Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: சென்னை - புது டெல்லி... தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் கதைகள்! | பகுதி - 13

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள் ( representative image )

இரவு உணவு முடியும் வரை அவரின் பேச்சு தொடர்ந்தது. பின்பு ஒவ்வொருவராகத் தங்கள் இருக்கைக்குத் திரும்பி உறங்கத் தயாராகினர். நானும் புத்தகம் வாசிப்பதுபோல் என் கவனத்தை அவரிடமிருந்து விலக்கினேன்.

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: சென்னை - புது டெல்லி... தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் கதைகள்! | பகுதி - 13

இரவு உணவு முடியும் வரை அவரின் பேச்சு தொடர்ந்தது. பின்பு ஒவ்வொருவராகத் தங்கள் இருக்கைக்குத் திரும்பி உறங்கத் தயாராகினர். நானும் புத்தகம் வாசிப்பதுபோல் என் கவனத்தை அவரிடமிருந்து விலக்கினேன்.

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள் ( representative image )
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

பயணத்தின் நீட்சிகள் சுருங்கியிராத நாள்கள் அவை. 'முன்னொரு காலத்தில்...' என்று கடந்தகால பரண் மேல் ஒதுக்கி வைக்குமளவுக்கு பழைமையடைந்துவிடாத, அதே நேரத்தில் அனைத்துமே விரல் சொடுக்கில் வாய்த்துவிடும் துரிதமும் வசப்படாதிருந்த இடைப்பட்ட காலம் அது. மிதமான வெப்பத்தோடு பரிமாறப்படும் உணவே பசிக்கு உகந்ததென்பதுபோல அனைத்துமே மிதமான அளவில் கிடைத்த நாள்கள் அவை.

உள்நாட்டு விமான சேவையின் கட்டணம், நடுத்தர வர்க்கத்தின் வரவு செலவு வட்டத்துக்குள் அப்போது வந்திருக்கவில்லை. அதனால் ரயில் பயணங்களே அதிகம் வாய்த்தன எனக்கு.

ரயில் பயணங்களை நேசிக்காதவள், பயணங்களை எப்படி நேசித்தவளாவாள்?

'ரயில் பயணங்களில்' எனும் தலைப்பிலேயே ஓரிரு புத்தகங்கள் எழுதிவிடுமளவுக்கு சென்னை - டெல்லி ரயில் பயணத்தின்போது ஏராளமான அனுபவங்கள் எனக்கு அமைந்தன. எதை எழுதுவது, எதை விடுப்பது என்று குழம்பிப் போகுமளவுக்கு எண்ணற்ற மனிதர்களும், அவர்களோடு உறவாடிய சில மணி நேர வாழ்க்கைகளும் மனதில் பதித்த தடங்களால் தேவையான அளவு வாழ்ந்து முடித்த உணர்வு எனக்கு அவ்வபோது ஏற்படுவதுண்டு. எப்படியுமே மூப்பெய்தி மடியவேண்டிய நாள் வரும்வரை காத்திராமல், விரைவிலேயே முதுமையெய்திவிட்டாற்போல் என் வயதொத்த மனிதர்களுடன் என்னால் சகஜமாகப் பழக முடிவதில்லை. அவர்களைவிட மூப்படைந்துவிட்டதாகவே உணர்கிறேன்.

இளமையை உடலிலும், முதுமையை மனத்திலும் சுமந்து வாழ்வது வரமா, சாபமா என்ற கேள்விக்கு என்னிடம் விடையேதுமில்லை.

கூட்டுக்குள் அடைந்து கொள்ளுமுன் பட்டுப்புழு தேவைக்கும் அதிகமாக இலைதழைகளைத் தின்று செரிக்குமாம். பட்டாம்பூச்சியாக உருமாறவேண்டி உழைக்கும் புழுவின் அகோரப் பசிபோல் எங்கு சென்றடையவேண்டி இவ்வளவு அனுபவங்களைத் தின்று செரித்தேன் என்பதும் இன்றுவரை வியப்பாகவே இருக்கிறது.

டெல்லி என்றதுமே 'மெளன ராகம்' திரைப்படத்தில் ரேவதி பஞ்சாப்காரருக்கு தமிழ் வார்த்தைகள் சொல்லிக் கொடுக்கும் காட்சி யாருக்குமே நிச்சயமாக நினைவுக்கு வரும். நானும் அத்தகைய ஒரு குதூகலமான வாழ்வை எதிர்நோக்கியே டெல்லிக்குச் செல்வதும், விடுமுறையானதும் தமிழகம் திரும்புவதுமாக இருந்தேன்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

புதுமண ஜோடியின் அலங்கார ஆரவாரங்கள் ஏதுமில்லாமல் ரயிலேறிய எங்களிடம் பக்கத்து இருக்கைக்காரர் ``எங்க டெல்லியா?" என்றார்.

"ஆமாம்" என்று ஆர்வத்துடன் தலையசைத்த என்னைப்பார்த்து, ``கல்லறைகளின் நகரத்துக்குச் செல்கிறீர்கள்’’ என்றார். டெல்லிக்கு இப்படியும் ஓர் அறிமுகம் இருப்பது அன்றுதான் தெரிந்தது. நான், எனது 'மெளன ராகம்' திரைப்பட கற்பனைகள், அங்கிருந்து தாஜ்மஹாலுக்குச் சென்று காதலைக் கொண்டாடி வர வேண்டும் என்ற கனவுக் கோட்டை என அனைத்தையும் நொடி நேரத்தில் தகர்த்தெறிந்தது அவரின், `கல்லறைகளின் நகரம்’ என்ற அறிமுகம். அதுவும் மணவாழ்வின் முதல் படிக்கட்டில் நின்றிருந்த எனக்கு அது அபாய எச்சரிக்கைபோலிருந்தது. அந்த எச்சரிக்கையை நினைவுகூர்ந்தபடியே பதினைந்து வருட திருமண வாழ்க்கையில் எவ்வித பாதிப்புமின்றி கடந்து வந்திருக்கிறேன் என்றும் கூறலாம்.

நாம் கற்பனை செய்யுமளவுக்கு மட்டுமே வாழ்க்கை அதன் வண்ணங்களைக் காட்டுவதில்லை.

சில நேரங்களில் தேவைக்கும் அதிகமாகவே அது வர்ணஜாலங்களை நிகழ்த்திவிடுகிறது. அதற்குப் பழகிவிட்ட கண்களுக்கு நிதர்சனத்தின் இயல்பான வெளிச்சம் குறைபாடாகவே தெரிகிறது. ``நீ ஏன் இவ்வளவு யோசிக்குறே?" என்ற சுற்றத்தாரின் கேள்விக்கு எந்த அனுபவத்தைக் கொணர்ந்து சாட்சி பகரச் சொல்வதென்று புரியாமல் பல நேரங்களில் மெளனத்தையே விடையாக அளிக்கிறேன்.

ரயில் பயணங்களில்கூட குளிரூட்டப்பட்ட வகுப்பில் பயணிப்பதற்கும், ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஏ.சி வகுப்பில் பயணம் செய்வது சுகமானதாக இருந்தாலும், அதில் சுவாரசியம் அதிகமிருக்காது. புத்தகங்களுக்குள்ளும் செய்தித்தாள்களுக்குள்ளும் முகம் புதைத்துக்கொண்டு பயணிப்பவர்களே அதிகமிருப்பர். தவறியும் யாரேனும் உரையாடினால் அதில் அவர்களது படிப்பு, தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்குமேயன்றி சுவாரசியமான உரையாடல்களோ, ஞானம் புகட்டும் நிகழ்வுகளோ இருக்காது. ஸ்லீப்பர் வகுப்பு பயணங்கள் அதற்கு நேர்மாறானவை. எண்ணற்ற கதைகளும், அவற்றை வழங்கும் கதாபாத்திரங்களும் நிரம்ப கிடைக்கும்.

தூய்மையின்மையையும், வெப்பநிலையின் கடுமையையும் சகித்துக்கொண்டால் ரயில் பயணங்கள் கதைகள் கொட்டிக்கிடக்கும் கிடங்குகள் என்பேன்.

ஒருமுறை இந்தி நடிகர் சல்மான் கான் மேனேஜர் என்று ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் நாக்பூரில் ஏறினார். நான் புகைபிடிப்பதற்காக ரயிலைவிட்டு இறங்கி, சிறிது தூரம் நடந்துவிட்டு ஆரஞ்சு பழங்கள் வாங்கிக்கொண்டு திரும்புகையில் எனக்கு எதிர் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார். அவரிடம் இரண்டு பைகள் நிறைய புகைப்பட ஆல்பங்கள் இருந்தன. ரயில் கிளம்பி சிறிது நேரத்திலெல்லாம் அவர் பேச்சு கொடுக்கத் தொடங்கினார். அவர் மிகவும் மிடுக்காக உடையணிந்திருந்தார். ஆங்கிலமும் இந்தியும் சரளமாகப் பேசினார். அவர் பேசுவதை அருகிலிருந்த அனைவரும் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் அப்போது தலைப்புச் செய்தியாகியிருந்தார். அதனால் அவரைக் குறித்த செய்திகளை ஆர்வத்துடன் அனைவரும் கேட்டுக்கொண்டோம். பிற்பகல் தொடங்கி இரவு வரை பேசிக்கொண்டிருந்தவர் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் பற்றிய தகவல்களை அள்ளி வீசினார். யார் யாருடன் தொடர்புவைத்திருந்தார்கள், யாரெல்லாம் வெளிநாட்டு வங்கியில் பணம் பதுக்கியிருக்கிறார்கள் என்று கூறினார்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

இரவு உணவு முடியும் வரை அவரின் பேச்சு தொடர்ந்தது. பின்பு ஒவ்வொருவராகத் தங்கள் இருக்கைக்குத் திரும்பி உறங்கத் தயாராகினர். நானும் புத்தகம் வாசிப்பதுபோல் என் கவனத்தை அவரிடமிருந்து விலக்கினேன். சிறிது நேரத்திலெல்லாம் அவர் ``எக்ஸ்கியூஸ் மீ மேடம், ஒரு விஷயம் சொல்லவா... ஒரு கோணத்துல பார்த்தா நீங்க ஹேமமாலினி மாதிரியே இருக்கீங்க. சவுத் இந்தியன் பெண்கள் பாலிவுட்டைக் கலக்கியவர்கள். ரேகா, ஹேமமாலினி, ஐஸ்வர்யா ராய் இவங்களை மாதிரி. உங்க போட்டோ, போன் நம்பர், முகவரி கொடுங்க. உங்களை பாலிவுட்ல பெரிய ஸ்டாரா ஆக்கிக் காட்டுறேன்" என்று கண்களில் ஆசையுடன் கூறினார். பொங்கியெழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் சப்தமாகச் சிரித்துவிட்டேன். மறுநாள் காலை டெல்லியில் இறங்கி அவரவர் வழியில் பிரிந்து செல்லும் வரை அந்த மனிதர் என்னிடம் அதே கருத்தை வலியுறுத்தினார். நாகரிகமாக மறுத்தபோதெல்லாம், "மேடம், நீங்கள் இந்தப் பொன்னான வாய்ப்பைத் தவறவிடக் கூடாது, ஓரிரு வருடங்களில் நீங்கள் உலக மேடையில் தாரகையாக மின்னுவீர்கள்" என்றார்.

இறுதியில் சற்றுக் கடுமையாகப் பேசி எனது ஆர்வமின்மையை அவருக்கு உணர்த்தவேண்டியிருந்தது. இருப்பினும்

இத்தனை நாள்கள் கடந்த பின்னரும் அவர் எனக்கு ஹேமமாலினி சாயலிருப்பதாகக் கூறியதை நினைத்து மனதோடு மகிழ்ந்துகொள்வேன்.

தான் அழகியென்ற எண்ணம் எந்தப் பெண்ணுக்குத்தான் இருக்காது!

மற்றொரு சமயம் ரயில்வே காவல்துறையின் உயரதிகாரி ஒருவருடன் பயணிக்க நேர்ந்தது. அவர் விஜயவாடாவில் ஏறினார். அவரிடம் வாக்கி டாக்கி போன்ற கருவி ஒன்று இருந்தது. அதில் தொடர்ந்து அழைப்புகளும், ரயில் நிலையங்களிலிருந்து சிக்னல் குறித்த தகவல்களும் வந்தபடி இருந்தன. இரவு பத்து மணியைக் கடந்ததும் அவரின் உதவியாளர்கள் இருவர் வந்து அவருக்கு உணவு பறிமாறினார்கள். மன்னருக்கு விருந்து படைப்பதுபோலிருந்தது அவர்கள் பரிமாறிய உணவும் உபசரிப்பும். ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் மூன்றாம் தர உணவு போலல்லாமல் நட்சத்திர ஹோட்டலின் உணவுபோல் பல வகைகளில், பல வண்ணங்களில் அவருக்கு உணவு பரிமாறப்பட்டது. நான் ஏக்கத்துடன் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதை கவனித்த அவர் ``மேடம் நீங்களும் ஏதாவது சாப்பிடுறீங்களா? சிக்கன் வறுவல் இருக்கிறது, சுடுசோறும் குழம்பும் இருக்கிறது" என்றார்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

நான் விரக்தியுடன், ``வேண்டாம், இப்போதுதான் உங்கள் ரயில்வே துறையின் கான்ட்ராக்ட் உணவைச் சாப்பிட்டேன். அரைவேக்காட்டு சோறும், மஞ்சள் தண்ணீர் போன்ற பருப்புக் குழம்பும், ஊறுகாயும் சாப்பிட்டேன், நன்றி" என்று மறுத்தேன். அவர் முகம் சிறுத்துப்போனது. அது எனக்குப் போதுமானதாக இருந்தது. ஒருவருடைய மனசாட்சியைத் தட்டியெழுப்பி, உண்மையைக் கூறிவிட்டு வரும்போது கிடைக்கும் நிம்மதியை அப்போது நான் உணர்ந்தேன். நிலைமைகள் மாறுகின்றனவோ, இல்லையோ அதை வலியுறுத்தும்போது கிடைக்கும் மனநிம்மதி விலைமதிப்பற்றது. அந்த நிம்மதியுடன் உறங்கச் சென்றேன்.

ரயில்வே அதிகாரிக்கு மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தது. இம்முறை அவர் மனைவியின் அழைப்பு. அதுவரை கடுமையாக ஒலித்த குரலுக்கு அவர் மென்மை பூசிக்கொண்டார். நான் போர்வையை விலக்கவில்லை. ஆனால் அவர் பேசுவது காதில் விழுந்தது. ``என்னம்மா சாப்ட்டியா?" என்றார். எதிர்முனையில் என்ன பதில் வந்ததோ தெரியவில்லை. அவர் மீண்டும் ``சரி... அதையே யோசிச்சுக்ட்டிருக்காதே. மேல் ஷெல்ஃபுல மாத்திரை இருக்கு. ஒண்ணு போட்டுட்டு தூங்கு சரியா... நான் ஒரு வாரத்துல வந்துருவேன்." மீண்டும் எதிர்முனையின் பதிலுக்குப் பிறகு ``என்ன பண்றதும்மா... வாழ்ந்துதானே ஆகணும்... நீயும் என்னையவிட்டு போயிடாத. அவ்வளவுதான் சொல்ல முடியும். ஒரே ஒரு மாத்திரை மட்டும் போட்டுக்கோ. அதுக்கு மேல வேணாம்" என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார். அவர் ஜன்னலருகே அமர்ந்து நீண்ட நேரம் உறங்காமல் வெளியே பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கும் உறக்கம் பிடிக்கவில்லை. அந்த மனிதர் ஏதோ துக்கத்தில் இருப்பது புரிந்தது. சற்று முன்னர்தான் அவரிடம் கடுமையாகப் பேசினேன். இப்போது எப்படி அவரிடன் நட்புடன் பேசுவது என்று புரியாமல் குழப்பத்துடன் கழிவறைக்குச் சென்றுவருவதுபோல் நடந்துவிட்டு வந்தேன். என் இருப்பு அவரை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பது புரிந்தது. அவர் வெறுமையாக ஜன்னலுக்கு வெளியே பார்த்திருந்தார். மீண்டும் வாக்கி டாக்கி சிணுங்கியது. அவர்

``ம்ம் சொல்லுங்க...’’ என்றார்.

``சார், டிராக்ல ரெண்டு டெட் பாடி கெடக்கு சார், க்ளியர் பண்ணணும்."

``ஆணா, பெண்ணா?"

``ஒரு ஆண், ஒரு பெண் சார்."

``முழுசா செதஞ்சிருச்சா... இல்லை கை கால் மட்டும் துண்டாகியிருக்கா?"

``முழுசா டேமேஜ் சார், சூசைடுபோல, வந்து படுத்துருச்சுங்கபோல சார்."

``சரி, சீக்கிரம் க்ளியர் பண்ணச் சொல்லுங்க. வண்டி ரொம்ப டிலே ஆகிரும். கான்ஸ்டபிள் இருக்காருல்ல வண்டியில? க்ளியர் பண்ணிட்டு ரிப்போர்ட் குடுங்க" என்று அழைப்பைத் துண்டித்தார்.

மீண்டும் ஜன்னலுக்கு வெளியே முகத்தைத் திருப்பிக்கொண்டார். தவறியும் என் பக்கம் திரும்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். தொடர் தொலைபேசி அழைப்புகளின் பரபரப்பு என்னையும் தூங்கவிடாமல் செய்தது. நான் புத்தகம் வாசித்தேன். அவர் தன்னிடமிருந்த கோப்புகளைப் படித்து கையெழுத்திட்டுக்கொண்டிருந்தார். நேரம் பின்னிரவைத் தொட்டது. ஏதோ ஒரு ரயில் நிலையம் வந்தது. நான் வேகமாக இறங்க முற்பட்டேன். அவர் என்னைத் தடுத்தார்

``மேடம் இறங்காதீங்க. இங்கே ரொம்ப நேரம் வண்டி நிக்காது" என்றார்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

``இல்லை சார், சோர்வா இருக்கு. ஸ்மோக் பண்ணா பெட்டரா இருக்கும். நீங்களும் வாங்களேன்... எனக்கும் பாதுகாப்பா இருக்கும், நீங்க சொன்னாதானே ட்ரெயின் கெளம்பும்?" என்றேன். அவர் தன்னையும் மீறிச் சிரித்துவிட்டார். "சரி வாங்க போவோம்" என்றார். பின்னிரவு நேரத்தில் யாருமில்லாத அந்த நடைமேடையில் சில நிமிட நேர உரையாடல் அவரின் இறுக்கத்தை தளர்த்தியிருந்தது.

மீண்டும் அவரவர் இருக்கைக்கு வந்து அமர்ந்துகொண்டோம். எனக்கு உறக்கம் வருவதுபோலிருந்தது. அப்போது அவர் ``மேடம்..." என்றார். எனக்கு மனதுக்குள் ஒருவித அச்சம் படர்ந்தது. `ஒருவேளை நாம் நட்புடன் உரையாடியது அவர் மனதைச் சலனப்படுத்தியிருக்குமோ... இந்தத் தனிமையை தன்வசப்படுத்திக்கொள்ள நினைக்கிறாரோ... என்னதான் இருந்தாலும் ஆண்தானே... அவனுக்கு ஒரு பெண்ணிடம் என்ன தேவையென்று தெரியாதா என்ன... எல்லா ஆண்களும் இப்படித்தானே... காவியங்கள்தொட்டே இவர்கள் கயவர்கள்தானே... ஒரு பெண்ணை சக மனுஷியாகப் பார்க்கவே முடியாது இவர்களால்’ என்று என் மனம் தன் போக்கில் எண்ணங்களில் உழன்றது. தற்காப்பு தொனியில் ``என்ன சார், என்ன வேணும் உங்களுக்கு?" என்றேன் கடுமையாக.

``இல்லை... கொஞ்ச நேரம் பழைய பாட்டு கேட்டுக்கவா நீங்க தொல்லையா நெனைக்கலன்னா?" என்றார்.

அம்மனிதரின் மனநிலை சிறிது இளைப்பாறுதல் விரும்பியது. அதை அவர் வெளிப்படுத்தியவிதம் அவர் மேலிருந்த மதிப்பைக் கூட்டியது.

``தாராளமா கேளுங்க. எனக்கும் பழைய பாடல்கள் மிகவும் பிடிக்கும்."

அவரது வாக்மேனில் ஒலித்த முதல் பாடல், `தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்... சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்..."

என்று பி.பி.ஶ்ரீநிவாஸ் குரலில் தென்றல் வீசியது. அவர் கண்கள் மூடி ரசித்திருப்பது அவர் முகத்தில் படர்ந்த புன்னகையில் தெரிந்தது.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

நேரம் தாழ்த்தி உறங்கியதால் புது டெல்லி ரயில் நிலையம் வந்தடைந்தும்தான் என் உறக்கம் கலைந்தது. முகம் கழுவிவிட்டு வந்தபோதுதான் எதிர் இருக்கை காலியாகியிருப்பதை கவனித்தேன். படுக்கை விரிப்புகளை மடித்து வைத்துக்கொண்டிருந்த ரயில்வே ஊழியரிடம் ``அந்த இருக்கையில் இருந்தவர் எங்கே?" என்று இந்தியில் வினவினேன்.

அவர் மதுராவில் இறங்கிவிட்டதாக அந்த ஊழியர் கூறினார்.

ரயில் பயணங்கள் போன்றே வாழ்க்கையும் அவரவர் இறங்குமிடம் வந்ததும் தாமாகவே விலகிவிடுவோம். யாரும் யாரையும் வற்புறுத்திப் பிடித்து வைக்க முடியாது.

பயணம் தொடரும்..!