Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: `ஏழு சகோதரிகள்'... ரயில் பத்ரி சந்தையும் பெண் சுதந்திரமும்! | பகுதி 5

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்

தின்சூகியா ரயில் நிலையத்தில் கழிவறை வாயிலில் அந்தச் சிறுமி நின்றிருந்த காட்சி மனக்கண்களில் நிழலாடி மறைந்தது.

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: `ஏழு சகோதரிகள்'... ரயில் பத்ரி சந்தையும் பெண் சுதந்திரமும்! | பகுதி 5

தின்சூகியா ரயில் நிலையத்தில் கழிவறை வாயிலில் அந்தச் சிறுமி நின்றிருந்த காட்சி மனக்கண்களில் நிழலாடி மறைந்தது.

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

அனுபவங்களின் தொடக்கங்களை வசப்படுத்துவது கடினமாகிவிடுகிறது இப்போதெல்லாம். வாழ்வின் இலையுதிர்காலத்தில் நின்றுகொண்டு வசந்தத்தின் பூக்களுக்கு கைகள் ஏங்குவதுபோல் தொடக்கங்கள் வசப்படாமல் என்னுடன் கண்ணாமூச்சி ஆடுவதாகத் தோன்றுகிறது. அனுபவங்களெல்லாம் காட்சித் தொகுப்புகளாக மனக்கண் முன் விரிந்தபடி இருக்க, அந்த அனுபவங்கள் தாமாகவே கனிந்து சொற்களாக உருமாறவேண்டி காத்திருப்பதை ஒரு பயிற்சியென மேற்கொள்கிறேன். அந்த வகையில் 'ப்ரக்யா' ஓர் அனுபவம்.

நான் ப்ரக்யாவை டெல்லியின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் கலை விழாவுக்குச் சென்றிருந்தபோது சந்தித்தேன். ப்ரக்யா, தின்சூகியாவைச் (அஸ்ஸாம்) சேர்ந்தவர். அவருடைய தாய் 'நாகா' பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். ப்ரக்யா, `Liberal arts’ எனப்படும் பல்வகை கலைத்துறையில் பயின்றுவந்தார். அவருடன் ஒரு வாரகாலம் ஒரே அறையில் வசிக்கவேண்டிய சூழல். முற்றிலும் வேறுபட்ட இரண்டு பண்பாட்டுப் பின்னணியைச் சேர்ந்த நாங்களிருவரும் ஒரு கூரையின் கீழ் வாழ்வது மிகவும் கடினமாகவே இருந்தது. ப்ரக்யாவின் பழக்கங்கள், உடைத் தேர்வுகள், ஆண் நண்பர்கள் என அனைத்தும் அவரைப் பற்றிய பிழையான பார்வையையே என்னுள் ஆரம்பத்தில் தோற்றுவித்தன.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியான கருத்தரங்கில் நான், `தமிழ் இலக்கியங்களின் காவியத் தலைவிகள்' எனும் தலைப்பில், பெண்களின் உயர் மாண்புகளான கற்பு நெறி, பொறுமை, தாய்மை ஆகிய பண்புகளைச் சுட்டிக்காட்டி பேசியபோது ப்ரக்யா அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபடுவதாகக் கூறி என் கண்ணோட்டத்தின் பலவீனங்களை மனம் புண்படாமல் சுட்டிக்காட்டினார். அவர் உரையாற்றி முடித்தபோது அரங்கம் கரவொலியால் நிரம்பியது.

அன்றிரவு ரயில் நிலையத்தில் விடைபெறுகையில், அவர் என்னை அடுத்த விடுமுறைக்கு தின்சூகியா வருமாறு அழைத்தார்.

``பெண்கள் போற்றி வணங்கவேண்டிய தெய்வங்களுமல்ல, பரிதாபத்துடன் அணுகவேண்டிய அபலைகளுமல்ல. அவர்கள் பெண்கள். அவ்வளவுதான்.’’

`ஆண்' எனும் பதத்துக்கு எப்படி விளக்கவுரைகள் எழுதப்படவில்லையோ அதுபோலவே `பெண்' எனும் பதத்துக்கும் விளக்கவுரைகள் தேவையில்லை. நீங்கள் `ஏழு சகோதரிகள்' (அஸ்ஸாம், மேகாலயா, மணிபூர், மிசோரம், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து) என்றழைக்கப்படும் எங்கள் பகுதிக்கு வாருங்கள், நாம் நிறைய பேசலாம்" என்று கூறி விடைபெற்றார்.

நாங்கள் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை நானே ஏற்படுத்திக்கொண்டேன். ப்ரக்யா, ஆண்டு விடுமுறைக்காக தின்சூகியாவில் தனது இல்லத்துக்குச் சென்றிருப்பதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். குவாஹாத்தி வரை விமானத்திலும், அதன் பிறகு ரயில் பயணமுமாக ஒருவழியாக தின்சூகியா ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது ஏதோ உலகின் எல்லைக்கே வந்துவிட்டது போலிருந்தது.

மனித நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்த அந்த நடைமேடைக்குப் பின்னிரவு நேரத்தில் ரயில் சென்றடைந்தது. அதிகாலையில் என்னை அழைத்துச் செல்வதாக ப்ரக்யா கூறியிருந்தார். அதுவரை அங்கிருந்த ஓய்வறையில் விடியலுக்கு முன்பான சில மணி நேரங்கள் அமர்ந்திருந்தேன். உறக்கம் சுழற்றியடித்த கண்களுக்கு காண்பவையெல்லாம் திரைமறைவு காட்சிகளாகவே தெரிந்தன. ஆளரவமற்ற அந்த நடைமேடையிலிருந்த ஆண்கள் கழிவறையின் வாசலில் பதின்வயது சிறுமியொருத்தி நின்றிருந்தாள். அவ்வப்போது தனது ஆடைகளைச் சரிசெய்துகொள்வதும் உள்ளே சென்று வருவதுமாக இருந்தாள்.

அந்நேரத்தில் அங்கு அவளது இருப்பு என் உறக்கத்தைக் கலைத்தது.

கழிவறையிலிருந்து வெளியே வரும்போதெல்லாம் சில்லறைகளைச் சரிபார்த்தபடி நேரே சென்று நடைமேடையின் மறுமுனையில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியிடம் கொடுத்தாள். அநேகமாக அவள் அந்தச் சிறுமியின் தாயாக இருந்திருக்க வேண்டும். ``இந்த 'சின்க்கிகள்' இப்படித்தான்" என்று அருகில் அமர்ந்திருந்த பெண்மணி கூறியதில் என் கவனம் கலைந்தது. அவர் ராணுவப் பள்ளியில் ஆசிரியரென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

வடகிழக்குப் பகுதி பெண்களை வெகு சுலபமாக பாலியல்ரீதியாக இழிவாகப் பேசுவதும் `சின்க்கிகள்’ என்றழைப்பதும் நம் சமூகத்தில் காலங் காலமாக நிகழ்ந்துவரும் அவச்செயல். முன்பெல்லாம் மிக அதிகமாகப் புழக்கத்திலிருந்த அந்தச் சொல், நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு சமீபகாலமாக சற்று குறைந்திருக்கிறது. தாய்வழிச் சமூக வழிநிலையைப் பின்பற்றி வாழும் அந்தப் பகுதி பெண்களிடையே காணப்படும் ஆளுமைப் பண்பும், எத்தகு சூழலையும் அனுசரித்து வாழும் குணமும் பல நேரங்களில் அவர்களைக் குறித்த தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றன. ஆனால் நிஜம் அதுவல்ல என்பது ப்ரக்யாவுடன் நான் செலவிட்ட அந்த விடுமுறை நாள்கள் எனக்கு உணர்த்தின.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

ப்ரக்யாவின் வீடு ரயில் நிலையத்திலிருந்து சிறிது தொலைவிலேயே இருந்தது. அவர் வசித்த தெருவின் குறுக்கே ரயில் தண்டவாளம் இருந்தது. பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு நிலக்கரி சுமந்து செல்லும் ரயில்கள் அந்தத் தடங்களில் வந்து செல்வதுண்டு. மற்ற நேரங்களிலெல்லாம் அங்கு காய்கறி, பன்றி இறைச்சி, தேன்கூடுகள், மலை வாழைப்பழங்கள் மற்றும் பல்வேறு வகையான புழுக்களும் பூச்சி வகைகளும் விற்பனையாகும் சந்தைகளாக அந்தத் தண்டவாளங்கள் விளங்கின. ரயில் பத்ரி மார்க்கெட் (Rail patri market) என்றே அவை அறியப்படுகின்றன. மறுநாள் ஓய்வு நேரத்தில் ப்ரக்யாவும் நானும் அந்தப் பகுதியில் உலவினோம். ரயில் தண்டவாளங்களின் மேல் அமைக்கப்படும் தற்காலிகச் சந்தைகள் வடகிழக்கு இந்தியா மட்டுமல்ல, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற கிழக்காசிய நாடுகளிலும் பிரசித்தி பெற்றவை. ரயில் வருவதையறிந்ததும் கலைந்துவிடும் சந்தை, ரயில் கடந்துவிட்ட அடுத்த சில நொடிகளிலேயே மீண்டும் சுறுசுறுப்பாக இயங்குவதைக் காண ஆச்சர்யமாக இருந்தது. சந்தையமைத்து, பொருள்களை விற்பனை செய்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.

கடினமான உடலுழைப்பையும், வியாபார வித்தைகளையும் அவர்கள் அநாயாசமாக நிகழ்த்திக்கொண்டிருந்தனர்.

அவர்களில் சிலரது முதுகிலும் நெஞ்சிலும் குழந்தைகள் செல்லப்பிராணிகள்போல் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தன. இறைச்சி சந்தையிலும் லுங்கி மற்றும் சட்டையணிந்த பெண்கள் சுருட்டுப் பிடித்துக்கொண்டு பன்றிக்கறியை பெரிய கத்திகளால் துண்டங்களிட்டு விற்றுக்கொண்டிருந்தனர்.

அன்றிரவு உணவு வேளையின்போது என்னுடைய வியப்பை ப்ரக்யாவுடன் பகிர்ந்துகொண்டேன். ``உங்கள் பகுதிப் பெண்கள் சுதந்திரமாக வாழ்பவர்கள்போல் தெரிகிறதே..." என்றேன். அதற்கு அவர் ``இது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. ஆனால் நிஜம் அதுவல்ல. எங்களது பல இனங்களில் தாய்வழிச் சமூக முறை கடைபிடிக்கப்படுவதால் வரதட்சணை வாங்கும் பழக்கமும், கட்டாயத் திருமண முயற்சிகளும் இல்லையென்றாலும் பாலியல் வன்கொடுமைகளும், கல்வியின்மையும், வேலைவாய்ப்பின்மையும் எங்கள் பகுதிப் பெண்களின் முன்னேற்றத்தைப் பெருமளவில் பாதிக்கவே செய்கின்றன.

விரும்பியதைச் செய்வதற்கு அச்சுறுத்தல் ஏதுமில்லாதிருப்பதே சுதந்திரம். திணிக்கப்படும், வற்புறுத்தப்படும் எதுவுமே அடிமைத்தனம்தான்.

ப்ரக்யாவின் கருத்துகளிலிருந்து சுயசார்புடன் வாழ்வதன் உண்மைப் பொருள் விளங்கியது. தின்சூகியா ரயில் நிலையத்தில் கழிவறை வாயிலில் அந்தச் சிறுமி நின்றிருந்த காட்சி மனக்கண்களில் நிழலாடி மறைந்தது. அன்றிரவு ப்ரக்யாவின் குடும்பத்தினருடன் நீண்ட நேர உரையாடலுக்குப் பிறகு நானும் ப்ரக்யாவும் அவருடைய அறைக்குத் திரும்பினோம். ப்ரக்யா விரைவில் உறங்கிப்போனார்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

விடுமுறை முடிந்து அவரவர் அன்றாடத்துக்குத் திரும்பவேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. வலசை போகும் பறவைகள் எவ்வளவு தூரம் பயணித்தாலும் அவை வீடு திரும்பும் நோக்கத்தைக் கைவிடுவதில்லை. எஞ்சியிருக்கும் நாள்களை ப்ரக்யாவுடன் ஓய்வாகச் செலவிட எண்ணி, சுற்றுலா ஏதும் திட்டமிடாமலிருந்தேன். மனிதர்களைப் படிப்பதும் பயணங்கள் தரும் அதே பரவசத்தை தரக்கூடும் என்று யாரோ சொல்லிக் கேட்ட ஞாபகம்.

ப்ரக்யா தனது கல்லூரியின் நாடக விழாவுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார். நானும் அவருக்குக் கதைகள் சேகரிப்பதிலும், கதாபாத்திரங்கள் வடிவமைப்பதிலும் சில உதவிகள் செய்துவந்தேன். அந்த நாள்களை எங்கள் நட்பின் ஆழம் கூடிய நாள்கள் எனலாம்.

நாடகத்துக்கான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தபோது `கொதாநொதி' (Kothanodi) என்ற திரைப்படத்தைக் குறித்துப் பேசினார் ப்ரக்யா. `கொதாநொதி' என்றால் `கதைகளைச் சுமந்து வரும் நதி’ என்று பொருள். வடகிழக்கிந்தியாவின் நாட்டுப்புறக் கதைகள் சிலவற்றை தொகுத்து, அவற்றினூடே இழையோடும் இணைப்புகளாகப் பெண்களின் கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும்.

கடுமையான மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு பெண், தன் கணவரின் முதல் தாரத்தின் மகளை வெறுப்பதால் அவளைக் கொலை செய்ய முயல்வது முதல் கதை தொடங்குகிறது. தீயது நல்லதாக மாறவேண்டிய புனைவு கட்டாயங்கள் ஏதுமின்றி, அரிசி இடிக்கும் உரலில் அந்தச் சிறுமியைக் கிடத்தி உலக்கையால் இடித்துக் கொல்வதாக அந்தக் கதை முடிவடையும். பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருக்கும் அவளுடைய கணவன், அங்கு ஒரு பெண், மனிதக் குழந்தைக்கு பதிலாக பெரியதொரு பச்சை நிறக் காயை ஈன்றிருப்பதைக் காண்கிறான். அந்தக் காய் அவள் செல்லுமிடமெல்லாம் அவளைப் பின்தொடர்ந்து செல்வதையும், அந்தப் பெண்ணும் அதைத் தனது குழந்தையாகவே நினைத்து பராமரிப்பதையும் கண்டு தனக்குத் தெரிந்த மந்திரசக்தியைக்கொண்டு அந்தக் காயை குழந்தையாக மாற்றி அவளுக்குப் பரிசளித்துவிட்டு ஊர் திரும்புகிறான்.

நாடோடிச் சித்திரங்கள்: `ஏழு சகோதரிகள்'... ரயில் பத்ரி சந்தையும் பெண் சுதந்திரமும்! | பகுதி 5

மூன்றாவது கதையாக தனேஷ்வரி எனும் பெண் பணம், பொருள் மேல்கொண்ட பேராசையால் தன் மகளை ஒரு மலைபாம்புக்கு மணமுடித்து வைக்கிறாள். பேராசையின் விளைவாக, தன் மகளையே இழக்கிறாள். நான்காவது கதையாக, தொடர்ந்து தனது மூன்று பிள்ளைகளையும் கொன்றுவிடும் கணவனிடமிருந்தும் குடும்பத்தாரிடமிருந்தும் தனது நான்காவது குழந்தையைக் காப்பாற்ற முயல்கிறாள் ஒரு பெண். அப்போது வெளிப்படும் அதிர்ச்சியான உண்மைகளால் அவள் நிலைகுலைந்து போகிறாள். இப்படியாக அந்தக் கதை நிறைவடைகிறது. நான்கு கதைகளிலும் பெண் கதாபாத்திரங்கள் வலிமையாகவும், வன்மம் பொருந்தியவையாகவும், எதிர்மறை குணங்களை வெளிப்படுத்துவனவாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தன.

திரைப்படம் முடியும் வரை நானும் ப்ரக்யாவும் பேசிக்கொள்ளவில்லை. முடிந்த பின்னரும் சில நிமிடங்கள் வெறுமையாகவே பார்த்திருந்தோம். அதுவரை நான் வாசித்திருந்த புனைவுகளிலும், காவியங்களிலும், திரைப்படங்களிலும் பெண்களுக்கு இத்தகு முகங்களிருப்பதைக் கண்டதில்லை. ஆகையால் எனக்கு அந்தக் கதைகளை உள்வாங்குவது சிரமமாக இருந்தது. ப்ரக்யா அப்போதும் ஆச்சர்யத்தையோ அதிர்ச்சியையோ வெளிப்படுத்தவில்லை.

``இவை வெறும் கட்டுக்கதைகள் என்று நினைக்கிறீர்களா?" என்றார் ப்ரக்யா.

``இல்லை. அப்படியிருக்க முடியாது" என்றேன்.

``அப்படியென்றால், பெண்களை எல்லைகளுக்குள் கட்டுப்படுத்த நினைப்பதை இப்போது எப்படிப் பார்க்கிறீர்கள்?" என்றார்.

நானும் அவரைப்போலவே புன்னகையால் பதிலளித்தேன்.

`ப்ரக்யா' எனும் சொல்லுக்கு வடமொழியில் `ஞானம்’ என்று பொருள்.

(தொடரும்...)