Published:Updated:

வாழ்க்கைத் துணையே வழித் துணையாய்...

ஹரிகிருஷ்ணன் -லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
ஹரிகிருஷ்ணன் -லட்சுமி

பயணம்

வாழ்க்கைத் துணையே வழித் துணையாய்...

பயணம்

Published:Updated:
ஹரிகிருஷ்ணன் -லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
ஹரிகிருஷ்ணன் -லட்சுமி

ஓர் இடத்தை ‘இனி இங்கே வரப் போவதேயில்லை’ என்ற எண்ணத்துடன் கவனமாகக் கூர்ந்து பார்ப்பது மிகவும் முக்கியமானது. உண்மையில் இந்தியா போன்ற பெரிய தேசத்தில் பெரும்பாலான இடங்களுக்கு நாம் மீண்டும் போகப்போவதேயில்லை. அந்த உணர்வு இருக்குமென்றால் நாம் ஒரு காட்சியைக்கூட தவறவிடமாட்டோம்!" - பயணம் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்

நியூ நார்மல் வாழ்க்கைக்கு மெல்ல இந்தியர்கள் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பழையபடி கடற்கரையில், ரயில் நிலையங்களில், பேருந்து நிலையங்களில் கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. கொரோனா பயம் குறைந்து சாகசப் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் சிலர். ஆனால், கொரோனா குறையத்துவங்கிய, தளர்வுகள் பெரிதும் நீங்காத நாட்களில் மிகப்பெரும் சவால்களைக் கடந்து பயணங்களை நிகழ்த்தி சாதித்திருக்கிறார்கள் சிலர். அப்படி இந்தியாவை குறுக்குவெட்டாகப் பயணம் செய்த மூன்று தம்பதியினரின் பயண அனுபவங்கள் இவை.

வாழ்க்கைத் துணையே வழித் துணையாய்...

* கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் -லட்சுமி என்ற இளம் தம்பதி அம்மாநிலத்தில் ரொம்பவே பிரபலம். ஒரு காரில் இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு சுற்றி வந்த அனுபவத்தை வைத்து பலருக்கு இப்போது பயணம் பற்றி Vlog நடத்தி வழிநடத்துகிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி பயணத்தை ஆரம்பித்த இவர்கள் நான்கு மாதங்கள் இந்தியா முழுவதும் சுற்றி கேரளம் திரும்பியிருக்கிறார்கள்.

வாழ்க்கைத் துணையே வழித் துணையாய்...
வாழ்க்கைத் துணையே வழித் துணையாய்...
வாழ்க்கைத் துணையே வழித் துணையாய்...
வாழ்க்கைத் துணையே வழித் துணையாய்...

‘‘கொரோனா அலை குறைய ஆரம்பித்ததும் இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் தொட்டுவிட்டாவது வரும் ஒரு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டோம். ஆரம்பத்தில் எல்லோரும் பயமுறுத்தினார்கள். வட இந்தியாவில் தனியே பயணிப்பதும், சாலையோரம் தங்குவதும் ஆபத்து என்றார்கள். ஆனால், நாங்கள் கடவுள்மீது பாரத்தைப் போட்டு பயணத்தைத் தொடங்கினோம். இரண்டு பேருமே தமிழ்நாட்டில் படித்தவர்கள் என்பதால் சேலத்திலிருந்து பயணத்தைத் துவங்கினோம். அங்கிருந்து கர்நாடகா போய் அப்படியே இடது பக்க மாநிலங்களைத் தொட்டு டெல்லியை அடைந்து அப்படியே உத்தரகாண்ட், இமாசலப் பிரதேசம், காஷ்மீர் வரை சென்று மீண்டும் அதே ரூட்டில் திரும்பி உத்தரப்பிரதேசம் வழியே மேற்கு வங்கம் வந்து பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட் , மத்தியப்பிரதேசம், ஆந்திரா வழியே தமிழகம் வந்து கேரளாவைச் சேர்ந்தோம். வடகிழக்கு மாநிலங்களைத் தொடவில்லை. அதை தனிப்பயணமாகக் கிளம்பவிருக்கிறோம்’’ என்றார் ஹரிகிருஷ்ணன். அவர் மனைவி லட்சுமி, ‘‘காரில் ஏசி போடாமல் தூங்குவதற்காக எக்சாஸ்ட் ஃபேன் பொருத்தி, காரின் பின்பகுதியை படுக்கை வசதியாக மாற்றித்தான் பயன்படுத்தினோம். பெரும்பாலும் பெட்ரோல் பங்குகளில் காரை பார்க் செய்து தூங்குவோம். சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட்டில் ரூம் எடுத்தும், மலைவாழ் கிராமங்களிலும் தங்கினோம். காஷ்மீரிலும், உத்தரகாண்டிலும் வீடுகளின் காம்பவுண்டுக்குள் காரை நிறுத்தி பத்திரமாகத் தூங்கினோம். வட இந்தியா முழுவதும் இரவில் இருந்த கடும் குளிருக்குக் கார் செமையாக கதகதப்பாக இருந்தது. காலை டிபனுக்கும் மதியத்துக்கும் நாங்கள் கொண்டுபோன அடுப்பை வைத்து சமையல் செய்து சாப்பிட்டோம். டின்னர் மட்டும் அந்த ஊர் ஸ்பெஷல் என்ன கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டோம். உணவைவிட பெட்ரோலுக்குத்தான் அதிகம் செலவு செய்ய வேண்டியிருந்தது. சிக்கனமாகச் செலவு செய்ததால், பிரச்னை இல்லாமல் சமாளிக்க முடிந்தது’’ என்றார்கள் ஹரிகிருஷ்ணன் - லட்சுமி தம்பதி.

*****

* மீரா என்ற 44 வயது டெல்லி பெண், இரண்டாவது ஊரடங்கில் 6,000 கி.மீ தூரத்தை சைக்கிளில் கடந்து சாதித்திருக்கிறார்.

பெங்களூரு, புனே, மும்பை, அகமதாபாத், ஜெய்ப்பூர், நியூ டெல்லி, அலகாபாத், கொல்கத்தா, புவனேஸ்வர், விசாகப்பட்டினம் மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களை தன் சைக்கிளின் டயர் தடத்தின் மூலம் இணைத்திருக்கிறார். மீரா ஒரு பிஸியான குடும்பத்தலைவி. இரண்டு பெண்களின் தாய் என்பது கூடுதல் ஆச்சர்யம்.

‘‘நான் பெங்களூரு பெண். படிக்கும் காலத்திலிருந்து அத்லெட் கனவு எனக்கிருந்தது. திருமணம், அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள், குடும்பப் பொறுப்புகள், நடுவே பிஹெச்.டி பட்டம், கல்லூரிப் பேராசிரியர் பணி என வாழ்க்கை என்னை ஒரு வட்டத்துக்குள் நிறுத்தி வைத்திருந்தது.

வாழ்க்கைத் துணையே வழித் துணையாய்...
வாழ்க்கைத் துணையே வழித் துணையாய்...
வாழ்க்கைத் துணையே வழித் துணையாய்...

எனக்கு சைக்கிளிங் ஆர்வம் அதிகம். கணவர், குழந்தைகள் என எந்தக் குறுக்கீடும் இல்லாமல் தனியொருத்தியாக சைக்கிளில் இந்தியாவைச் சுற்றிவர வேண்டும் என்ற ரகசியக் கனவும் இருந்தது. லாக்டௌனில் வீட்டில் இதை முதலில் சொன்னபோது வித்தியாசமாய் என்னைப் பார்த்தார்கள். ஆனால், என் கணவர் தான் எல்லோரிடமும் பேசி அனைவரையும் கன்வின்ஸ் செய்தார். ஏற்கனவே இரண்டு முறை தமிழ்நாடு டூர் சைக்கிளில் வந்த அனுபவம் எனக்கு உண்டு. சைக்கிளிங் செய்யும் ஒரு டீமுடன் இந்தியாவைச் சுற்றிவர ஆரம்பத்தில் திட்டமிட்டோம். நடுவே லாக்டௌன் வந்ததும் அந்தக்குழு பயணத்தை ரத்து செய்தது. நான் தயக்கமின்றி அனைவரின் வாழ்த்துகளோடு ஜூன் 19-ம் தேதி தனியாளாகக் கிளம்பினேன். கொரோனா காலகட்டம் என்பதால் சில இடங்களில் கடுமையான விசாரணைகள், அறிவுரைகள் கிடைத்தன. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை தனியொருத்தியாக பயணித்த அனுபவம் இப்போதும் சிலிர்க்க வைக்கும். என் குடும்பத்தாரும், ஒரு ரைடிங் குரூப்பும் வாட்ஸ்-அப் வழியே என்னை தினமும் வழிநடத்தினார்கள். தினமும் 200 கி.மீ டார்க்கெட் வைத்து தங்க நாற்கரச்சாலை வழியாகச் சுற்றினேன். நடுவே இரண்டு பேர் வாலண்டியர்களாக சில நூறு கி.மீ என்னுடன் இணைந்து பயணித்தார்கள். ஔரங்காபாத்தில் அவர்கள் விலகிக் கொள்ள தனியாளாக மீதிப் பயணத்தைத்தொடர்ந்தேன்.

