பிரீமியம் ஸ்டோரி

என் தோட்டத்தில் உட்கார்ந்திருந்த

பெயரறியாப் பறவையை

உனக்காக காகிதத்தில் பிடித்து வைக்க முயன்றேன்.

சொல்ல வந்ததற்கும் சொல்லில் வந்ததற்கும் நடுவில்

பறந்து போயிருந்தது பறவை!

- க.மோகனரங்கன்

இலங்கை வரலாற்றில் 60 ஆண்டுக் காலம் அமைதியும் செழிப்பும் நிறைந்த ஆட்சியை வழங்கியிருந்த மன்னர் மூத்த சிவன், தந்தைக்குப் பின் தலைமகனே அரசனாக வேண்டும் என்ற விதியை முதன்முறையாக முறித்து, தனது 10 புதல்வர்களில் திறமையானவன் என்று கருதப்பட்ட தீசன் என்பவனை அரசனாக அறிவித்து மறைந்தார்.

கி.மு 307-ல் இலங்கையின் அரசனாக தன்னை முடிசூட்டிக்கொண்ட தீசன், நாட்டில் விளைந்த விலையுயர்ந்த நவமணி களையும் முப்பெரும் மூங்கில்களையும் எண்வகை முத்துகளையும் அப்போது இந்தியாவில் இருந்த உயிர் நண்பனுக்குப் பரிசாக அனுப்பிவைத்தான். பரிசுகளை ஒப்படைப்பதற்காக பண்டைய இந்தியாவின் பாடலிபுத்திரத்துக்கு வந்த தூதுக்குழு, தீசனின் உயிர் நண்பரான மாமன்னர் அசோகரிடம் அவற்றைச் சமர்ப்பித்தது. மனமுவந்து பெற்றுக்கொண்ட அசோகர், தூதுக்குழுவினரை ஐந்து மாத காலம் சகல வசதிகளுடன் அரண்மனையில் தங்கவைத்து உபசரித்தார். அவர்கள் ஊருக்குத் திரும்பியபோது, தீசனுக்காக மகுடம், உடை வாள், தங்கப்பாதுகைகள், வெண்குடை, தலைப்பாகை, பொற்குடங்கள், சந்தனக் கட்டைகள், நாகர்களிடம் இருந்து பெற்ற ஆபரணங்கள், வாசனைத் தைலங்கள், செம்மண், கங்கை நதி நீர், அனோத்தை ஏரி நீர், மதிப்புமிக்க அம்பாரி, அரிய மூலிகைகள், பழங்கள், 160 மூட்டை மலையரிசி எனப் பல்வேறு பரிசுகளையும், ‘தேவ நம்பிய தீசன்’ (தேவனாம்ப்ய திஸ்ஸன்) என்னும் பட்டத்தையும் மெளரிய இளவரசி ஒருத்தியையும் அன்பளிப்பாகக் கொடுத்து, அதோடு தனது தனிப்பட்ட செய்தி அடங்கிய ஓலை ஒன்றையும் கொடுத்தனுப்பினார் அசோகர்.

 மிதக்கும் கோயில்
மிதக்கும் கோயில்

அதுவரை இந்துமத வழிபாடுகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்த தீசன், இந்த ஓலையாலும் அதைத் தொடர்ந்து, இலங்கைக்கு வந்த அசோகரின் புதல்வர் மகா தேரோ மஹிந்தரின் போதனைகளாலும் புத்த மதத்துக்கு மாறினான். நாடெங்கும் புத்த மகா விகாரைகள் எழுப்பப்பட்டன. இந்தியாவில் புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்திலிருந்து கிளை வெட்டப்பட்டு, இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுராதபுரத்தில் மேகவன வளாகத்துக்குள் நடப்பட்டது. அது செழித்து வளர்ந்த பின்னாக அதன் கிளைகள் நாடெங்கும் எட்டு இடங்களில் நடப்பட்டன.

அரசனைப் பின்பற்றி நாட்டு மக்களும் புத்த மதத்தைத் தழுவ, தமிழகத்தில் ஊருக்கு நான்கு பிள்ளையார் கோயில் இருப்பதுபோல இலங்கையில் பார்க்குமிடமெல்லாம் புத்தர் சிலைகள் நிறைந்தன. அதன்பின் ஏறத்தாழ 2200 ஆண்டுகள் கழித்து, கி.பி 2016-ம் ஆண்டு, இலங்கையின் புத்த மகா விகாரைகளையும், நின்ற / இருந்த / கிடந்த கோலங்களில் அருள்பாலிக்கும் புத்தர் சிலைகளையும், புத்தரின் புனிதப்பல் வைக்கப்பட்டிருக்கும் கோயிலையும், கி.மு 249-ல் நடப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வரும் போதி மரத்தையும் காணவிரும்பி, வளைகுடா நாடான குவைத்திலிருந்து கிளம்பிச் சென்ற தமிழ்க் குடும்பத்தின் இல்லத்தரசி, பயண தூரம், அலைச்சல், பிள்ளைகளின் உடல்நிலை, நச்சரிப்பு, நேரப்பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால் அலைக்கழிக்கப்பட்டு அவை எதையும் காணவியலாமல் பயணத்தின் இறுதிக் கட்டத்தில், கொழும்பிலிருக்கும்

120 ஆண்டுகள் பழைமையான கங்க ராமையா புத்தர் கோயிலை கண்ணாரக்கண்டு மனதார வழிபட்டுத் திரும்பினாள் என்பது வரலாறு.

 உணவகமாக மாற்றப்பட்ட 
1677-ல் கட்டப்பட்ட மருத்துவமனை
உணவகமாக மாற்றப்பட்ட 1677-ல் கட்டப்பட்ட மருத்துவமனை

அந்தக் குடும்பம் அக்கோயிலுக்குச் செல்வதற்கு முந்தைய நாள் மிரிஸ்ஸவில் திமிங்கிலம் பார்ப்பதற்கென நடுக்கடல் வரை சென்று மரண பீதியில் உயிரைக் கையில் பிடித்தபடி ஏமாந்து திரும்பியதைச் சென்ற அத்தியாயத்தில் வாசித்திருப்பீர்கள். அங்கிருந்து அவர்கள் கொழும்பு சென்ற கதையைத்தான் இப்போது சொல்லவிருக்கிறேன்.

கடலிலிருந்து மதியம் 2 மணியளவில் துறைமுகக் கரைக்குத் திரும்பிய பின்னாக, தலைவலி உடல்வலியோடு சோர்வில் துவண்டுபோய் ஆட்டோவில் ஏறி அறைக்குப் போய்க்கொண்டிருந்தோம். இலங்கையில் ஆட்டோவை ‘டுக் டுக்’ என்றழைக்கிறார்கள். அந்த டுக் டுக் ஓட்டுநர் பரிந்துரையின் பேரில், வழியில் ஓர் உணவகத்தில் மதிய உணவு பார்சல் வாங்கினோம். வெளியே கண்ணாடிக் கதவில் Fish Curry Meals என்று ஒட்டப்பட்டிருந்த படம் கண்ணைப் பறித்தது.

புகைப்படத்தில் பெரிய தட்டின் நடுவே சோறும், சுற்றிலும் ஆறேழு கிண்ணங்களில் மீன் குழம்பும், பொரியல், சம்பல் போன்ற தொடுகறிகளும், வறுத்த முழு மீனும் அப்பளமும் வைக்கப்பட்டிருந்தன. இரண்டு மீன் சாப்பாடு பார்சல் சொல்லிவிட்டு சர்க்கரையும் உப்பும் சேர்த்த லெமன் ஜூஸ் வாங்கிக் குடித்தோம் (மருத்துவக்குறிப்பு: வாந்தி, மயக்கம், பயணக்களைப்பு, மலைப்பாதையில் பயணம் ஆகியவற்றால் அவதிப்படுபவர்கள் லெமன் ஜூஸ் அருந்துங்கள். சோர்வுற்ற உடலுக்கு எலுமிச்சைச்சாறு ஒரு மந்திரபானம் போல சக்தியூட்டும்.).

ஜூஸ் குடித்த பின்பு, தலைவலியால் சுருங்கியிருந்த என் கண்களுக்குள் புத்தொளி பாய்ந்து காட்சிகள் தெளிவாகத் தொடங்கின. பார்சல் வாங்கிக்கொண்டு அவசரமாக அறைக்குத் திரும்பினோம். பக்கவாட்டில் சிறிய தோட்டம் போன்ற பகுதியில் மேஜை நாற்காலிகள் இருந்ததால், அங்கே அமர்ந்து உணவுப் பொட்டலங்களைப் பிரித்தோம். முதலில் பையைத் திறக்கும்போதே சந்தேகம் வந்தது. “இதென்னப்பா.. பெருசா ரெண்டு பார்சல்தான் இருக்கு? குழம்பு, பொரியல் எல்லாம் எதுல இருக்கு?” என்றபடியே செய்தித்தாளில் கட்டப்பட்ட பொட்டலத்தைப் பிரித்தால், மகா அதிர்ச்சியாக இருந்தது. பொட்டலத்தின் நடுவே சோறும் அதற்குள்ளேயே குழம்பு, பொரியல், கூட்டு வகைகள், குழம்பு மீன், வறுத்த மீன் என்று எல்லாமும் இருந்தது. அந்த சோற்றுக் குவியலை எங்கே தொடங்கி எங்கே முடிப்பதென்றே தெரியவில்லை. `குழம்புல உப்பு கம்மி, பொரியல் கொஞ்சம் காரம்' என்றெல்லாம் பிரித்துச் சொல்ல வாய்ப்பின்றி மொத்த சாப்பாடும் ஒரே சுவையில் இருந்தது அதன் தனிச்சிறப்பு.

புத்தரின் கண்களுக்கு 
மை தீட்டும் அம்மு...  - அம்மா அந்த ரயில் பொம்மை வேணும்...
புத்தரின் கண்களுக்கு மை தீட்டும் அம்மு... - அம்மா அந்த ரயில் பொம்மை வேணும்...

நல்லவேளையாக அந்த முழுச் சாப்பாட்டில் நம்மூர் போல, பாயசம் கிடையாது என்பதால் மொத்த சோறும் இனித்துக் கிடக்கும் அபாயத்திலிருந்து தப்பித்தோம்.

இரவுக்குள்ளாக கொழும்பு சென்று சேர வேண்டும். இடையில் 150 கிலோமீட்டரும் அவசியம் பார்க்கவேண்டிய புகழ்பெற்ற காலெ (Galle) கோட்டையும் இருந்தன. இது, கி.பி 1588-ல் போர்ச்சுக்கீசியர்களால் கடற்கரையோரம் கட்டப்பட்ட வலுவான கற்கோட்டை. நாங்கள் சென்றடைந்தபோது மாலை மயங்கி நின்றது. கோட்டையைச் சுற்றியிருந்த தென்னை மரங்களும், வானுயர்ந்து நிற்கும் கலங்கரை விளக்கமும், அலை வீசும் கடலும், கடல் வீசும் காற்றும், மதில் சுவரிலிருந்து காணக் கிடைத்த, அதுவரை வாழ்நாளில் கண்டிராத கோலாகல சூரிய அஸ்தமனமும், சற்றுத்தொலைவில் தெரிந்த பிரசித்திபெற்ற கிரிக்கெட் மைதானமும் எத்தனை ரசித்தும் தீராத அனுபவமாகப் பெருகிப்பெருகி எஞ்சி நின்றன. அந்த அற்புதத் தருணம் கண்களுக்குள் காட்சியாக உறைந்து என் நினைவுப்பெட்டகத்தில் ஏதோவொரு வெல்வெட் பெட்டிக்குள் நிறம் மங்காத வண்ணப் புகைப்படமாக சேமிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும்கூட அந்தப் புகைப்படத்தைப் பார்த்துத்தான் அவ்வனுபவத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

மூத்த அரசியர்கள் தங்கள் கனிவை உணர்த்தும்விதமாக வெண்பட்டாடையைப் போர்த்திக்கொள்வதைப் போல, பெருவலிமை கொண்ட அந்தக் கற்கோட்டை தன்மேல் புற்களும் பூச்செடிகளும் வளர இடம்கொடுத்து பசுமைபூசிக்கொண்டு நிற்பதை ரசித்தபடியே அங்கிருந்து கிளம்பினோம்.

 கங்க ராமையா கோயில் புத்தர்
கங்க ராமையா கோயில் புத்தர்

கொழும்பு சென்று சேரும்போது இரவாகியிருந்தது. கொழும்பில் அறை முன்பதிவு செய்திருந்தோம். போக்குவரத்து நெரிசலால் சென்று சேர சற்றே தாமதமானதில் அந்த அறையை வேறொருவருக்குக் கொடுத்துவிட்டார்கள். எங்களைப் பார்த்ததும் மன்னிப்புக்கோரி, `இன்னும் இரண்டு மணி நேரம் பொறுத்துக்கொள்ளுங்கள். வேறோர் அறையை ஏற்பாடு செய்து தருகிறோம்' என்றார்கள். அந்த இரண்டு மணி நேரத்தில் இரவுணவை முடித்துக் கொள்ளலாம் என்று பெட்டிகளை இறக்கிக் கொடுத்துவிட்டு `மினிஸ்டரி ஆஃப் க்ராப்' (Ministry of Crab) உணவகத்துக்குக் கிளம்பினோம்.

கொழும்பு விமானநிலையத்துக்குள் நுழையும் எவரும் இந்த உணவகத்தின் பெயரைக் காணாமல் வெளியில் வந்துவிட முடியாது. இலங்கையின் உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களான குமார சங்ககாராவும் மஹேல ஜெயவர்த்தனாவும் இணைந்து நடத்தும் கடலுணவு உணவகம் இது. நண்டும் இறாலும் இவ்வுணவகத்தின் சிறப்பு உணவுகள். இலங்கை மக்களால் ஒல்லாந்தர் என்று அழைக்கப்படும் ஹாலந்து நாட்டவரால் 1677-ல் கட்டப்பட்ட பழைய மருத்துவமனைக் கட்டடத்தை பழைமை மாறாமல் புதுப்பித்து அழகிய உணவகமாக மாற்றியிருக்கிறார்கள்.

பழைய ஓடுகள் வேயப்பட்ட கூரையும், கருங்கற்கள் பாவிய குளிர்ந்த தரையும், மரத்தாலான மேஜை நாற்காலிகளும் கொண்ட புதுமையான உணவகத்தில், சுற்றிலும் வெவ்வேறு நாட்டவர்கள் அமர்ந்திருக்க, அக்கம் பக்கத்தார்களின் உணவுத்தட்டுகளை ஓரக்கண்ணால்கூடப் பார்க்காமல் மெனுவை மட்டுமே பார்த்து `எக்ஸ்.எல் சைஸ் பட்டர் க்ராப்' என்று ஆர்டர் கொடுத்துவிட்டு, கொண்டு வந்து வைக்கப்பட்ட தட்டில் கை கால்களைப் பரப்பிக்கொண்டு அமர்ந்திருக்கும் மெகா சைஸ் முழு நண்டைப் பார்த்து அதைச் சாப்பிடத்தெரியாமல் திருதிருவென முழிப்பது மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை; எனக்கு நிச்சயம் புது அனுபவமாக இருந்தது.

மெனுவில் நண்டின் அளவுக்கேற்ப விலை போட்டிருக் கிறார்கள். இங்கே சமைத்துக் கொடுக்கப்படும் ஆகப்பெரிய நண்டு, இரண்டு கிலோ எடை கொண்டது. இந்திய மதிப்பில் ஒரு நண்டின் விலை 16,000 ரூபாய். பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டால்கூட உடையாது போல அத்தனை கடினமான ஓட்டுடன் இருக்கும் நண்டைச் சாப்பிட, சிறிய அரிவாள், கடப்பாரை, பாக்குவெட்டி போல என்னென்னவோ உபகரணங்களும் கொடுக்கிறார்கள். தம் கட்டி வெட்டப்பார்த்தால் நண்டு எகிறிக் குதித்து அடுத்த மேஜைக்காரர் தட்டில் விழும் அபாயமும் இருப்பதால், நாசூக்காய் வெட்டிச் சாப்பிடத் தெரிந்த முன்அனுபவசாலிகள் மட்டும் அவ்வுணகத்துக்குச் செல்வது நலம். நாங்கள் வெண்ணெய் நண்டும், மிளகு இறாலும், சிப்பிகளும், எலுமிச்சை, புதினா, சோடா சேர்த்த குளிர்ந்த கடுந்தேநீரும் சாப்பிட்டோம்.

 காலெ கோட்டை
காலெ கோட்டை

மறுநாள் மாலை 4 மணியளவில் ஏர்போர்ட் செல்ல வேண்டியிருந்தது. கொழும்புவைச் சுற்றிப் பார்ப்பதற் கென 8 மணி நேரம் மட்டுமே இருந்தன. ஹோட்டலில் எங்களுக் கென்று புதிதாக ஒதுக்கப்பட்டது, கடல் பார்த்த அறை என்பதே காலையில்தான் தெரிந்தது. அறையின் ஒருபக்க முழுச்சுவரும் கண்ணாடியாக இருந்தது. வெளியே தார்ச்சாலையும் அதற்கடுத்து ரயிலுக்கான இருப்புப்பாதையும், அதையொட்டியே அலைகள் தொட்டுத்தொட்டு விளையாடும் கடற்கரையும், பின்னால் பரந்து விரிந்த கடலும் இருந்தது.

அறைக்குள் கண்ணாடியினருகே உட்கார்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கீர்த்து, கீழே சாலையில் போகும் கார்களையும், தண்டவாளத்தில் விரையும் ரயிலையும் பொம்மைகளென்று நினைத்து கை நீட்டி எடுக்க முயன்றாள். அத்தனை அழகான அறையிலிருந்து கிளம்பவே மனம் வரவில்லை.

`இலங்கை போயிட்டு ஒரு புத்தர் கோயிலுக்குக்கூட போகல' என்று பின்னாள்களில் புலம்பாமல் இருப்பதற்காகக் கிளம்பி, ஏரியின் நடுவே மிதக்கும் கோயிலான சீமா மால்கா புத்தர் கோயிலுக்கும்

120 ஆண்டுகள் பழைமையான கங்க ராமையா கோயிலுக்கும் சென்றோம். ஏராளமான கலைவேலைப்பாடுகளும், விதவிதமான வடிவங்களில் புத்தர் பெருமானின் திருவுருவங்களும் நிரம்பிய அக்கோயில் கண்களையும் மனத்தையும் நிறைத்தது.

சுவர்களிலும் செப்புப்பட்டயங் களிலும் புத்தரின் வாழ்க்கையைக் காட்சிகளாக செதுக்கி வைத்திருக்கிறார்கள். கோயிலுக்குள் விநாயகர், முருகர், நெற்றிக்கண் மட்டுமல்லாமல் பன்னிரு கரங்களும் கரங்களில் கண்களுமாக சிவன் என இந்து கடவுள்கள். நம்மூர் கோயில்களைப் போலவே கல்லில் செதுக்கப்பட்ட யானைகளும் சிம்மங்களும் யாளிகளும்.

கோயிலைத் தொடர்ந்து சுதந்திர நினைவுச் சதுக்கம், கொழும்பு அருங்காட்சியகம், கிரிக்கெட் ஸ்டேடியம், இலங்கையின் உயர்ந்த இரட்டை வர்த்தக கோபுரங்கள், நகராட்சி மன்றம் ஆகியவற்றை அவசரகதியில் பார்த்து முடித்து ஏர்போர்ட்டில் விதவிதமாய் சிலோன் டீ வகையறாக்களை வாங்கிக்கொண்டு இலங்கையிடமும் ஆறு நாள்கள் தொடர்ந்து எங்களுக்காக இரவும் பகலுமாக காரோட்டி, வழிகாட்டி உதவிய ஓட்டுநர் நிமலிடமும் பிரியாவிடை பெற்றுக் கிளம்பினோம்.

விமானத்தில் ஏறிய பின்னாக மனத்தில் பயண அனுபவங்கள் அலைமோதித் தளும்பிக் கொண்டிருந்தன. மொத்தத்தில் நிறைவான பயணம் என்ற திருப்தி மனமெங்கும் விரவியிருந்தது. இயன்றவரை எனது இலங்கை அனுபவங்களைச் சொல்லிவிட்டதாகவே நினைக்கிறேன். எனினும் நான் சொல்ல வந்ததற்கும் இங்கே சொல்லில் வந்ததற்கும் இடையில், பறந்து போன அனுபவங்கள் எத்தனையோ தெரியவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு