
பயணம்
‘‘ரெண்டு நாள்தான் லீவு இருக்கு. செமையான ஒரு ட்ரெக்கிங் போகோணும்; ஆனா சில கண்டிஷன்ஸ்… அருவி இருக்கோணும்; மலை இருக்கோணும்; முக்கியமா அந்த இடம் யாரும் போகாத இடமா இருக்கோணும்!’’ என்று என் கோவை நண்பி ஒருத்தி இந்த லீவுக்கு என்னிடம் ரிக்வஸ்ட் வைத்திருந்தாள். அத்துடன் முடியவில்லை; பின்குறிப்பும் வைத்திருந்தாள்: செலவும் ரொம்ப ஆகக்கூடாது!
‘மணல் கயிறு’ எஸ்.வி.சேகரே பெண் உருவம் எடுத்து வந்தமாதிரி இருந்தது அவளைப் பார்த்தபோது. ‘அடியே, இதெல்லாம் நீதான்டி உருவாக்கணும்’ என்று செவுளில் ஒன்று வைக்கலாம்போல இருந்தது. ஆனால், ‘சிக்கலில்தானே திறமை வெளிப்படும்; விக்கலில்தானே தண்ணீரின் தேவை புரியும்’ (மொக்கை உதாரணம் உபயம்: என் திருச்சி கவிதாயினி தோழி!) என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டேன். காரணம், அப்படி ஓர் இடம் கிடைத்தால்… எனக்கும் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ மொமென்ட்தானே!

‘தனி ஒருவன்’ ஜெயம் ரவி மாதிரி ‘தனி ஒருத்தி’ கெளசல்யாவாய் பரபர ஆக்ஷனில் இறங்கினேன். ‘மலைவாசஸ்தலம்போகலாம். அங்க போனால், போகாத இடம் எவ்வளவு இருக்கும்’ என்று எனக்கு நானே கணக்குப் போட்டுக்கொண்டேன். வாவ்! என் முயற்சி வீண்போகவில்லை. ஓர் இடம் பிடிபட்டது.
திண்டுக்கல் தோழி ஒருத்தியின் மூலம்தான் அந்த இடத்தின் பெயர் தெரிய வந்தது. அது, வெள்ளகவி என்றொரு அழகிய மலைவாசஸ்தலம்! அதுவும் நம் மாநிலத்திலேயே… அதுவும் நம் ஊருக்குப் பக்கத்திலேயே! ஆம், கொடைக்கானல் இன்டீரியரில்தான் இப்படி ஒரு சொர்க்கத்தைக் கண்டுபிடித்தோம்.
செப்டம்பர் மாதத்தில் ஒரு வீக் எண்டில் ‘வெள்ளகவி’க்கு ஸ்கெட்ச் போட்டு, ஆறு பேராகச் சேர்ந்து கிளம்பிவிட்டோம். வெள்ளிக்கிழமையே சென்னையில் இருந்து ஃப்ரெண்ட்ஸ் திருச்சி வந்துவிட, திருச்சியில் இருந்து சனிக்கிழமை விடியற்காலை வேனில் கொடைக்கானல் பயணம். நம் நண்பர்களுடன் புதிதாக இணைந்தவர்களும் சேர, கிட்டத்தட்ட 17 பேர்! ‘வெள்ளகவி’ என்னாகப் போகுதோ என்று நினைத்தேன். ஆனால், பலர் தூங்குமூஞ்சிகளாய்த் தூங்கிவழிந்தார்கள் பயணத்தின் ஆரம்பத்திலேயே!

‘கிழிஞ்சது’ என்பது போல்தான் தொடங்கியது பயணம். ஒலிபெருக்கியில் ஜானகி, சித்ரா அம்மாக்களை உசுப்பி விட்டோம். கூடவே எடிசன் பற்றிய பேச்சுடன் தொடங்கியது. இது நீங்கள் நினைக்கும் தாமஸ் ஆல்வா எடிசன் இல்லை பாஸ்; எங்கள் டூரில் முக்கியப் புள்ளி இந்த எடிசன். நிலாவைப் பற்றிய அவர் பேச்சு, எங்களுக்குச் சுவாரஸ்யமாக இருந்தாலும், பலர் இன்னும் அதிவேகமாகத் தூங்க ஆரம்பித்திருந்தனர்.
‘இது வேலைக்காகாது’ என்று டீ குடிப்பதற்காக திண்டுக்கல்லுக்கு முன்பே வேனை நிறுத்திவிட்டோம். இப்போதே குளிர் தெரிய ஆரம்பித்தது. சூடான டீ ஜல்லென ஜில் ஆனது. ஜில் டீயை அடித்துவிட்டுக் கிளம்பினால்… ஜன்னல் வழியாகக் குளிர் இறங்க ஆரம்பித்தது. ‘‘அது நம்மளை நோக்கி வந்துகிட்டிருக்கு’’ என்று ஹாலிவுட் படங்களில் ஓடுவார்களே… தட் மொமென்ட். ஆம், கொடைக்கானல் நம்மள நோக்கி வந்துடுச்சு என்பதற்கான அறிகுறி அது.
கொஞ்ச நேரத்தில் கொடைக்கானல் ரீச் ஆகியிருந்தோம். மலைவாசஸ்தலமாக இருந்தாலும், நகரத்தின் வாசம் வீசியது. ‘கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுக்கலாம்’ என்ற எங்கள் வயிற்றை இன்னும் காயப்போட்டது கொடைக்கானல். ஆம், வட்டக்கனல் போகும்வரை ஒரு உணவகமும் தென்படவில்லை. எப்படியோ தேடிப்பிடித்து, சிறிய உணவகம் ஒன்றை அடைந்தோம்.
‘தோசை மட்டும்தாங்க இருக்கு; ஜில்லுனு சட்னியோடு சூடா தோசை தரட்டுமா’ என்று பார்த்துப் பார்த்துப் பரிமாறிய சசிக்குமாருக்குக் கோட்டான கோடி நன்றிகள்!

வட்டக்கனலை நெருங்கி, ‘இங்கிருந்துதான் வெள்ளகவிக்குச் செல்ல வேண்டும்’ என வேனிலிருந்து இறக்கினர். இறங்கும்போது பார்க்க சொர்க்கம் போல வானம் கீழிறங்கி மேகத்தைக் கொண்டு நிலத்தை மூடி இருந்தது அந்த சிச்சுவேஷன்.
ஜெர்க்கினைப் போடாமல் குளிரை உடலுடன் ஏற்றுக்கொண்டு, backbag–ஐத் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். வட்டக்கனலிலிருந்து புறப்படும்போது, அருவி ஓன்று ஓடையாக மாறி ஓட, அதன் வழியே பயணம். மலைப்பயணங்களில் ஓடையை ‘ஓட ஓட’ விரட்டி கைடு ஆக்கிக்கொள்ளுங்கள். ஏமாறமாட்டீர்கள். இந்த முறை எல்லோருக்கும் தெரிந்த டால்பின் நோஸ் என்ற ஏரியா வந்தது. நடுநடுவே அருவிகளும். ஆஹா! ‘அடிக்கிற குளிருல தண்ணிய குடிக்கறதே கஷ்டம், இதுல அருவி வேறயா’ன்னு சிலர் ‘என் ராசாவின் மனசிலே’ ஹீரோயின் மீனா மாதிரி காலை மட்டும் ஓடையில் நனைச்சிட்டு ஓட, நானும் மீனாவானேன்!
வட்டக்கனலிலிருந்து வெள்ளகவி செல்ல 8 கி.மீ கீழே இறங்கிச் செல்ல வேண்டும் என்றார்கள். ஆனால் வாகன வசதி இல்லை. நாம் சென்றிருந்தபோது சாலை வசதி இல்லை, டால்பின் நோஸ் தாண்டினால் வெள்ளகவியிலும்கூட கடை இல்லை. முழுவதும் இயற்கையும், அது காட்டும் வழியும் மட்டுமே! எனக்கோ நடக்க நடக்க, டால்பின் நோஸ் பகுதியை நெருங்கும்போதே நாக்குத் தள்ள ஆரம்பித்தது.

கையில் குச்சியும், பின்னால் பேக்கும், பனியும் குளிரும், நடப்பதால் பனியின் ஊடே ஏற்பட்ட வியர்வையும் என அந்த மலையிறக்கம் கொடுத்த அனுபவம் பேரனுபவமாகவே இருந்தது. மலையிறக்கம் முழுவதும் மரங்களும் காடுகளும் பள்ளத்தாக்குகளும் எனக் கடந்து வந்தோம். கால் வலிக்கும் நேரங்களில் நின்றும், கொண்டு சென்ற நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்தியும், 6 கிலோமீட்டரைத் தாண்டி
யிருந்தோம். எனக்கு முன்பே ட்ரெக்கிங் நடக்க ஆரம்பித்து பல கி.மீ தாண்டிய என் நண்பர்கள், என் பெயர் சொல்லி ‘ஐ லவ் யூ’ என்று கத்தியது 4 கி.மீ தாண்டி மேலே இருந்த எனக்குக் கேட்டது. மலையின் அற்புதம் இது!
(பயணிப்போம்...)