``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.
கடுமழை பொழிந்து, பூமி குளிர்ந்ததும் வெப்பம்வேண்டி கிளைகள் நீட்டிப் படரும் பெருவனத்தின் மரங்கள்போல், பயணங்களின் போதனைகள் வேண்டி கிளைத்தெழும் மனம் எளிதில் சோர்வடைவதில்லை. தோல்விநிலை நிரந்தரமென்று உழல்வதுமில்லை.
``வசந்தம் நம்மைத் தேடி வராவிட்டால், நாம் வசந்தத்தைத் தேடிச் செல்வோம்"என்ற ஜப்பானியச் சிறுகதையொன்றின் வரியை சுவரிலும், கையேட்டிலும், முகம் பார்க்கும் கண்ணாடியின் ஓரத்திலும் எழுதிவைத்து எனக்கு நானே நினைவுபடுத்திக்கொண்ட நால்களை இப்போது நினைத்துப் பார்த்து சிரித்துக்கொள்கிறேன். வாழ்வின் ஒரு பருவத்தில் அவ்வரிகள் தந்த நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு மட்டுமே வாழ்ந்தேன் என்று சொல்லலாம்.
சில நேரம் அவை மனிதச் சாயல்கொண்டிருந்தன. ஆனால் இப்போதெல்லாம் வசந்தத்தை விழைந்து மேற்கொள்ளும் பயணங்கள் பெருமளவு குறைந்துவிட்டன. மகிழ்ச்சியும் நிறைவும் மனநிலை என்னும் புரிதல் ஏற்பட்ட பிறகு அவற்றை வெளியே தேடும் அலைச்சல் குறைந்துவிட்டது. வாழ்வின் எப்பருவமாயினும் மனம் மட்டும் வசந்த காலத்தின் புதுமலர்போல் புத்துணர்வோடு வாழப் பழகிவிட்டது. முதற்படி ஏறாமல் சிகரத்தையடைவது சாத்தியமில்லை என்பதால் முதன்முதலில் வாய்த்த அத்தனை அனுபவங்களுமே ஆசான்கள்தான். நன்றியோடு நினைத்துப் போற்றும் ஆசான்கள்.

ஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய `தம்பலீனா' கதையை பள்ளிப் பருவத்தில் பலமுறை வாசித்திருக்கிறேன். தம்பலீனாவின் உலகம் அழகானது. கட்டைவிரல் அளவே இருக்கும் தம்பலீனா பூவிதழ்களுக்குள் உறங்குவாள். அல்லி மலர்களின் இலைகளில் படுத்துக்கொண்டு குளக்கரைக்குச் செல்வாள். தவளைகளும், எலிகளும், சிறு மீன்களும் அவளுடைய நண்பர்கள். அவள் வசித்த வனத்தில் பல வண்ண மந்திரக் காளான்களும், மாய தேனீக்களும் நிறைந்து காணப்பட்டன. அவற்றிலிருந்து படர்ந்து பரவிய நறுமணம், மனிதர்களைக் குழந்தைப் பருவ குதூகலத்தில் ஆழ்த்திவிடுமாம். தம்பலீனா அத்தகைய காளான்களைச் சேகரித்து, தனது நண்பர்களின் துயரங்கள் நீக்கினாள் எனப் படித்தபோது மந்திரக் காளான்கள் குறித்த கனவுகள் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கின.
பருவமழை வலுவிழந்து சாரல் மழையாக மலைகளை வருடிச் செல்லும் ஆகஸ்ட் மாதத்தில், மேகாலயாவிலிருந்து சிரபுஞ்சி நோக்கிய எங்களது பயணம் தொடங்கியது. உமியம் ஏரியின் ஏகாந்தம் தேவையான புத்துணர்வை அளித்திருந்ததால், மனமும் உடலும் கடும்பசி கொண்டன. பசி என்றால் ஐம்புலன்களின் ஒவ்வோர் அணுவும் தனக்கான இரையைத் தேடும் மிருக வேட்கைகொண்டது. ஒரு முழு மேகம் அப்போது எங்களை விழுங்கி நனைத்து கடந்து சென்றது. முகத்தில் சின்னஞ்சிறிய ஊசிகள் குத்துவது போன்ற உணர்வு எங்கள் அனைவருக்கும் ஏற்பட்டது.
கேட்பதற்கு வியப்பாக இருந்தது அந்தச் செய்தி.
மலைகளை ஊடுருவிப் பாய்ந்தது பபூலின் கார். முற்பகல் நேரத்து தேநீர் ரத்த நாளங்களை முடுக்கிவிடவே பபூல் ஆர்வமாக வாகனத்தை ஓட்டினார். வழி நெடுகிலும் தென்பட்ட குகைகளையும் சிற்றோடைகளையும் பார்வையிட்டவாறே கடந்துவிடலாம் என்றார்.
பபூல் காரை எங்கும் நிறுத்தாமல் வேகமாக முன்னேறினார். அன்று மாலைக்குள் சிரபுஞ்சி சென்றடைய வேண்டுமென்பது இலக்கு.

காட்டு ரோஜாக்கள் கொத்துக் கொத்தாக கொடிமலர்கள்போல் பாறையெங்கும் படர்ந்து பூத்திருந்தன. அவற்றின் மதுர மணம் நாசியினூடே நுரையீரல் வரை பாய்ந்து மூளை நரம்புகளை தட்டியெழுப்பியது. கூடலுக்கு இணை தேடும் வேட்கை, தோன்றத் தொடங்கியது எனக்கு. சுற்றியிருப்போர் அனைவரும் நண்பர்கள். காதல் நேராமல் கூடல் எனக்குச் சாத்தியமில்லை. உடலோடு மட்டும் பிணைந்துகொள்வது எனக்குப் பிடித்தமுமில்லை. மனதை இசையில் செலுத்தினேன். பபூல் மெளனம் கலையாமல் வண்டியைச் செலுத்தினார்.
``சிரபுஞ்சிதான போறோம்?" என்றார் நண்பர்.
``அது போய்விடலாம், ஆனால் அதற்கு முன் உங்களுக்கு ஓர் இடம் காட்டுகிறேன், அதைப் பார்த்துவிட்டுச் செல்வோம். அது நாற்பது கிலோமீட்டர் எதிர்த்திசையில் இருக்கிறது. அங்கிருந்து பார்த்தால் வங்க தேச எல்லை தெரியும்."
நண்பர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இருட்டுவதற்குள் சிரபுஞ்சியை அடைய வேண்டும். குழந்தைகளும் பெண்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பரிதவித்தனர். தங்களைக் கேட்காமல் முடிவு செய்த பபூல் மீது மீண்டும் அனைவரும் அதிருப்தி காட்டினர்.
``தம்பி நாங்கதான காசு குடுக்குறோம். ஒரு வார்த்தை எங்களைக் கேட்டுட்டு முடிவு பண்ண மாட்டீங்களா?" என்றார் ஒருவர்.
பபூல் உடனே, ``வேணாம்னா திரும்பிரலாம். எல்லாரையும் கேட்டுச் சொல்லுங்க" என்று என்னையும் சில ஆர்வமுள்ள நண்பர்களையும் ரியர் வியூ கண்ணாடியில் பார்த்தார்.
நான் என் புலன்களின் விசைக்குக் கட்டுப்பட இயலாமல் தவித்துக்கொண்டிருந்தேன். சராசரி மனிதப் புலம்பல்களுக்கு செவிசாய்க்க என் மனம் ஒப்பவில்லை.
எவ்வகையிலாவது எனது புலன்களின் வேட்கை தணிந்தால் சரி என்ற நிலையில் நானிருந்தேன்.

ஒரு கட்டத்தில் பாதை கரடு முரடாக மாறியது. செப்பனிடப்படாத மண் சாலைகள், பாறைகள் ஆங்காங்கே உருண்டோடி குழியும் மேடுமாக கார் பயணிப்பதே கடினமாகியிருந்தது. அனைவரும் மிகுந்த சிரமத்தோடு அமர்ந்திருந்தனர். சிலர் என்னை மறைமுகமாக இடித்துரைத்தனர். பபூல் சற்றும் யோசிக்காமல் காரைச் செலுத்தினார். ``பார்த்து பொறுமையாகப் போங்க" என்று அவ்வப்போது யாரோ ஒருவர் கூறியதற்கு தலையசைத்து விடையளித்தார் பபூல்.
சுமார் ஒரு மணி நேர சவாலான பயணத்துக்குப் பிறகு தூரத்தில் ஒரு நதி விரிவது தெரிந்தது. ``அதுதான் டாக்கி நதி" என்றார் பபூல்
``அங்குதான் போகிறோமா?" என்றேன்.
``இல்லையில்லை, நாளைக்கு அங்கு செல்வோம். இப்போது இடது புறம் திரும்பி சிறிது தூரம் பயணிப்போம்" என்றார்.
உடன் பயணித்த நண்பர்களும் நானும் கூட சற்று திகைத்தோம். இன்னும் பயணிக்க வேண்டுமா என்று ஒருவரையொருவர் வினவிக் கொண்டோம். இப்போது திரும்பிச் சென்றாலும் கடந்து வந்த தூரமெல்லாம் விரயம்தானே என்று குழம்பினோம். மேலும் கடுமையான பாதையில் பயணித்ததில் அனைவருக்கும் உடற்சோர்வும் சேர்ந்துகொண்டது. நானோ எதற்கு தவிக்கிறேன் என்றே புரியாமல் காட்டு ரோஜாக்களின் மயக்கம் தெளியாதவளாக சன்னலுக்கு வெளியே முகத்தைத் திருப்பிக்கொண்டேன். இனம் புரியாததொரு வெறுமை மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. என்னை வழிநெடுகிலும் கைவிட்டுச் சென்ற அத்தனை முகங்களும் ஒவ்வொன்றாக மனக்கண் முன் தோன்றின. யாருக்கும், யாரையும் முதுகில் கட்டி சுமக்க வேண்டிய விதியோ, நிபந்தனையோ இல்லையென்றபோதிலும் உதறிச் சென்றிருக்கவேண்டிய அவசரமும் இருக்கவில்லைதானே என்ற கேள்வி என்னுள் எழாமலில்லை.
யாரும் அறியா வண்ணம் கண்ணீரை விழுங்கினேன். ஆம் கண்ணீரை விழுங்க முடியும். அதற்குச் சில பிரிவுகளும் துரோகங்களும் போதும். கண்ணீர் விழுங்குதல் பழகிவிடும். விழுங்கும் கண்ணீருக்கு உவர்ப்பு அதிகம்.

கடந்த காலமெனும் புதை மணலில் விழுந்து அமிழ்ந்துவிட நேர்ந்தபோதுதான் `சோ...’வென்ற பேரிரைச்சல் எங்கள் அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பியது. பபூல் காரை அழுத்தமாக பிரேக் அடித்து நிறுத்தினார். காரைவிட்டு இறங்கியவர், வேகமாக சிகரெட்டைப் பற்றவைத்து புகைக்கத் தொடங்கினார். எங்கள் யாரிடமும் அவர் பேசவில்லை. தலையை நிமிர்த்திப் பார்த்து புகைத்தபடி இருந்தார். எங்களைவிட்டு வெகு தொலைவு பாறைகள் மேல் ஏறிச் சென்றுவிட்டார்.
அருவியின் முதல் பகுதி கண்களுக்குப் புலப்படாதபடி அடர்த்தியான மேகப் போர்வைக்குள் மறைந்திருந்தது. அருவியின் இரைச்சலுக்கு முன் மனித குரல்கள் ஊமையாகிப் போயின. நண்பர்கள் அனைவரும் பபூலுக்கு நன்றி தெரிவிக்கவேண்டி அவரைத் தேடினர். பபூல் வெகுநேரம் வரை திரும்பவில்லை.
நான் அருவியின் பாதத்தில் அமர்ந்துகொண்டேன். என்னை மீறிப் பாய்ந்த அருவியின் ஒரு துளிகூட என்னை நனைத்திருக்கவில்லை. சாரலுக்கு மட்டும் முகம் நனைந்தது. தண்டுவடத்தில் கிளர்ந்தெழுந்த விரகத்தின் வேட்கைக்கு பாறைகளில் மோதிப் பொழிந்த அருவி நீரானது குறியீடுபோல் தோன்றியது எனக்கு. அதன் இரைச்சல் காதல் கரம்போல் என்னை ஆற்றுப்படுத்தியது. உணர்வுகளை மடைமாற்றுவதற்கு இயற்கையே சிறந்த உபாயம். எத்தகு உணர்ச்சிப் பெருக்குக்கும் இயற்கையிடம் வடிகால் உண்டு.
சிறிது நேரத்திலெல்லாம் மெளக்லி சிறுவனைப்போல் பாறைகளைத் தாண்டி குதித்து வந்தார் பபூல். அவர் கைகளில் அடர்த்தியான வண்ணங்ளில் காளான்கள் இருந்தன. தம்பலீனா கதையில் நான் படித்திருந்த துயர் போக்கும் காளான்களை அவை நினைவுபடுத்தின.

``என்னது இது?’’ என்றேன்.
``காளான்கள்தான், பார்ப்பதற்கு கண்ணைப் பறிக்கும் அழகுடன் வசீகரித்தன, உங்களுக்குக் காட்டலாம்னு எடுத்து வந்தேன். அருவி பாறை இடுக்குகளில் நிறைய இருக்கின்றன, சென்று பார்த்து வாருங்கள்" என்று உயரமான ஒரு பாறையைக் காட்டினார்.
இந்திய, வங்க தேச எல்லையில் பாயும் டாக்கி நதி, மாலின்னாங்கின் உயிருள்ள மர வேர்களால் உருவாக்கப்பட்ட பாலம், நாட்டின் சுத்தமான கிராமம் மாலின்னாங், சோஹ்ரா மேட்டு நிலப்பகுதியின் சிரபுஞ்சியை நோக்கிய பயண அனுபவங்கள் இனி வரும் தொடரில்!
- பயணம் தொடரும்