Published:Updated:

பக்கத்தில் புலி, ஊட்டியை விஞ்சும் குளிர்... `தலமலை' த்ரில் அனுபவிக்கத் தயாரா?! Long Drive போலாமா?- 1

தலமலை காட்டுக்குள் ஒரு த்ரில்லிங் அனுபவம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவை நண்பர்களைப் பார்த்து நான் பொறாமைப்படும் விஷயம் இதுதான். வீக் எண்டுகளில் வீட்டில் முடங்கிக் கிடக்க மாட்டார்கள். ஊட்டியில்தான் கண் விழிப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட கோவை பார்ட்டிகளின் வாண்டர்லிஸ்ட்டிலும் இன்னும் ஏகப்பட்ட இடங்கள் மீதம் இருக்கின்றன. அதில் ஓர் இடம்தான் தலமலை.

ஊட்டி, மசினகுடி, பவானிசாகர், சைலன்ட் வேலி, மழம்புழா டேம், கடம்பூர், கொடநாடு... அட இவ்வளவு ஏன் அடர்ந்த தெங்குமரஹடா காட்டுக்குக்கூட விசிட் அடித்திருப்பார்கள். அதையும் தாண்டி கர்நாடகா கிளம்புபவர்கள் சத்தியமங்கலம் செக்போஸ்ட்டில்... திம்பம் செக்போஸ்ட்டில் வேண்டுமானால் செல்ஃபி எடுத்திருப்பார்கள். ஆனால், தலமலைக்கு விசிட் அடித்திருக்க மாட்டார்கள். காரணம், தலமலை லொக்கேஷன் அப்படி!

முதல் வாரம்... தலமலைக்கு விசிட் அடித்த ஓர் அற்புத அனுபவத்தைத்தான் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். முதலில் தலமலை எங்கே இருக்கிறது?

தலமலைக்கு ரூட் மேப்பெல்லாம் தேவையே இல்லை. சத்தியமங்கலம் சாலை வழியாக செக்போஸ்ட் கடந்து, 27 கொண்டை ஊசிகளைக் கடந்தால்... திம்பம் சோதனைச் சாவடி. திம்பத்தில் அந்த டீக்கடைதான் எல்லோருக்கும் லேண்ட்மார்க். அந்த டீக்கடையை ஒட்டியபடியே ஒரு இடதுபக்கச் சாலை திரும்பும். அதுதான் தலமலை.

கோவை, சத்தியமங்கலம், ஈரோடு, புளியம்பட்டி, பவானி, திருப்பூர், பொள்ளாச்சிக்காரர்களுக்குச் செமையான வீக் எண்ட் ஸ்பாட்தான் தலமலை. தலமலையில் அப்படி என்னதான் ஸ்பெஷல்?

தலமலை
தலமலை
தலமலை
தலமலை

சென்னை–கோவை–ஈரோடுவாசிகள் கொண்ட 8 பேர் தலமலைக்கு ஸ்கெட்ச் போட்டோம். இதற்கென வாட்ஸ்-அப் குரூப், கான்ஃபெரென்ஸ் கால்கள் என்று டூருக்கு முன்பே களை கட்டி விட்டது தலமலை ட்ரிப். தலமலையை எங்கள் குழுவில் யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், எங்கள் நண்பர்களில் ஒருவருக்கு ஏற்கெனவே தலமலை பரிச்சயம். ''சிறுத்தை பார்த்தேன்; பெரிய சாம்பார் மான் இங்கதான் நிறைய இருக்கு'’ என்று பில்ட்-அப் ஏற்றிக் கொண்டே இருந்தார். அவர் சொன்னது உண்மைதான். காரணம், சத்தியமங்கலம் தாண்டி திம்பம் திரும்பும் இடத்தில்தான் தலமலை இருக்கிறது. திம்பம் பற்றி உங்களுக்குத் தெரியும்தானே! சிறுநீர் கழிக்க காட்டுக்குள் இறங்கிய லாரி க்ளீனர் ஒருவரை நோக்கி சிறுத்தை நேரெதிரே பாய்ந்தது இந்த இடம்தான். சிறுத்தை அட்டாக்குக்குப் பிறகு கடுமையான பாதுகாப்புச் சோதனை இருந்தது. இப்போது சோதனையும் இல்லை; சிறுத்தையும் இல்லை!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வால்வோ V40 காரில், மோட்டார் விகடன் வாசகர் பரத் என்பவருடன் தலமலை போன அனுபவம் எனக்கு உண்டு. சொன்னால் நம்புங்கள்; நிஜமாகவே யானை, காட்டெருமை, சாம்பார் மான், சிறுத்தை எல்லாமே, நமது புகைப்பட நிபுணருக்கு Wildlife Photographer அந்தஸ்த்தைத் தந்திருந்தன. இந்த முறையும் எதையும் மிஸ் செய்யக்கூடாது என்பதுதான் என் பேரார்வத்துக்குக் காரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தலமலை
தலமலை

கோவைதான் எங்கள் சென்டர் பாயின்ட். காரணம், எட்டு பேரும் வெவ்வேறு திசை. கோவையில் எட்டு பேர் குழுவும் ஒன்றுகூடினோம். ஒரு டொயோட்டா இனோவாவில் குறைவான லக்கேஜுடன் கிளம்பினோம். மற்ற டூரிஸ்ட் ஸ்பாட்கள்போல் இல்லை; தலமலைக்கு பைக்கில் செல்ல அனுமதி இல்லை. காரணம், காடு! பொதுவாக, ஒரு காரோ, பைக்கோ... 1 கிமீ–க்கு எவ்வளவு நேரம் ஆகும்? திம்பம் செக்போஸ்ட்டில் இருந்து தலமலைக்கு 25 கிமீதான். ஆனால், 2 மணி நேரம் ஆனது. மோசமான பாதையோ, ட்ராஃபிக்கோ இதற்குக் காரணமில்லை; தலமலையின் அழகு அப்படி!

எட்டு நண்பர்கள் ஒரே காரில் இருந்தால், பயணம் எவ்வளவு ஜாலியா இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். இரண்டரை மணி நேரத்தில் தலைமலையை அடைந்து விட வேண்டும் என்பது எங்களுடைய திட்டம். கோவை முதல் பண்ணாரி வரை உள்ள சாலை கொஞ்சம் நெரிசலாகத்தான் இருந்தது. ஒரு ஸ்பின் பௌலரின் பந்து எப்படித் திரும்பும் என்று கணித்து ஆடுபவர் நல்ல பேட்ஸ்மேன். அதுபோல்தான் ரோட்டின் குறுக்கே மெய்மறந்து கடக்கும் மக்களையும் கவனித்து கார் ஓட்டுபவர், ஒரு நல்ல டிரைவர். எங்கள் குழுவில் நல்ல டிரைவர் யாரென்று எங்களுக்குள் ஒரு வாக்குவாதம் இருந்து கொண்டே வந்தது.

பயணம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே காலை உணவை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தலமலையில் தேவையான எந்தப் பொருட்களும் எளிதில் கிடைத்துவிடாது. தேவையான உணவுப் பொருட்களை கோவையில் முதல் நாள் இரவே கொள்முதல் செய்துகொண்டோம். ‘ரகி ரகிட’ என்று தனுஷை அலற விட்டுக் கொண்டே பண்ணாரி சோதனைச்சாவடி வந்து அடைந்தோம். பண்ணாரியில் ஆன்மீக நண்பர்களின் வரவு அதிகமாக இருந்தது.

பவர் ப்ளே ஓவர்களில் கேதர் ஜாதவை இறக்கிவிட்டால், சேஸிங் எப்படித் திணறுமோ, அது மாதிரிதான் நமது பயணத்தின் வேகத்தைக் குறைப்பதற்கு 27 கொண்டை ஊசி வளைவுகள் காத்திருந்தன. இந்தச் சாலையில் அதிகப்படியான சரக்கு லாரிகள் வரும் என்பதால், நாம் நினைக்கும் வேகத்தில் இங்கு செல்ல முடியாது. கொண்டை ஊசி வளைவுகளில் மேலே செல்லச் செல்ல சத்தியமங்கலத்தின் தனி அழகு கண்களுக்குத் தெரிந்தது. சத்தியமங்கலத்தில் இனோவாவின் விண்டோக்களை இறக்கிவிட்டோம். கோவை வரை ‘கதவை மூடு; ஏசி வெளில போகுது’ என்ற நாங்கள், சத்தியமங்கலம் தாண்டியதும், ‘கதவைத் திற; காற்று வரட்டும்’ என்று 'கைலாசா'வின் ரசிகர்கள் ஆகியிருந்தோம். விண்டோ சைடு இருப்பவர்கள், கண்களுக்கு ஏதாவது மிருகம் தென்பட்டு விடாதா என்று மிகவும் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. காட்டுப் பன்றிகளும், கலர் கலராக மான்களும், மலபார் அணில்களும், மயில்களும், கழுகுகளும் எங்கள் த்ரில்லிங் அனுபவத்துக்கான முதல் கியரைப் போட்டன.

தலமலை
தலமலை
தலமலை
தலமலை
தலமலை
தலமலை
தலமலை
தலமலை
தலமலை
தலமலை

திம்பம் வந்தோம். திம்பத்தில் இருந்து இடதுபுறம் திரும்பினால் தலமலை. இங்கிருந்து நாங்கள் புக் செய்திருந்த ரெஸார்ட்டுக்கு வெறும் 26 கிமீதான். ஆனால், ‘இது கொடூரமான காடு; அனுமதியில்லை’ என்று வனத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். இதுவே போனமுறை வால்வோவில் போனபோது, அனுமதி கிடைத்ததைச் சொல்லிக் கேட்டுப் பார்த்தேன். வேலைக்கு ஆகவில்லை!

கர்நாடக எல்லையைக் கடந்து, மீண்டும் தமிழ்நாடு எல்லைக்குள் வந்து, அப்படியே தாளவாடி தொட்டு, அங்கிருந்துதான் தலமலைக்குச் செல்ல முடியும் என்றார்கள். ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று கிளம்பினோம். நிஜம்தான்; செம த்ரில்லிங்காக இருந்தது அந்தப் பாதை. நம்மை நோக்கி ஒரு காட்டெருமை... தினமும் பயணிக்கும் பாதைப்போல! நம்மைக் கண்டதும் செல்லமாக முறைத்துவிட்டு, லேசாக ஜெர்க் ஆகி, பிறகு வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்து சாலையைக் கடந்தவிதம் கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. காட்டெருமைக்கு ‘ஸாரி’ சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.
ஆஃப்ரோடு, சாஃப்ட்ரோடு என்று கலந்து கட்டி இருந்தது பயணம். ஒன்றரை மணி நேரத்தில் முடிய வேண்டிய பயணத்தை, நான்கரை மணி நேரமாக மாற்றியது இந்த வழித்தடமே! பின்பு தாளவாடி வந்தடைந்து, அங்கிருந்து தலமலை.

தலமலை
தலமலை
தலமலை
தலமலை
தலமலை
தலமலை

தலமலையில் இப்படி ஓர் இயற்கை அழகா! ரொம்பவும் வியப்பாகவே இருந்தது. கண்களை மூடவே இல்லை. அடர்ந்த காடுகள், மூங்கில் மரங்கள், குளங்கள், கரும்புத் தோட்டங்கள் என்று பச்சைப் பசேலெனப் படர்ந்திருந்தது வழித்தடம். ரெஸார்ட்டுக்கு வந்து சேர மதியம் ஒரு மணி ஆகிவிட்டது.

தலமலையில் தங்க நினைப்பவர்கள், முக்கியமாக இதை நோட் செய்து கொள்ளுங்கள்.`Thalamalai Resorts' என்று கூகுளில் டைப் செய்தால், மூன்று அல்லது நான்கு காட்டேஜ்கள்தான் வரும். அதிலும் ஒன்றிரண்டு Temporarily Closed போர்டு போட்டிருப்பார்கள். தலமலையில் முக்கியமானது Peace Valley Resort. இங்கே ஒரு நாளைக்கு தலைக்கு 1,500 ரூபாயில் இருந்து வசூலிக்கிறார்கள். பக்கத்தில் சுகம் ரெஸார்ட் என்றொன்று இருக்கிறது. இரண்டும் லிங்க் போல! Peace Valley Resort–ல் ஆன்லைனில் புக் செய்தால், சில நேரம் சுகம் ரெஸார்ட்டில்தான் தங்க வைக்கிறார்கள். தனியாகவே சுகம் ரெஸார்ட்டை புக் செய்தால், மிகக்குறைந்த விலையிலேயே தங்கலாம் என்பது பிறகுதான் தெரிந்தது. பிக்கல் பிடுங்கல் இல்லாமல் கவனிக்கிறார்கள். ரெஸார்ட் ஊழியர் சிவா, நல்ல நண்பராகியும் போனார்.

மலைகளுக்குக் கீழே... சுற்றிலும் பச்சைப் பசேலென... லெமன் கிராஸ் மரங்கள் சூழ... ரெஸார்ட் அமைந்திருந்த அழகே வேறு மாதிரி இருந்தது. முயல், வான்கோழியெல்லாம் வளர்த்தார்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தலமலை க்ளைமேட்டில் ஒரு சிறப்பு – இங்கே எத்தனை பெரிய மழை பொழிந்தாலும், புல்தரை சட்டெனக் காய்ந்து விடுகிறது. எவ்வளவு வெயில் அடித்தாலும் வெப்பம் தெரியவே இல்லை.

தலமலை
தலமலை
தலமலை
தலமலை
தலமலை
தலமலை

மதிய உணவு முடித்துவிட்டு, ரெஸார்ட் மைதானத்திலேயே நல்ல பிட்ச்சாகத் தேர்ந்தெடுத்து T10 இன்னிங்ஸ் போட்டோம். நட்ட நடுக் காட்டுக்குள், விலங்குகள் உலவும் ஏரியாவில் சிக்ஸர் அடித்து விளையாடியதெல்லாம் யாருக்கும் கிடைக்காத வரம்.

காலை, அதே விலங்குகள் உலவும் காட்டுக்குள் ட்ரெக்கிங் கூட்டிப் போனார் சிவா. ‘இது லீகல் ட்ரெக்கிங்தானே’ என்று விசாரித்தோம். ‘‘எங்க மாமா அங்கதான் இருக்காரு. சட்டத்துக்குப் புறம்பா நாங்க காட்டுக்குள்ள கூட்டிட்டுப் போக மாட்டோம்’’ என்றார் சிவா. அமைதியாகச் சத்தம் போட்ட காட்டுக்குள், செமத்தியான ட்ரெக்கிங். அந்தப் புத்தம் புதுக் காலையில் மழை வேறு இன்னும் வெறியேற்றி விட்டது. மொபைலின் டெம்ப்ரேச்சரைக் கவனித்தால்... 14 டிகிரி என்றது.

தலமலை
தலமலை
தலமலை
தலமலை

‘‘ஊட்டி தோத்துடும் போல’’ என்று நினைத்துக் கொண்டோம். மணப்பெண்ணைவிட, கூட வரும் தோழிகள் இன்னும் அழகாய்த் தெரிவார்கள்தானே! அதுபோல், தலமலையைச் சுற்றியுள்ள ஏரியாவின் அழகு கொள்ளை கொண்டது. ‘பேராண்மை’ பட லோக்கேஷன் போல இருந்தது ஏரியா. இங்கே, 'ஜெயம்' ரவிக்குப் பதில் சிவா.... பெண்களுக்குப் பதில் 8 ஸ்மார்ட் ஆண்கள்.

அகழிகள், சிற்றோடைகள், புல்வெளிகள், மூங்கில் மரங்கள் என்று செம த்ரில்லிங்காக இருந்தது ட்ரெக்கிங். ஒரு கல் குவாரியில் உள்ள குளத்தைக் காண்பித்து, ‘‘குளிக்கிறீங்களா’’ என்றார் சிவா. என் போன்ற நீச்சல் வெறியர்கள், தண்ணீரைப் பார்த்தால் தாவி விடுவோம். ஆனால் இந்த 14 டிகிரி குளிரில் எங்குட்டுக் குளிக்க? ‘என் ராசாவின் மனசிலே’ மீனா மாதிரி செல்லமாகக் கால் மட்டும் நனைத்துக் கொண்டோம்.

அன்றிரவு, தலமலை கிராமத்துக்குள் ஒரு விசிட் போனோம். பாதி கன்னடம்; பாதி தமிழ் பேசுகிறார்கள். ஒரு காலத்தில் கர்நாடகா மாநிலமாக இருந்ததாம் தலமலை. இப்போது தமிழ்நாடு பார்டர். அதனால்தான் இந்த எஃபெக்ட். ஊருக்குள் லைவ்வாக நாட்டுக்கோழி வாங்கி அடித்துக் குழம்பு வைத்து... செம தீனி! தலமலை குக்கிராமத்தில் மிகப் பெரிய குக்கான வெங்கடேஷுக்கு மானசீக நன்றி!

இத்தனை அடர்ந்த காட்டுக்குள் ஒரு விலங்குகூடப் பார்க்கவில்லை என்பது கொஞ்சம் வருத்தம்தான். ஆனால், பவர் கட் ஆன இரவு நேரத்தில் ஏதேதோ விலங்குகள் உறுமும் சத்தம் கேட்டது. ஏதோ நடமாடும் சத்தமும் பீதியைக் கிளப்பின. நிச்சயம் யானையோ, காட்டெருமையாகவோ இருக்கும் என்று நினைத்துக் கொண்டோம்.

தலமலை ட்ரிப்பில் இன்னொரு மிகப் பெரிய அட்ராக்ஷன் – சுகம் ரெஸார்ட்டின் நாட்டு நாய்கள். வனவிலங்குகளைப் பார்த்தால், நாய்கள் குறைக்குமாம். நாய்கள் குறைக்கும் சத்தம் இன்னும் பீதி ஏற்றியது. அது சாதா நாய்கள் இல்லை; வேட்டை நாய்கள் என்று பிறகுதான் தெரிந்தது. தலமலைக் காட்டின் எந்த மூலையில் இருந்து சிவா ஒரு விசில் அடித்தால் போதும்... நான்கு நாய்களும் நான்கு கால் பாய்ச்சலில் வருகின்றன.

தலமலை
தலமலை
தலமலை
தலமலை
தலமலை
தலமலை

மறுநாள், சிவா சொன்னார். ‘‘யானைதான் போயிருக்கு’’ என்று கால்தடம் காண்பித்தார். வேட்டை நாய்களும் அதைக் கட்டியம் கூறின. மின்சாரம் இன்னும் வரவில்லை. அதே பீதியோடு லெமன் கிராஸ் டீ அடித்துவிட்டு, மறுபடியும் ஒரு மேட்ச். அப்போதுதான் தெரிந்தது – முந்தின நாள் இரவு பவர் கட்டுக்குக் காரணம் – யானைகளின் வருகை என்றார்கள். டிரான்ஸ்ஃபார்மர் சிதிலமடைந்திருந்தது. அதாவது, ஒட்டுமொத்தத் தலமலையும் இரண்டு நாள் இருட்டில் இருந்தது.

சார்ஜ் ஏற்ற முடியவில்லை; 15 டிகிரி குளிரில் பச்சைத் தண்ணீர் குளியல்; இரவு கும்மிருட்டு; டார்ச் அடிக்கக்கூட மொபைலில் சார்ஜ் இல்லாதது; சட்னி அரைக்க மின்சாரம் இல்லாமல் வெறும் பச்சைப் புளி ரசத்தைத் தொட்டு இட்லி சாப்பிட்டது – என்று எதற்குமே எங்களுக்குக் கோபமே வரவில்லை. இருட்டில் கழித்தாலும் எரிச்சல் ஏற்படவில்லை.

மறுநாள் திரும்ப கோவைக்கு ரிட்டர்ன். இந்த முறை தலமலைக் காடு வழியே அனுமதி கிடைத்தது. ‘காரை விட்டு இறங்கக் கூடாது; செல்ஃபி எடுக்கக் கூடாது; 40 நிமிஷத்துக்குள்ள அந்த செக்போஸ்ட் போயிடணும்’ என்று ஏகப்பட்ட கண்டிஷன்களோடு அனுமதி கொடுத்தார்கள். ஒற்றையடிப் பாதைப் பயணம் செம இன்ட்ரஸ்ட்டிங்காக இருந்தது. ‘புலி, சிறுத்தை, யானைகள் அடர்ந்த காடு’ என்றார்கள். இந்த வழியாகத்தான் நாங்கள் போன தடவை ஒற்றை யானை பார்த்தோம். (படத்தில் இருப்பது அதேதான் பாஸ்!) இப்போது போர்டு மட்டுமே பார்த்தோம். ‘இந்த இடத்துலதான் போன வாட்டி வந்தப்போ சிறுத்தை பார்த்தேன்’ என்று தன் பங்குக்கு ஓர் இடத்தைக் காட்டினார், தலமலை டூர் ப்ளான் போட்ட எங்கள் தல! ‘வட போச்சே’ வடிவேலு நிலைமையில்தான் எங்கள் முகரைகள் இருந்தன. கடைசி வரை ஒரு யானையைக்கூடப் பார்க்காதது வருத்தம்தான்.

வீட்டுக்குப்போன நான்காவது நாள், அந்த வாட்ஸ்–அப் குரூப்பில், ரெஸார்ட் மேனேஜர் ஒரு வீடியோ அனுப்பியிருந்தார். நாங்கள் தங்கியிருந்த ரெஸார்ட்டுக்கு அருகில் புலி ஒன்று ஜாலியாக வாக்கிங் போய்க் கொண்டிருந்தது. அடடா, மறுபடியும் ‘வட போச்சே!’

தலமலை
தலமலை
  • தலமலைக்குச் செல்பவர்கள் கவனத்துக்கு...

  • சத்தியமங்கலம் தாண்டி, திம்பம் செக்போஸ்ட்டுக்கு இடதுபுறம் திரும்பினால் 26 கிமீ–யில் தலமலை. இது ரிஸர்வ்டு ஃபாரஸ்ட் என்பதால், எல்லோருக்கும் அனுமதி கிடைக்காது. பைக்குகளுக்குச் சுத்தமாக அனுமதி இல்லை. ஒருவேளை ஏற்கெனவே ரெஸார்ட்டில் முன்பதிவு செய்து, அவர்களிடம் இருந்து முறைப்படி அனுமதி வாங்கியிருந்தால், செக்போஸ்ட்டைத் திறந்து விடுவார்கள். இல்லையென்றால், கர்நாடக எல்லையைக் கடந்து, மீண்டும் தமிழ்நாடு எல்லைக்குள் வந்து, அப்படியே தாளவாடி தொட்டு, அங்கிருந்துதான் தலமலைக்குச் செல்ல முடியும். இதற்கு 3 மணி நேரம் கூடுதல் ஆகும். சுகம் ரெஸார்ட் இங்கே தங்குவதற்கு நல்ல சாய்ஸ். தலமலையில் கடைகள் அவ்வளவாகக் கிடையாது என்பதால், தின்பண்டங்கள், நொறுக்குத் தீனிகளை டவுனிலேயே பார்சல் செய்து கொள்ளுங்கள். தலமலையில் இரவு நேரங்களில் வெளியே திரிவது நிச்சயம் ஆபத்து. அட்வென்ச்சர் ட்ரிப் விரும்புபவர்கள் நிச்சயம் தலமலைக்கு ஒரு லாங் டிரைவ் போகலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு