
காயத்ரி சித்தார்த்
நீ கடலின் ஒரு துளியல்ல ஒரு துளிக்குள் நிறைந்திருக்கும் கடல்!- சூஃபி ஞானி ரூமி
துருக்கி பற்றிய முதல் அத்தியாயத்தை நியாயமாக சூஃபி நடனத்திலிருந்தோ, புகழ்பெற்ற சூஃபி ஞானி ரூமியின் கவிதையிலிருந்தோதான் தொடங்கியிருக்க வேண்டும்.
ரூமி, ஓட்டோமான் பேரரசு உருவாவதற்கு முந்தைய நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீகக் கவிஞர். நாம் வள்ளுவரையும் மணிவாசகரையும் கொண்டாடுவதைப் போல, நூற்றாண்டுகள் கடந்தும் ரூமியின் கவிதைக் கரங்களை பல நாடுகள் இன்னும் இறுகப் பற்றிக்கொண்டிருக்கின்றன. அவரின் பாடல்களோடு இறை மயக்கத்தில் சுழன்றாடும் சூஃபி நடனம் துருக்கியில் மிகப் பிரபலமானது. இந்த நடனத்தின்போது, ஊதுவத்திப் புகைபோல, சுழல்கையில் காற்றில் விரிந்து பரவும் தூய வெள்ளை உடையும், துருக்கியர்களின் பாரம்பர்யத் தொப்பியுமாக தர்வேஷ்கள் எனப்படும் சூஃபிகள், பல மணி நேரம் அல்லது பல நாட்கள் மெய்ம்மறந்து தங்களைச் சுற்றிக்கொண்டும், ஒரு வட்டத்துக்குள் சுற்றிக்கொண்டும் சுழல்கின்றனர். அவர்களின் வலக்கை இறையருளை பெற்றுக்கொள்வதைப் போல மேலே உயர்ந்திருக்கும். அவ்வருள், அவர்களின் கைகள் வழியாக இதயத்துள் நுழைந்து, மின்னலைப் போல பூமியை நோக்கி இருக்கும் இடக்கை வழியாகக் கீழே இறங்கும். இறைவனை அறிதல், இறைவனைப் பார்த்தல், இறைவனில் கலத்தல் என்ற மூன்று நிலைகளில் இந்த நடனம் மெள்ள மெள்ள மேலே உயர்த்திச் செல்வதாக நடத்தப்படுகிறது.

துருக்கியின் சுற்றுலாப் பயணிகளுக்கான கடை வீதிகளில், இந்த நடனத்தில் லயித்திருக்கும் தர்வேஷ்களின் உருவங்கள் விதவிதமாக ஓவியங்களாக வும் பொம்மைகளாகவும் நினைவுப்பரிசுகளாகவும் குவிக்கப்பட்டிருக்கின்றன. எவ்வளவோ திட்டமிட்டும் இந்த நடனத்தை நேரில் பார்க்க எங்களுக்கு நேரம் வாய்க்கவில்லை. Topkopi Palace பார்க்கச் சென்று நடந்து நடந்து கால்கள் ஓய்ந்து திரும்பிய மறுநாள், காலை 7 மணிக்கெல்லாம் ஹோட்டல் அறையிலிருந்து கிளம்ப வேண்டியிருந்தது. அன்று நாங்கள் சென்றது Bursa Tour.
புர்ஸா டூர் என்பது ஒரு முழு நாள் பயணம். குழுப்பயணம் என்பதால் அவரவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கே பேருந்து வந்து ஆட்களை ஏற்றிக் கொள்கிறது. அங்கிருந்து நேராக மர்மரா கடலில் இருக்கும் துறைமுகத்துக்கு நம்மை அழைத்துச்செல்கிறது. அங்கே முன்பே வந்து காத்திருக்கும் பெரும் படகு (Ferry) துறைமுகத்திலிருக்கும் கார்கள், பேருந்துகள் அனைத்தையும் தன்னுள் ஏற்றிக் கொள்கிறது. பேருந்து படகில் ஏறிய பின்னர் நாம் விரும்பினால், பேருந்திலிருந்து இறங்கி படகின் மேல் பகுதிக்குச் சென்று நின்று வேடிக்கை பார்க்கலாம். அணிந்திருக்கும் கனமான ஸ்வெட்டர்களைத் தாண்டி, உள்ளே நுழைந்து எலும்புகளை ஊடுருவும் ஊசிக் குளிரை ரசித்தபடி காலை உணவு, தேநீர் போன்றவற்றை அருந்தலாம்.
சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீலக்கடல், தொலைவில் மேகங்களுக்கு நடுவே எழுந்து நிற்கும் வெள்ளிப் பனிமலை, தண்ணீரைக் கிழித்துக்கொண்டு விரையும் ஒவ்வொரு படகின் பின்னாலும் சிறகடித்து வரும் நூற்றுக்கணக்கான கடற்காக்கைகள் (Seagull) என அனைத்தும் சேர்ந்து நாம் ஒரு மாயாஜாலத் திரைப்படத்துக்குள் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன.

