Published:Updated:

சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்குமேல் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் செலுத்தத் தேவையில்லையா? #DoubtOfCommonMan

சுங்கச்சாவடி

சுங்கச்சாவடி விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..!

Published:Updated:

சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்குமேல் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் செலுத்தத் தேவையில்லையா? #DoubtOfCommonMan

சுங்கச்சாவடி விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..!

சுங்கச்சாவடி

2017-18-ம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலான தொகை ரூ.22,820.58 கோடி. தமிழகத்தில் ரூ.2,378.69 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்தத் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க வேண்டுமென்றாலும், நெடுந்தூரப் பயணங்களில் சுங்கச்சாவடிக் கட்டணத்துக்காகவே பெரும் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கிறது.

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

எல்லாச் சுங்கச்சாவடிகளிலும் போக்குவரத்து நெருக்கடி வேறு. சிலசமயங்களில் அரைமணி நேரமெல்லாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. சமீபத்தில், ‘டோல்கேட்’டில் மூன்று நிமிடங்களாகிவிட்டால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை' என்றொரு செய்தி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. விகடனின் #DoubtOfCommonMan பக்கத்திலும் இதுதொடர்பாக ஒருகேள்வியை எழுப்பியிருக்கிறார் சீனிவாசன் என்ற வாசகர்.

"சுங்கச்சாவடியில் மூன்று நிமிடங்களுக்கு மேல் வாகனம் நிறுத்திவைக்கப்பட்டால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்பது உண்மையா? எனில், எந்தச் சட்டப்பிரிவின்கீழ் நாம் அதைச் செய்ய முடியும்? வாகனத்தைப் பதிவுசெய்யும்போது ஆயுள் வரி 15 ஆண்டுகளுக்கு வசூல் செய்கிறார்கள். தனியாக, சுங்கச் சாலைவரி வசூல் செய்ய எந்தச் சட்டப் பிரிவு அனுமதியளிக்கிறது?" என்பதுதான் சீனிவாசன் எழுப்பியுள்ள கேள்வி.
சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

உண்மையில், `மூன்று நிமிடங்களுக்கு மேல் வாகனம் நிறுத்திவைக்கப்பட்டால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை' என்பது தவறான தகவல். இப்படியோர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலியான ஆவணம் தயாரிக்கப்பட்டு, வாட்ஸ்அப்களில் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. 'இந்த உத்தரவு உண்மையா' என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்திடம், கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலர் கதிர்மதியோன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில விவரங்களைக் கேட்டு வாங்கியுள்ளார்.

அதில், 'இது பொய்யான தகவல்' என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி வாகனம், குறிப்பிட்ட சில மக்கள் பிரதிநிதிகளின் வாகனங்கள், சில அரசு வாகனங்கள் என ஒரு பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. அதிலிருப்பவற்றுக்கு மட்டுமே சுங்கச்சாவடிக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற ஓர் உத்தரவு போடப்பட்டால், ஒரே நேரத்தில் 50 கார்கள் நிற்கும். ஒரு சுங்கச்சாவடியில் 10 கார்களுக்குக்கூடச் சுங்கக் கட்டணத்தை வசூலிக்க இயலாது. ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து தாமதத்தை ஏற்படுத்திக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்குப் பெறவும் வாய்ப்புள்ளதால் இத்தகைய உத்தரவைப் பிறப்பிக்க வாய்ப்பேயில்லை.

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு, பெருமளவு நிதி தேவைப்படுகிறது. அரசே ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை இதற்காகச் செலவிடும்பட்சத்தில் மற்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்துபோக வாய்ப்புண்டு. எனவே பொதுமக்கள்–தனியார் பங்களிப்புத் திட்டத்தில் (PPP–Public Private Partnership) சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை தனியார்மூலமாக உருவாக்கி, அதைப் பயன்படுத்தும் மக்களிடம் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைக் குறிப்பிட்ட ஆண்டுகள் வரையிலும் வாங்கிக்கொள்ள அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு கொள்கைரீதியாக முடிவுசெய்தது.

அதற்காகவே சிறப்புச் சட்டத்தை இயற்றியுள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்தில் இதற்காக எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்தும் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. ஒரு சாலையை அமைப்பதற்கு அல்லது விரிவாக்கம் செய்வதற்கான திட்ட மதிப்பீடு, அதற்கான முதலீடு, வட்டி, லாபம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் எத்தனை ஆண்டுகள் சுங்கம் வசூலிக்கலாம் என்பதை அனுமதித்து ஒப்பந்தம் போடப்படுகிறது.

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணத்தை உயர்த்திக்கொள்ளவும், இந்த ஒப்பந்தங்கள் வழிவகை செய்துள்ளன. இதனால்தான் சுங்கச்சாவடிகளுக்கு எதிராகப் போடப்பட்ட எந்தப் பொதுநல மனுவும் நீதிமன்றங்களால் ஏற்கப்படுவதில்லை அல்லது ஏதாவது ஒரு காரணத்தால் தோல்வியைச் சந்திக்கின்றன.

அடிப்படையில், 'ஏற்கெனவே இருக்கும் சாலைகளை விட்டுவிட்டு, புதிதாகச் சாலைகளை அமைத்து அவற்றைப் பயன்படுத்துவோருக்குச் சுங்கக்கட்டணம் வாங்கலாம்' என்பதுதான் முதலில் எடுக்கப்பட்ட முடிவாகும். மேலைநாடுகள் பலவற்றிலும் இதுபோன்றே இரண்டு விதமான சாலைப் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

வேகமாகச் செல்ல வேண்டுமென்று நினைப்பவர்கள், சுங்கக்கட்டணம் செலுத்தி அந்தச் சாலையில் போய்க்கொள்ளலாம். மற்றவர்கள் வழக்கமான சாலையைப் பயன்படுத்தலாம். ஆனால், நம் நாட்டில் ஏற்கெனவே இருக்கிற சாலைகளை விரிவாக்கம் செய்து, சுங்கக்கட்டணம் செலுத்தாமல் போவதற்கு ‘வேறு வழியே இல்லை’ என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.

இருப்பினும் ஒரு சில நகரங்களில் புறவழிச் சாலைகள் மட்டுமே சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டிய சாலைகளாக நிர்வகிக்கப்படுகின்றன. அதைச் செலுத்த விரும்பாதவர்கள் நகருக்குள் செல்லும் சாலைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக, கோவை மாநகருக்கு வெளியே 27 கி.மீ. தூரத்துக்கு ‘எல் அண்ட் டி’ நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் புறவழிச்சாலை இருக்கிறது. அதில் சென்றால் சுங்கக்கட்டணம் செலுத்தவேண்டும். அதைச் செலுத்தாமல் நகருக்குள்ளும் போகலாம். ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக நேரவிரயம், எரிபொருள் விரயம் ஏற்படும்.

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

சுங்கச்சாவடி விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..!

Doubt of Common Man
Doubt of Common Man