனர். உறுதியான தனது வீட்டுத் தூண்களை பெருமிதத்தொடு தட்டிப் பார்த்துக் கொண்டார் பத்மபென்.

அப்பகுதியில் தொடர்ந்து நிகழும் நிலஅதிர்வுகளுக்கு மலைவளமும் நிலவளமும் சுரண்டப்படுவதுதான் காரணமென்பது தெள்ளத் தெளிவாக அனைவருக்குமே தெரியும். ஆனாலும் அப்பகுதி மக்கள் அதற்கு வேறொரு காரணமும் வழங்குவதுண்டு. நெளமியும் அக்காரணத்தைப் பலமுறை என்னிடம் கூறியிருக்கிறாள், அது `காமாக்யா தேவியின்' விரகத்தின் அதிர்வுகள் என்பாள். சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்தும் பொருட்டு சக்தியின் உடலை தனது சக்ராயுதம் கொண்டு துண்டித்தெறிகிறார் விஷ்ணு. அப்பொழுது சக்தியின் யோனி விழுந்த இடம்தான் காமாக்யா பீடம் என்று வழங்கப்பட்டு வருகிறது. பெண்மை நீர்மைப் பூண்டு ஊற்றாக பெருக்கெடுக்கும் காமாக்யா தேவி சன்னதி மற்றும் பெண்மையின் தீவிரம் பேசும் தாந்த்ரீக முறைகள் செழிக்கும் அம்புபாச்சி மேளாப் பற்றியும், தாய்வழிச் சமூகமாகத் திகழும் அப்பகுதியின் பெண் வாழ்வியல் பற்றியும் இனிவரும் பகுதியில்...
-