பறவைகளின் ஒலியும் அவற்றைக் கண்டு குதூகலிக்கும் சிறார்களின் கூச்சலும் அப்பயணத்தை மேலும் ரம்மியமாக்குகிறது. குழந்தைகள் படகின் பக்கவாட்டிலிருக்கும் கம்பி இடைவெளிகளின் வழியே குபூஸ் துண்டுகளையும், செஸ்ட் நட் எனப்படும் பருப்புகளையும், சிமிட் எனப்படும் துருக்கியின் பிரத்யேக ரொட்டியையும் பிய்த்து தண்ணீரில் வீசி எறிவதும், பறவைகள் கிரிக்கெட் வீரர்களைப் போல அவை தண்ணீரில் விழும் முன்பே பாய்ந்து அலகால் கேட்ச் பிடித்து உண்பதுமாக இரண்டு மணி நேரம் கழிவதே தெரியாமல், கோலாகலமாக நிறைகிறது அந்தப் படகுப் பயணம்.
எப்போதும் தூங்கி வழியும் கீர்த்துகூட, தன்னை விடவும் எடை அதிகமான கனத்த ஸ்வெட்டர்களை அணிந்துகொண்டு சீகல் பறவைகளை விழிவிரியப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
படகு நின்றதும் மீண்டும் பேருந்தில் ஏறி தொடங்கும் பயணம், புர்ஸா நகரத்தைச் சுற்றிப்பார்ப்பது, அங்கிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கண்டதையும் வாங்கிக் குவிப்பது, கிராண்டு மசூதியை சுற்றிப் பார்ப்பது, 600 ஆண்டுகள் பழைமையான பைன் மரத்தைப் புகைப்படம் எடுப்பது, வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் இடங்களைப் பார்வையிடுவது ஆகிய நியமங்களை முடித்துக்கொண்டு கேபிள் காரில் ஏறுவதில் முடிகிறது.

உண்மையிலேயே அந்த சூப்பர் மார்க்கெட்டுகள் அங்கிருக்கும் எல்லா வற்றையும் வாங்கிவிடத் தூண்டுகின்றன. அல்வாத் துண்டுகள் போல கலர் கலராக வாசனை சோப்புகள், வகை வகையாக தேன் பாட்டில்கள், மாம்பழ டீ, மாதுளை டீ, மல்லிகைப்பூ டீ, லவ் டீ, ரிலாக்ஸ் டீ என விதவிதமாக தேநீர் வகைகள், டர்க்கிஷ் டிலைட் எனப்படும் துருக்கியின் பாரம்பர்ய இனிப்பு வகைகள் (Hafiz Mustafa இணையதளத்தில் ஆர்டர் செய்தால் உலகம் முழுவதும் வீட்டுக்கே டெலிவரி செய்கிறார்கள்), புகழ்பெற்ற Turkish Coffee பாக்கெட்டுகள், கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களில் மிளகு, மசாலாப் பொருள்கள், ரெடிமேட் மசாலாக்கள் என்று குவித்திருக்கிறார்கள். அரைத்துவைக்கப்பட்டிருக்கும் ரெடிமேட் மசாலாக்களின் பெயர்களைப் படித்துக் கொண்டிருந்தேன். சிக்கன் மசாலா, மீட் மசாலா, மேஜிக் மசாலா என்ற வரிசையில் Mother - in- law Masala என்று ஒன்று வைத்திருந்தார்கள்.

பாரம்பர்ய பாட்டி சமையல் போல, மாமியார் கைப்பக்குவ மசாலாவாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே அங்கிருந்த பணிப் பெண்ணிடம் விசாரித்தேன். `அப்படியில்லை அது. அந்த மசாலா ரொம்பவும் காரமாக இருக்கும். அதனால்தான் அந்தப் பெயர்...' என்று சிரித்தாள். அட கடவுளே!
புர்ஸா அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஏதுமில்லாத ஓட்டு வீடுகள் நிறைந்த நகரம். ஓட்டோமோன்கள் பேரரசர்களாக விரிவடைவதற்கு முன்பு புர்ஸாவுக்கு அருகிலிருந்த சின்னஞ்சிறு மாகாணத்தைத்தான் ஆண்டிருக்கிறார்கள். அவர் களின் முதல் தலைநகரம் இந்த புர்ஸா நகரம்.

இரண்டு மூதாட்டிகள் சேர்ந்து கொத்துக்கறி பொதிந்த ரொட்டியை அக்கறையுடன் சமைத்துக் கொடுத்து, அம்முவிடம் ‘நன்றாயிருக்கிறதா’ என்று கேட்டு மகிழ்ந்தார்கள்.
நகரை சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்து கேபிள் காரில் Uludag மலைப்பகுதிக்குப் போனோம். கேபிள் காரிலிருந்து இறங்கி நடக்கும் வழியெங்கும் பனி கொட்டிக் கிடந்தது. அது பனிச்சறுக்கு விளையாட்டுக்குப் புகழ்பெற்ற இடம். அங்கே ஓர் உணவகத்தில் குபூஸ் ரொட்டியும், பார்பிக்யூ சிக்கனுமாக மதிய உணவு கொடுத்தார்கள். கீர்த்துவுக்காக நான் அதிகாலையில் எழுந்து சாதமும் ரசமும் செய்து எடுத்துவந்திருந்தேன். ஆனால்,, சாதத்தை பிசைய முடியாதபடி குளிரில் கைகள் விறைத்துப்போயிருந்தன. அங்கே சாப்பிட்டபின் மீண்டும் ஒரு பேருந்திலேற்றி பனிச்சறுக்கு விளையாடும் இடத்துக்கு அழைத்துப்போனார்கள். இதற்குள் குளிர் தாளாமல், எனக்கு சைனஸ் பிரச்னையால் தலை வலிக்க ஆரம்பித்திருந்தது. உண்ட மயக்கத்தில் கீர்த்து உறங்க ஆரம்பித்திருந்தாள். நாங்கள் பேருந்திலேயே தங்கிவிட, சித்துவும் அம்முவும் மட்டும் கீழிறங்கி பனியில் விளையாடித் திரும்பினார்கள். மலையிறங்கி மீண்டும் படகிலும் பேருந்திலும் பயணித்து அறைக்குத் திரும்ப இரவாகி விட்டது.

மறுநாள் மாலை குவைத்துக்குத் திரும்ப வேண்டியிருந்தது. சுற்றிப்பார்க்க அரை நாள் மட்டுமே இருந்ததால் சுற்றுலாவுக்கு என்று ஒதுக்கப்படாத துருக்கியின் நிஜ முகத்தைப் பார்க்க விரும்பினோம். அதிகாலையில் கிளம்பி பிள்ளைகள் இருவரையும் ஸ்டிரோலர்களில் அமரவைத்து தள்ளிக்கொண்டு, கால்போன போக்கில் சுற்றினோம். மழை நிற்காமல் தூறிக்கொண்டிருந்தது. சாலையின் நடுவே டிராம்கள் வந்து போய்க்கொண்டிருந்தன. அனுபவத்துக்காக, டிக்கெட் வாங்கிக் கொண்டு டிராமில் ஏறி, உடனே அடுத்த நிறுத்தத்தில் இறங்கி திரும்பி வந்தோம். வழியில் ஓர் உணவகத்தில் தரையில் அமர்ந்து சாப்பிட்டோம். இரண்டு மூதாட்டிகள் சேர்ந்து Stuffed Naan போல கொத்துக்கறி பொதிந்த ரொட்டியை அக்கறையுடன் சமைத்துக் கொடுத்து, அம்முவிடம் ‘நன்றாயிருக்கிறதா’ என்று கேட்டு மகிழ்ந்தார்கள்.
வழியிலிருந்த கடைகளில் கீ செயின்களும், நினைவுப்பொருள்களும் வாங்கினோம். நம்மூரில் கண்திருஷ்டி கழிப்பதற்காக வீட்டின் முன்னே பூதப்படம் வைப்பதைப் போல, இங்கே Evil eye bead என்ற ஒன்றை பயன்படுத்துகிறார்கள். நீலப் பின்னணியில் விழித்து நோக்கும் கண்கள், விதவிதமான ஆபரணங்களில் பொருத்தப்பட்டு அத்தனை கடைகளிலும் விற்பனைக்காக நிரம்பி வழிகின்றன. Hafiz musthafa-வில் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் பக்லவாவும் டர்க்கிஷ் டிலைட்டுகளும் வாங்கினோம். வீதியில் கையில் ஒரு பெட்டியுடன் கோட்சூட் அணிந்து எங்களுடனே நடந்துகொண்டிருந்த இளைஞன், திடீரென சாலையோரத்தில் அமர்ந்து அந்தப் பெட்டியையே ஸ்டாண்டு போல நிற்கவைத்து, வழிப்போக்கர்களுக்கு ஷூ பாலீஷ் போட ஆரம்பித்ததை வியப்பாக வேடிக்கை பார்த்தோம்.

நம்மூரில் சாலையோரங்களில் வண்டிகளை நிறுத்தி சோளத்தை நெருப்பில் சுட்டு விற்பார்களே அதேபோல, இங்கே செஸ்ட் நட் எனப்படும் கொட்டைகளை தணலில் சுட்டு கொதிக்கக் கொதிக்கத் தருகிறார்கள். அங்கிருக்கும் குளிரில் இதன் வெப்பமும் வாசமும் அத்தனை இதமாகப் பரவி நாவூற வைக்கிறது. முறுக்கிய கம்பி வளையம் போல மைதாவில் செய்து எள் தூவி வேக வைக்கப்பட்ட சிமிட் என்ற ரொட்டிகளை போவோர் வருவோரெல்லாம் கையில் வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். குழந்தைகளுக்கு இந்த சிமிட்டில் சாக்லேட் தடவித் தருகிறார்கள்.
அறைக்குத் திரும்பி மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு விமான நிலையத்துக்குக் கிளம்பினோம். போகும் வழியில், இஸ்தான்புல் அக்வேரியம் கண்ணில்பட அங்கே இறங்கி மீன்களை வேடிக்கை பார்த்து, அங்கிருந்த மாலில் சுற்றித் திரிந்து மீண்டும் கிளம்பினோம். அங்கிருந்த சாக்லேட் கடை ஒன்றில் ஹாகா சோஃபியாவையும், கலாட்டா டவரையும் சாக்லேட்டில் செய்து பார்வைக்கு வைத்திருந்தார்கள்.
இஸ்தான்புல்லில் கலாட்டா டவரையும், ப்ளூ மசூதியையும் எங்களால் பார்க்க முடியவில்லை. இஸ்தான்புல்லில் இருந்து விமானத்தில் பயணிக்கும் தூரத்தில் இருக்கிறது கப்படோச்சியா. அதுவும் எங்கள் பயணத்திட்டத்தில் இடம்பெறவில்லை. கப்படோச்சியாவில் Hot air balloon பயணம் மிகப் பிரபலம். எனக்கு அதில் போக வேண்டுமென்பது நெடுநாள் ஆசை. சித்துவுக்கோ உயரம் என்றால் பயம். நான் தனியே பயணிக்கவும் வலுக்கட்டாயமாக மறுத்துவிட்டார். ஒரு வழியாக... துருக்கிப் பயணத்தை இனிதே நிறைவு செய்து, நள்ளிரவில் குவைத் வந்து சேர்ந்தோம். வீடு எங்களுக்காக ஐந்து நாட்களாகக் காத்திருந்தது போல இருந்தது.

காந்தத்தின் எதிரெதிர் துருவங்கள் போல வீடும் பயணங்களும் இரு திசைகளிலிருந்தும் எப்போதும் ஈர்த்தபடியேதான் இருக்கின்றன. அடுத்த பயணம் எப்போது என்பதை அந்த இரவிலேயே முடிவு செய்தோம். அது.. கீர்த்தினியின் இரண்டாவது பிறந்தநாள்!
(வாருங்கள் ரசிப்போம்!)