
பயணம்
விடியற்காலை 4 மணிக்கே, ‘‘தூங்குனது போதும், சீக்கிரம் வாங்க...” என எழுப்பி விட, ‘அதுக்குள்ளயா விடிஞ்சிருச்சி’ என யோசித்துக் கொண்டே வெளியில் பார்த்தால், இரவில் இருந்ததைவிட அதிகமாகப் பனி... எதிரே இருப்பவர் யார் எனத் தெரியாத அளவிற்குப் பனி இறங்கியிருந்தது. ‘இப்போ கிளம்பினாதான் ட்ரெக்கிங் கரெக்டா இருக்கும்’ என கேரளாவின் authentic கட்டஞ்சாயாவையும், பிரெட்டையும் சாப்பிட்டு பலர் கிளம்பியிருந்தனர். ‘பிரெட் என்ன பிரெட்? அசால்ட்டா 500 கிலோமீட்டர் கூட நடப்பான்டா இந்தச் சூனா பானா’ என்று நினைத்துக்கொண்டு வெறும் சாயாவை மட்டும் குடித்துவிட்டுத் தயாராகி ஜீப்பில் ஏறி அமர்ந்துவிட்டேன்.
கல்லும் குழியும், அங்கங்கே பள்ளமும் எனக் கிட்டத்தட்ட 70 டிகிரியில் ஒன்றன் பின் ஒன்றாக ஜீப்கள் ஏற ஆரம்பித்தன. ‘ஓ வாவ்’ல என வளர்ச்சியில் மிச்சம் வைக்கா மரங்களையும், டீ எஸ்டேட்டையும் வீடியோ எடுத்துக்கொண்டு வரும்போதே, சர்ரென ஜீப் தடுமாறி பின்னோக்கி வேகமாக இறங்க ஆரம்பித்தது. ‘அவ்ளோதான்டா... இருந்தா பூமிக்கு, இல்லன்னா சாமிக்கு’ என நினைத்துக்கொண்டு இருக்கும்போது கடவுள் போல பின்னால் வந்த ஜீப் டிரைவர் தக்க சமயத்தில் சிறிய பாறை ஒன்றை எடுத்து டயருக்குக் குறுக்கே வைத்து ஜீப்பின் வேகத்தைக் குறைத்தார். சடசடவென ஒவ்வொருவராக ஜீப்பில் இருந்து கீழே இறங்க (இல்லையில்லை, உயிர் பயத்தில் தலைதெறிக்கக் குதித்தோம்!) ஜீப்பினை சிறிது தூரம் மேலே கொண்டு சென்றனர். பின் ஜீப் டிரைவரை மனசார வணங்க, அருகிலுள்ள எல்லாரும் சிரிக்க, மறுபடியும் ஜீப்பில் ஏறி மீசப்புலி மலையின் ட்ரெக்கிங் ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

அங்கிருந்து மேலே பார்த்தால் நம் ஊருக்கு அருகில் உள்ள பெருமாள் மலை மாதிரி ஒரு மலை. ‘அதன்மீது ஏறுவதுதான் ட்ரெக்கிங்’ என ட்ரெக்கிங் பற்றிய அடிப்படை அறிவு சிறிதும் இல்லாமல் மலையேற ஆரம்பித்தேன். கொஞ்ச தூரம் ஏறியபின் முகத்தில் அடித்த சில்லென்ற காற்றையும் தாண்டி வியர்வை வெளியேற ஆரம்பித்தது. பெரிதாக மலையேறிப் பழக்கமில்லாததாலும், உயரம் என்றாலே பயம் என்பதாலும் கொஞ்சம் மெதுவாகவே ஏறிக்கொண்டிருந்தேன். கூட இருந்த குழந்தைகள் ஆர்வமாக ஏற, 40 நிமிடமாக மலையேறிச் சென்றுகொண்டிருந்தேன். எனக்கு முன்னாடி சென்றவர்கள் ‘வேகமாக வாங்க, செமயா இருக்கு’ என்று குரல் கொடுக்க... ‘ம்ம் முடில...’ என்பதாகத் தலையசைத்து, மெல்ல மெல்ல எப்படியோ ஏறி முடித்தேன். மூச்சிரைக்க ஏறியது வீணாகவில்லை... அவ்வளவு அற்புதமான காட்சி. மேகக் கூட்டங்களுக்கு நடுவில் சூரியன் உதித்துக்கொண்டிருந்தார். நானும் மெய்ம்மறந்து ரசித்துக்கொண்டிருந்தேன்.
அங்கே உடனிருந்தவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக merge ஆகிக்கொண்டிருந்தேன். உடன் போட்டோ எடுப்பது, ரீல்ஸ் செய்வது எனக் குழந்தைத்தனம் ஒட்டிக்கொண்டது. சூரியனின் கதிர்கள் பட்டு மேகங்கள் விலகியிருந்த சமயத்தில் தூரத்தில் இருந்த நீர் தேங்கியிருந்த ஏரியும், பெரிய சிகரமும் கண்ணுக்குத் தெரிய, ஆர்கனைஸர் அன்பிடம், ‘அன்பு... அங்கெல்லாம் போக மாட்டோமா?’ என்று கேட்டேன்.

சட்டென, ‘‘அதுக்குத்தானே வந்துருக்கோம் வாங்க” என்று முன் செல்ல ஆரம்பித்தார். ‘சரிதான், தெரியாம வந்து மாட்டிகிட்டோம் போல’ என்று பின்னாடியே செல்ல ஆரம்பித்தோம். மற்ற ட்ரெக்கிங் போல இல்லாமல் இது வெறும் ஒரு மலையை மட்டும் ஏறி இறங்குதல் இல்லை. சுற்றிலும் மலைகளும், அவற்றில் புல் வகை முழுவதும் வியாபித்து இருக்க, முந்திய நாள் தூறிய மழையும், இரண்டு மலைகளுக்கு இடையில் ஓடிய ஆறும் அப்பப்பா... எட்டு மலைகளைத் தாண்டி ஒன்பதாவது மலைக்கு வந்திருந்தோம். இது தென்னிந்தியாவின் மூன்றாவது உயரமான சிகரம்... கிட்டத்தட்ட 2,659 மீட்டர்... அதாவது, 8,724 அடிகள்! அந்த உயரத்தில், வந்த களைப்பும் அலுப்பும் போய் பிரெஷ்ஷான ஒரு மனதும், உடலும் கிடைத்திருந்தது. எப்படி? அது அப்படித்தான்!
ஒவ்வொரு மலையாக ஏறிச் சோர்வடையும் போது முகத்தை ஒட்டிச் செல்லும் மேகங்கள் முகத்தில் போட்ட பனி பவுடர்களும், இடையில் செல்லும் ஆறுகளின் ஜில்லென்ற ஸ்பரிசமும், யாரென்றே தெரியாதவர்கள் கொடுத்த கடலை மிட்டாயும், பேரீச்சையும், பாதாமும், குளுக்கோஸும், அவர்களுடைய உத்வேகமும், நமக்காக வெயிட் செய்து கூட்டிக் கொண்டு போகும் புது உறவுகள் என அனைத்தும்தான் அதற்குக் காரணம்.
அதிலும், இந்த மலையேற்றத்தில் வந்திருந்த வயதான தம்பதியும் ஒரு காரணம். அந்தத் தம்பதியினரின் வேகத்தை அவர்களுக்குள்ளாகவே கலாய்ப்பது ரசிக்கும்படி இருந்தது. அதில் கணவர் சைடு சிலரும், மனைவி சைடு சிலரும் எனச் சேர்ந்து போட்டி போட்டுக்கொண்டு கலாய்த்து... ஏறுவதே தெரியாமல் ஏறிக் கொண்டிருந்தோம். இரண்டு பக்கமும் அதலபாதாளம், இடையில் அந்தச் சிறிய பாதையில், முகத்தில் மேகங்கள் உரசிக்கொண்டு போக, பயத்தை மறைத்துக்கொண்டு நான் நடந்தது இருக்கே, அதைச் சொல்ல வார்த்தையே இல்லை.

இதற்கு இடையில் குழு குழுவாக அமர்ந்து பாட்டு வேறு. அதிகமான பாட்டை நான்தான் பாடியிருப்பேன். ஏனெனில், அப்போதான் ரொம்ப நேரம் உட்கார முடியும்!
அப்படி அங்கங்கே உட்கார்ந்து, மலைகளுக்கு இடையில் சென்ற ஆற்றில் நடந்து, அங்கு போட்டோ எடுக்குறேன் என்று நேரத்தைக் கடத்தி, வலிக்கும் சமயத்தில் யார் கையையாவது பிடித்து இழுத்து அவர்களையும் தள்ளிவிட்டு என ஒரு வழியாக மீசப்புலிமலையின் அந்த உயரமான சிகரத்தை வந்து சேர்ந்தோம்.
அத்தனை உயரமான சிகரங்களிலும், மேகக் கூட்டங்களுக்கு இடையில் நடப்பதும், குதிப்பதும் என குழந்தையாக மாறி அங்கிருந்த ஒவ்வொரு நொடியையும் ரசித்துக்கொண்டிருந்தேன். அங்கேயும் கச்சேரி ஆரம்பித்தது. தொடர்ந்து சில பாடல்களைப் பாடி மகிழ்ந்துவிட்டு, குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டு, வந்த வழியில் இல்லாமல் வேறு வழியில் இறங்க ஆரம்பித்தோம்.
‘இந்தப் பக்கம் ஈஸியா போய்டலாம், கொஞ்ச தூரம்தான்’ எனக் கூற, மெதுவாக இறங்கி வர ஆரம்பித்தோம். ஏறுவதற்கே கொண்டு வந்த நீரைத் தீர்த்துவிட்ட நாங்கள், இடையில் தென்பட்ட ஓடையில் இருந்து நீர் எடுத்துப் பருக, சில்லென்று இருந்த அந்தத் தண்ணீரின் டேஸ்ட் இருக்கே... இப்போ நினைத்தாலும் நாக்கில் அப்படியே இருக்கிறது. அப்படியே நடக்க நடக்க மதியம் 1 மணி ஆகியிருந்தது, முழுதாக இறங்கி, சிறிய நீர்த்தேக்கம் அருகில் காலை நீட்டி அமர்ந்தோம். கூட வந்திருந்த சிலர் பின்னால் திரும்பி அங்கே இருந்த எலும்புகளைக் காட்ட, பயத்துடன் எங்களின் கைடு அன்பிடம், “என்னங்க, எலும்பெல்லாம் இருக்கு?” என்று கேட்டேன். அவர் கூலாக, ‘‘இங்க ஓநாய்க் கூட்டம் அப்பப்போ வரும்” என்று பீதியைக் கிளப்ப, அதன் பிறகு எங்கள் வேகத்தைப் பார்க்கணுமே... ஓட்டமும் நடையுமாக எல்லாரும் ஆரம்பித்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

இதற்கு இடையில் பிரெட் கூட சாப்பிடாம வந்தேன்னு சொன்னது ஞாபகம் இருக்கா, அப்படி சாப்பிடாம வந்து, இடையில் சாப்பிட்ட ஸ்னாக்ஸ் எல்லாம் உன்னோட ட்ரெக்கிங், நீ பயந்து ஓடுனதுக்கே சரியாப் போச்சு என வயிறு சொல்ல, மூளை பசியைத் தூண்டிவிட்டிருந்தது. அங்கிருந்து மறுபடியும் base கேம்ப்புக்கு ஜீப்பில் வந்து சேர்ந்து அங்கே தயாராக இருந்த புட்டு, கடலைக்கறி, எலுமிச்சை சாதம், ஊறுகாய் என லஞ்ச் முடித்து ஜீப்பில் கிளம்பி தேனி வந்து அங்கிருந்து அவரவர் வீடு வந்து சேர்ந்தோம்.
ஒரு சின்னப் பயணம்தான். இரண்டு நாள் தான். ஆனால் அனுபவங்களும், உலகின் பெரும் சக்தியான இயற்கையும், மனிதர்களும் எனக்குக் கற்றுக்கொடுத்தவை அதிகம். கிடைத்த சொந்தங்கள் அதிகம். இந்தப் பயணத்தின் தொடர்ச்சி என்னை அடுத்தடுத்து எங்கு கொண்டு சென்றது என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.
மீசப்புலிமலை ட்ரெக்கிங் செல்வது எப்படி?
- இங்கு கேரள அரசின் மூலமாக முறைப்படி பதிவு செய்தபின்தான் செல்ல முடியும். இங்கு ட்ரெக்கிங் செல்வதற்கான கையேடு, உணவு, டீ, ஸ்நாக்ஸ் போன்றவை சேர்த்து பேக்கேஜ் போலக் கொடுக்கப்படும். முன்பே காலநிலை போனற்றவற்றை விசாரித்து புக் செய்துகொள்ளவும்.
- இரண்டு பேரில் ஆரம்பித்து அங்கு இருக்கும் இடங்களைப் பொறுத்து ஆட்கள் செல்லலாம்.
பணம் எவ்வளவு செலவாகும்?
குழுவினருடன் சென்றதால் உணவு, தங்குமிடம், ஜீப், guide என அனைத்துக்கும் சேர்த்து ரூ. 4,500 செலவானது.
தனியாகச் செல்லும்பட்சத்தில் தனித்தனியாக அனைத்திற்கும் செலவு செய்யும் பட்சத்தில் 6,000 முதல் 10,000 வரை செலவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
உணவு?
பால், டீ கிடைப்பதில்லை.
பெரும்பாலும் கேரளத்தின் உணவுகளான புட்டு, ஆப்பம், கடலைக்கறி போன்றவை கிடைக்கும். இவை தவிர சப்பாத்தி, சிக்கன், முட்டை கிரேவிகளும், வெரைட்டி சாப்பாடுகளும் இருக்கும்.