Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: ரயில் கதைகள்... ஆண்களுக்கான சில பெண்களின் கதைகள் | பகுதி 15

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்

சராசரி நிலையிலிருந்து வேறுபட்டு, தமது உடற் தேவைகளின் விசைக்கு ஈடுகொடுத்து இயங்கிய இரண்டு பெண்களை வெவ்வேறு சமயங்களில் என் பயணங்களின்போது சந்திக்க நேர்ந்தது.

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: ரயில் கதைகள்... ஆண்களுக்கான சில பெண்களின் கதைகள் | பகுதி 15

சராசரி நிலையிலிருந்து வேறுபட்டு, தமது உடற் தேவைகளின் விசைக்கு ஈடுகொடுத்து இயங்கிய இரண்டு பெண்களை வெவ்வேறு சமயங்களில் என் பயணங்களின்போது சந்திக்க நேர்ந்தது.

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

``மனிதன் முடிவுறும் எதையுமே நினைத்துத் துயர்கொள்கிறான். கடந்தகாலம் அவனை வதைக்கிறது. முடிந்துபோன சந்தோஷங்கள் அவனை துன்புறுத்துகின்றன. அவனுக்கு அப்படி கற்பிக்கப்பட்டிருக்கிறது. மரணம் குறித்த எண்ணங்கள் அவனை கலங்கச் செய்கின்றன. ஒரு மரண ஊர்வலத்தைக் கண்ட சித்தார்த்தன் வாழ்வின் நிலையாமை புரிந்துவிட்டதாக எண்ணி அரண்மனை வாழ்வு, மனைவி, மக்கள் என அனைத்தையும் துறந்து செல்கிறான். பசுமை, மலர்ச்சி, செழுமை, வளமை இவையே வாழ்வின் அறிகுறிகளாகப் பார்க்கப்படுகின்றன. பயணங்களுக்கு உகந்த நேரமாக வசந்தகாலமிருக்கிறது. ஏனென்றால், அப்போது பசுமை இருக்கிறது. பசுமை வாழ்வின் அடையாளமாக இருக்கிறது.

இப்படி பசுமையும் வளமையும் மட்டுமே வாழ்வென்றும், அதன் மறுபக்கங்களான மரணம், வெறுமை, துன்பம் இவையனைத்தும் முடிவின் அடையாளங்களாகவும் நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளன"

புகழ்பெற்ற எழுத்தாளரும், சிந்தனையாளருமான ஹெர்மேன் ஹெசே அவர்களின் இந்தக் கருத்துகளை மனம் வெகு நேரம் அசைபோட்டுக்கொண்டிருந்தது. நிதானமாக யோசித்தபோது அவருடைய கருத்துகள் மனதில் மெல்லிய நெருடலை உருவாக்கின. இத்தகைய சித்தாந்த தர்க்க சிந்தனைகளும், கருத்துகளும் ஆண்களுக்கு மட்டுமே வாய்ப்பது ஏன்?

பயணங்களின் வழி கிடைக்கும் அனுபவங்களும், அதன் விளைவாக முகிழ்க்கும் ஞான வெளிப்படுத்துதல்களும் ஆண்களின் குரலாக ஒலிக்கக் காரணம், பயணங்கள் அவர்களுக்கு எளிதாக சாத்தியப்பட்டன, சாத்தியப்படுகின்றன. புதிய எல்லைகளைக் காணும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அவர்களால் அறிஞர்களாகவும் ஞானிகளாகவும் அவதாரமெடுக்க முடிந்தது. பெண்ணின் உலகமும், ஆணின் உலகமும் இன்றைக்கும் இருவேறாகத்தான் இருக்கின்றன என்பதை நாம் மறுக்க முடியுமா?

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

'வோல்கா லலித குமாரி' என்னும் எழுத்தாளரின் `மீட்சி' என்ற நூல், பெண்ணியச் சிந்தனையின் அடிப்படையில், புராணக்கதைகளின் அபத்தங்களை, அக்கதைகளின் நாயகிகளின் குரலிலேயே வெளிப்படுத்துவதாக இருக்கும். அதில் குறிப்பாக `ஊர்மிளையின் கதை' பகுதி மனதளவில் என்னை மிகவும் பாதித்தவொன்று. உலகம் சீதைகளை அறியும். காரணம், அவர்கள் நாடாளும் ராமன்களின் மனைவிகள்.

உலகம் தலைவன்களின் தலைவிகளை புகழ்பாடும். காரணம், அவர்கள் தலைவன்களின் பாதிகள்.

அவர்களுக்கும் அவ்வளவுதான் வெகுமதியென்றாலும், அந்த அங்கீகாரம்கூடக் கிடைக்காத பெண்கள் யாருக்காக இத்தனை தியாகங்கள் செய்கிறோம் என்பதே புரியாமல் தியாகம் செய்வதும், காத்திருத்தலும் பொறுத்திருத்தலும் மட்டுமே விதி என்பதுபோல் வாழும் பெண்களின் உளக்குமுறுலை வெளிப்படுத்தும் பகுதி 'ஊர்மிளையின் கதை.’

பதினான்கு வருட வனவாசம் முடிந்து திரும்பிய ராமனையும் சீதையையும் நகரமே விழாக்கோலம் பூண்டு வரவேற்கிறது. அவர்களுடன் லட்சுமணனும் வருகிறான். அவனை வரவேற்க ஒருவருமில்லை. முக்கியமாக, அவனது மனைவி ஊர்மிளை அங்கில்லை. அவன் அரண்மனைக்குள் பிரவேசிக்கும் விஷயமறிந்ததும் தனது அறையின் கதவுகளை அடைத்துக்கொள்கிறாள் ஊர்மிளை.

பதினான்கு வருட தவம் கலைந்துவந்த லட்சுமணனுக்கு ஊர்மிளையின் செயலுக்கான காரணம் விளங்கவில்லை.

அவன் வாயிற்கதவை ஓங்கி அறைகிறான். தனது அம்புகளால் துளைக்கிறான். கதவுகள் திறக்கவில்லை. ஊரே வேடிக்கை பார்க்க லட்சுமணன் ஒரு குற்றவாளியைப்போல் நிற்கிறான். நகரின் பெருமக்களும் சான்றோர்களும் ஊர்மிளையின் தவற்றை சுட்டிக்காட்டி, கதவைத் திறக்க நிர்பந்திக்கிறார்கள். அவள் கதவைத் திறக்கவில்லை. ``எனது வைராக்கியத்தைக்கொண்டு கதவுகளை அடைத்திருக்கிறேன். இனி ஒருபோதும் அவை திறக்காது. நீங்கள் போகலாம் லட்சுமணரே" என்று கூறிவிடுகிறாள். ``காரணம் வேண்டும்" என ஆத்திரப்படும் லட்சுமணன், ``பத்தினி தர்மத்தை மீறிய உனக்கு நரகம் வாய்க்கட்டும்” எனச் சபிக்கிறான்.

``நீங்கள் பரிசளித்துள்ள இந்த வாழ்வைவிட நரகம் அதிக துன்பம் தந்துவிடாது. நீங்கள் போகலாம்" என ஊர்மிளை நிதானமாகவும் அழுத்தமாகவும் சொல்கிறாள். ``என் கடமையாற்றச் சென்றேன். அது குற்றமா... என் அண்ணனின் தவ வாழ்வுக்குத் துணையாகச் சென்றேன். அது பாவமா?"

``எதுவுமே தவறில்லை, எதுவுமே பாவமில்லை. ஆனால், நீங்கள் செல்லும்போது என்னையும் அழைத்துச் சென்றிருக்கலாமல்லவா... என் கால்களுக்கு விலங்கிடுவதற்கு நீங்கள் யார்... எதைவைத்து நீங்கள் நான் வனத்தில் பிரவேசிக்கக் கூடாதவளென முடிவு செய்தீர்கள்?

சீதைக்கு ஒருவித அநீதி இழைக்கப்பட்டதென்றால் எனக்கு வேறுவிதமாக அநீதி இழைத்தீர்கள்.

அவள் முக்தியடைந்தாள். ஆனால் நான் எந்நிலைக்கும் ஆட்படாமல் நான்கு சுவற்றுக்குள் அடைந்துகிடக்க வேண்டுமென ஏன் பணித்தீர்கள்... என் முடிவை ஏன் கேட்கவில்லை... நானும் உலகுக்குச் சாட்சி பகிர்ந்திருப்பேனல்லவா? அப்படி எதுவுமே செய்யாமல் அண்ணனைப் பின்தொடர்ந்து சென்ற நீங்கள் உப்பரிகையில் நான் நின்று கண்ணீர் சிந்தியதைக்கூட காணாமல் சென்றீரே... அன்று இறுகியது என் மனம். இனி என் மனக்கதவு திறக்காது. அதுபோலவே அந்தப்புரத்து கதவுகளும். நீங்கள் செல்லலாம்" என்று அவள் கூறியதும் அங்கு இருள் சூழ்ந்தது.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
நம் சமூகத்தில் சீதைகளும், பாஞ்சாலிகளும் கண்ணகிகளும், மாதவிகளும் எத்தனை பேர் இருக்கிறார்களெனத் தெரியவில்லை, ஆனால் ஊர்மிளைகள் எங்கும் நிறைந்திருக்கின்றனர்.

பயணங்களில் பெண்களுடன் அதிக அனுபவங்கள் வாய்க்கப்பெறாமல் போகக் காரணம் பெண்கள் அதிகம் பயணிப்பதில்லை. அப்படியே பயணித்தாலும் அது குடும்பச் சுற்றுலாவாகவே இருக்கும். அங்கும் குடும்பம் என்ற வளையத்துக்குள்ளிருந்தபடி பயணிப்பார்கள். தனிப்பட்ட சுதந்திரமோ, நேரமோ பெண்களுக்கு வாய்ப்பதில்லை. தொடக்கத்தில் எனக்கும் இப்படியான நிலைதான் என்றாலும் பிற்பாடு நான் எனக்கான நேரத்தைத் தேடிக்கொண்டேன். என்னைப்போலவே பல பெண்கள் இன்று தங்களுக்கான எல்லைகளை, தாங்களே தீர்மானிக்கும் வல்லமை பெற்றுவிட்டிக்கிறார்கள். ஆனால், அவர்களும் சொற்பமே. விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக்கொண்ட பல சமூகச் சிடுக்குகளுக்குள் சிக்கித்தவிக்கும் பெண்களை அருகிலிருந்து காண நேர்ந்தபோது, ஒரு பெண் தன் உளத்தெழும் எண்ணங்களையும் ஆசைகளையும் எப்படியும் நிறைவேற்றிக்கொள்ளும் திராணியுடையவள் என்னும் உண்மை புரிந்தது.

காமம் என்பது அடிப்படை உயிரியல் தேவை என்கிற புரிதல் சமூகத்தில் ஏற்படவில்லை. கல்வியறிவும் புரட்சிகளும் அரங்கேறும் சமூகங்களிலேயே இத்தகு புரிதல் பரிசோதனை முயற்சிகளாக இருக்கும்போது, பல்வேறு கலாசார பின்புலங்கள்கொண்ட நமது சமூகத்தில் பெண்களின் உயிரியல் உந்துதல்களுக்குப் பெரிய வாய்ப்புகளுமில்லை. விருப்பப்பட்டவை நல்லபடியாக அமைந்துவிட்டால் யாருக்கும் எந்தக் குறையும் இருக்கப்போவதில்லை, அப்படி அமைவது சாத்தியப்படாதபோது அதற்குக் காரணங்கள் என்னவாக இருந்தாலும் அங்கு பலியிடப்படுவது பெண்களின் விழைவுகள்தான்.

தியாகம் எனும் அணிகலனை அவள் சூடிக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை அவள் தைரியமாகத் தன் வழியைத் தேர்வுசெய்தால் அப்போதும் அவமானம் எனும் அணிகலன் அவளுக்குச் சூட்டப்படும். 'காமம் முற்றிய பெண்' என்றுதானே காவியங்கள் வர்ணிக்கின்றன! 'காமம் முற்றிய ஆண்' தலைவனாக கருதப்படுகிறான். அவன் ஏறு போன்ற தோள்களுடன் அந்தப்புரத்தில் பெண்களை ஆண்டான் என்று எழுதப்படாத இலக்கியங்களே இல்லை என்றே கூறலாம்.

சராசரி நிலையிலிருந்து வேறுபட்டு, தமது உடற் தேவைகளின் விசைக்கு ஈடுகொடுத்து இயங்கிய இரண்டு பெண்களை வெவ்வேறு சமயங்களில் என் பயணங்களின்போது சந்திக்க நேர்ந்தது. முதலாமவரை `பேரிளம் பெண்' என்று கதைக்காகப் பெயரிடுகிறேன். நானும் அவரும் எதுவுமே பேசிக்கொள்ளாமல் பயணித்தோம்.

அவரின் முகமும் உடலும் ஒருவித இறுக்கத்தைச் சுமந்திருந்தன. இயல்பான உரையாடல்கூட அவரிடம் சாத்தியப்படவில்லை.

அவர் சேலை கட்டியிருந்தவிதமும் அதே இறுக்கத்தை எடுத்துரைத்தது. ஒரு துளி உடலும் யாருக்கும் தெரிந்துவிடாத வண்ணம் சேஃப்டி பின்களால் கொக்கிகளிட்டு நேர்த்தியாக அணிந்திருந்தார். அமைதியாக, வெள்ளைத் துணியொன்றில் எம்பிராய்டரி செய்துகொண்டிருந்தார். சில மணி நேரம் கழித்து ஆந்திராவின் ஏதோவொரு ரயில் நிலையத்தில் ஒருவர் ஏறினார். கதைக்காக அவரை 'ஜிப்ஸி' என்று அழைக்கலாம்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

'ஜிப்ஸி' ஆண். வண்டியில் ஏறியதிலிருந்து எங்கள் வகுப்புக்குக் களைகட்டியது. பழைய கிட்டார் வைத்திருந்த அவரின் கழுத்தில் நிறைய மணிமாலைகள், உடையும் உடற்மொழியும் அசட்டையாக இருந்தன. சரளமாக ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என வெவ்வேறு மொழிகளில் உரையாடினார். பயணிகள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். கிட்டார் இசைத்து பாடத் தொடங்கியபோது எண்பதுகளின் நாயகன் போன்ற ரெட்ரோ தோற்றம் வந்துவிட்டது. அவர் அங்குள்ள அனைவரின் கவனத்தையும் தன்வசப்படுத்தியிருந்தார். நானும் என் மகனும் அவரது குதூகலத்தை ரசித்தோம். குழந்தைகளுக்குப் பாடல்கள் வாசித்தார். கதைகள் கூறினார். அவ்விடமே கல்லூரி வளாகம்போல் கோலாகலமாக இருந்தது. இவ்வத்தனை நிகழ்வுகளின்போதும் 'பேரிளம் பெண்' மட்டும் அசையாதிருந்தார். அவர் ஜிப்ஸியின் எந்த செய்கைக்கும் எதிர்வினையாற்றவில்லை.

'நிழல் நிஜமாகிறது' திரைப்படத்தில் வரும் சுமித்ராவைப்போல் அவர் தெரிந்தார். எங்கள் அனைவரின் நாளும் ஏதொவொரு நினைவைப் பற்றிக்கொண்டு பயணித்தது. ஜிப்ஸி மட்டும் ஆரவாரமாகத் திரிந்துகொண்டிருந்தார். ரயில் பயணங்களின்போது காதல் காட்சிகளுக்கும், புதுமணத் தம்பதியரின் கூடல் கிளுகிளுப்புகளுக்கும் பஞ்சமிருக்காது என்றபோதும், நான் அன்று கண்டது சற்றே அதிர்ச்சியூட்டும் சம்பவமாக இருந்தது. நடுநிசியைக் கடந்த நேரத்தில் அனைவரும் உறங்கச் சென்ற பிறகு ஜிப்ஸி மட்டும் நடமாடினார். அவரின் நடமாட்டம் என் உறக்கத்தைக் கலைக்க, முகம் கழுவிவிட்டு எதையாவது வாசிக்கலாம் என்னும் முடிவோடு கழிவறைக்குச் சென்றேன். மனிதர்கள் முற்றிலுமாக முடங்கிவிடவில்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிருவர் விழித்திருந்தனர். கழிவறைக் கதவு பாதி திறந்த நிலையிலிருந்ததால் நான் கதவைத் திறக்க முற்பட்டேன்.

ஆனால் மறுபுறம் யாரோ நின்று தடுப்பதுபோலிருந்தது. "யாரேனும் இருக்கிறீர்களா" என கேட்டதற்கும் பதிலில்லை. என்ன நடக்கிறது என்று எட்டிப்பார்த்த எனக்கு கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அங்கு ஜிப்ஸியும் பேரிளம்பெண்ணும் தீவிரமாக முயங்கிக்கொண்டிருந்தனர். யாரோ வருவது தெரிந்ததும் ஜிப்ஸி தடுமாறினார். ஆனால் பேரிளம்பெண்ணின் கவனம் கலையவில்லை. பசி மிகுந்த ஓநாய் இரையிடம் கவனம் குவித்திருப்பதுபோல் அவரின் கவனம் ஜிப்ஸியிடம் மட்டுமே இருந்தது. அவரின் கேசம் கலைந்து, உடையும் உடலும் தளர்ந்திருந்தன.

விடிந்து நெடுநேரமாகியும் பேரிளம் பெண்ணின் துயில் கலையவில்லை. ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். ஜிப்ஸியைக் காணவில்லை. அவரின் பை அவரிருக்கையில்தான் இருந்தது. ஆனால் அவரைக் காணவில்லை. ரயில்நிலையம் வந்ததும் வேகமாக வந்து தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். பேரிளம் பெண் எம்பிராய்டரி செய்து முடித்திருந்தார்.

மற்றொரு சமயம் சென்னையிலிருந்து டெல்லி பயணத்தின்போது ஒரு வட இந்திய தம்பதியருடன் பயணம் செய்ய நேரிட்டது. அந்தப் பெண்மணி இளவயதினளாகத் தெரிந்தாள். அவரின் கணவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றுவதாகவும், ஒரு வாரம் விடுமுறைக்குத் தன்னை அழைத்து வந்திருந்ததாகவும் இப்போது மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பிச் செல்வதாகவும் கூறினார். அவர்களிருவரிடமும் ஒருவித பதற்றம் கூடியிருந்தது. கல்லூரிப் படிப்பைக்கூட முடித்திருக்காத அவள், அந்தக் குடும்பத்தின் மூத்த மருமகள்.

பெரியதொரு கூட்டுக் குடும்பத்தைச் சமாளிக்கும் பக்குவம் அவளிடமில்லை. பதின்பருவத்தின் இளமையும் துறுதுறுப்பும் மிகுந்திருந்தன.

அவளுக்கும் அவளின் கணவருக்கும் வயது இடைவெளி அதிகமிருப்பதாகத் தெரிந்தது. அப்பெண் அவரைவிட்டு ஓர் அங்குலம்கூட நகரவில்லை. அவரின் மடியில் படுத்துக்கொள்வதும் தோள்களில் சாய்ந்துகொள்வதும், தலைமுடியைக் கோதுவதுமாக ஒரு பூனைக்குட்டிபோல் பரபரப்பாக இருந்தார். அவளுடைய கணவரோ அனைத்துக்கும் புன்னகைத்தவாறே செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார். அப்பெண்ணின் செயல்களில் ஒருவிதமான தவிப்பு தெரிந்தது. சுற்றியிருந்தவர்களின் கவனம் அப்பெண்ணின் மீது திரும்ப, சிலர் சிரித்து கேலி செய்தனர்; சிலர் புருவம் உயர்த்தினர்; சிலர் முகம் சுளித்தனர். நான் மேலிருக்கையில் அமர்ந்திருந்ததால் கீழே அரங்கேறும் காட்சிகளைத் தவிர்க்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் அப்பெண் தன் சுயத்தை மீறி அவரிடம் கெஞ்சுவதும் மன்றாடுவதுமாக இருந்தாள்.

அவளின் கணவர் அனைத்துக்கும் புன்னகைத்தார். செல்லப்பிராணிகளின் தலைகோதுவதுபோலவும், காது மடல்களை வருடுவதுபோலவும் செய்தார். அப்பெண் அவரைவிட்டு அகலாமல் அவருடைய கைகளை தனது நெஞ்சோடு அணைத்தபடியே அமர்ந்திருந்தாள். இரவு உணவுக்காகக் காத்திருந்த நேரத்தில் அவளுடன் உரையாடத் தொடங்கினேன்.

காதல்
காதல்
Representational Image

``பார்க்க படித்த பெண்போல் தெரிகிறீர்கள்... உங்களது அந்தரங்கத்தை வீடு சென்று பகிர்ந்துகொள்ளலாமே... அனைவரின் பார்வையும் உங்கள் மேல் திரும்புவது தெரியவில்லையா... உங்கள் கணவர்தானே?" என்று நட்பாகக் கேட்டேன். அந்தப் பெண் சுயநினைவுக்குத் திரும்பியவள்போல் சட்டென விலகி அமர்ந்துகொண்டாள்.

``உங்கள் பிரைவசியில் தலையிட்டிருந்தால் மன்னிக்கவும்" என்று கூறிவிட்டு உணவருந்தத் தொடங்கினேன். அப்பெண்ணின் கண்கள் குளமாகியிருந்தன. தர்மசங்கடமான சூழ்நிலையில் தவித்தாள். நான் அவளது மனதை ஆற்றும்விதமாக வேறு விஷயங்கள் பேசத் தொடங்கினேன். ஆனால் அப்பெண்ணின் கண்கள் நீர்வார்த்தபடி இருந்தன. ஒரு கட்டத்தில் உடைந்து அழுதுவிட்டாள்.

``நான் கல்லூரிப் படிப்பை தொடர்வதற்கு முன்பே என்னை இவருக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். இவருடையது பெரிய கூட்டுக் குடும்பம். மதுராவிலிருந்து இரண்டு மணி நேர தூரத்தில் ஒரு கிராமத்தில் எங்களது வீடு இருக்கிறது. பால் வியாபாரம் செய்துவரும் செழிப்பான குடும்பம். நான் அவ்வீட்டின் மூத்த மருமகள். அதிகாலையில் நீராடிவிட்டு, தலையில் முக்காடிட்டுக் கொண்டு சமையலறைக்குள் சென்றால் நண்பகல் கடந்துதான் வெளியே வர முடியும். பிறகு மாலை தேநீருக்கான நேரம் வந்துவிடும்.

வீட்டில் அனைவரின் தேவைகளையும் கவனித்து, வயோதிகர்களின் கால்கள் பிடித்துவிட்டு, பூஜை வேலைகள் செய்வது என அனைத்திலும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.

இவர் சென்னையில் இருப்பார். அப்படியே வீட்டுக்கு விடுமுறைக்கு வந்தாலும் நாங்களிருவரும் சந்தித்துப் பேசிக்கொள்வதே சொற்ப நேரம்தான். இந்த ஒரு வார விடுமுறையே நான் மிகவும் அழுது போராடிப் பெற்றது. அடுத்த வருடம் வரை விடுமுறை கிடையாது என்ற நிபந்தனையுடன்தான் இப்போது என்னை அழைத்து வந்தார். என்னுடலும் மனமும் மலர்ந்து செழித்திருக்கும் இப்பருவத்தில் நான் பொறுப்பான, பக்குவமான பெண்ணாக மாறிவிட வேண்டும் என்பது எவ்விதத்தில் நியாயம்? `ஆன்மிகத்தில் மனதைச் செலுத்து. குடும்ப நிர்வாகத்தை கவனித்துக்கொள்’ என சிட்டுக்குருவியின் தலையில் பாறையைச் சுமத்துவதுபோல் இந்தத் திருமணம் என்னை வதைக்கிறது.

ஓர் ஆணுக்கு காமம் துய்ப்பது உரிமையாகவும், பெண்ணுக்குக் கணவன் வழங்கும் கருணையாகவும் ஏனிருக்கிறது?’’

என்று ஒரே மூச்சில் அவள் கூறி முடித்தபோது, என்னையும் சேர்த்து அங்கிருந்த அனைவரும் மெளனமானோம். அவளுடைய கணவர் அதே செல்லப்பிராணியை வருடும் தோரணையில் "சின்னப் பெண்ணல்லவா நீ, போகப் போகப் பழகிவிடும்" என்று ஆறுதல் கூறினார்.

மறுநாள் விடிந்ததும் அந்தப் பதின்வயது சிறுமி சேலையணிந்து முகம் முழுதும் முக்காடிட்டு மறைத்தபடி, ரயில் நிலையத்தில் இறங்கினாள். அவர்களை வரவேற்க நான்கைந்து முதிர்வயது ஆண்கள் வந்திருந்தனர். அவள் அனைவரின் கால்களையும் தொட்டு வணங்கிவிட்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றாள்.

ஒருமுறைகூட திரும்பிப் பார்க்கவில்லை. என் பார்வையிலிருந்து மறையும் வரை நான் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்…

(பயணம் தொடரும்...)