Election bannerElection banner
Published:Updated:

"ரிக்‌ஷாதான் வீடு... இதுதான் கொரோனா காலத்துல என்னை காப்பாத்திச்சு!"- ரிக்‌ஷா பாண்டியனின் கதை

பாண்டியன் ரிக்‌ஷா | Pandian Rickshaw
பாண்டியன் ரிக்‌ஷா | Pandian Rickshaw

முன்பு சென்னை முழுவதும் பரவியிருந்த ரிக்‌ஷாக்காரர்கள் இன்றைக்குப் பிராட்வே பகுதியில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றனர். ரிக்‌ஷாக்காரர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாகவே இன்றைக்கு நூறுக்கும் குறைவுதான்.

புதுமைப்பித்தனின் மிகவும் புகழ்பெற்ற கதைகளில் ஒன்று ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’. அதில், கதையின் முதன்மைக் கதாபாத்திரமான கந்தசாமிப் பிள்ளை, ‘பிராட்வே’யும் ‘எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு, திருவல்லிக்கேணியில் இருக்கும் தன் வீட்டுக்குப் பைசா செலவில்லாமல் எப்படிச் செல்வது என்று வெகு தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பார். "இப்பொழுது காப்பி சாப்பிட்டால் கொஞ்சம் விறுவிறுப்பாகத்தான் இருக்கும்" என்று அவர் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், "ஐயா, திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போறது?" என்று கடவுள் அவரிடம் வழி கேட்பார்.

"டிராமிலும் போகலாம், பஸ்ஸிலும் போகலாம், கேட்டுக் கேட்டு நடந்தும் போகலாம்; மதுரைக்கு வழி வாயிலே..." என்பார் கந்தசாமிப் பிள்ளை. "நான் மதுரைக்குப் போகவில்லை; திருவல்லிக்கேணிக்குத்தான் வழி கேட்டேன்; எப்படிப் போனால் சுருக்க வழி?" என்று கடவுள் பதிலளிக்க, இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

பாண்டியன் ரிக்‌ஷா | Pandian Rickshaw
பாண்டியன் ரிக்‌ஷா | Pandian Rickshaw

அந்த நொடியே நண்பர்களாகிவிட்ட இருவரும் நேராக ஒரு ஓட்டலுக்குச் சென்று, (கடவுள் செலவில்) காபி குடித்துவிட்டு, திருவல்லிக்கேணிக்குச் செல்வதற்காக ரிக்‌ஷா ஒன்றைப் பிடிப்பார்கள். இன்றைக்கு அருகிவரும் இனங்களில் ஒன்றாக ஆகிவிட்ட அந்த ரிக்‌ஷாக்காரர் இனத்தில் ஒருவரைத்தான் அதே ‘பிராட்வே’யில் இன்று சந்திக்க நேர்ந்தது.

வேறொரு வேலையாகப் பிராட்வேயிக்குச் சென்றிருந்த நிலையில், பூக்கடை காவல் நிலையம் அருகே வரிசையாக நாலைந்து ரிக்‌ஷாக்கள் இங்குமங்குமாக அலைந்து கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தேன். நானும் வழி கேட்பதைப் போலவே அந்த ரிக்‌ஷாக்காரரை அணுகினேன்.

“பவழக்காரத் தெருவுக்கு எப்படி’ண்ணே போறது?”

சென்னையில் ஆட்டோகாரர்களிடம் வழி கேட்டால், பெரும்பாலானோர், “ஏறுங்க சார், போலாம்” என்று வண்டியைக் கிளப்புவார்கள். ஆனால் இந்த ரிக்‌ஷாக்காரரோ, சவாரிக்கு அழைக்காமல் வழி காட்டினார்.

நான் வழிகேட்பதற்காக அவரிடம் பேசவில்லை என்பதை உணர்ந்துவிட்ட அவர், ‘உன் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயார்’ என்ற பாவனையில் என்னைப் பார்த்தார்.

“இன்னிக்கு எத்தனை சவாரி எடுத்தீங்க?” என்று பேச்சைத் தொடங்கினேன். “இதுவர ஒரு சவாரியும் எடுக்கல சார்... அப்டியே சும்மா போய்ட்டு இருக்கு” என்று கணிக்க முடியாத தோரணையில் பதிலளித்தார்.

பாண்டியன் ரிக்‌ஷா | Pandian Rickshaw
பாண்டியன் ரிக்‌ஷா | Pandian Rickshaw

அவரே மேலும் தொடர்ந்தார். “எனக்கு ஊரு திட்டக்குடி பக்கத்துல அங்கனூர். நான் மெட்ராஸ் வந்து நாப்பது வர்ஷம் தாண்டிருச்சு... அன்னில இருந்து இன்னிக்கு வர இதே தொழில்தான். ஆனா, முன்ன மாதிரி இல்ல...” என்று வண்டியைத் துடைக்கத் தொடங்குகிறார் எம். பாண்டியன் என்ற அந்த ரிக்‌ஷாக்காரர்.

“படிப்பு ஏறல சார்... அப்பா நல்லாதான் படிக்க வச்சாரு... எனக்குச் சுத்தமா படிப்பு வரல... அதுனால நானும் என் நண்பன் வீரமுத்துவும் மெட்ராஸுக்கு ரயில் ஏறிட்டோம். வீரமுத்து இன்னிக்கு வக்கீலா இருக்காரு... இப்பகூட சண்ட போடுவாரு, நீயே தான்டா உன்ன கெடுத்துக்கிட்டனு... ஆனா சார்... எனக்கு இந்தத் தொழில்ல ரொம்ப திருப்தி சார்... நிம்மதியா இருக்கேன்” என்று புன்னகைக்கும் பாண்டியனுக்கு இப்போது 59 வயதாகிறது. வாழ்க்கை முழுவதும் ரிக்‌ஷா ஓட்டியே தன்னுடைய இரண்டு பெண்களையும் மணம் முடித்துக் கொடுத்திருக்கிறார்.

முன்பு சென்னை முழுவதும் பரவியிருந்த ரிக்‌ஷாக்காரர்கள் இன்றைக்குப் பிராட்வே பகுதியில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றனர்; ரிக்‌ஷாக்காரர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாகவே இன்றைக்கு நூறுக்கும் குறைவுதான் என்கிறார் பாண்டியன்.

“காலம் மாற மாற எங்காளுங்க எல்லாம் தொழில மாத்திக்கிட்டானுங்க சார்... ஆட்டோ ஓட்டப் போனாங்க, கடைங்களுக்குப் போனாங்க, வேற ஊருக்குப் பொழைக்கப் போனாங்க” என்று ரிக்‌ஷாக்காரர்கள் தொழிலை விட்டு வெளியேறியதற்கான காரணத்தைப் பட்டியலிடும் பாண்டியன், தொழிலிலிருந்து பெரும்பாலானோர் நொடிந்து போனதற்குக் குடிப் பழக்கத்தைக் காரணமாகச் சொல்கிறார்.

“ஒரு சவாரி எடுத்தா வர்ற வாடகையைக் கொண்டு போய் குடிக்கிறது... உடம்பு எப்பிடித் தாங்கும்? குடிச்சிருக்கவன்கிட்ட சவாரி எப்பிடி வருவாங்க? கொஞ்சமாச்சும் தொழில் மேல மரியாத வேணாமா சார்?” என்று அங்கலாய்க்கிறார் பாண்டியன்.

பாண்டியன் ரிக்‌ஷா | Pandian Rickshaw
பாண்டியன் ரிக்‌ஷா | Pandian Rickshaw

பிள்ளைகளைக் கட்டிக் கொடுத்துவிட்ட பிறகு, தன்னுடைய மனைவியையும் ஊருக்கு அனுப்பிவிட்டதாகச் சொல்லும் பாண்டியன், ரிக்‌ஷாவையே தன்னுடைய வீடாக்கிக் கொண்டார். “வண்டியிலேயே தூங்கிவிடுவேன். வண்டிதான் பொண்டாட்டி, புள்ள மாதிரி”. இதுவே கொரோனா ஊரடங்கு காலங்களில் தன்னைக் காப்பாற்றியதாகச் சொல்கிறார்.

சவாரி தவிர்த்து சினிமா ஷூட்டிங்கிற்கு அனுப்புவதன் மூலமும் ரிக்‌ஷா வருமானம் ஈட்டித் தந்திருக்கிறது. “தனுசு ‘மாரி’ படத்துல எல்லாம் நம்ம வண்டி வந்திருக்குது... அந்த மாதிரி ஷூட்டிங் எல்லாம் போனா அஞ்சு, ஆறாயிரம் கிடைக்கும்... இப்ப நம்பர் மாத்திட்டனால, சினிமாக்காரங்க நம்பர்லாம் தொலஞ்சுபோச்சு” என்று தன் சிறிய செல்பேசியில் எண்களைத் துழாவத் தொடங்குகிறார்.

Vikatan
பாண்டியன் ரிக்‌ஷா | Pandian Rickshaw
பாண்டியன் ரிக்‌ஷா | Pandian Rickshaw

ஒரு காலத்தில் பாரிமுனையிலிருந்து படப்பை வரை (சுமார் 40 கி.மீ. தூரம்) சவாரி ஓட்டியதாகச் சொல்லும் பாண்டியன், இன்று பாரிமுனைப் பகுதிகளைத் தாண்டிச் செல்வதில்லை. அதற்கான தேவையும் இல்லை, வயதாகிவிட்டதால் உடம்பும் ஒத்துழைப்பதில்லை என்கிறார்.

“ஆனா, ஒரு தடவக் கூட இந்தத் தொழிலவிட்டு போய்டணும்னு நெனச்சதில்ல சார்... ஏன்னா, நமக்கு ரிக்‌ஷா தான் வீடு, ரிக்‌ஷாதான் வாழ்க்கை!”
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு