தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

தீரா உலா: புனித ஞானம்

ஹாகா சோஃபியா
பிரீமியம் ஸ்டோரி
News
ஹாகா சோஃபியா

காயத்ரி சித்தார்த்

“ஞானமும் அறிவும் கவனிக்கும்படி உங்களை அழைக்கின்றன. அவை, மலையின் உச்சிமீது நிற்கின்றன. சாலையின் பக்கத்தில், பாதைகள் சந்திக்கும் இடத்தில் நிற்கின்றன. திறந்த கதவுகளின் வெளியே அவை அழைக்கின்றன.”

- நீதிமொழிகள் 8:1-3

ஞானம் உள்ளிருந்து பிறப்பதாகத்தான் நாம் எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கி றோம். கண்களை மூடி புருவங்களின் மத்தியில் மனதைப் பிடித்து நிறுத்தி, மூடிய கண்களுக்குள்ளாக ஞானத்தைத் தேடுகிறோம். ஆனால் ஞானம், திறந்த கதவுகளின் வெளியே நின்று நம்மை கூவி அழைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அழைப்பைச் செவிமடுத்து வெளியேறிச் சென்றதால்தான் சித்தார்த்தன் புத்தரானார். வாதவூரார் மாணிக்கவாசகரானார். அருணகிரியார் அனுபூதி அடைந்தார்.

தீரா உலா
தீரா உலா

இஸ்தான்புல் நகரின் இதயத்தில் வீற்றிருக்கும் ஹாகா சோஃபியா, அந்நகரின் நடுவிலிருந்து அனைவரையும் அழைக்கும் ஞானத்தின் குரலாகவே ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

`ஹாகா சோஃபியா' என்பது என்ன? அது ஒரு கட்டடம்... அது ஒரு தேவாலயம்... அது ஒரு மசூதி... அது ஓர் அருங்காட்சியம்... அது ஓர் அதிசய வரலாற்றுச் சின்னம் மற்றும் அதுவே துருக்கியின் அடையாளமும்கூட. Hagia Sophia-வை ஹேகியா சோஃபியா, ஹாகா சோஃபியா, ஹயசோஃபியா என்று விதவிதமாக அழைக்கிறார்கள். நாம் இப்போது ஒரு கால இயந்திரத்தில் ஏறி, இன்றிலிருந்து 1500 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்தால், இஸ்தான்புல்லில் ஏதோவோர் அறையில், இசிடோர் மைலீடஸ் மற்றும் அந்தேமிஸ் என்னும் இரு பெரும் கிரேக்க கட்டடக்கலை நிபுணர்கள் ஒன்றாக அமர்ந்து தீவிரமாக விவாதித்து, கணிதமேதை ஆர்க்கிமிடீஸின் சூத்திரங்களைக்கொண்டு இந்த அற்புதக் கட்டடத்தைக் கோடுகளால் வடிவமைப்பதை அருகிருந்து பார்க்கக்கூடும். நினைக்கவே சிலிர்ப்பாக இருக்கிறதில்லையா! இதை நேரில் பார்க்கையிலும் அப்படித்தான் இருக்கிறது.

ஹாகா சோஃபியா
ஹாகா சோஃபியா

கி.பி 537-ல் கட்டி முடிக்கப்பட்ட, அதுவரை யிலான கட்டடக்கலையின் போக்கையே மாற்றியமைத்த, கட்டுமானத்துறையில் ஒரு திருப்புமுனையாக விளங்கிய அபாரமான பைசன்டைன் கலைவடிவம், ஆண்டுக்கு 34 லட்சம் மனிதர்கள் உலகெங்கிலுமிருந்து தேடி வந்து தன்னை வியந்து வியந்து அண்ணாந்து பார்ப்பதைத் தானும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.

கி.பி 537-ல் பைசன்டைன் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் இதைக் கட்டுவித்தபோது, உலகிலேயே மிகப் பெரிய கட்டடமாகவும், மசூதிகள் போல குவிமாடங்களுடன் கட்டப்பட்ட தேவாலயமாகவும் இது இருந்தது. அப்போதிலிருந்து தொடர்ந்து 916 வருடங்கள் கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை செய்யும் பேராலயமாக இருந்த ஹாகா சோஃபியா, கி.பி1453-ல் ஓட்டோமான்களின் சாம்ராஜ்ஜியம் உதயமானபோது இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் மசூதியாக மாறியது. அன்றிலிருந்து 1931 வரை மசூதியாக இருந்ததை 1935-லிருந்து அருங்காட்சியகமாக மாற்றி பார்வைக்கு வைத்துள்ளனர்.

தீரா உலா: புனித ஞானம்

நீங்கள் இதன் பிரமாண்டத்தை வியந்தபடி உள்ளே காலடிவைத்து நுழைகையில், ஒருபுறம் 9-ம் நூற்றாண்டில் வரையப்பட்டு லட்சக்கணக்கான மக்களால் உளமுருகி பிரார்த்திக்கப்பட்ட மேரி மாதாவின் உருவத்தையும் மறுபுறம் 15-ம் நூற்றாண்டில் ஓட்டோமான்களால் சுவரில் பொறிக்கப்பட்டு பல நூறாயிரம் இஸ்லாமியர்களால் தொழப்பட்ட திரு குர் ஆன் வாசகங்களையும் ஒருசேரப் பார்ப்பீர்கள். நீங்கள் நின்று கொண்டிருக்கும் அதே இடத்தில், எப்போதோ அவனருளாலே அவன் தாள் வணங்கி, மண்டியிட்டு இறைவனிடம் கையேந்திய ஏதோவொரு பக்தனுக்கு பரம்பொருளாக அங்கு வீற்றிருக்கும் ஏதோ ஒன்று, இல்லையென்று சொல்லாமல் உடனே அருள்பாலித்து, ‘நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை’ என நம்பிக்கையூட்டி அனுப்பியதை உங்கள் மனக்கண்களால் காண்பீர்கள். மனம் நெகிழ்ந்து, பிரார்த்தனை என்றாலும் தொழுகை என்றாலும் வழிபாடு என்றாலும் பெருவலிமை ஒன்றின் முன்னால் மண்டியிட்டு வணங்குதல் என்பதுதானே பொருள் என்று நீங்கள் வியக்கும் கணத்தில், பல நூறு ஆண்டுகளாக தேவாலயமாகவும் பள்ளிவாசலாகவும் ஒரே திருக்கோயில் இருந்திருப்பதன் அற்புதத்தை உணர்வீர்கள். இதை அறிந்தே தானோ என்னவோ இக்கோயிலுக்கு அப்போதே ‘ஹாகா சோஃபியா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஹாகா சோஃபியா என்பதற்கு துருக்கிய மொழியில் `புனித ஞானம்' என்று பொருள்.

அந்த அபாரமான கட்டடத்தினுள் நின்று இது போன்ற சிந்தனைகளில் எல்லாம் நீங்கள் ஆழ்ந்து, `எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா! என் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா!' என தத்துவக் கடலில் மூழ்கித் திளைக்க வேண்டுமானால், முன்னெச்சரிக்கையாக உங்கள் குழந்தைகளை ஊரிலேயே யாரிடமாவது விட்டுவிட்டு வருவது நல்லது. ஏனெனில், அவர்களுக்குத் தேவையானதெல்லாம் மதமோ, இறைவனோ, வரலாறோ, கலையோ அல்ல. உள்ளே நுழைவதற்கு முன்பாக அவர்கள் ஹாகா சோஃபியாவின் வாசலில் பார்த்துவிட்ட துருக்கி ஐஸ்க்ரீம் மட்டுமே!

ஹாகா சோஃபியா
ஹாகா சோஃபியா

அவர்கள் 1500 ஆண்டுக்கால வரலாற்றை அலட்சியமாக இடக்கையால் தட்டிவிட்டு, நீங்கள் சிலாகிக்கும் பைசான்டியன் கட்டடக்கலையைக் காலால் எத்திவிட்டு அத்தனை பேர் முன்னிலையிலும் `இங்கே ரொம்ப போரடிக்குது... எப்ப ஐஸ்க்ரீம் வாங்கித் தருவீங்க?' என்று நச்சரிக்கத் தொடங்குவார்கள். நீங்கள் திறந்திருக்கும் கதவுகளுக்கு வெளியிலிருந்து உங்களைக் கூவி அழைக்கும் ஞானத்தை, இன்னும் 40 ஆண்டுகள் காத்திருக்கச் சொல்லிவிட்டு பிள்ளைகளை இழுத்துக்கொண்டு வேறு வாசல் வழியாக வெளியேறி ஐஸ்க்ரீம் கடை நோக்கி நடக்க ஆரம்பிப்பீர்கள்.

அம்மு அப்படித்தான் செய்தாள். அவளுக்கு ஹாகா சோஃபியாவின் மீது துளியும் ஆர்வமில்லை. 105 அடி உயரமிருக்கும் மேல்விதானத்தின் ஓவியத்தில் குழந்தை ஏசுவோடு அமர்ந்திருக்கும் மேரி மாதாவைக் காண்பித்தபோது, கழுத்து வலிக்க அண்ண்ண்ணாந்து பார்த்துவிட்டு, “இவங்களும் மலையாளம்தான் பேசு வாங்களா?” என்று கேட்டாள். ஏனெனில், அவளின் மலையாளத் தோழிகள் அனைவரும் கிறிஸ்துவர்கள்! அதன்பின்னால், ஐஸ்க்ரீம் வேண்டி முகத்தைத் தூக்கிக்கொண்டு உதடுகள் விம்ம, பாட்டியிடம் தஞ்சமடையும் பேரப்பிள்ளை போல ஹாகா சோஃபியாவின் பெருந்தூண் ஒன்றின் காலடியில் போய் அமர்ந்துகொண்டாள்.

ஐஸ்க்ரீம்
ஐஸ்க்ரீம்

துருக்கியின் ஐஸ்க்ரீம் கடைகளில் எப்போதும் நீங்கள் கேட்டதும் ஐஸ்க்ரீமைக் கொடுத்துவிட மாட்டார்கள். நீண்ட கம்பியின் முனையில் ஐஸ்க்ரீம் கோனை செருகிவைத்து அதில் நீங்கள் கேட்ட வெனிலா, ஸ்ட்ராபெர்ரி, பிஸ்தா ஐஸ்க்ரீம்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, கவனமாக உங்கள் முன்னால் நீட்டுவார்கள். ஐஸ்க்ரீம் உருகி விடுமோ, கீழே மொத்தமும் கொட்டி விடுமோ என்று பதறி நீங்கள் அவசரமாக அதை எடுக்க முயலும் போது, பத்துப் பதினைந்து முறையாவது கையில் கொடுப்பது போல நீட்டி நீட்டி கொடுக்காமல் ஏமாற்றுவார்கள். கோனை தலைகீழாகக் கவிழ்த்து மண்ணில் கொட்டி விடுவது போல பதறடிப்பார்கள். இந்த விளையாட்டுக்குச் சிறியவர்கள், பெரியவர்கள் என்று பாகுபாடெல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை. குவைத்திலிருக்கும் துருக்கி ஐஸ்க்ரீம் கடையிலும் கர்ம சிரத்தையாக இந்த விளையாட்டுக்குப் பின்னரே ஐஸ்க்ரீம் கொடுக்கிறார்கள். நல்லவேளையாக அம்மு அழத்தொடங்கும் முன்பாக அவள் கையில் கொடுத்து அவளை சாந்தப்படுத்தி அனுப்பினார்கள். இதன்படி, உலகப் புகழ்பெற்ற ஹாகா சோஃபியாவை நாங்கள் அணு அணுவாகக் கண்டு ரசித்தோம் என்பதை விடவும், அதன் புகழ்பெற்ற வாசலில் அமர்ந்து துருக்கி ஐஸ்க்ரீமை ரசித்துச் சாப்பிட்டோம் என்பதே சரியான கூற்றாக அமையும்.

ஹாகா சோஃபியா
ஹாகா சோஃபியா

அங்கிருந்து பொடிநடையாகக் கிளம்பி இஸ்தான்புல் தெருக்களையும், வீதியின் நடுநடுவே சத்தமேயில்லாமல் படுவேகமாக வந்து போகும் டிராம் வண்டிகளையும் வேடிக்கை பார்த்தபடி நடந்து மதிய உணவுக்கு துருக்கிய உணவகத்தை அடைந்தோம். மொட்டை மாடியில் அமைக்கப்பட்டிருந்த அந்த உணவகத்திலிருந்து ஹாகா சோஃபியா சம உயரத்தில் தெரிந்தது. அங்கிருந்த பணியாளர் ஒருவர், நானும் அம்முவும் நெற்றியில் வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டைக் காண்பித்து, “இந்தப் புள்ளியை எதற்காக நெற்றியில் வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். ஆங்கிலம் தெரியாத அவருக்கு எப்படியெல்லாமோ நடனம் ஆடி சொல்லிப் பார்த்தும், இது ஒரு கலாசார அடையாளம் என்பதை அவருக்கு என்னால் புரிய வைக்க முடியவில்லை. அதனால், `மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும். ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு. இந்தப் பகுதியில் குங்குமத்தை வைப்பதால் உடல் உஷ்ணம் குறையும். குங்குமத்தின்மீது சூரிய ஒளிபடுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாகிறது' என்பது போன்ற அரிய வாட்ஸ்அப் கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொல்லி, அவர் பொது அறிவை வளர்க்க முடியாமல் போய்விட்டது!

அந்த உணவகத்தில் Testi Kebab என்றொரு துருக்கிய உணவைச் சாப்பிட்டோம். குறுகிய வாய்கொண்ட களிமண் குடுவையினுள் இறைச்சித் துண்டுகள், பூண்டுப்பற்கள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய், காளான் ஆகியவற்றைப் போட்டு மசாலாப் பொருள்களைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி குடுவையின் வாய்ப்பகுதியை சப்பாத்தி மாவால் இறுக மூடி எரியும் தந்தூரி அடுப்புக்குள் போட்டு விடுகிறார்கள். உள்ளே போட்ட இறைச்சிக்கேற்ப அது வெந்து தயாராக ஒன்றரை முதல் இரண்டரை மணி நேரம் எடுக்குமாம். (பசியே போய்டாது?!) கிரேவி தயாரானதும் அந்த மண் குடுவையின் அடிப்பகுதியை நம்மூரில் இளநீர் சீவுவது போல சீவி உடைத்துவிட்டு, குழம்பை மணக்க மணக்க நம் தட்டில் கொட்டுகிறார்கள். பக்கத்தில் டெல்லி அப்பளம் உப்பிப் பெருத்து விட்டது போல பெரிய வடிவில் இருக்கும் கோதுமையில் செய்யப்பட்ட குபூஸ் எனும் ரொட்டியை வைத்துக்கொண்டு, பூரி மசால் போல நினைத்துத் தொட்டுச் சாப்பிட வேண்டியதுதான். மைதாவை பஜ்ஜி மாவு போல கெட்டியாகக் கரைத்து ஐஸ்க்ரீமை அதில் முக்கியெடுத்து எண்ணெயில் பொரித்துக் கொடுத்த ஃப்ரைடு ஐஸ்க்ரீமையும் அங்கே தான் முதன்முறையாகச் சாப்பிட்டோம் (இப்போது நம்மூரிலேயே நிறைய உணவகங்களில் கிடைக்கிறது).

கீர்த்து நாள் முழுவதும் பெரும்பாலும் உறங்கிக்கொண்டே இருந்தாள். அவள், ஒரு வயதுக் குழந்தை என்பதால் தாய்ப்பாலூட்ட வெளியிடங்களில் கூச்சப்பட்டுக் கொண்டு, வெகுவாகச் சிரமப்பட்டேன். அந்த உணவகத்தில் பக்கத்து மேஜையில், கையில்லாத பனியனும் அரைக்கால் டிராயரும் அணிந்து, கால் மேல் கால் போட்டபடி, எதிரில் அமர்ந்திருந்தவர்களிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண், தன் மடியில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை மெதுவாகச் சிணுங்கியதும், வெகு இயல்பாக அதன் முகத்தை பனியனுக்குள் திணித்து, பாலூட்டியபடியே பேசுவதையும் உண்பதையும் தொடர்ந்தார். நான் திகைத்து, அவருக்கும் சேர்த்து இன்னும் அதிகமாகக் கூச்சப்பட்டுக் கொண்டேன். புனித ஞானம் வெளியில் நின்று கூவிக் கூவி அழைத்தாலும் அது பெரும்பாலானோருக்கு வெறும் கேள்வி ஞானமாகவே நின்றுவிடுவது இதனால்தான் என்று தோன்றியது.

(வாருங்கள் ரசிப்போம்!)