Published:Updated:

தலகோனா, ஹார்ஸ்லி ஹில்ஸ், கோகர்னா : டாப்-10 வீக் எண்ட் ஸ்பாட்ஸ்!

டாப்-10 வீக் எண்ட் ஸ்பாட்ஸ்
டாப்-10 வீக் எண்ட் ஸ்பாட்ஸ்

சும்மா ரெஸ்ட் டைம் கிடைச்சா, ஊட்டி - கொடைக்கானல் - ஏற்காடு - ஏலகிரினு பைக்கை விரட்டி நிச்சயம் போர் அடிச்சிருக்கும் சிலருக்கு! இவை இல்லாமால், டாப்-10 பைக் ரைடிங் வீக் எண்ட் ஸ்பாட்ஸ் இதோ...

லாக்டெளன் லேசாகத் தளர ஆரம்பித்துவிட்டது. நகரங்களுக்குள் பொதுப் போக்குவரத்து தொடங்கிவிட்டது. கார், பைக்குகளை ஸ்டார்ட் பண்ண நேரம் கிடைத்து விட்டது. ஆனால், என்னதான் கார், பைக்குகள் இருந்தாலும் ஒரு சில இடங்கள், குறிப்பாக அண்டை மாநிலங்களுக்குச் செல்வது இன்னமுமே தவிர்க்கவேண்டிய ஒன்றுதான். ஆனால், விரைவில் தளர்வுகள் வரலாம் என்ற நிலையில், அதற்குள், ஊர் சுற்ற சில இடங்களை இப்போதே பார்த்து விடலாம். சும்மா ரெஸ்ட் டைம் கிடைச்சா, ஊட்டி - கொடைக்கானல் - ஏற்காடு - ஏலகிரினு பைக்கை விரட்டி நிச்சயம் போர் அடிச்சிருக்கும் சிலருக்கு! டீ குடிக்க பைக்கில் ஊட்டிக்குக் கிளம்பும் வாண்டர்லஸ்ட்களுக்காக வித்தியாசமான டாப்-10 ரைடிங் ஸ்பாட்கள் இந்தக் கட்டுரையில். கூடவே, ‛எப்போடா பைக்ல ஒரு லாங் ரைடு போவோம்’ என்று தவிக்கும் வாண்டர்லஸ்ட் பார்ட்டிகளுக்காகவும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.

தலகோனா, ஆந்திரா

தலகோனா, ஆந்திரா
தலகோனா, ஆந்திரா

தூரம்: 192 கி.மீ (சென்னையில் இருந்து)

ஸ்பெஷல்: குளியல், அசைவச் சாப்பாடு, காட்டுக்குள் ஜீப் ட்ரெக்கிங்

சீஸன்: அக்டோபர் – ஜனவரி

டிப்ஸ்: போகும் வழியில் குட்டிக் குட்டி அருவிகளை மிஸ் செய்யாதீர்கள். சாப்பிடும்போது குரங்குகளிடம் கவனம் தேவை.

நிறைய பேர் தடா, நாகலாபுரம், கைலாசகோனா அருவிகளுக்குப் பரிச்சயமாக இருப்பார்கள். ஆனால், தலகோனா பற்றித் தெரிந்திருக்குமா தெரியவில்லை. சென்னையில் இருந்து சரியாக 3.30 மணி நேரத்தில் தலகோனாவில் பைக்கை பார்க் செய்துவிடலாம். ஆந்திர மாநிலம் சித்தூரில் வெங்கடேஷ்வரா நேஷனல் பார்க் பக்கத்தில் இருக்கிறது தலகோனா. 270 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவி, ஆந்திராவின் பெரிய அருவிகளில் ஒன்று. செம குளியல் போடலாம். நாட்டுக்கோழி சமையல், மட்டன், மீன் குழம்பு சாப்பாடு என்று சமைக்க ஆர்டர் கொடுத்துவிட்டு, குளித்துவிட்டு வந்து, ஒரு பிடி பிடித்தால் செம! சாப்பிடும்போது, குரங்குகளிடம் மட்டும் கவனம்! போகும் வழியில் குட்டிக் குட்டி அருவிகளை விசாரித்துக் கண்டுபிடியுங்கள். ஆள் அரவமே இல்லாமல், தனிமையான குளியல் செமயான அனுபவமாக இருக்கும். கூடவே, ஆந்திரா அரசு அனுமதியுடன் ஜீப் ட்ரெக்கிங்கும் போய்ப் பாருங்கள். விலங்குகள் தரிசனம் கிடைக்கும். திருப்பதிக்குப் போனால், தலகோனாவுக்கு ஒரு விசிட் அடியுங்கள்.

ஹார்ஸ்லி ஹில்ஸ், ஆந்திரா

ஹார்ஸ்லி ஹில்ஸ், ஆந்திரா
ஹார்ஸ்லி ஹில்ஸ், ஆந்திரா

தூரம்: 260 கி.மீ (சென்னையில் இருந்து)

சீஸன்: மார்ச் – ஜூலை (மற்றபடி மழைக்காலங்களில் இன்னும் அருமையாக இருக்கும்)

ஸ்பெஷல்: மலைப் பயணம், க்ளைமேட், ட்ரெக்கிங்

டிப்ஸ்: மதனப்பள்ளி டவுனிலேயே தேவையான பொருட்களை வாங்கிவிடவும்.

இதுவும் சித்தூரில்தான் இருக்கிறது. ஆந்திராவின் ஊட்டி என்று இந்த ஹார்ஸ்லி ஹில்ஸைச் சொல்கிறார்கள். கடல் மட்டத்தில் இருந்து 1,265 மீட்டர் உயரத்தில் இருக்கும் மலைத் தொடர் என்பதால், சில்லென்ற பயணத்துக்கு கேரன்ட்டி உண்டு. இரண்டு பக்கமும் பச்சைப் பசேல் மரங்கள் சூழ, காட்டுக்கு நடுவே பைக்கில் போவது அலாதி அனுபவமாக இருக்கும். மதனப்பள்ளி என்பதுதான் இங்குள்ள நகரம். மலை மேலுள்ள ரெஸார்ட்களில் தங்குவதும் சூப்பர். குளியல் பார்ட்டிகளுக்கு மலைகளில் ஆங்காங்கே ஓடைகள் உண்டு.

கோகர்னா, கர்நாடகா

கோகர்னா, கர்நாடகா
கோகர்னா, கர்நாடகா

தூரம்: 483 கி.மீ (பெங்களூருவில் இருந்து)

சீஸன்: ஆல் டைம்

ஸ்பெஷல்: கடற்கரைக் காற்று, சிவன் சிலை, கடற்கரைக் கோயில்கள்

டிப்ஸ்: சென்னையில் இருந்து என்றால், இரண்டு நாள் பயணம் செமையாக இருக்கும்.

கோவாவுக்குப் பிறகு இந்தியாவின் டாப் மோஸ்ட் கடற்கரைகளில் இதுவும் ஒன்று. பனை மரங்களின், நீலக்கடலின், தங்க மணலின் அற்புதத்தைக் காண கோகர்னாதான் சரியான சாய்ஸ். கர்வார் எனும் கடற்கரையோரம் அமைந்திருக்கும் கோகர்னாவின் இன்னொரு ஸ்பெஷல் – இங்குள்ள பெரிய சிவன் சிலை. இதை ஆத்மலிங்கா என்கிறார்கள். (நித்யானந்தா ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பல்ல!) நிறைய வெளிநாட்டவர்கள் வந்துபோகும் கோகர்னாவுக்கு ஆல் டைமும் சீஸன்தான். Kudle மற்றும் Om பீச்சுகள், கோகர்னாவுக்குப் பக்கத்திலேயே இன்னொரு என்ஜாய்மென்ட் ஏரியா.

கேஆர்பி அணை, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு

கேஆர்பி அணை, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு
கேஆர்பி அணை, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு

தூரம்: 251 கி.மீ

ஸ்பெஷல்: மீன் வறுவல், அணைக் குளியல்

சீஸன்: ஆகஸ்ட் – ஜனவரி

டிப்ஸ்: சீஸன் நேரம் இதுதான் என்றாலும், அணைக்கட்டு அனைத்து நேரங்களிலும் கேட் போட்டுத்தான் இருக்கும். இங்கே இறந்தவர்களுக்குத் திதி கொடுக்கும் வழக்கம் உண்டு. அந்த இடத்தில் குளிப்பதைத் தவிர்க்கவும்.

கிருஷ்ணகிரி பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், கிருஷ்ணகிரியில் இப்படி ஒரு அணையும், பூங்காவும் இருப்பது நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. Krishnagiri River Park என்பதுதான் இந்த கேஆர்பி-யின் விரிவாக்கம். சென்னை பைபாஸில் இருந்து சேலத்துக்கு இடதுபுறம் திரும்புவோமே… அந்த பைபாஸில் 3 கி.மீ தூரம் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டே போனால்… ஒரு போட்டிங் ஏரியா.. ஒரு பூங்கா என்று பரபரப்பாக இருக்கும். கொஞ்ச தூரம் தள்ளி, வலதுபுறம் திரும்பினால், கேஆர்பி அணை. பைபாஸில் அணைக்கு நுழையும் என்ட்ரன்ஸிலேயே மீன் வறுவல் கிடைக்கிறது. லாரி டிரைவர்களுக்காகவாம். உள்ளே போனால், அணைக்கு எந்த சீஸன் என்று ஆளாளுக்குக் குழப்புவார்கள். இங்கேதான் இறந்தவர்களுக்குத் திதி கொடுக்கிறார்கள். ஆனால், பைக்கில் கொஞ்சம் மேலேறிப் போனால்… பார்க்கிங் ஏரியா தாண்டி பெரிய நீர்த்தேக்கம் உண்டு. இதில் பாதுகாப்பாகக் குளிக்கலாம். கேஆர்பியில் சுடச்சுட ஜிலேபி மீன், கெண்டை மீன் வறுவல்தான் ஃபேமஸ். அணையில் குளித்துவிட்டு வந்தால், மீன் குழம்புச் சாப்பாட்டை ஒரு பிடிபிடிக்கலாம். கேஆர்பி அணைக்கு வீக்எண்டில் பைக்கை விரட்டுங்கள்; செம அனுபவம் கிடைக்கும்.

அங்குத்தி சுனை, தமிழ்நாடு

அங்குத்தி சுனை, தமிழ்நாடு
அங்குத்தி சுனை, தமிழ்நாடு

தூரம்: 250 கி.மீ

சீஸன்: அக்டோபர் – பிப்ரவரி

டிப்ஸ்: மழைக்காலத்தில் சூப்பர் அனுபவம் கிடைக்கும். அங்குத்தி சுனையில் உணவகங்கள் கிடையாது என்பதை நினைவில் கொள்ளவும். நான்வெஜ் பார்ட்டிகள் வாணியம்பாடி அல்லது ஆம்பூர் பிரியாணிகளை பார்சல் செய்து கொண்டு, அருவிக்கு அருகில் சாப்பிட்டால் ஜென்ம சாபல்யம் கிடைக்கும். குரங்குகள் கவனம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 27 கி.மீ தூரத்தில் இருக்கும் இங்கே பஞ்ச பாண்டவர்கள் பெயரில் உள்ள ஐந்து சுனைகள்தான் ஃபேமஸ். ஜவ்வாது மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் அங்குத்தி சுனைக்குப் போக சைன் போர்டுகள் அவ்வளவாக இருக்காது. திருப்பத்தூர், ஜலகாம்பாறை அருவி செல்லும் சாலையில் சிங்காரப்பேட்டை, விஷமங்கலம், கோவிந்தாபுரம் கூட்ரோடு எனும் இடத்தில் ஒரே ஒரு போர்டு உண்டு. போகும் வழியே செம ட்ரெக்கிங் அனுபவத்தைக் கொடுக்கும். தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் எனும் ஐந்து சுனைகள், அதாவது குட்டி அருவிகள்தான் விஷயமே! தருமன் சுனையில் நீச்சல் பார்ட்டிகள் பாறையில் சறுக்கியும், டைவ் அடித்தும் குளிக்கிறார்கள். 10 அடி உயரத்தில் இருந்து விழுந்தாலும், இதன் ஆழம் 25 முதல் 30 அடி உண்டு. பீமன் சுனையில் ஆழம் கொஞ்சம் அதிகம் என்பதால், கவனம் தேவை. மேலே போகப் போக இன்னும் 3 சுனைகளையும் என்ஜாய் செய்யலாம். ஆனால், 5 சுனைகளிலும் உடல் நனைக்க, காலை 7.30 மணிக்கெல்லாம் இங்கே ஆஜாரானால் மாலை திரும்ப வசதியாக இருக்கும். இங்கே காகங்கள் வராது என்பது ஆச்சரியம். அங்குத்திக்குப் பக்கத்தில் ஜலகாம்பாறை, ஏழருவி போன்ற அருவிகளுக்கும் விசாரித்துச் செல்லுங்கள்.

மேகமலை, தமிழ்நாடு

மேகமலை, தமிழ்நாடு
மேகமலை, தமிழ்நாடு

தூரம்: 43.5 கி.மீ (தேனியில் இருந்து)

சீஸன்: அக்டோபர் - மே

ஸ்பெஷல்: அணைக்கட்டு வியூ பாயின்ட், ட்ரெக்கிங், கோல்டன் ஃபிஷ் வறுவல், விலங்குகள் தரிசனம்

டிப்ஸ்: செக்போஸ்ட் நுழைவு நேரம் காலை, 6 மணி. அதேபோல் மேகமலையில் சுற்றிவிட்டு, மாலை 6 மணிக்குள் செக்போஸ்ட்டுக்குள் கையெழுத்திட வேண்டும். இல்லையென்றால், செக்போஸ்ட் ஓரத்திலேயே படுக்கையைப் போட வேண்டியதுதான். உணவகங்கள் அவ்வளவாகக் கிடையாது என்பதால், முடிந்தவரை தேவையானவற்றை பார்சல் செய்து கொள்வது நல்லது. கோல்டன் ஃபிஷ் ஃப்ரை சாப்பிட மறக்காதீர்கள்.

மதுரைக்காரர்கள் பைக் ரைடிங் செய்ய ஓர் அற்புதமான ஸ்பாட் – மேகமலை. தேனிதான் சென்டர் பாயின்ட். சின்னமனூர், கம்பம் தாண்டி வலதுபுறம் பைக் ஹேண்டில்பாரைத் திருப்பினால்… மேகமலை. மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள். பார்த்து ரைடிங் செய்ய வேண்டும். குளிர்காலங்களில் கை, கால்கள் விரைக்கும் வாய்ப்பு உள்ளதால்… க்ளோவ்ஸ்… ஜாக்கெட்… ஷூக்கள் அவசியம். ஹைவேவிஸ் என்பதுதான் மேகமலையின் மெயின் அட்ராக்ஷன். இதை ‛பச்சைக் கூமாச்சி’ என்கிறார்கள். இங்குள்ள செந்தில் டீக்கடைதான் லேண்ட்மார்க். இங்கே தங்குவதற்கு அரசு காட்டேஜ்கள், தனியார் விடுதிகளும் உண்டு. தூவானம், வெண்ணியார் அணை, மணலாறு எஸ்டேட், மஹாராஜா மெட்டு, இரவங்கலார் அணை, வட்டப்பாறை, போதப்புல்மேடு, க்ராஸ்ஹில், சன்னாசி மொட்டை… இதையெல்லாம் நோட் செய்து கொள்ளுங்கள். கைடு உதவியுடன் இவற்றுக்கு பைக்கில் ரவுண்ட் அடிக்க மறக்காதீர்கள்.

வட்டவடா (மூணார்), கேரளா

வட்டவடா (மூணார்), கேரள
வட்டவடா (மூணார்), கேரள
Picasa

தூரம்: 125 கிமீ (தேனியில் இருந்து)

சீஸன்: ஜூன் – அக்டோபர்

ஸ்பெஷல்: ஸ்ட்ராபெரி தோட்டம், ஆஃப்ரோடு ஜீப் ரைடிங், அருவிக் குளியல், ஆதிவாசிகள் தங்கும் இடம்

டிப்ஸ்: அருவியில் குளிக்கும்போது அட்டைப் பூச்சிகள் கவனம். இங்குள்ள பெரியகுடை எனும் அருவிக்குப் போவது, சறுக்கலான ட்ரெக்கிங் பாதை என்பதால், வயதானவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சில காட்டேஜ்களில் 12 மணிநேரம்தான் கணக்கு என்பதை நினைவில் கொள்க. நடுங்கி எடுக்கும் குளிர் இருக்காது; ஆனால் ஸ்வெட்டர் இருந்தால் கதகதப்பாக இருக்கலாம்.

‛பிரேமம் மலையாளப் படமா’ என்றும், ‛மூணார் கேரளாவுலயா இருக்கு’ என்றும் ஆச்சர்யப்படும் இன்னும் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மூணாரில் வட்டவடா என்றோர் இடம் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தேனியில் இருந்து, போடிமெட்டு வழியாக பைக்கை விரட்டி, ஆனைஇறங்கல் அணை, சின்னக்கனல் வியூ பாயின்ட், பூப்பாறா எனும் இடம் தாண்டி மாட்டுப்பட்டி அணையில் போட்டிங் செய்யலாம். ராஜாதிராஜா, அமர்க்களம் போன்ற படங்கள் எடுக்கப்பட்ட ஸ்பாட்டில் ஒரு செல்ஃபி எடுக்கலாம். போகும் வழியில் பைக்கை நிறுத்தி அணைக் கட்டு ஓரமாக யானைகள் நீர் அருந்துவதைப் பார்க்கலாம். வட்டவடாவில் கோவிலூர் எனும் இடத்தில் ரெஸார்ட்டுகள் பர்ஸைப் பதம் பார்க்காது. இங்குள்ள பெரியகுடை அருவி, குளிக்க வேண்டிய இடம். ஹிமாலயன், இம்பல்ஸ் போன்ற அட்வென்ச்சர் பைக்குகள் மட்டும்தான் போக முடியும். இல்லையென்றால் ஜீப் சவாரி இருக்கவே இருக்கு! ஒரு ஜீப் சவாரிக்கு 2,000 ரூபாய் கட்டணம். ஆதிவாசிகள் தங்கும் இடத்துக்கு ஒரு ரைடு மற்றும் ஸ்ட்ராபெரி தோட்டங்களில் ஸ்ட்ராபெரி ஜாம் பார்சல் செய்ய மறக்காதீர்கள்.

கல்ராயன் மலை, தமிழ்நாடு

கல்ராயன் மலை, தமிழ்நாடு
கல்ராயன் மலை, தமிழ்நாடு

தூரம்: 75 கிமீ (சேலத்தில் இருந்து)

ஸ்பெஷல்: பெரியார் அருவி எண்ணெய்க் குளியல், கோமுகி அணை, போட்டிங், மூலிகைச் செடி கொடிகள் விற்பனையகம், மூலிகைத் தோட்டம்

சீஸன்: அக்டோபர் - பிப்ரவரி

டிப்ஸ்: சீஸன் தாண்டியோ, முன்கூட்டியோ போனால், பெரிய அனுபவம் இருக்காது. கிழக்குத் தொடர்ச்சி மலையில் பைக் ரைடிங் போகும்போது, லாரிகள் போன்ற கனரக வாகனங்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தங்கும் இடங்கள் அவ்வளவாக இல்லை என்பதால், ஒரு நாள் டூருக்கு கல்ராயல் மலையைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஹில் ரைடிங் என்றால், சேலம்வாசிகள் ஏற்காடுக்கு ஆக்ஸிலரேட்டர் முறுக்கிவிடுவார்கள். ஆனால் கிழக்குத் தொடர்ச்சி மலையான கல்ராயன் மலைப் பயணம் கொஞ்சம் அபூர்வமாகத்தான் இருக்கும். பச்சைமலை, ஜாவடி, சேவராயன் மலைத் தொடர் சேர்ந்ததுதான் கல்ராயன் மலை. காவேரியையும் பாலாற்றையும் தெற்கு வடக்காகப் பிரிப்பதுதான் இதன் முதல் டியூட்டி. சென்னைக்காரர்களுக்கும் இது ஒரு நாள் டூராக என்ஜாய் பண்ணலாம். கள்ளக்குறிச்சியில் இருந்து 56 கிமீ தாண்டினால், சின்னக் கல்ராயன் மலை; (சுமார் 2,700 அடி) பெரிய கல்ராயன் மலை (சுமார் 4,000அடி)… கீழே கோமுகி அணை தாண்டி, அப்படியே கிழக்குத் தொடர்ச்சி மலைக் காற்றை முகத்தில் வாங்கியபடி பயணித்தால்… அற்புத அனுபவம் கிடைக்கும். பெரியார் அருவிதான் இங்கே மெயின் அட்ராக்ஷன். எண்ணெய்க் குளியல் உண்டு. மேகம் அருவியின் சீஸன் அருவிக்கே தெரிந்திருக்காது. மேகம் அருவிக்கு எப்போதாவதுதான் முழிப்பு வரும். கீழே மலிவு விலை போட்டிங்கும் முயற்சி செய்யுங்கள். மலைவாசி கிராமங்களுக்கும் ஒரு விசிட் அடிக்கலாம். கூடவே பூக்கள், மூலிகை மரங்கள், பழச் செடி கொடிகள் கொண்ட அரசு செடிப் பண்ணைக்கும் ஒரு விசிட் ப்ளீஸ்!

தலநார் எஸ்டேட், தமிழ்நாடு

தலநார் எஸ்டேட், தமிழ்நாடு
தலநார் எஸ்டேட், தமிழ்நாடு

தூரம்: 90 கிமீ (கோவையில் இருந்து)

ஸ்பெஷல்: ஆற்றுக் குளியல், மீன் வறுவல், ஹில் ரைடிங், காட்டு விலங்குகள் தரிசனம்

சீஸன்: ஆல் டைம்

டிப்ஸ்: பொள்ளாச்சி தாண்டி ஆழியார் போகும் வழியில் ஆத்துப்பாறை என்றொரு குளியல் ஸ்பாட்டுக்குப் போக மறக்காதீர்கள். ‛வின்னர்’ படத்தில் வடிவேலு, பெண் சிங்கங்கள் பாதுகாப்பில் குளிப்பாரே... அந்த இடம்தான். ஆழியார் அணைக்கு வலதுபுறமும் ஒரு குளியல் ஸ்பாட் உண்டு. குளித்து விட்டு ஜிலேபி மீன் வறுவலை ஒரு பிடி பிடியுங்கள். மலைப்பாதை ரைடிங்கில் அடிக்கடி வரையாடுகள் குறுக்கிடும் என்பதால், கவனமான ரைடிங் தேவை. இருட்டுவதற்குள் தலநாருக்குள் புகுந்துவிட வேண்டும். யானைகள் நடமாட்டம் அதிகம்.

‛தலநார்’ – பேரே புதுசா இருக்கே என்பவர்கள், இந்த லொக்கேஷனைச் சொல்லிவிட்டால்.. ‛அட இங்கயா’ என்று கண்கள் விரித்து விடுவார்கள். வால்பாறை மலைப்பாதைக்குப் போகும் வழியில், வாட்டர்ஃபால் எஸ்டேட் என்றோர் இடம் உண்டு. மலிவு விலையில் டீத்தூள் கிடைக்கும் இந்த எஸ்டேட், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் எஸ்டேட் என்றார்கள். அதைத் தாண்டி ‛கவர்க்கல்’ என்றோர் இடம். அந்த டீக்கடைக்கு எதிரே வலதுபுறம் பிரியும் ரோட்டில் இறங்கினால், செக்போஸ்ட்டில் கையெழுத்திட்டு விட்டுக் கிளம்ப வேண்டியதான். வாகனச் சத்தமே தலநாருக்குப் புதுசாகத்தான் இருக்கும். உங்கள் புல்லட்டோ, பைக்கோ… புது எக்ஸாஸ்ட் பீட்டை உணரலாம். காரணம், சுற்றியுள்ள மலைத் தொடர்களின் மீது பைக் சத்தம் பட்டு, அது எதிரொலிக்கும் அழகு! தலநார் எஸ்டேட்டில் தங்க விரும்பினால், 2,500 ரூபாய்க்கு கன்டெய்னர் ஸ்டே உண்டு. கீழே தலநார் கிராமத்துக்குள் இறங்கிப் போனால்… 1900-கள் ஸ்டைலில் வாழும் மனிதர்களை இன்னும் பார்க்கலாம். அதிகாலை பைக் ரைடிங்கில் காட்டெருமை, மான், யானை தரிசனம் நிச்சயம் உண்டு.

தரங்கம்பாடி, தமிழ்நாடு

தரங்கம்பாடி, தமிழ்நாடு
தரங்கம்பாடி, தமிழ்நாடு

தூரம்: 175 கிமீ (திருச்சியில் இருந்து)

ஸ்பெஷல்: கடற்கரைக் காற்று, கோட்டைகள், வரலாற்றுச் சிறப்பம்சங்கள், கடல் உணவு, பீச் ரைடிங்

சீஸன்: வெயில் நேரம் தவிர…

டிப்ஸ்: வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் என்பதால், ஆளாளுக்கு ஒரு கதை கட்டுவார்கள். தங்கும் இடம் விசாரித்துச் செல்வது நல்லது. குறைந்த விலை காட்டேஜ்கள் இங்கு உண்டு. மீன் உணவு மறக்காதீர்கள். வெயில் நேரத்தில் பைக் ரைடிங் போனால், உச்சி மண்டை முதல் கெண்டைக் கால் வரை வியர்வையில் குளிக்க வாய்ப்புண்டு.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தரங்கம்பாடி, ஒரு துறைமுகப்பட்டினம். ‛அலைகள் பாடும் இடம்’ என்று இதன் பொருளாம். இங்குள்ள டேனிஷ் கோட்டைதான் தரங்கம்பாடியின் ஸ்பெஷல்! கோட்டையைப் பார்வையிட்டால், டைம் மெஷினில் ஏறி மன்னர்கள் காலத்துக்குச் செல்வதுபோல் இருக்கிறது. போர் வீரர்கள் ஓய்வெடுக்கும் இடம், ஆயுதக் கிடங்கு, சிறைச்சாலை என்று சிலிர்க்க வைக்கிறது கோட்டை. தரங்கம்பாடியில் சர்ச்கள்தான் அதிகம். சும்மா மலைப்பாதையில் கைகளின் க்ளோவ்ஸ் மாட்டிக் கொண்டு பைக் ரைடிங் செல்பவர்கள், வரலாற்றையும் கொஞ்சம் சுவாசிக்க தரங்கம்பாடிக்கு ஆக்ஸிலரேட்டர் முறுக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு