தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

தீரா உலா: அலைகளின் நகரம்!

தீரா உலா
பிரீமியம் ஸ்டோரி
News
தீரா உலா

காயத்ரி சித்தார்த்

நான் பிடித்த பட்டுப்பூச்சியை, அதை பிடித்த நேரத்தின் சந்தோஷத்தோடு, உங்கள் கையில் அல்லது என் மிக அருகில் எதிர்படுகிற மனிதனின் உள்ளங்கைக்கு மாற்றிவிட்டால் போதும்!

- கல்யாண்ஜி

இந்தக் கட்டுரைகளின் வழியே நானும் இதைத்தான் செய்ய விழைகிறேன். அக்கண நேர மகிழ்ச்சியை, அனுபவமென நான் உணர்ந்தவற்றை அப்படியே உங்களுக்கும் கடத்திவிட்டால் போதும்... இக்கட்டுரைகள் ஜென்ம சாபல்யம் பெற்றுவிடும்.

தீரா உலா: அலைகளின் நகரம்!

பெரிய சங்கு ஒன்று கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதைப் பொத்தினாற்போல காதருகே வைத்துக் கேட்டிருப்பீர்களே... ஓயாத இரைச்சல் கேட்கும். கொஞ்சம் விலக்கியதும் சட்டென்று அமைதி சூழும். அவ்விரைச்சலை அலைகளின் ஓசையென்றே சிறுவயதில் நம்பியிருந்தேன். நினைவில் காடுள்ள மிருகம் போல, மனத்தில் வீடுள்ள பயணி போல, சங்குகளின் கனவுகளில் எப்போதும் கடல் மட்டுமே இருக்கிறது என்று எண்ணிக் கொள்கிறேன். விளையாட்டாக அச்சங்கைக் காதருகில் வேகமாக வைத்து வைத்து எடுத்தால், சாலை விளக்கு மின்னி மின்னி அணைவது போல இரைச்சலும் மெளனமும் மாறி மாறிக் கேட்கும்.

லெபனானின் தலைநகரான பெய்ரூட் நகரமும் அதிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பிப்லோஸ் நகரமும் இந்தச் சங்கு விளையாட்டைத்தான் நினைவூட்டின. பெரிய இரைச்சலுக்கு நடுவிலிருந்து சட்டென்று மிகப் பெரிய அமைதிக்குள் யாரோ தள்ளி விட்டாற்போலிருந்தது. கெளதம் மேனன் சொல்வது போல அவ்ளோ அழகு!

பிப்லோஸ்... 8,000 வருடங்களாக இதே பெயரோடு தொடர்ந்து மக்களின் பயன்பாட்டில் இருந்து வரும் உலகின் மிகப் பழைமையான நகரம் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் லெபனான் வாசிகள். யுனெஸ்கோ நிறுவனம் இந்நகரத்தை உலகப் பாரம்பர்யக் களங்களில் (World Heritage Sites) ஒன்றாக 1984-ம் ஆண்டில் அறிவித்துள்ளது. எகிப்திய ஆட்சிக்காலத்தில் (கி.மு 2613 - 2494) இந்நகரம் கெப்னி (Gebny) என்றும் மெசபடோமியாவின் அக்காதிய மொழியில் குப்லா (Gubla) என்றும் பொனீசிய மொழியில் கெபல் (Gebel) என்றும் எபிரேய மொழியில் கெவல் (Gevel) என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. தற்கால அரபு மொழியில் இந்நகரத்தை ஜிபைல் (Jibayl) என அழைக்கின்றனர். ஜிபைல் என்பதற்கு மலை என்று பொருளாகும். பண்டைய கிரேக்கர்கள் பைப்லோஸ் என்றும் ரோமானியர்கள் பிப்லோஸ் (Byblus) என்றும் பெயரிட்டனர். எதுவாயினும் என்ன... ரோஜாவை எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் அது ரோஜாதானே!

மூன்று இதழ்களாக வர்ணித்துக் கொண்டிருப்பதால் லெபனானை ஏதோ மிகப்பெரிய நாடென்று எண்ணியிருந்தால், தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள்!

லெபனானின் மொத்தப் பரப்பளவு தமிழ்நாட்டை விடவும் 10 மடங்கு சிறியது தான் என்கிறார் கூகுளாண்டவர். பிப்லோஸ் லெபனானின் மிகப்பெரிய மலைநகரமாம். எறும்புகளிலேயே மிகப் பெரிய எறும்பு என்பதைப் போல! காலையில் கிளம்பினால் மாலைக்குள் சுற்றி வந்துவிடலாம் போல கைக்கு அடக்கமாக அத்தனை சிறிய நகரம். இந்நகரத்தில் உயர்ந்த சிமென்ட் கட்டடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அனைத்தும் கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட நம்மைவிட சற்றே உயரமான இணக்கமான குடியிருப்புகளாகவே காட்சியளிக்கின்றன.

தீரா உலா
தீரா உலா

நம்மூரில் வீட்டுக்கொல்லைகளில் எலுமிச்சை மரங்கள் இருப்பதைப்போல, இங்கே தெருவோரங்களில் ஆரஞ்சுப்பழ மரங்கள் காய்த்துக் குலுங்குகின்றன. சுற்றுச்சுவர் மட்டுமல்லாது வீட்டின் பக்கவாட்டுச் சுவர்களிலும் பூங்கொடிகளைப் படர விட்டிருக்கிறார்கள். ஒரு வீட்டின் சுவரில் படர்ந்திருந்த கொடியைப் பார்த்து, `இது திராட்சை இலை மாதிரியே இருக்கில்லப்பா?' என்றேன் சித்துவிடம். `திராட்சைக் கொடியாவேகூட இருக்கலாம். யார் கண்டா...' என்றார் அவர். அம்மு குறுக்கிட்டு, `இது திராட்சைக் கொடி இல்ல... இது மேங்கோ கொடி' என்றாள். நாங்கள் சிரித்து, `மேங்கோ கொடியா? மேங்கோ வெல்லாம் எங்கே காணோம்?' என்றோம். கொஞ்சம் யோசித்தவள், `மேங்கோல்லாம் நாளைக்குக் கொண்டுவந்து மேங்கோ கொடில மாட்டுவாங்க' என்றாள்!

லெபனானைப் போலவே அதன் மக்களும் அழகும் கனிவும் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். செல்லுமிடமெல்லாம் அம்மு அவர்களுக்குச் செல்லப் பிள்ளையாக மாறியிருந்தாள். வழிப்போகும் லெபனான் வாசிகள்கூட எங்களைப் பார்த்துப் புன்னகைத்தும் அவள் கன்னத்தைத் தட்டிச் சிரித்தும் கடந்தார்கள். லெபனான் பெண்கள் அரேபிய / மேற்கத்திய உடையணிந்த தேவலோக ரம்பையர்கள். மழை, வெயில் படாமல் காத்துக்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட கூரை பொருத்திய இருசக்கர வாகனங்களை இங்குதான் முதன்முறையாகப் பார்த்தோம். நாங்கள் சென்றுவந்த பின் நாங்கள் சொல்லும் கதைகளைக் கேட்டே லெபனானுக்குச் செல்ல விரும்பியவர்கள் ஏராளம்.

அலைகளின் நகரம்!
அலைகளின் நகரம்!

ஆனால், அங்கே 2015-லிருந்து வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரச் சீர்குலைவு, மக்களுக்கெதிரான சட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக அரசை எதிர்த்து தொடர்ச்சியாக உள்நாட்டுப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் போராட்டங்கள் முடிவுற்று அங்கே அமைதி திரும்புமென்று நம்புவோமாக.

பிப்லோஸில் கடலுக்குள் சற்றே நீண்டிருக்கும் பாதையின் நடுவில் நின்று அண்ணாந்து பார்த்தால் திகைப்பிலும் மகிழ்ச்சியிலும் ‘ஹா’வென்று ஓர் உணர்வு வருகிறது. ஒருபுறம் முழுவதும் திகட்டத் திகட்ட கடல். மறுபுறத்தில் திகைக்கவைக்கும் மலைகள். மொத்த லெபனானுமே இவற்றுக்கு நடுவில்தான் வசிக்கிறதுபோல. சர்க்கஸ் மாஸ்டரின் சாட்டைச் சொடுக்கலுக்குப் பணிந்து ஸ்டூல் மீதேறி நின்று வாய் பிளந்து கர்ஜிக்கும் சிங்கத்தைப் போலிருக்கிறது கடல். சொன்ன இடத்திலெல்லாம் வளைந்து கொடுத்து நின்று கொஞ்சமாக அலைவீசிக் கொள்கிறது. கிள்ளி முத்தமிடலாம் போல அழகு!

