தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

தீரா உலா: மாரி மலை முழைஞ்சில்...

மாரி மலை முழைஞ்சில்
பிரீமியம் ஸ்டோரி
News
மாரி மலை முழைஞ்சில்

காயத்ரி சித்தார்த்

இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்

உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா

வீடு இங்கேதான் இருக்கிறதாம்

இதெல்லாம் ஒரு காரணமா?

- முகுந்த் நாகராஜன்

குழந்தைகள் உலகம் அப்படித்தான்... அவர்கள் மகிழ்ச்சியாயிருக்கக் காரணங்கள் தேவைப்படுவதில்லை. எதை ரசிக்க வேண்டும், எதை மதிக்க வேண்டும் என்றெல்லாம் யாரும் அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டியதில்லை.

மாரி மலை முழைஞ்சில்
மாரி மலை முழைஞ்சில்

பெய்ரூட்டில் நாங்களும் எங்களைச் சுற்றியிருந்தவர்களும் மழையிலும் காற்றிலும் நின்று, Pegion Rocks-ஐ கண்நிறைய அள்ளி, மனம்கொள்ளாமல் நிரப்பிக்கொண்டிருந்தபோது, அம்மு அங்கே தடுப்புக்காகப் போட்டிருந்த வேலிக்கம்பிகளில் துளித்துளியாகத் தேங்கி நின்ற மழைநீரை, சுட்டுவிரலால் தொட்டுத் தொட்டு மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தாள்!

முன்னொரு முறை அவள் பிறந்தநாளுக்கென விலையுயர்ந்த நெக்லஸ் பரிசளிக்கப்பட்டபோதும் இப்படித்தான். வெடுக்கென நகைப்பெட்டியைப் பறித்துக்கொண்டு உள் அறைக்குள் ஓட்டமாக ஓடினாள். நகை எங்காவது விழுந்துவிடப்போகிறது என எல்லோரும் அவளைத் துரத்திக்கொண்டு ஓடினால், நகையை எடுத்து படுக்கையில் வீசிவிட்டு அந்தப் பெட்டிக்குள் இருந்த வெல்வெட் துணியை ஆசையுடன் கன்னத்தில் தேய்த்து விளையாடிக்கொண்டிருந்தாள். எங்களைப் பார்த்ததும் செல்லமாக முறைத்து, `தர மாட்டேன்' என்றாள். உலகில் விலைமதிக்க முடியாதது, மகிழ்ச்சி ததும்பும் மனம்தான் என்பதை குழந்தைகளே மீளமீள நினைவூட்டுகிறார்கள்.

மாரி மலை முழைஞ்சில்
மாரி மலை முழைஞ்சில்

பெய்ரூட்டில் அன்று இரவெல்லாம் மழை பெய்தது. மறுநாள் காலை மகா சோம்பலுடன் விடிந்தது. டிரிப் ஐந்து நாள்களாக இல்லாமல் ஐம்பது நாள்களாக இருந்தால் இன்று போர்வைக்குள்ளேயே கதகதப்பாகச் சுருண்டுகொள்ளலாமே என்கிற ஏக்கத்தைச் சிரமப்பட்டு ஒதுக்கிவிட்டுப் புறப்பட்டோம்.

அன்று நாங்கள் சென்றது Jeita Grotto என்ற இடம். Grotto என்றால் குகை என்று பொருள். Jeita என்பதற்கு பண்டைய அராமிக் மொழியில் ‘உறுமல்’ என்று பொருளாம். ஆனால், இந்தக் குகை என்னவோ வெகு அமைதியாகத்தான் இருக்கிறது. சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’யில் `மனிதனின் காலடிச்சுவடுபட்ட இடமெல்லாம் பாதைதானே!' என்றொரு வரி வரும். இவ்விடத்தைச் சென்றடைய மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளைப் பார்க்கையில் இந்த வரிதான் நினைவுக்கு வந்தது. மலைகளுக்கிடையே ஆழத்தில் செம்மண் கொழித்துக் கொண்டோடும் நதியின் மேலாக ரோப் காரில், அதன்பின் குட்டி ரயிலில், தேவையெனில் படகில் என்று விதவிதமாகப் பயணித்துச் சென்று பார்க்கும் அளவுக்கு அங்கே என்ன அதிசயம் இருக்கிறது?

தீரா உலா: மாரி மலை முழைஞ்சில்...

அங்கிருப்பவை மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பதிலேயே மிக நீண்ட குகைகள். இரண்டு தனித்தனிக் குகைகளை ஒன்றாக இணைத்தபடி நதியொன்று உள்ளூர ஓடிக்கொண்டிருக்கிறது. புவியின் புதிய ஏழு இயற்கை அதிசயங்களைப் பட்டியலிடுவதற்காக உலக அளவில் 2007 முதல் 2011 வரை நடைபெற்ற வாக்கெடுப்பில் இறுதிச்சுற்றுக்குத் தேர்வான 14 இயற்கை அதிசயங்களில் இந்த Jeita Grotto முதன்மையானதாக இருந்திருக்கிறது.

இந்த அற்புதக் குகை, பெய்ரூட் சுற்றுலாவின் அதிமுக்கிய அம்சம். ஆண்டொன்றுக்கு 28 லட்சம் சுற்றுலாப் பயணிகளை தன்பால் ஈர்க்கும் பெருமைகொண்டது. உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. இணையத்தில் படங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், அவையனைத்தும் கடலை, வரைபடத்தில் பார்க்கும் உணர்வைத்தான் தருகின்றன. புகைப்படத்துக்குத் தடை என்பதால் செல்போன்களைச் சுருட்டி வைத்துவிட்டு, பழங்கால முறையில் இயற்கையின் அழகை பேராசையோடு அள்ளிப் பருகி நினைவுகளின் கொள்ளளவு முழுக்க நிறைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

உள்ளே பாறைகள் வெப்பம் தாளாது உருகி வழிந்தாற்போன்றும், மெல்லிய துணி மடிப்புகள் போன்றும், அழகிய சிற்பக்காடு போன்றும் தோற்றமளிக்கின்றன. கற்கள் மேலிருந்து உருகி வழிகின்றனவா அல்லது கீழிருந்து மேல்நோக்கி வளர்கின்றனவா என்று கணிக்க முடியாத உருவமைப்பு.

இவையனைத்தும் பல்லாயிரம் வருடங் களாகத் தேங்கி வளர்ந்த கால்சியம் கார்பனேட் படிமங்கள் என்று பொட்டிலடித்தாற்போல அறிவியல் சொல்கிறது. ஆனால், குகையினுள்ளே மாயமாக இயங்கிக்கொண்டிருப்பது மேலிருந்து செதுக்கும் சிற்பியின் கரங்களா, கீழிருந்து வளர்த்தெடுக்கும் குயவனின் கரங்களா என்றே சிந்தை மயங்குகிறது.

`தொடாதீர்கள்’ என்று திரும்பிய பக்கமெல்லாம் எழுதிப் போட்டிருக்கிறார்கள். ஆனால், கற்களின் பளபளப்பும் வழவழப்பும் யாரும் பார்க்காதபோது ரகசியமாகத் தொட்டுப்பார்க்கத் தூண்டுகின்றன. இங்கிருந்து படகில் மற்றொரு குகைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே ஆக்ஸிஜன் மிகக் குறைவாக இருக்கும் என்று கேள்விப்பட்டதால் நாங்கள் போகவில்லை.

அம்மு Jeita Grotto-வை மகிழ்ந்து கொண்டாடினாள். குகையினுள் நுழைந்து நீண்ட பாதையில் மங்கிய விளக்கொளியில் நடந்துகொண்டிருக்கையில், `அம்மா நாம எங்கே இருக்கோம்? மலைப்பாம்பு வயித்துக்குள்ள நடக்கிறோமா?' என்றாள்!

அரை நாளை அங்கே கழித்துவிட்டு மதிய உணவுக்கு லெபனீய உணவகத்தைத் தஞ்சமடைந்தோம். எங்கள் இளவரசிக்கு மட்டும் ரசம் சாதம். `லெபனானில் ரசம் சாதமா' என்று வியக்காதீர்கள். நான்தான் ஏற்கெனவே சொன்னேனில்லையா... புகுந்த வீட்டில் என் அப்பாவும் அம்மாவும் உலகம் சுற்றுவதில் தேர்ந்தவர்கள் என்று. அவர்கள் அறிவுரையின்பேரில், குட்டியாக ஒரு ரைஸ் குக்கர், ஒரு கிலோ அரிசி, கொஞ்சம் புளி, ரசப்பொடி, உப்பு, தக்காளி, பூண்டு, ஓரிரு பாத்திரங்கள், கரண்டி என எல்லாமும் எடுத்துவந்திருந்தேன். அவர்கள் ரைஸ் குக்கர் இல்லாமல் பயணம் போவதே இல்லை. தாய்லாந்து சென்றிருந்தபோது வழியெல்லாம் தேளும் பாம்பும் தவளைகளுமாகப் பொரித்து வைத்திருந்ததைப் பார்த்து குமட்டிக்கொண்டு வந்ததில், எல்லா நாள்களும் ஹோட்டல் அறையின் ஒரு பகுதியையே கிச்சனாக மாற்றி சமைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். பாரீஸில் ஊர் சுற்றப் போன இடத்தில் சல்லிசாக மீன் கிடைக்க, வாங்கி வந்து ஹோட்டலிலேயே மீன் குழம்பு வைத்து, வாசம் மூக்கைத் துளைத்ததில் அக்கம்பக்கத்து அறைக்காரர்களும் வந்து விசாரித்துப்போனார்களாம்.

மாமியார் எவ்வழி மருமகளும் அவ்வழி என்று நானும் சில வருடங்களுக்கு இப்படித் தான் ஊர் சுற்றிக்கொண்டிருந்தேன். இப்போது பிள்ளைகள் குவைத்துக்குள்ளேயே எல்லா நாட்டு உணவுகளையும் விரும்பிச் சாப்பிடப் பழகிவிட்டதால் பெட்டிச்சுமை வெகுவாக குறைந்துவிட்டது.

ஆரோக்கியமாக வளர்க்கிறேன் பேர்வழி என்று பீட்சாவையும் பர்கரையும் மூன்று வயது வரை கண்ணிலேயே காட்டாமல் வைத்திருந்ததில் அம்மு சாண்ட்விச், சாஸேஜ், பீட்சா, பர்கர் என்று எதையும் தொடாமல் வரப்பட்டினி கிடந்தாள். அதனால் ஹோட்டல் அறையிலேயே சாதம், தக்காளி ரசம் வைத்தேன். கைவசம் பருப்புப் பொடியும் நெய்யும் இருந்தது. சுடு சாதம் - பருப்புப் பொடி + நெய், ரசம் சாதம் - சிப்ஸ்- கோங்குரா ஊறுகாய் என்று தினமும் திவ்வியமாகச் சாப்பிட்டு தினமும் `தமிழேண்டா’ என்று பெருமைப்பட்டுக்கொண்டோம்.

அடுத்து நாங்கள் சென்ற இடம் Harissa. பெய்ரூட்டில் சுற்றுலாப் பயணிகளுக்காக Jeita Grotto - Harissa - Byblos ஆகிய மூன்றையும் ஒரே நாளில் பார்க்கும்படியாக ஒருநாள் பேக்கேஜ்ஜாக வைத்து 100 டாலர்கள் வசூலிக்கிறார்கள்.

Harissa ஒரு மலைக்கிராமம். கடல் மட்டத்திலிருந்து 650 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இவ்விடத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றும் 15 டன் எடை கொண்ட அன்னை மேரியின் 27 அடி உயர வெண்கலச் சிலையும் இருக்கின்றன. 1908-ல் அமைக்கப்பட்ட சிலையாம். Lady of Lebanon என்று அழைக்கிறார்கள். நிறைய ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வெகு சிரமப்பட்டு படியேறி சிலையை அடைந்து அங்கிருந்து கீழே ஊரையும் மேலே அன்னையையும் இடையில் தங்களையும் புகைப்படம் எடுக்கிறார்கள். நான் கீழே நின்றபடி மேரியின் விரிந்த கரங்களில் தெரிவது கருணையா, கையறு நிலையா என்று யோசித்துக்கொண் டிருந்தேன். அம்மு நசநசக்க ஆரம்பிக்கவும் சர்ச்சுக்குள் போகாமலேயே திரும்பிவிட்டோம்.

கடற்கரை அருகிலிருந்து புறப்படும் ரோப் கார், மலை உச்சியை அடைகையில் திரும்பி கீழே பார்த்தால் ஒரே நேரத்தில் திகைப்பாகவும் திகிலாகவும் இருக்கிறது. சித்துவுக்கு ஆழத்தைப் பார்ப்பதென்றால் பயம். `என்னைப் பார்த்து சிரிக்கக் கூடாது' என்ற நிபந்தனையோடு கண்களை இறுக்கி மூடிக் கொண்டார். பின்னாளில் பார்த்துச் சிரிக்கவும், அவ்வப்போது அவரை ப்ளாக் மெயில் செய்யவும் உதவும் என்று சித்துவின் பயந்த முகத்தைப் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன். `திரும்பி இதுலதான் கீழ போகணுமா? நான் மாட்டேன். பேசாம ஒரு டாக்ஸி புடிச்சி ரோடு வழியா கீழ போயிடலாம்' என்று புலம்பிக்கொண்டேயிருந்தார்.

நானோ மகா தைரியசாலி போல, `டாக்ஸில போனா சாயந்தரம் ஆய்டும் கீழ போக. அதெல்லாம் வேணாம். இதுல என்ன பயம்? தைரியமா இருங்கப்பா' என்று அட்வைசினேன். உண்மையில் கீழிறங்கும்போது எனக்குத்தான் பயத்தில் உயிரே போய்விட்டது. வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்கையில் பாதி வழியில் திடீரென எங்கள் பெட்டி நின்று விட்டது. மிரட்சியோடு, `ஏன் நின்னுடுச்சி? ஏன் நின்னுடுச்சி?' என்று இருவரும் மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருக்கையில் சித்து, `பின்னாடி ஒரு பெட்டி வேகமா வந்துட்டிருக்கு' என்றார். திரும்பிப்பார்த்தால் உண்மையாகவே பின்னால் ஒரு பெட்டி வேகமாக இறங்கி வந்துகொண்டிருக்க, எங்கள் பெட்டி நின்ற இடத்திலேயே முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டிருந்தது. `இங்கே கியரையோ, பிரேக்கையோ ஒண்ணுத்தையும் காணோமே! எப்படிடா தப்பிக்கிறது?' என மூளை ஆவேசமாக யோசித்தது. நல்லவேளையாக அப்போது என் முகத்தை யாரும் புகைப்படம் எடுக்கவில்லை.

எங்கள் பெட்டிக்கு சற்று அருகில் வந்து அதுவும் நின்றுவிட்ட பின்னரே கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. பின் சீராக அனைத்தும் கீழிறங்கின. கீழே இறங்க இறங்க கயிறு எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்றே புரியவில்லை. சர்ரென்று இறங்கி நேராக கடலில் போய் விழப்போவது போல ஒரு பிரமை தட்டியது. சித்துவுக்கு பயம் தெளிந்து விட்டதுபோல. வழியில் விதவிதமான அமைப்புகளில் கட்டப்பட்டிருந்த வீடுகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தார். ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்பின் முதல் இரண்டு தளங்கள் பள்ளத்திலிருக்க, இரண்டாவது தளத்தோடு சாலை இணைந்திருந்தது.

இப்போது யோசித்தால்... ஹரிஸ்ஸாவில் மிகப் பிடித்தது மலையழகு மிகுந்து நிற்கும் கிராமமோ, கருணை பெருகும் அன்னை மேரியின் சிலையோ, அங்கே தத்தித் திரிந்த குழந்தைகளோ அல்ல... ரோப் கார் நின்று கிளம்பியதற்கு இடைப்பட்ட திகில் நிமிடங்களே என்று தோன்றுகிறது!

வாருங்கள் ரசிப்போம்!