Published:Updated:

வானம் [தமிழ்] வசப்படும்!

ப்ரியவிக்னேஷ்
பிரீமியம் ஸ்டோரி
ப்ரியவிக்னேஷ்

எப்படி சமாளிக்கிறதுன்னு எங்க யாருக்குமே புரியலை’’ என நிறுத்துகிறார்.

வானம் [தமிழ்] வசப்படும்!

எப்படி சமாளிக்கிறதுன்னு எங்க யாருக்குமே புரியலை’’ என நிறுத்துகிறார்.

Published:Updated:
ப்ரியவிக்னேஷ்
பிரீமியம் ஸ்டோரி
ப்ரியவிக்னேஷ்

‘`பறவையோட இயல்பே பறக்கிறதுன்னாலும் அதுக்கு நம்பிக்கையே நம்மளத் தாங்க கீழ ஒரு துண்டு நிலமோ கிளையோ இருக்குங்கிறதுதானே! என்னையும் அப்படி நிறைய பேர் தாங்கியிருக்காங்க’’ என நேர்மறையாய்த் தொடங்குகிறார் ப்ரியவிக்னேஷ். சமீபத்தில் ‘அன்பார்ந்த பயணிகளே, தற்போது நாம் காவிரி ஆற்றுக்கரையின் மேலே கடல்மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறோம். அடுத்த பத்து நிமிடங்களில் உங்களுக்கு வலதுபுறமாக, காவிரி ஆறு இரண்டாகப் பிரிந்து ஓடும் காட்சி காணக் கிடைக்கும். திருச்சியைக் கடந்தபின்பு அடுத்த ஏழு நிமிடங்களுக்குள் வலதுபுறமாக அழகர்மலையும் இடதுபுறமாக யானைமலையும் காணக் கிடைக்கும்!’ எனத் தமிழில் உரையாடி வாழ்த்துகள் பெற்ற வைரல் விமானி.

வானம் [தமிழ்] வசப்படும்!

‘`தேனிதான் என்னோட பூர்வீகம். அம்மா தமிழாசிரியை. அவங்களுக்குச் சென்னைல வேலை கிடைக்கவும் இங்கே வந்துட்டாங்க. அப்பா திருவனந்தபுரத்துல நடைபாதை ஓரமா கடை வெச்சிருக்கார். அம்மாவோட தாக்கம் என்கிட்ட சின்ன வயசுல இருந்தே நிறைய இருந்தது. பேச்சுப்போட்டிகளில் என்னைக் கலந்துக்க வெச்சாங்க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலே போற விமானம் எல்லாக் குழந்தைகளுக்கும் ஆச்சர்யம்தானே! அப்படி ஒருதடவை நானும் ஆச்சர்யமா பார்த்துட்டிருந்தப்போ அதுக்குப் பின்னால இருந்த அறிவியலை அம்மா விளக்கிச் சொன்னாங்க. அப்போ விழுந்ததுதான் சகோ, விமானியாகணுங்கிற விதை’’ என்பவர் அதை விருட்சமாக வளர்த்தெடுக்க நிறைய வலிகளைக் கடந்துவந்திருக்கிறார்.

ப்ரியவிக்னேஷ்
ப்ரியவிக்னேஷ்

‘`எளிய குடும்பம் எங்களோடது. கமர்ஷியல் பைலட் ஆகுறது ரொம்ப செலவு பிடிக்கிற படிப்பு. என்னால என் கனவையும் விடமுடியல. அதேசமயம் பொருளாதாரச் சிக்கல்களும் பயமுறுத்துச்சு. அம்மா அப்பா ரெண்டுபேரும், ‘என்ன ஆனாலும் பாத்துக்கலாம்ப்பா’ன்னு சொல்லி கஷ்டப்பட்டுச் சேர்த்துவிட்டாங்க. உள்ளே நுழைஞ்சதுக்குப்புறம்தான் செலவுகள் இன்னும் இன்னும் அதிகமாகும்னு தெரிஞ்சது. தொடுற தூரத்துல இருக்கு வானம். ஆனா கைநீட்ட முடியலன்னா நிறைய வலிக்குமே’’ எனப் பெருமூச்சு விடுபவரை, தாங்கி அணைத்திருக்கின்றன சில கரங்கள்.

‘`பையன் பறக்க ஆரம்பிச்சுட்டான். கனவை நெருங்கிட்டான்னு தெரிஞ்சதும் என் அத்தை கொஞ்சம்கூட யோசிக்காம அவங்க வீட்டை அடமானம் வெச்சு பணம் கொடுத்தாங்க. அந்தப் பணத்துலதான் டிரெயினிங் முடிச்சேன். ஆனா. பெரியரக விமானங்கள் ஓட்டவும் பயிற்சி பெற்றால்தான் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்ங்கிற நிலைமை. அதுக்கோ லட்சக்கணக்குல செலவாகும். எப்படி சமாளிக்கிறதுன்னு எங்க யாருக்குமே புரியலை’’ என நிறுத்துகிறார்.

வானம் [தமிழ்] வசப்படும்!

எல்லாத் திசைகளிலும் இருள் சூழும்போது சட்டென ஒரு மின்னல் தோன்றி வழிகாட்டுமே, அப்படி ஒருவர் இவர் வாழ்க்கையிலும் இருக்கிறார். ‘`திருவனந்தபுரத்துல ஒரு பெரிய ஹோட்டலை ஒட்டித்தான் அப்பா கடை வெச்சிருக்கார். அந்த ஹோட்டல் முதலாளி நாகர்கோயில்காரர். அப்பாகிட்ட அடிக்கடி, ‘பையன் பறக்க ஆரம்பிச்சுட்டானா?’ன்னு பாசமா கேட்டுக்கிட்டே இருப்பாராம். அப்படி ஒருதடவை கேட்டப்போ அப்பா, மேற்கொண்டு பயிற்சியெடுக்கத் தடைபோடும் பொருளாதாரச் சிக்கல் பத்திச் சொல்லியிருக்கார். அவர் உடனே எந்தத் தயக்கமும் இல்லாம 15 லட்ச ரூபாயைத் தூக்கி அப்பாகிட்ட கொடுத்து, ‘பறக்குறதுக்குப் பணம் ஒரு தடையா இருக்கவே கூடாது’ன்னு சொல்லியிருக்கார். அந்தப்பணத்துலதான் மேற்கொண்டு பயிற்சி முடிச்சு வேலைக்குச் சேர்ந்தேன்.’’

‘`டிரெயினிங்கின்போதே எங்களோட இன்ஸ்ட்ரக்டர் ‘அவங்கவங்க தாய்மொழில அறிவிப்பு செய்ய முயற்சி பண்ணுங்க’ன்னு சொன்னார். டப்பிங் படங்கள் நிறைய பார்த்து வளர்ந்தவங்கிறதால பயிற்சியின்போது நண்பர்கள்கிட்ட தமிழில் அப்படிப் பேசிக் காமிப்பேன். வேலைக்குச் சேர்ந்ததுக்கு அப்புறம் ஒருதடவை என் கேப்டன் என்கிட்ட சில தமிழ் வார்த்தைகள் சொல்லச் சொல்லிக் கேட்டார். நான் சொன்ன வார்த்தைகளை வெச்சு அறிவிப்பும் செஞ்சார். வட இந்தியரான அவரே பேசும்போது நாம ஏன் பேசக்கூடாதுன்னு தான் நானும் தமிழில் அறிவிப்பு செய்யத் தொடங்கினேன்.

ப்ரியவிக்னேஷ்
ப்ரியவிக்னேஷ்

ஒருசமயம் இன்னொரு கேப்டன், ‘நாம பறக்குற ரூட்ல இருக்குற முக்கியமான இடங்கள் பத்தித் தெரிஞ்சு வெச்சுக்கோ. அதுபத்திப் பயணிகள்கிட்ட பேசுனா அவங்க நம்மை நெருக்கமா உணர்வாங்க. அதேசமயம் தொழில்நுட்பக் கோளாறுன்னா நமக்கே நாம எங்கே இருக்கோம், அடுத்து என்ன பண்ணணும்னு தெரிஞ்சுக்கவும் வசதியா இருக்கும்’னு சொன்னார். அதுல இருந்து ஒவ்வொரு ரூட்லயும் முக்கியமான இடங்கள் பத்தி ஹோம் ஒர்க் செஞ்சு, எத்தனையாவது நிமிஷம் அது எந்தத் திசைல வருங்கிறதை நோட் பண்ணி சொல்லத் தொடங்கினேன். அப்படி வந்த வீடியோதான் அது. முதல்ல ரொம்பவே தயக்கமா இருந்தது. நண்பர் ஒருவர்தான் அப்லோடு பண்ணலாம்னு தைரியம் கொடுத்தார்.

வீடியோவுக்கு செம ரெஸ்பான்ஸ். ‘அடுத்து எப்போ பறப்பீங்கன்னு சொல்லுங்க. நாங்க வரோம்’னு நிறைய பேர் சொன்னாங்க. மதுரைக்காரங்க எக்கச்சக்கமான பேர் ‘நீங்க வீட்டுக்கு வரணும்’னு அழைப்பு விடுத்திருக்காங்க. எங்க கிரவுண்ட் ஸ்டாஃப்ஸ்கிட்டேயும் நிறையபேர் என்னை விசாரிக்கிறாங்களாம் சகோ. ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் அம்மாவுக்கு இதோட இன்னொரு சந்தோஷமும் இப்போ சேர்ந்திருக்கு. என் தாத்தாவுக்குப் பெரிய வசதி இல்லாததால அம்மா படிக்கிற காலத்துல ஆனந்தவிகடன் வாங்க முடிஞ்சதே இல்லையாம். கடைல தொங்குற அட்டைபடங்களில் இருந்தே நிறைய வாசிக்கக் கத்துக்கிட்டேன்னு சொல்வாங்க. என்னையும் அதனால சின்ன வயசுல இருந்தே ஆனந்தவிகடன் படிக்க வெச்சாங்க. அவங்க பையன் பேட்டியே ஆனந்தவிகடன்ல வருதுன்னதும் ரொம்ப நெகிழ்ந்துட்டாங்க. இந்தமாதிரியான வரவேற்பு களுக்காகவே தொடர்ந்து தமிழில் அறிவிப்புகள் செய்யப்போறேன்!’’ என மகிழ்ச்சியாய் முடிக்கிறார்.

இனி இந்தப்பறவை பறக்கும்போதெல்லாம் கீழிருந்து வாழ்த்தும் ஓராயிரம் மனங்கள்!