தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

தீரா உலா: ராஜகிரகம்

தீரா உலா
பிரீமியம் ஸ்டோரி
News
தீரா உலா

காயத்ரி சித்தார்த்

மகிழ்ச்சி என்பது மகிழ்ச்சியில் இல்லை. மாறாக அதை அடையும் முயற்சியில் இருக்கிறது.
- ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

2015 ஜனவரி 24-ம் தேதி எங்கள் இளைய மகள் கீர்த்துவின் முதல் பிறந்தநாள். அதற்கு முந்தைய தினம் போஸ்பரஸ் நீரிணையைப் பார்த்துவிட்டு இரவு அறைக்குத் திரும்பி விட்டோம். திரும்பும் வழியில் கீர்த்துவுக்கு கேக் வாங்குவதற்காக துருக்கியில் புகழ்பெற்ற Hafiz mustafa என்ற இனிப்பு அங்காடிக்குச் சென்றோம். அது இனிப்புச் சாவடியல்ல... இனிப்புச் சுரங்கம். துருக்கியின் ஓட்டோமான் பேரரசர்களின் அரண்மனை சமையற்காரர்களால் கண்டு பிடிக்கப்பட்ட ராஜ இனிப்பான Baklava-வுக்குப் பெயர்பெற்ற கடை அது. 1864-ம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் இக்கடையில் முதலில் ஒரே ஒரு சீஸ் கேக்கும், கால் கிலோ பக்லவாவும் வாங்கிக்கொண்டு போனோம். அறைக்குப் போய் சாப்பிட்டபின், அந்த இனிப்பின் சுவையில் மயங்கி அப்போதே திரும்பவும் கிளம்பிவந்து, திரும்பவும் கால் கிலோ பக்லவா வாங்கினோம். அங்கேயே டேபிளில் அமர்ந்து சுடச்சுட கனாஃபாவும் டர்க்கிஷ் காபியும் சாப்பிட்டோம். கனாஃபா நாவில்படும் ஒவ்வொரு முறையும் சொர்க்கத்தைக் காண்பித்தது. ஆர்வமிருப்பவர்கள் Kunafa recipe with cheese என்று கூகுளில் தேடிப் பாருங்கள். பக்லவா என்பது மைதாவில் நமது பப்ஸ் போல அடுக்கடுக்காக பேக் செய்து அதனுள் வால்நட், பிஸ்தா போன்றவற்றை பொதிந்துவைத்து சர்க்கரைப் பாகிலோ, தேனிலோ ஊறவைத்து செய்யப்படும் இனிப்பு வகை. ஓட்டோமான் பேரரசர்கள் ஒவ்வொரு ரமலான் பண்டிகையின் போதும் இந்த இனிப்புகளை Janissaries எனப்படும் காலாட்படை வீரர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளனர். கேக்குகள், புட்டிங்குகள், பக்லவா இனிப்பு வகைகள், டர்க்கிஷ் டிலைட் எனப்படும் ஜெல்லி மிட்டாய் போன்ற இனிப்புகள் என்று Hafiz Mustafa திரும்பிய பக்கமெல்லாம் இனித்துக் கிடக்கிறது.

மறுநாள் காலை, கீர்த்து கண்விழிக்கும் முன்பாக பலூன்களை ஊதி அவளைச் சுற்றிலும் படுக்கை முழுவதும் பரப்பி வைத்து, அவளுக்குப் பிடித்த பொம்மைப் பியானோவையும் அவள் முன்பாக வைத்துக் காத்திருந்தோம். விழித்தெழுத்து அவற்றைப் பார்த்து அவள்பட்ட ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் அன்று இஸ்தான்புல்லை மேலும் அழகாக்கி விட்டது.

தீரா உலா: ராஜகிரகம்

Hotellino-வின் மேனேஜராக இருந்த பெண்மணி, குழந்தைக்குப் பிறந்தநாள் என்று தெரிந்ததும் ஒரு கரடிப் பொம்மையைப் பரிசளித்தார். அந்தக் கரடி விரைவில் அம்முவின் தோழனாகிவிட்டது. வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. அம்மு அந்தக் குட்டிக் கரடிக்கு ஜன்னலின் வழியே மழையையும் இஸ்தான்புல்லையும் காண்பித்துக்கொண்டிருந்தாள்.

தீரா உலா: ராஜகிரகம்

மீதி நான்கு நாள்கள்தாம் இருக்கின்றன என் பதற்காக எப்படியாவது ஊர் திரும்புவதற்குள் எல்லா இடங்களையும் பார்த்துவிட வேண்டும் என்ற பதற்றம் எங்களிடம் எந்தப் பயணத்திலும் இருந்ததில்லை என்பதால், மழை குறைய காத்திருந்து, ரம்மியமான தூறலினூடே வெளியே கிளம்பினோம். பக்லவாவைக் கண்டுபிடித்த சமையற்காரர்களோ, சாப்பிட்ட அரசர்களோ இப்போது இல்லை. அவர்கள் மறைந்து 500 வருடங்களாகின்றன. ஆனால், பக்லவா சமைக்கப்பட்ட அரண்மனைக் குசினிகள் இன்றும் அப்படியே இருக்கின்றன. அவற்றைப் பார்க்கத்தான் சென்றோம். அந்த இடம் Topkopi Palace.

`தோப்கப்பி அரண்மனை' - ஓட்டோமான் அரச பரம்பரையினர் வாழ்ந்த மாபெரும் மாளிகை. ஓட்டோமான் பேரரசின் 624 ஆண்டுக்கால ஆட்சியில் கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் இந்த அரண்மனை அவர்களின் பிரதான வசிப்பிடமாகத் திகழ்ந்திருக்கிறது. இதன் மினியேச்சர் வடிவையே ