
காயத்ரி சித்தார்த்
அன்று பிப்ரவரி 25. சித்துவின் பிறந்தநாள். லெபனானில் சித்துவுக்குத் தெரியாமல் சர்ப்ரைஸாக கேக் வாங்க வேண்டுமே என குவைத்திலிருந்து கிளம்பும் முன்பிருந்தே யோசித்துக் கொண்டிருந்தேன்.
சகல நேரமும் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருக்கையில் அவருக்குத் தெரியாமல் எப்படி, எங்கே வாங்குவதென்று மகா குழப்பம். எப்படியும் ஹோட்டலைச் சார்ந்த ரெஸ்டாரன்ட்டின் மெனுவில் இருக்கும் என்ற நம்பிக்கையில் சென்றிருந்தேன்.
மெனுவில் டெசர்ட் அயிட்டங்களையே காணோம். சித்துவும் அம்முவும் தூங்கியபின், நள்ளிரவு ஒன்றரை மணிக்கு எழுந்து ஆன்லைனில் ஆர்டர் செய்துவிடலாம் என்று தேடத் தொடங்கினேன். அதிலும் சிரமம். எங்களிடம் கிரெடிட் கார்டு இல்லை. விடிகாலை 3:30 மணி வரை தேடி உருப்படியாக ஒரு வெப்சைட்டைக் கண்டுபிடித்து தம்பிக்கு மெயிலில் அனுப்பினேன். அவன் கிரெடிட் கார்டு மூலமாக ஆர்டர் செய்து கொடுத்ததில் ஐந்து மணி நேரத்தில் கேக் வந்துவிட்டது. சித்துவேதான் வாங்கினார். கொண்டுவந்த அரபி ஆள், `நீ டான்னே ஏங்க்ள் போன் வசெண்டம்' (நீ தானே எங்கள் பொன் வசந்தம்!) என்று நான் அனுப்பியிருந்த மெசேஜைப் படித்துக்காட்டினாராம். `ஒரு அரபியையே தமிழ் பேச வெச்சுட்டியே!' என்று சிரித்தார் சித்து.
`பூமி வானத்தில் எழுதும் கவிதையே மரங்கள். ஆனால், அவற்றை நாம் வெட்டிச் சாய்த்து காகிதமாக்கி, நம் வெறுமையை அதில் எழுதித் தீர்க்கிறோம்.'- கலீல் ஜிப்ரான்
இரவு எல்லாரும் தூங்கியபின் சாதம் சமைத்த ரைஸ் குக்கரைக் கழுவி, அதிலேயே பால் காய்ச்சி (பால், எலுமிச்சை, சர்க்கரை அங்கே மளிகைக் கடையில் வாங்கியது) பனீர் செய்து, அதிலேயே சிரப் காய்ச்சி பனீரை வேகவிட்டு எடுத்து மீண்டும் பாலை சுண்டக்காய்ச்சி தட்டை ரசகுல்லாக்களைப்போட்டு ரசமலாய் ஆக்கி வைத்தேன். காலையில் சித்துவுக்கு நிஜமாகவே ஸ்வீட் சர்ப்ரைஸ்!

லெபனான் போவதென்று முடிவானபோதே எதைப் பார்க்கிறோமோ இல்லையோ... கலீல் ஜிப்ரான் பிறந்த ஊரையும் அவர் வீடு மற்றும் மியூசியத்தையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை பிறந்தது. அதை நிறைவேற்றாமல் திரும்பி வந்தது ஏமாற்றம்தான். என்றாலும் இன்னொரு முறை லெபனான் செல்வதற்கான காரணம் ஒன்றையும் கொண்டுவந்திருக்கிறோம் என்று ஆறுதல்பட்டுக்கொண்டோம்.
ஜிப்ரான் பிறந்த ஊரின் பெயர் Bsharri. நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து வடக்கில் 130 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. ஹோட்டலின் டிராவல் டெஸ்க்கில், மலைக்கிராமம் என்பதால் அந்த ஊரை அடைய மூன்று மணி நேரமாகும் என்றும் குளிர் நான்கு டிகிரிக்குக் குறைவாக இருக்கும் என்றும் சொன்னார்கள். ஏற்கெனவே எனக்கு சைனஸ் தொந்தரவும், சித்துவுக்கு தொடர் இருமலும் இருந்ததால், ரிஸ்க் எடுக்க பயமாக இருந்தது. ஜிப்ரானைப் பார்ப்பதற்கு எந்த அளவுக்கு ஆசைப்பட்டோமோ, அதே அளவுக்கு வாழ்நாளில் முதன்முறையாகப் பனிபடர்ந்த சிகரங்களை நேரில் பார்க்கவும் ஆசைப்பட்டோம். இரண்டுமே இந்தப் பயணத்தில் வாய்க்கப்போவதில்லை என்பது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. வாடியிருந்த என் முகத்தைப் பார்த்துவிட்டு இலுப்பைப்பூ ஆப்ஷனாக, `அதற்குப் பதிலாக நீங்கள் Barouk Cedar போகலாம். ஒரு மணி நேரம்தான் ஆகும். அங்கும் பனி மலைகள் இருக்கின்றன. அத்தனை குளிர் இருக்காது' என்றார்கள்.

கேக் வெட்டி ஹோட்டலில் அனைவருக்கும் கொடுத்தபின் `பாரூக் செடார்' கிளம்பினோம். கிளம்பி 10 நிமிடத்துக்குள்ளாகவே நான் ஆர்வக்கோளாறு காரணமாக, `பனி இருக்கு மில்ல... ஐஸைத் தொடற அளவுக்கு அருகில் போக முடியுமா... ரொம்ம்ம்ம்ப குளிருமோ... பாப்பாவுக்குக் கைக்கு க்ளவுஸ் எடுக்காம வந்துட்டோமே... என்னோட க்ளவுஸை போட்டுவிட்டுடட்டுமா... உங்களுக்கு இருமல் ஜாஸ்தியாய்ட்டா என்ன செய்யறது... நான் ஷூ போடாம வந்துட்டனே... எப்படி பனியில கால் வெக்கறது...' என்றெல்லாம் பிதற்றிக்கொண்டே வந்தேன். என் தொணதொணப்பு தாங்காமல் சித்து, `அங்கே பனி இருக்குமில்லையா?' என்று டிரைவரிடம் விசாரித்தார். அந்த இளைஞன் ரொம்பவும் சிரத்தையாக `பனி இருக்காது... வின்ட்டர் முடிஞ்சு ஸ்பிரிங் வந்துடுச்சே?' என்றான். நான் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் வாயடைத்து, அடுத்த நிமிடம் சித்துவை முறைத்து, அதற்கடுத்த நிமிடம் `பனியில்லாம அங்கே போய் என்ன பண்றதாம்?' என்று தொடங்கி அடுத்த பிதற்றலை ஆரம்பித்தேன். நான் புலம்பிய புலம்பலில் அவனுக்கே தமிழ் புரிந்ததோ என்னவோ... யார் யாருக்கோ அலைபேசி `அங்கே பனி இருக்கிறதா...' என்று விசாரித்துக்கொண்டிருந்தான். கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்து, `பனி இருக்கிறதாம்' என்று அவன் சொன்ன பிறகே என் நெற்றிச் சுருக்கம் சீரானது.
எழில் (Beauty) என்பது கண்ணாடியில் தன்னையே நோக்கிக் கொள்ளும் முடிவின்மை (Eternity) !- கலீல் ஜிப்ரான்
பாதி மலையேறும்போது பனி படர்ந்த சிகரங்கள் தென்பட்டன. `அதோ.. ஸ்நோ இருக்குப்பா... ஹைய்யோ எவ்ளோ அழகா இருக்கு...' என்று ஆரம்பித்த வேகத்திலேயே `அவ்வ்வ்வ்வ்வ்ளோ தூரத்துல இருக்கே... அங்கே எப்படி நாம போக முடியும்... கீழ நின்னு `இதான் பனி மலை'னு காட்டப்போறான் போலிருக்கு' என்று திரும்பவும் சுருதி குறைந்துவிட்டது.

அத்தனை உயரம் ஏறவே முடியாதென்று சர்வ நிச்சயமாக நான் நம்பிக்கொண்டிருக்கையில் கார் பாதையினூடே வளைந்து வளைந்து மேலே ஏறிக்கொண்டே இருந்தது. திடீரென்று பாதையின் ஒருபக்கம் முழுவதிலும் மலையின் பக்கவாட்டுப் பகுதிகளில் பனி கொட்டிக் கிடந்தது. குழந்தை தூங்கிக்கொண்டிருந்தாள். `கண்ணு இங்க பாருடா... எவ்ளோ ஐஸ் பாரு...' எனது உற்சாகக் கூச்சலில் கண் விழித்தவள் நொடியில் பந்து போல துள்ளிக் குதிக்கத் தொடங்கிவிட்டாள். எங்கள் மூவரைத் தவிர்த்து வேற்று மனிதன் ஒருவன் இருக்கிறான் என்ற நினைப்பே வரவில்லை. கீழே இறங்கி நானும் அம்முவும் குதித்துக் குதித்துப் பனியை அள்ளி வீசி ஆனந்தமாக விளையாடினோம். பனியில் கால் புதைய நின்று கைகள் இரண்டையும் அகல விரித்து, `சித்தூஊஊஊ நான் உன்னைக் காதலிக்கிறேஏஏஏன்' என்று உரக்கக் கத்தி காலடியில் பனி உருகியதில் சறுக்கிக் கீழே விழ இருந்தேன். தமிழறியாத அந்த இளைஞன் ஒன்றும் புரியாவிட்டாலும் மகிழ்ச்சியாகச் சிரித்தான். எத்தனை விளையாடியும் அம்மு வுக்குச் சலிக்கவேயில்லை. கிளம்பும்போது வர மாட்டேனென்று கைகால்களை உதைத்துக் கொண்டு கத்தியவளைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு வந்தோம்.

அங்கிருந்து மேலும் 15 நிமிடங்கள் கார் மேலே ஏறியது. இன்னும் மேலே... இன்னும் மேலே என்று வானத்தையே தொட்டு விடுவோமோ என்றிருந்தது. இத்தனை உயரத்துக்குப் பாதை இருக்கும் என்று நான் நினைத்திருக்கவே இல்லை. அதற்கு மேலும்கூட பாதையும் பனியில் காலடித் தடங்களும் இருந்தன. நாங்கள் கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 6,000 அடி உயரத்தில் இருந்தோம். மீண்டும் கார் நின்ற இடத்தில் செடார் மரங்கள் அடங்கிய வனம் ஒன்று இருந்தது.

செடார் மரம் லெபனானின் தேசியச் சின்னம். அவர்களின் தேசியக் கொடியிலும் இதுவே இடம்பெற்றிருக்கிறது. 130 அடி உயரம் 8 அடி அகலம் வரையிலும் வளரக்கூடிய ஊசியிலைத் தாவரம். 600 வருடப் பழைமையான செடார் மரங்களை இங்கே பாதுகாத்து வருகின்றனர். கலீல் ஜிப்ரானின் கவிதைகளில் இந்த செடார் மரங்கள் எப்போதும் இருக்கின்றன.
`பூமி வானத்தில் எழுதும் கவிதையே மரங்கள். ஆனால், அவற்றை நாம் வெட்டிச் சாய்த்து காகிதமாக்கி, நம் வெறுமையை அதில் எழுதித் தீர்க்கிறோம்.'
குளிரும் வெயிலும் இதமாகப் பரவி சூழலை சொர்க்கமாக்கிக் கொண்டிருந்தன.மலை உச்சியிலிருந்து கீழே பள்ளத்தாக்கைப் பார்க்கும்போதும் நிமிர்ந்து இன்னமும் எட்டாத் தொலைவிலிருக்கும் ஆகாயத்தைப் பார்க்கும் போதும் அடிவயிற்றிலிருந்து எழும்பிய வெப்ப உணர்வை எப்படி மொழிபெயர்ப்பதென்று தெரியவில்லை.
`மலைத்தொடருக்கு முன்னால் நின்று முணுமுணுத்துக் கொண்டேன் நான் நான் என்று'
- ஜெமோவின் வாசகம் நினைவுக்கு வந்தது. இத்தனை நாட்களாக அந்த `நான் நான்'-ல் சிறுமையை மட்டுமே உணர்ந்திருக்கிறேன். மலைத்தொடருக்கு முன்னால் நிற்காமல் அதன் உச்சியில் நின்று இதே வாசகத்தை முணு முணுத்தால் அந்த `நான் நான்'-ல் சிறுமைக்குப் பதிலாக கர்வம் ஒலிக்கிறது. `தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை சங்கரா யார்கொலோ சதுரர்?' என்ற மணிவாசகரின் கர்வம்.

`என் 34-வது வயதில் முதன்முறையாகப் பனிமலையைப் பார்க்கிறேன்' என்றார் சித்து. கேக்கை இங்கே கொண்டுவந்து வெட்டியிருக்கலாமே என்று சின்னதாக ஓர் ஆதங்கம் எழுந்தது.
இல்லாவிட்டாலும்கூட சித்து அதுவரை சந்தித்திராத அதி அற்புதமான பிறந்தநாளாகவே அந்நாள் அமைந்தது. வீட்டுக்குத் திரும்பிய பின்னால் அம்மு ஃப்ரீசரில் பனிக்கட்டிகள் செய்து தரச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தாள். அறை முழுக்க கொட்டி வைத்து பனிமலை செய்து விளையாடப் போகிறாளாம். குழந்தைகளுக்குத்தான் வாழ்க்கை எத்தனை எளிமை யானதாக இருக்கிறது!
வாருங்கள் ரசிப்போம்!