லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

தீரா உலா: போருக்குள்ளே நல்ல நாடு!

தீரா உலா
பிரீமியம் ஸ்டோரி
News
தீரா உலா

காயத்ரி சித்தார்த்

`தலையாலங்கானம்' என்ற இடத்தில் நடந்த போரில், பாண்டியன் நெடுஞ்செழியன் தன்னை எதிர்த்த ஐம்பெரும் வேளிர்கள், சேரர், சோழர் எனும் இருபெரும் வேந்தர்கள் உள்ளிட்ட ஏழு அரசர்களை தனி ஒருவனாக எதிர்த்துப்போரிட்டு வென்றதைக் கண்டு வியந்த இடைக்குன்றூர்கிழார் என்ற புலவர் நெடுஞ்செழியனுக்காக வாசிக்கும் பாராட்டுப் பத்திரம் இப்படித் தொடங்குகிறது...

‘ஒருவனை ஒருவன் தாக்க போரிடுவதும், அப்போது ஒருவனோ, இருவருமோ இறந்துபோவதும் இயல்புதான். ஆனால், ஒருவன் ஏழு பேரைத் தாக்கி அழித்தல் புதுமையானது. அதை இன்று கண்டேன். இத்தகைய பெருவீரத்தை இதற்கு முன்பு நான் கண்டதில்லை’ என்று வரலாற்றின் முன் நின்று சாட்சி கூறுகிறார்.

ஒருவனும் ஒருவனுமாகத் தாக்கிக்கொள்வதை நாம் போர் என்று சொல்வதில்லை. அந்த ஒருவனின் பின்னால் ஒரு நாடும் அவனை நம்பி வாழும் பல்லாயிரம் உயிர்களும் இருந்து, அவ்வாறு நம்பியிருந்ததாலேயே அவர்கள் அனைவரும் ஊரை இழந்து, உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்து, கொத்துக்கொத்தாக மாள்வதையே ‘போர்’ என்கிறோம். அதை `வீரம்' என்றும் `வெற்றி' என்றும் `வெந்திறல் வாகை' என்றும் மகிழ்ந்து கொண்டாடுகிறோம். நம் தமிழ் இலக்கிய மரபில் இந்த உவகைக்கென்றே பெரும் பரப்பை ஒதுக்கியிருக்கிறோம். நாம் மட்டும்தான் என்றில்லை... உலகம் முழுவதும் அரசர்களும் அரசும் இருக்குமிடமெல்லாம் போர்ப்பரணிகள் பாடப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. மேலைநாடுகளில் போர்க்கவிதைகளை நர்சரி குழந்தைகள் ரைம்ஸாகப் பாடுகிறார்கள். போரில் பங்கேற்க முடியாத கவிஞர்களும் எழுத்தாளர்களும் அதை இலக்கியமாக வடித்துவைக்கிறார்கள்.

தீரா உலா
தீரா உலா

பிரபல ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ நாவலைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் பேசுகையில், `அதில் உள்ளது வாழ்வின் ஒரு பெரும் அலை. வரலாற்றின் ஒரு சுழிப்பு. நெப்போலியன் ருஷ்யாவைத் தாக்கி வென்று, பிறகு தோற்கடிக்கப்பட்டு மீள்கிறான். அந்த ஒரு சுழிப்பில் எத்தனை எத்தனை மனித வாழ்வுகள் சுழற்றியடிக்கப்படுகின்றன, உறவுகளும் பிரிவுகளும் நிகழ்கின்றன, அழிவும் ஆக்கமும் ஒன்றை ஒன்று பூரணப்படுத்திக் கொள்கின்றன என்று காட்டுகிறார் தல்ஸ்தோய்' என்கிறார்.

ஒருவனை ஒருவர் அடுதலும், தொலைதலும் புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை.
- இடைக்குன்றூர்கிழார் - 76, புறநானூறு

ஆனால், அழிவு பூரணத்துவம் அடையும் இடத்தில் ஆக்கம் தொடங்குவது அத்தனை எளிதான விஷயமாக இருப்பதில்லை. இராக்கில் போர்களின் கோரத்தாண்டவங்களைக் கண்ணால் கண்டிருந்த 14 வயது சிறுமியான சாரா அல் தஹ்வானி,

A Bullet is a metal seed

A single one can grow

(தோட்டா என்பது ஒரு உலோக விதை. ஒன்றுபோதும் முளைத்துப் பெருக) என்று தன் கவிதையில் சொல்கிறாள்.

1945-ல் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டிஷ் மக்களுக்கு ஆற்றிய வெற்றி உரையில் இவ்வாறு சொன்னார்... `நம்முடைய போராட்டங்கள், தொல்லைகள் அனைத்தும் ஓய்ந்தன என்று இன்றிரவு உங்களிடம் சொல்லமுடிந்தால் பரவாயில்லையே என்று ஆசையாக இருந்தேன். மாபெரும் கொள்கைகளுக்காக மனத்தாலும் உடலாலும் செய்யப்படும் மென்மேலுமான முயற்சிகளுக்கும் இன்னும் அதிக தியாகங்களுக்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று நான் உங்களை எச்சரிக்க வேண்டியிருக்கிறது...'

தீரா உலா
தீரா உலா

மன்னர்களின் ‘மாபெரும் கொள்கை களுக்காக’, அரசியல் கோபங்களுக்காக, பெரும் பேராசைகளுக்காக மனத்தாலும் உடலாலும் இன்னும் அதிக தியாகங்களைச் செய்பவர்கள் மக்களாகத்தான் இருக்கிறார்கள். லெபனான் அன்றும் இன்றும் போர்களுக்குள்ளேயே வாழப் பழகிக்கொண்ட தேசமாகத்தான் இருந்து வருகிறது.

பார்த்ததும் சிநேகத்துடன் புன்னகைக்காத ஓர் ஆளைக்கூட பெய்ரூட்டில் நாங்கள் காணவில்லை.

பெய்ரூட்டில் 1975 முதல் 1990 வரை 15 ஆண்டுகள் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இதன் விளைவாக 1,20,000 பேர் உயிரிழந்தனர். சுமார் 76,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். போரின் விளைவாக லெபனானிலிருந்து அப்போது மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சம் மக்கள் வெளியேறியிருக்கின்றனர்.

`பெய்ரூட்டில் போருக்குப் பின்னர் நகரின் மையத்திலிருந்த கட்டடங்கள் அனைத்தும் குண்டுகளுக்கு இரையாயின. மக்கள் யாருமே நகரின் மற்ற பகுதிக்குச் செல்ல முடியவில்லை. பெய்ரூட்டின் தெருக்களில், வீடுகளில், மருத்துவமனைகளில், மசூதிகளில், தேவாலயங்களில், வணிக வளாகங்களில், திரையரங்குகளில், மார்க்கெட்டுகளில், நீச்சல் குளங்களில், பல்கலைக்கழக வளாகங்களில், கடற்கரையில் என்று எங்கு பார்த்தாலும் கார் வெடிகுண்டுகள் வெடித்தன. கடத்தப்பட்ட விமானத்தின் பயணிகளைப் போல பெய்ரூட் நகரவாசிகள் 15 ஆண்டுகள் வாழ்ந்தனர்' என்கிறார் சாருநிவேதிதா.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் லெபனானில் தஞ்சமடைந்ததால், 1982-ல் லெபனான்மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இப்போர் கி.பி 2000 வரை இடைப்பட்ட ஆண்டுகளில் நின்றும் தொடங்கியும் தொடர் அழிவுகளை நிகழ்த்திக் கொண்டே இருந்திருக்கிறது.

தீரா உலா
தீரா உலா

2006-ல் மீண்டும் இரண்டாம் முறையாக இஸ்ரேல் - லெபனான் போர் தொடங்கி 34 நாள்கள் உயிர்களைக் குடித்து ஐ.நா-வின் தலையீட்டினால் முடிவுக்கு வந்திருக்கிறது. அதற்குப் பின்பாகவும் அங்கே பூரண அமைதி நிலவி விடவில்லை.

2013 பிப்ரவரியில் நாங்கள் சென்று திரும்பியதன் மறு மாதமே சிரியா லெபனானைத் தாக்கியது. சிரியாவுடனான பிரச்னை இன்றளவும் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், கடன் சுமை தாளாத லெபனான் அரசு அதைக் குடிமக்களின் மீது வரியாகச் சுமத்தியிருக்கிறது. வாட்ஸ்அப்பில் வீடியோ கால் பேசுவதற்கும்கூட வரி விதிக்கப்பட்டு, பின் மக்களின் போராட்டத்தால் அவ்வரிவிதிப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

அதிக வரிவிதிப்பு, பொருளாதாரச் சீர்குலைவு, வேலையில்லாத் திண்டாட்டம், கடும் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மோசமான நிர்வாகம், மக்களுக்கெதிரான அரசின் சட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்து லெபனான் உள்ளூர்வாசிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2019 அக்டோபர் 21 அன்று வெடித்த இந்தப் போராட்டத்தில் போலீஸாருடனான மோதலில் ஏராளமானோர் காயமடைந் துள்ளனர். நிலைமையைச் சமாளிக்க முடியாமல் 2019 டிசம்பர் மாதம் லெபனான் பிரதமர் ஷாத் அல் ஹரிரி ராஜினாமா செய்திருக்கிறார். எனினும், அவர்களைச் சூழ்ந்திருக்கும் சிக்கல்கள் அத்தனை எளிதில் விடுவிக்கப்படக் கூடியவையாக இல்லை.

நாங்கள் பார்த்தபோது, ஓயாத கடலலைகளின் இரைச்சலுக்கு நடுவேயும் பெய்ரூட்டுக்கு அப்படியோர் அழகும் அமைதியும் வாய்த்திருந்தது. இத்தனை போர்களைச் சந்தித்த பின்னும், லெபனீய மக்கள் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் மென்மையும் இனிமையும் நிறைந்த மக்களாயிருந்தனர். பார்த்ததும் சிநேகத்துடன் புன்னகைக்காத ஓர்ஆளைக்கூட பெய்ரூட்டில் நாங்கள் காணவில்லை. 2019 அக்டோபர் மாதம் லெபனானிலிருந்து வெளியான வீடியோ ஒன்று இணைய தளங்களில் வைரலாகி பரவிக் கொண்டிருந்தது.

போராட்டம் தீவிரமடைந்து போக்குவரத்துகள் தடுக்கப் பட்டிருந்தபோது, வழியில் போராட்டக் கும்பலுக்கிடையே சிக்கிக்கொண்ட வாடகைக் காருக்குள் ஒரு தாயும் குழந்தையும் இருக்கின்றனர். ஒன்றரை வயதான அந்தக் குழந்தை வெளியில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களையும், கூச்சல் குழப்பங்களையும் பார்த்து மிரளுகிறான். உடனே அந்தத் தாய் ஜன்னல் கண்ணாடியைக் கீழிறக்கி, `அதிக சத்தத்தால் குழந்தை பயப்படுகிறான்' என்று தெரிவிக்கிறாள். உடனே போராட்டக்காரர்கள் தங்களது கோஷங்களை நிறுத்திவிட்டு குழந்தைக்காக `பேபி ஷார்க் டுட்டுட்டூ' என்ற ரைம்ஸைப் பாடிக்கொண்டு ஆட ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் கரகோஷமும் மகிழ்ச்சியும் அங்கே அலையெனப் பரவுகிறது. அந்தக் காணொலியைப் பார்க்கும் நம்மையும் அம்மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது!

`லெபனானின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க வேண்டும். ராபின் வளர்ந்த பின்னர் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். லெபனானின் போராட்டக்காரர்கள் அவனுக்காகவும் போராடினார்கள் என அவனுக்குத் தெரிய வேண்டும்' என்கிறார் அந்த அன்னை.

குழந்தைகளுக்காகவே யுத்தம் செய்தோம்

யுத்தத்தைத் தவிர ஏதுமறியாக் குழந்தைகள்

திரும்ப வேண்டுமென காத்திருக்கிறது இப்பூமி.

- ஈழக்கவிஞர் தீபச்செல்வனின் கவிதை போர்களின் பயங்கரங்களுக்கு நடுவே வாழப் பழகிக்கொண்ட அனைத்து நாடுகளின் மக்களுக்கும் பொருந்திப் போகிறது.

லெபனான் மக்கள் எப்போதும் அன்பான வர்களாக இருக்கிறார்கள். ஏனெனில், இழந்தவர்களுக்குத்தானே, இருப்பதன் அருமை புரியும்.

வாருங்கள் ரசிப்போம்!