பெங்களூரு முதல் டெல்லி வரை 2,300 கி.மீ தூரத்தை ஒரே ஸ்ட்ரெச்சில் கடந்த அனுபவம் நிறைய விஷயங்களைக் கற்றுத் தந்தது. என் சைக்கிள் டயர் 17 முறை பஞ்சர் ஆனது. பலமுறை வெயிலால் நீரிழப்பு ஏற்பட்டு மயக்கம் வந்தது. இரவில் பேருந்து, ரயில் நிலையங்களில் தங்குவது கடினமாக இருந்தது. ஆனாலும் 25 வயதில் கண்ட கனவை 44 வயதில் நிறைவேற்றக் கிடைத்த வாய்ப்பை பாதியில்விட மனமில்லை’’ என்று சொல்கிறார் மீரா.

****

* ஹைதராபாத்தைச் சேர்ந்த கங்காதர்- ரம்யா தம்பதி கொரோனா முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்கும் நடுவில் கிடைத்த 90 நாட்களில் 15 மாநிலங்கள், 3 சர்வதேச எல்லைகள் வரை தங்கள் குட்டி நானோ காரில் அனன்யா, அமுல்யா என்ற குட்டீஸ்களோடு பயணித்துத் திரும்பியிருக்கிறார்கள். இந்தப் பயணம் முழுவதும் இயற்கையோடு கூடிய அறிவியலை தங்கள் குழந்தைகளுக்கு பாடங்களாக எடுத்ததாக சொல்கிறார்கள்.

வாழ்க்கைத் துணையே வழித் துணையாய்...
வாழ்க்கைத் துணையே வழித் துணையாய்...
வாழ்க்கைத் துணையே வழித் துணையாய்...

‘‘2015-ல் பெங்களூரைச் சேர்ந்த ஆனந்த் -புனிதா தம்பதி பெங்களூரிலிருந்து காரிலேயே பிரான்சின் தலைநகர் பாரிஸ் போய் வந்தார்கள். 111 நாட்களில் சரியான திட்டமிடலோடு ஆசியாக் கண்டத்திலிருந்து ஐரோப்பா கண்டம்வரை கூடவே தன் இரண்டு குழந்தைகளோடு பத்திரமாக போய் வந்திருக்கிறார் ஆனந்த். கிட்டத்தட்ட 23,000 கி.மீ பயண தூரம் என்பதால் இந்தப் பயணத்துக்காக பார்த்துக் கொண்டிருந்த அனிமேஷன் வேலையைக்கூட விட்டுவிட்டார் ஆனந்த். அவரிடம் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் அளவுக்கு வசதியோ பெரிய காரோ இல்லையென்றாலும் அவரது உற்சாகமான வார்த்தைகள், ‘நாமும் குடும்பத்தோடு டூர் போகலாம்’ என்ற யோசனையைத் தந்தன. நான் விடுப்பு எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கினேன். என்னிடம் பக்காவான திட்டமிடல் இருந்தது. இது முட்டாள்தனமான ஆசை என நண்பர்கள் கேலி செய்தார்கள். மினிமலிஸ்டிக் அப்ரோச்சோடு பயணத்திட்டம் போட்டேன். தேவையான பொருட்களை மட்டுமே எடுத்துக் கொண்டோம். குழந்தைகளின் அறிவை, தன்னம்பிகையைப் பெருக்க பயணத்தை ரொம்ப சிம்பிளாகவே ஆரம்பித்தோம். 90 நாட்களில் வெவ்வேறு தட்பவெப்ப, காலநிலைகளை அனுபவபூர்வமாக அவர்களால் உணர முடிந்தது. இமயமலையில் பயணம் செய்த அனுபவம், பயம் என்ற ஒன்றே அவர்களுக்கு இல்லாமல் போகச் செய்தது. கிடைத்த இடத்தில் டெண்ட் போட்டுத் தூங்கி, சாலையோர மரத்தடியில் சமைத்துச் சாப்பிட்டு உற்சாகமாக காரில் பயணம் செய்த அனுபவம், அவர்களுக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரகாண்ட் பனிப்புயல், கரடுமுரடான சீன எல்லைப் பயணம், ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் இரவுப் பயணம் என கடினமான சூழலை எளிதில் எதிர்கொண்டார்கள். இப்போது படிப்பில் இருவருமே முதல் ரேங்க் வாங்கும் மாணவிகள் தெரியுமா? இதோ இன்னொரு பயணத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறோம்’’ என்று சந்தோஷம் பொங்கப் பேசுகிறார் கங்காதர்.

பயணங்கள் முடிவதில்லை. பயணங்கள் புது வாசல்களைத் திறக்கட்டும்!