Published:Updated:

மினிசோட்டா என்னும் பூலோக சொர்க்கம்... ஏன் தெரியுமா?

துரை.நாகராஜன்

இயற்கையைப் புரிந்துகொண்டு, இயற்கையுடன் வாழ நினைப்பவர்களுக்கு இந்த மினிசோட்டா சொர்க்கம்தான்.

Minnesota lakes
Minnesota lakes

அமெரிக்கா என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது விண்ணை முட்டும் கட்டடங்கள், கார்கள், தொழிற்சாலைகள் ஆகியவைதான். அமெரிக்காவில் நியூயார்க்குக்கு கட்டடங்கள், ஃபுளோரிடாவுக்குக் பூங்காக்கள், கொலராடோவுக்கு மலைகள், வேகாஸுக்குச் சூதாட்ட விடுதிகள் வரிசையில் மினிசோட்டா மாகாணத்துக்குப் பெருமை ஏரிகள் மட்டும்தான். ஒரு மாகாணத்தில் ஏரிகளா... என்ன நூற்றுக்கணக்கில் இருக்குமா எனக் கேட்கிறீர்களா? நூற்றுக்கணக்கில் இல்லை, ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. இந்த ஒரு மாகாணத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏரிகள் எப்படிச் சாத்தியம் என அடுத்த கேள்வியை எழுப்பலாம். 11,842 ஏரிகள் இருக்கின்றன. சில வரலாற்று ஆதாரங்கள் ஒரு காலத்தில் 15,291 ஏரிகள் இருந்ததாகவும் சொல்கின்றன. ஒவ்வோர் ஏரியும் தலா 10 ஏக்கருக்கும் மேல் பரந்துவிரிந்து காணப்படுகிறது. 2.5 ஏக்கர் பரப்பு கொண்ட சிறு சிறு ஏரிகளையும் சேர்த்தால் மொத்தமாக 21,871 ஏரிகள் இருக்கின்றன.

ஒவ்வோர் ஏரியும் அமைப்பிலும் தன்மையிலும் தனித்துவம் கொண்டவை. மினிசோட்டாவின் அனைத்து ஏரிகளையும் பார்த்த மனிதர்கள் சொற்ப அளவில்தான் இருக்கிறார்கள்.

மினிசோட்டா என்ற சொல் பூர்வீக வாசிகளால் சூட்டப்பட்ட சொல். இதற்கு கலங்கிய நீர்ப்பிரதேசம் என்று பொருள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகள் அதிகமாக இருப்பதால் ஏரி மாவட்டம் என குறிப்பிடுவர். அந்த வரிசையில் இது ஏரிகள் மாநிலம் என்றே அழைக்கப்படுகிறது. இந்த மாநிலத்தின் மரம் 'பைன் மரம்.' இயற்கையைப் புரிந்துகொண்டு, இயற்கையுடன் வாழ நினைப்பவர்களுக்கு இந்த மினிசோட்டா சொர்க்கம்தான். நகரம், கிராமம், சாலைகள் ஓரம் என எங்கு போய் பார்த்தாலும் அதிகமாக இருப்பது ஏரிகள்தான். சாதாரணமாகச் சாலையில் பயணிக்கும்போது, எதிரே வாகனங்கள் வருவதுபோல, வரிசையாக ஏரிகள் அமைந்துள்ளன.

ஒவ்வோர் ஏரியும் அமைப்பிலும் தன்மையிலும் தனித்துவம் கொண்டவை. மினிசோட்டாவின் அனைத்து ஏரிகளையும் பார்த்த மனிதர்கள் சொற்ப அளவில்தான் இருக்கிறார்கள். ஏரியின் எல்லையைத் தெளிவாக முன்னரே வரையறுத்து, கரையை அமைத்து வைத்திருந்ததால்தான், இப்போது வரை ஏரிகள் அழியாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக முன்வைக்கப்படுகிறது. அனைத்து ஏரிகளிலும் கோடை வாரயிறுதிகளில் நல்ல கூட்டம் இருக்கும்.

Vikatan

ஒவ்வொரு ஏரியிலும் தனியாகப் பூங்காக்களும் உண்டு. ஏரியைச் சுற்றிப் பார்ப்பவர்களுக்கு முக்கியமான விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். குப்பைகளை ஏரியில் போடக் கூடாது, தண்ணீரை மாசுபடுத்தும் விஷயங்களில் எக்காரணம் கொண்டும் ஈடுபடக் கூடாது. மீறி ஈடுபட்டால், கடுமையான தண்டனைகள் உண்டு. மினிசோட்டா ஏரிகளைக் காண நாள் முழுவதும் பயணிகள் வருவது உண்டு.

மினிசோட்டா மக்கள், இந்த ஏரிகள் இப்படித்தான் உருவானது என்று ஒரு புராண காரணத்தையும் சொல்கிறார்கள். அமெரிக்க நாட்டுப்புறக் கதைகளில் பால் பன்யன் (Paul Bunyan) என்று ராட்சத மரம் வெட்டுபவரின் கதாபாத்திரத்துக்கு முக்கிய இடம் உண்டு. அவர் வைத்திருந்த நீலநிறக் காளை தாறுமாறாக ஓடும்போது பதிந்த கால்தடங்கள்தான் இந்த ஏரிகள் என்கிறார்கள், அந்த மக்கள்.

Minnesota lakes
Minnesota lakes

மினிசோட்டாவின் பொருளாதாரம் ஏரிகளால்தான் வளர்கிறது, என்கிறது அம்மாகாண அரசு. மினிசோட்டாவின் ஏரிகள் கோடைக்காலத்தில் தண்ணீரும் குளிர்காலத்தில் மூடியவாறு பனியாகவும் இருக்கின்றன.

முக்கியமாக ஏரிகளில் எதையும் கரைப்பதில்லை. ஏரியை அழித்து கட்டடங்கள் கட்டுவதில்லை. ஏரிகளைச் சுற்றிக் கடைகள் திறந்து, கழிவை ஏரியில் கலக்கச் செய்வதில்லை. அதனால்தான் மினிசோட்டாவின் ஏரிகள் இன்னும் உயிரோடு இருக்கின்றன.

அபாயகட்டத்தில் புழல் ஏரி... என்ன காரணம்?

பல ஏரிகளைப் பார்த்திருந்தாலும், மினிசோட்டாவின் ஏரிகள் 'இதுதான் சொர்க்கம்' என்பதை காணும் ஒவ்வொருவருக்கும் தெளிவுபடுத்தும். சுற்றுலாப் பயணிகளுக்கு மினிசோட்டா ஏரிகள் எல்லாமே சுவாரஸ்யமான ஒன்றாகத்தான் இருக்கும். கடற்கரை இல்லாமல் எக்கச்சக்கமான ஏரிக்கரை கொண்ட ஊர் என்றால் அது மினிசோட்டாவாகத்தான் இருக்கும். தமிழகத்தில் ஏரிகளை அழித்து அதன்மேல்தான் அரசு கட்டடங்களே கட்டப்படுகின்றன. மினிசோட்டா மாநிலம் ஏரிகளைப் பராமரிப்பதற்கு இன்றைய நிலையில் ஒரு முன்மாதிரி என்றே சொல்லலாம்.