மனிதர்களின் வாழ்க்கையில் சுற்றுலா ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. அதற்கேற்றாற்போல் சாலை இணைப்பு, சுற்றுலாத் தலங்களை எளிதில் அணுகும் வசதி, மின்னணு பரிவர்தனை போன்றவை பயணத்தை இன்னும் எளிதாக மாற்றியுள்ளன. சலிப்பூட்டும் பணிச்சூழல், இறுக்கமான மனநிலை, புதிய இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஆகியவை சுற்றுலா செல்வதற்கான தேவையை அதிகரித்துள்ளன.
கடந்த 2017 -ம் ஆண்டில் இந்தியாவிற்கு 1 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2016-ம் ஆண்டைக் காட்டிலும் 14 சதவிகிதம் அதிகம். உலக அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 6.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் சுற்றுலா வளர்ச்சிக்கு, மிகப் பெரிய பங்காற்றுவது தமிழ்நாடுதான்.

காரணம், தமிழகத்தில் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ள கோயில் கட்டடக் கலைகள், தொன்மையான வரலாற்று நினைவுச் சின்னங்கள், பழைமையான கோயில்கள், குகை ஓவியங்கள், எழில் கொஞ்சும் மலைப் பகுதிகள், பாரம்பர்யமான இசை, நடனம், கிராமியக் கலை, கவின்கலை, கோட்டைகள், மலைவாழ் இடங்கள், அருவிகள், தேசிய பூங்காக்கள், கடற்கரைகள், உணவு வகைகள், இயற்கைச் சூழல், வன உயிரினங்கள் என அந்தந்தப் பகுதிகளின் தன்மைக்கேற்ப மாநிலம் முழுவதும் சுற்றுலாத் தலங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
மேலும், தமிழகத்தில் யுனெஸ்கோவில் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பர்ய சின்னங்களாக மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம், பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் நீலகிரி மலை ரயில் ஆகியவற்றைக் காண இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், இலங்கை, ஓமன் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து அதிகமான அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை குறிப்பிடுகிறது. கடந்த 2016-ல், இந்தியா முழுவதுமிருந்து 34.38 கோடி பேர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். அதேபோல், வெளிநாட்டிலிருந்து 47.20 லட்சம் பேர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். கடந்த நான்கு வருடங்களைக் காட்டிலும், 2018-ம் ஆண்டு, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

அதாவது, 2018-ல் இந்திய மக்கள் 38.59 கோடி பேரும், வெளிநாட்டினர் 60.73 லட்சம் பேரும் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். இந்திய மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளைக் காட்டிலும், தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகம்.

தமிழகத்தில், இந்தியர்கள் அதிகம் வருகை புரிந்த மாவட்டங்களில் காஞ்சிபுரம் முதலிடத்தில் உள்ளது. 2018-ல் 4,19,58,262 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். மாமல்லபுரத்தில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் நடத்தப்படும் இந்திய நாட்டிய விழாவைக் காண லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர். கடந்த 2018-2019 ல் நடைபெற்ற விழாவில், 1,30,000 இந்திய சுற்றுலாப் பயணிகளும், 19,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கண்டு மகிழ்ந்தனர்.
இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையில், இரண்டாவது இடத்தில் உள்ள சென்னைக்கு 3,82,84,904 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்தப் பட்டியலில் தஞ்சாவூர் 5-வது இடத்தில் உள்ளது. வெளிநாட்டினர் அதிகம் வருகை புரிந்த மாவட்டங்களில் சென்னை முதலிடத்திலும், காஞ்சிபுரம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தஞ்சாவூர், மதுரை, திருச்சி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகையில் கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் கடைசி 5 இடங்களைப் பிடித்துள்ளன.

சுற்றுலாத்துறையில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில், சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த, புதிதாக சுற்றுலாத் திட்டங்கள் உருவாக்க தமிழக அரசு முன்னுரிமை அளித்தால், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் உலக அளவில் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படும்.