கட்டுரைகள்
Published:Updated:

மயக்கும் சூரிய உதயம்... மீசப்புலிமலையின் அற்புதம்!

மீசப்புலிமலை
பிரீமியம் ஸ்டோரி
News
மீசப்புலிமலை

அடுத்தடுத்து மூணாற்றின் ரோஸ் கார்டன், சில வியூ பாயின்ட்கள் எனப் பார்த்தபின் ஜீப்பில் ஏறி கிட்டத்தட்ட ஏழு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு silent valley என்ற பள்ளத்தாக்கை அடைந்தோம்

நம்மில் பலருக்கு கேரளாவின் மூணாற்றுக்கு அருகில் உள்ள கொழுக்குமலையைப் பற்றித் தெரிந்திருக்கும். விடியற்காலையில் உதிக்கும் சூரியனின் அழகைக் காண இரவு முதலே அந்த மலை உச்சியில் குவியும் மக்கள் கூட்டத்தை நாம் கண்டிருப்போம். கைகளைத் தொட்டுச் செல்லும் மேகக்கூட்டத்தின் நடுவே ஆரஞ்சு நிறத்தில் பிறக்கும் அந்த அழகிய சூரியக் குழந்தையை ரசிக்கும் நாம், அந்தக் கொழுக்குமலைக்கு அடுத்து இருக்கும் மற்றொரு மலையின் உச்சியில் ஏறி ரசித்திருப்போமா என்றால் பெரும்பாலும் ‘இல்லை’ என்ற பதில்தான் வரும்.

அந்த மலையின் பெயர் மீசப்புலிமலை. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பெரிய சிகரங்களில் ஒன்று. கிட்டத்தட்ட கடல்மட்டத்திலிருந்து 2,640 மீட்டர் உயரத்தில் இருக்கும் அந்தச் சிகரத்தை நோக்கிய பயணத்துடன் என் அந்தப் புது வருடம் பிறந்தது!

மயக்கும் சூரிய உதயம்... 
மீசப்புலிமலையின் அற்புதம்!

மீசப்புலிமலைக்கான இந்தப் பயணம் முதலில் என்னுடையதாக இல்லை. என் தங்கையின் பயணத்திற்கான ஏற்பாடாகத்தான் இருந்தது. தொடர்ந்து அவரின் உடல்நலக் குறைவின் காரணமாக எனக்கு என மாற்றி விடப்பட்டது. அல்லது நானே எனக்கு என மாற்றிக்கொண்டேன். பின்னே, ‘தனியாக ஒரு மலை, பனிபடர்ந்த பருவநிலை, புதுச்சூழல், புது மனிதர்கள்' எனப் பார்க்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது! அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் அதிகம் போற்றிப் புகழப்பட்ட, overrated என ஒதுக்கிவிடப்படாத இடமாச்சே!

தவிர, மீசப்புலிமலை என்று பெயர் வரக் காரணம் புலியின் மீசையைப் போன்ற வடிவத்தினாலா அல்லது அங்கு மட்டுமே வளரும் ஒருவிதப் புல்லினாலா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வமும் என்னை உடனடியாகக் கிளம்பத் தூண்டியது.

நடு இரவும் இல்லாத விடியற்காலையும் இல்லாத ஒரு நேரத்தில்தான் என்னுடைய பயணம் தொடங்கவிருந்தது. நியூ இயரைக் கொண்டாட ஊரிலிருந்து வந்த நண்பர்களுடன் ஆட்டம், பாட்டத்துடன் புது வருஷம் டெலிவரி ஆனதும், அவர்களை என் தங்கை மற்றும் இணையரின் மேற்பார்வையில் விட்டுவிட்டுக் கிளம்பினேன்.

திருச்சியில் இருந்து தேனி செல்வதற்கான பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். அங்கிருந்துதான் மீசப்புலி மலைக்குச் செல்வதற்கான ஜீப் எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேருந்து கிளம்பியது. இரவுப் பயணத்தில் வழக்கமாக ரசிக்கும் நிலவை பேருந்தின் வேகத்தில் ரசிக்க முடியாமல்போனதால், ஜன்னல் வழி வந்த காற்றின் உதவியால் தூங்க ஆரம்பித்தேன். வழியில், திண்டுக்கல்லில் என் தோழியும், அவரின் தோழியுமாக இருவர் இணைந்துகொண்டனர்.

மயக்கும் சூரிய உதயம்... 
மீசப்புலிமலையின் அற்புதம்!

காலை 7 மணிக்கு தேனி வந்து சேர்ந்தோம். அங்கே எங்களுக்காகக் காத்திருந்த ஜீப்பில் ஏறி வீரபாண்டி சென்றடைந்தோம். அங்கே சின்ன ஹால்ட்... எங்களுடன் பயணிக்கும் மற்றவர்களும் அங்கே வந்து சேரவேண்டி இருந்தது. அதுவரை, எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓய்வு அறையில் காத்திருந்தோம். எங்களுடன், பயணத்தை ஏற்பாடு செய்த அன்பு மற்றும் மதன் ஆகியோரும் காத்திருந்தார்கள். அனைவரும் வந்து சேர கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஆனது.

9.30 மணியளவில் ஜீப்பில் அனைவரும் புறப்பட ஆரம்பித்தோம். தேனியின் புறநகருக்கு வந்தபின் ஜீப்பில் பாட்டும், அதனைத் தொடர்ந்து உடன் பயணித்தவர்கள் அறிமுகமும் நடைபெற, பயணத்திற்கான உற்சாகம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. மற்ற பயணங்களைக் காட்டிலும் இது எனக்குக் கொஞ்சம் ஸ்பெஷல். காரணம், இது என்னுடைய முதல் தனிப் பயணம், முதல் ட்ரெக்கிங் என்பதுதான்!

தேனியில் இருந்து மூணாறு பயணிக்கும் வழியில் குரங்கணி அருகே செல்லச் செல்ல பனியும் குளிரும் உடலைச் சில்லிட வைத்தாலும் அப்போதைய தேவையெல்லாம் அதுவாகவே இருந்தது. ஸ்வெட்டர் எல்லாம் போட்டுக் கதகதப்பையோ, சூடான இடத்தையோ மனது தேடவே இல்லை. டீ சாப்பிடுவதற்கெனக் குரங்கணியில் ஜீப்பை நிறுத்தினார்கள். மற்ற எல்லோரும் குளிருக்கு இதமாக டீக்கடை நோக்கிச் செல்ல, நானோ பனியின் ஊடே பொழிந்த சிறு தூறலுடன் இணைந்து நனைந்தேன்.

மயக்கும் சூரிய உதயம்... 
மீசப்புலிமலையின் அற்புதம்!

மதியம் 12 மணி நமக்கு விடியற்காலை 4 மணி போலத் தோன்றியது. அப்படியான இயற்கைச் சூழலில் கையைக் கட்டி கொண்டு ஜீப்பின் நிறுத்தத்தில் இருந்து சில மீட்டர்கள் நடக்க, போதுமே இவை, வாழ்வின் மற்ற யாவற்றையும் மறந்து மனம் லேசாக!

சிறிது தூரம் நடந்துகொண்டிருக்கும் போதே, ‘மழை வேகமா வருது, அதுக்குள்ளே மலை மேல போய்டலாம், சீக்கிரம் வாங்க' என்று டிரைவர் அண்ணா கூற, ‘மலையில் இன்னும் என்னென்ன அனுபவங்கள் காத்துக் கிடக்கோ’ என்ற எவரெஸ்ட் எதிர் பார்ப்புடன் (‘இமாலய எதிர்பார்ப்பை'யே அப்படி எ-க்கு எ-வாகச் சொன்னேன்) ஜீப்பில் ஏறி அமர்ந்தேன்.

தொடர்ந்து மூணாறு வழியாகப் பயணித்துக் கொண்டு இருந்தபோது ஜீப்பை நிறுத்திய இடத்தில் இருந்து நிமிர்ந்து பார்த்தால் பச்சைத் தேயிலைத் தோட்டங்களுக்கு இடையில் வெளீரென அருவியும் அதற்கடுத்தாற்போல் நமக்கு மதிய சாப்பாடும் தயாராக இருந்தது. குரங்கணியில் பார்த்த குளிரும் தூறலும் இங்கு இல்லை என்பதால் அருவியைப் பார்த்துக்கொண்டே சுடச் சுட சாதமும் சாம்பாரும் சாப்பிடுவது இருக்கே... அது கொடுத்த அனுபவம் வேறு எதிலும் கிடைக்காது என்பது உண்மையே.

அடுத்தடுத்து மூணாற்றின் ரோஸ் கார்டன், சில வியூ பாயின்ட்கள் எனப் பார்த்தபின் ஜீப்பில் ஏறி கிட்டத்தட்ட ஏழு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு silent valley என்ற பள்ளத்தாக்கை அடைந்தோம், மாலைப் பொழுதென்பதால் சூரியன் தன்னுடைய கரங்களை உள்ளே இழுத்துக் கொள்ள, குளிரின் உச்சக்கட்டமாக இருந்த அந்த இடம் எப்போது கதகதப்பு கிடைக்கும் என்று ஏங்க வைத்தது. மதிய நேரத்தில் குரங்கணியில் டீ இல்லாமல் ரசிக்க வாய்த்த குளிர், தற்போது டீ எங்கே என்று தேட வைத்ததில்தான் வாழ்க்கையின் அந்த அழகான சூட்சுமம் புரிந்தது.

மயக்கும் சூரிய உதயம்... 
மீசப்புலிமலையின் அற்புதம்!

அதன்பின் மீசப்புலிமலையின் லோயர் கேம்ப் பகுதிக்குச் செல்லலாம் என எங்கள் குழுவின் கோ ஆர்டினேட்டர் சொன்னதில் கிடைத்த ஆசுவாசத்துடன் மறுபடியும் பயணம் தொடங்கியது. ரோடுதான் ஆசுவாசமாக இல்லை. கரடுமுரடான, குண்டும் குழியுமான அந்தச் சாலை... அது சாலை இல்லை... மிகக் குறுகிய மண் பாதை! திகில் கலந்த பயத்துடன் உயிரை ஒரு கையிலும் ஜீப்பை மறு கையிலுமாகப் பிடித்துக்கொண்டு பயணித்து, ஒருவழியாக இரவு 7 மணியளவில் லோயர் கேம்ப்பை அடைந்தோம். அங்கு எங்களுக்கான டென்டுகள் தயார் நிலையில் இருந்தன.

‘அடுத்து என்ன? சாப்டுட்டுத் தூங்க வேண்டியதுதானே?' என்று உடல் கெஞ்ச, ‘இவ்ளோ தூரம் வந்தது அதுக்குத்தானா, போவியா அங்கிட்டு' என அதன் கோரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு வெளியே வர, ‘‘சட்டுபுட்டுனு பேக்கை எல்லாம் டென்ட்ல வச்சிட்டு வந்துடுங்க’’ எனச் சொல்ல... பத்தே நிமிஷத்தில் ஃபிரெஷ் ஆகி வந்து சேர்ந்தோம்.

அதற்குள்ளாக கேம்ப் ஃபயர் ஏற்றி, இரவு டிபனாக சப்பாத்தி, சிக்கன் கிரேவி, தந்தூரி என எல்லாம் தயாராக இருந்தன. சுற்றிலும் மலை, மெலிதாய் தூறல், இருட்டில் ஆங்காங்கே இருக்கும் டென்டுகள், அவற்றின் நடுவே சிறிதாய் ஓடும் ஓடை, இதனை ரசித்துக்கொண்டே டிபனை சாப்பிட ஆரம்பிக்க... கேம்ப் ஃபயரில் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. கால்கள் தானாக ஆட ஆரம்பிக்க, விரைவாக சாப்பிட்டு முடித்து, நெருப்பைச் சுற்றி நிற்கும் குழுவினருடன் சேர்ந்துகொண்டேன். கேம்ப் ஃபயரும் அதனைச் சுற்றி ஆடும் குழுவினரும், அவர்களின் நடுவே தங்கள் காதலைப் பரிமாறிக்கொள்ளும் வயதான தம்பதியினரும், ஃப்ளூட் வாசிக்கும் ஐ.டி அன்பரும், அனைத்தையும் சுற்றிச் சுற்றி தன் கேமராவில் காட்சியாக்கும் ரசனைக்கார நண்பரும், அழைத்து வந்தவர்கள் எந்த நிலையிலும் அசௌகரியமாக உணர்ந்திடக் கூடாதே என்ற தவிப்புடன் இருந்த ஆர்கனைசர்களும், கூடவே கால்களைப் பதம் பார்த்த அட்டைப்பூச்சிகளும், அவற்றை முதல்முறையாகப் பார்த்து நடுங்கி பயந்தவர்களும் என நவரசமும் நம் முன்னே ஒரே இடத்தில் குவிந்திருந்தது.

அந்த இரவு அப்படி ஒரு சந்தோஷமான உணர்வைக் கொடுத்தாலும், மொபைல் நெட்ஒர்க் சுத்தமாக இல்லாமலிருந்ததும், முதல்முறையாக வீட்டில் இருந்து தனியாகப் பயணித்ததும், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போன தவிப்பும் என உள்ளுணர்வை சிறிது சிறிதாக ஆட்டிப் பார்க்க, கலவையான உணர்வுடன் கேம்ப் ஃபயர் முடிந்ததும், நானும் என் தோழியும் எங்களுக்கான டென்டில் சென்று தூங்க ஆரம்பித்தோம்...

(பயணிப்போம்...)