தீரா உலா
தீரா உலா

கற்கள் பாவிய குறுகலான தெருக்கள் நாம் பிறந்து விளையாடி வளர்ந்த கிராமத்து வீதிகள் போன்றதொரு நெருக்கமான உணர்வைத் தருகின்றன. ஓர் ஓரத்தில் இரண்டு தெருப்பாடகர்கள் கிடார்களை இசைத்தபடி மெய்ம்மறந்து பாடிக்கொண்டிருந்தார்கள். சித்து, தன்னிரு கண்களால் கண்டால் போதாதென கேமரா கண்களாலும் அனைத்தையும் அணுகியும் விலகியும் பார்த்துப் பதிந்து கொண்டிருந்தார். அப்பாடகர்களை அவர் எடுத்த புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று!

நகரின் மையத்தைவிட்டு கொஞ்சமே கொஞ்சம் விலகி நடந்தால், ஏதோவொரு மன்னன் நடந்த இடத்தில், ஏதோவோர் அரசாணை பிறப்பிக்கப்பட்ட கணத்தில், போரில் மடிந்த அரசனொருவனின் இறுதி ஊர்வலத்தில், ஓர் இளவசரன் அரசனாக முடிசூட்டப்படும் பட்டாபிஷேகத்தில் பங்கு பெற்று நிற்கும் உணர்வைப் பெறுவோம். சுற்றிலும் அத்தனை இடிபாடுகள். காலம் தின்றுவிட்டுப் போட்ட கட்டட மிச்சங்கள். எக்காலத்திலோ எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கியிருக்கக் கூடிய வானுயர்ந்த கற்கோட்டை ஒன்று, ஏராளமான பசுஞ்செடிகளுக்குத் தன்னுடலில் பற்றிக் கொள்ள இடம்கொடுத்திருந்தது. மூத்துக் கனிந்த பேரரசி ஒருத்தி தன் மடியில் பேரக் குழந்தைகளைப் போட்டுக் கொஞ்சுவது போல கல்லென்றோ கோட்டையென்றோ தன்னை உணரத் தராமல் கருணையெனக் கண்முன்னே எழுந்து நின்றிருந்தது அக்கட்டடம்.

தீரா உலா
தீரா உலா

கடற்கரையின் ஓரத்தில் எவராலோ கைவிடப்பட்ட வீடு ஒன்று, நீலக்கடலின் ஏகாந்தத்தில் தன் பழைய நினைவுகளை அசை போட்டபடி தனிமையில் மெளனமாக அமர்ந்திருந்தது, ராணி திலக்கின் இக்கவிதையைப் போல...

`வாழ்வென்பது எல்லோருக்கும் தனிமையே

தனித்த அந்த மரத்திற்கென்று யாரும் இல்லை

அம்மரத்தில் அமர்ந்திருக்கும் பச்சைக் கிளிக்கென்று யாருமில்லை

அந்த அந்திமந்தாரையின் மணத்திற்கு என்று யாரும் இல்லை

பச்சைக் கிளியின் மந்திரச் சொல்லிற்கென்று யாருமில்லை

யாருமற்ற பாதையில் யாதுமற்ற ஒருவன் வந்து கொண்டிருக்கிறான்

மரத்தின் தனித்த நிழலில் இளைப்பாறி

மலரின் தணிந்த மணத்தை முகர்ந்து

சொல்லின் இனித்த இசையை உண்டு

இருந்து

பிரிந்து

போகிறான்

தன்னந்தனியாக அவனுக்கு என்று

யாரும் இல்லை.'

சொல்லிச் சொல்லித் தீர்ந்த பின்பும் சொல்லாத ஏதோவொன்று சொல்லாகத் திரளாமல் எஞ்சி நிற்பதைப் போல, பிப்லோஸ் நகரம் இன்னும் நாங்கள் காணாத அழகுகளை மிச்சம்வைத்திருப்பதாகவே தோன்றுகிறது. அங்கிருந்து கிளம்பி காரிலேறி பெய்ரூட் நோக்கி விரைகையில், மீண்டும் அவசியம் வரச்சொல்லி அறிவுறுத்தியபடி கடல் கூடவே வந்து வழியனுப்பியது. வாழ்வில் மிச்சமிருக்கும் கடமைகளை சரிவர முடித்துவிட்டு, நாங்கள் இருவர் மட்டுமாக மீண்டுமொரு முறை பிப்லோஸ் சென்று குளிர் விரவும் அந்தியில் அதே இடத்தில் அமர்ந்து தேநீர் அருந்தியபடி தெருவோர இசைக்கலைஞர்களின் நாடோடிப் பாடலைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் ஆண்டுதோறும் வலுத்து வருகிறது. வாழ்க்கை அருள்புரிவதாக!

வாருங்கள் ரசிப்போம்!