கட்டுரைகள்
Published:Updated:

ராணிபுரம் என்றோர் அழகான ராட்சசி!

ராணிபுரம்
பிரீமியம் ஸ்டோரி
News
ராணிபுரம்

பயணம்| படங்கள்: ரஜினி பிரதாப்சிங்

மலைகளின் ராணியான ஊட்டி எல்லாருக்குமே ஆல்டைம் ஃபேவரைட். ஆனால், கேரளாவின் ஊட்டியெனக் கூறப்படும் இடம் ஒன்று இருக்கிறது... உங்களுக்குத் தெரியுமா? பெயரிலேயே ராணியைக் கொண்ட ராணிபுரம் `கேரளத்தின்டெ ஊட்டி' என்ற செல்லப் பெயருடன் நம்மைக் கொஞ்சலாக அழைத்தது.

அப்புறம் என்ன, அந்த வீக் எண்டு, "இதோ வந்துட்டோம்...!" என்று மாட்சிமை தாங்கிய கேரளத்து மலைகளின் ராணியான ராணிபுரத்தை நோக்கி ராக்கெட் வேகத்தில் கிளம்பினோம்.

கேரளத்தின் வடகோடி மூலையும் கர்நாடகத்தின் தென்கோடி மூலையும் கைகுலுக்கிக்கொள்ளும் கார்னரில் ராணிபுரம் வீற்றிருக்கிறது.

ராணிபுரம்
ராணிபுரம்

கோயம்புத்தூரிலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவு...

9 மணி நேரம் பயணிக்க வேண்டும். மைசூர் - மடிக்கேரி ரூட், கோழிக்கோடு - கண்ணூர் ரூட் என ராணிபுரத்துக்கு இரண்டு வழிகள் உண்டு. தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் மங்களூருக்கு ரயில் வசதி உண்டு. ரயிலில் காஞ்ஞாங்காடு என்ற ஸ்டேஷனில் இறங்கி, பேருந்து மூலம் பானத்தடி என்ற இடத்திற்கு ஒரு மணி நேரப் பயணம் செய்து, அங்கிருந்து ராணிபுரத்துக்கு வாடகை ஜீப்புகளை அமர்த்திக்கொள்ளலாம். நாம் கண்ணூர் வழியைத் தேர்ந்தெடுத்தோம். ராணிபுரத்துக்கு முன்பாக ராஜாபுரம் என்ற ஊர் இருப்பது, செம டச்!

ராஜாபுரத்துக்கு முன்பாகவே நகரச் சந்தடி குறைந்துவிடுகிறது. புல்வெளி படர்ந்த உயரமான மலைமேடுகள்மீது பெரும்பாலும் ஆளரவமற்ற சாலைகள் ஆரம்பிக்கின்றன. நிறைய இடங்களில் இன்ஸ்டாக்ராமில் நாம் பார்த்த ஸ்விட்சர்லாந்துப் புகைப்படங்கள் பலவும் நினைவுக்கு வந்தன.

பானத்தடி வந்ததும் வலப்புறச் சாலையில் பிரிகிறோம். நேராகச் சென்றால், 15-வது கிலோமீட்டரில் பானத்தூர். இத்துடன் கேரள எல்லை முடிந்து, கர்நாடக எல்லை ஆரம்பிக்கிறது. அங்கிருந்து 50 கிலோமீட்டரில் தலைக்காவிரியை அடையலாம்.

ராணிபுரம்
ராணிபுரம்

நாம் செல்லும் வழியை வின்ட் ஸ்கிரீன் வழியே பார்க்கும்போது ஏதோ ஹாலிவுட் மூவியைப் பார்ப்பதுபோல பிரமிப்பாக இருந்தது.

ஊட்டி என்பது மிகப்பெரிய சிட்டியாகி ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஆனால், ராணிபுரத்தை ஊட்டியைப் போல் மட்டுமல்ல, வேறு எந்த ஹில்ஸ்டேஷன் போலவும் கற்பனை செய்துவிடாதீர்கள். ஏனென்றால், இராணிபுரம் என்பது உண்மையில் ஓர் ஊரோ, டவுனோ கிடையாது. பானத்தடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவும் வளைந்து நெளிந்து, ஏறி இறங்கி, நீண்டு குறுகும் மலைச்சாலையில் அவசரத்துக்குக்கூட ஆட்களைப் பார்க்க முடியாது.

ராணிபுரத்தில் நான்கைந்து காட்டேஜ்களும், வனத்துறை அலுவலகம் ஒன்றும் உள்ளன. அவ்வளவுதான். 40 கிலோமீட்டர் சுற்றளவுக்குப் பாதை கூடக் கிடையாது. ராணிபுரம் ஒரு டெட் எண்ட். மனித நடமாட்டம் என்பது மருந்துக்குக்கூடக் கிடையாது.

பிறகென்ன இங்கே ஸ்பெஷல் என்கிறீர்களா?

அந்தத் தனிமை!

ஊட்டியின் குளிரை விஞ்சும் குளிர்ச்சி; அங்குல அளவு இடைவெளிகூட இல்லாமல் பசுமையைப் போர்த்திக்கொண்ட புல்வெளி நிறைந்த மலைகள்; வஞ்சனை இல்லாமல் வளர்ந்து செழித்த மரங்கள் அடர்ந்த காடு; பனிப்புகையும் இளவெயிலும் மாறிமாறி ஆடும் கண்ணாமூச்சி ஆட்டும்; எப்பொழுது வேண்டுமானாலும் பெய்வேன்... எப்பொழுது வேண்டுமானாலும் சாரலாய்த் தூவுவேன்... எப்பொழுதும் வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்வேன் என்ற முன்னறிவிப்பு இல்லாத மழை; திடீர் திடீரென எதிர்பட்டு சர்ப்ரைஸ் கொடுக்கும் சில்வர் லைன் அருவிகள்; ராணிபுரத்துக் காடுகளை ராஜாக்கள் போல அரசாளும் அளவற்ற யானைக் கூட்டங்களும், எண்ணற்ற விலங்குகளும்; கண்முன்னால் விரிந்துபரந்து கவர்ந்திழுக்கும் கர்நாடகக் குடகுமலை முகடுகள்; எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த ஃப்ரெஷ்னெஸ்ஸும் தூய்மையும்!

இதுக்கு மேல என்ன வேணும் என்பவர்களுக்கு... இன்னொன்றும் இருக்கிறது.

ராணிபுரம்
ராணிபுரம்

ட்ரெக்கிங்!

ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்குக் காடும் மலையும் என மேலே சொன்ன அத்தனையையும் அனுபவித்தவாறே நடந்துசெல்வது என்பது அப்படியொரு லவ்லி எக்ஸ்பீரியன்ஸ்!

பானத்தடியில் இருந்து வரும் சாலை வனத்துறை அலுவலகத்துடன் முடிவடைகிறது. பார்க்கிங் ஏரியாவில் வண்டியை நிறுத்திவிட்டு ட்ரெக்கிங் செல்ல டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம். பிற்பகல் 3 மணிக்கு மேல் அனுமதி இல்லை. பார்க்கிங்கில் ஒரு சிறிய உணவகம் பேக்கரியுடன் இருக்கிறது. ட்ரெக்கிங் குறைந்த பட்சம் மூன்றரை மணி நேரம் பிடிக்கும் என்பதால் குடிநீர், ஸ்நாக்ஸ் போன்றவற்றைக் கையில் வைத்துக்கொள்வது நல்லது. பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டுபோக வேண்டும் என்றால் 50 ரூபாய் டெபாசிட் செய்யவேண்டும். திரும்பி வரும்பொழுது பாட்டிலைக் கொடுத்தால், பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறார்கள்.

பேக்கரியில் ஸ்நாக்ஸ் வாங்கும்போதும் ட்ரெக்கிங்கில் சாப்பிடவா என்று கேட்கிறார்கள். ஆம் என்று சொன்னால், பிளாஸ்டிக் உறைகளில் வரும் எந்தத் தின்பண்டமாக இருந்தாலும் அவற்றைப் பிரித்து சாதாரணத் தாள்களில் ரீ-பேக் செய்து கொடுக்கிறார்கள். சாக்லேட், பாப்கான், எனர்ஜி பார் போன்றவற்றைத் தாளில் சுற்றி எடுத்துக்கொண்டோம்.

நாம் சென்றிருந்த அன்று ஆறேழு கார்கள் பார்க்கிங்கில் இருந்தன. செக் போஸ்டில் இன்ஸ்ட்ரக்‌ஷன் ப்ளஸ் செக்கிங் முடித்து ஏறத் தொடங்கினோம். இரண்டரைக் கிலோ மீட்டர் ஏறவேண்டும். புல்வெளி அடர்ந்த மலைகளும், அடர்ந்த காடுகளும் மாறி மாறி வருகின்றன. இரண்டு சிறிய குடில்கள் மட்டும் இடையில் இருக்கின்றன. அட்டைப்பூச்சிகள் நிறைய இருக்கின்ற இந்தப் பாதைகளுக்கு ட்ரெக்கிங் ஷூஸ், குடை, தண்ணீர் பாட்டில், ஸ்னாக்ஸ் போன்றவை அவசியம்.

ராணிபுரம்
ராணிபுரம்

மெல்ல மலையுச்சியை வந்து சேர எங்களுக்கு ஒன்றரை மணி நேரம் ஆயிற்று. ஆங்காங்கு செல்ஃபி ஷூட், டார்க் சாக்லேட் ஒரு பைட் என நின்று நிதானமாக ரசித்துப் பார்க்க பிரமிப்பான பாதையது.

மலையுச்சியில் ஒரு சிறிய கடை இருக்கிறது. சூடாக ஒரு டீ சொல்லலாம் என்று பார்த்தால் வாய்ப்பே இல்லை. கொஞ்சம் மோரும், சர்பத்தும் ஓரிரு பிஸ்கட் பாக்கெட்டுகளுமே இருந்தன. ஒரு பெரிய சாக்குப் பையில் போட்டுக் காலையில் மேலே தூக்கி வந்து விடுகிறார்கள்.

மலையுச்சியில் இருந்து பார்த்தால் சுற்றிலும் தெரிவதெல்லாம் மலையுச்சிகள்தாம். நாம் இதனை வெறும் வியூ பாயின்ட் என்ற வரையறைக்குள் அடக்கிவிட முடியாது. மூச்சுக் காற்றில்கூடப் பசுமையையும் ஈரத்தையும் உணர முடிந்தது. அரை மணி நேரம் அங்கேயே அமர்ந்து கிடந்தோம். யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை, கிட்டத்தட்ட ஒரு ஜென் நிலை.

அந்த ஊர் மொழியில் சொல்வதானால் மெய்யும், மனசும் குளிர, மெல்லத் திரும்பி, ஏற்கெனவே புக் செய்திருந்த காட்டேஜ் வந்து சேர்ந்தபோது இரவு மணி ஏழாகியிருந்தது.

இருளும் மழையும் இரண்டறக் கலந்த அந்த இரவின் இளஞ்சூடான ஃபுல்காக்களும், மரக்கிளையில் அமைக்கப்பட்ட அறையும் விடியும் வரை அவ்வப்பொழுது கேட்டுக்கொண்டிருந்த இனம்புரியாத ஒலிகளும் நம்மை என்னென்னவோ செய்தன. குறிப்பாக அந்தத் தனிமை... அதுதான் நம்மை மீண்டும் மீண்டும் ராணிபுரத்துக்கு இழுத்துக்கொண்டே இருக்கிறது!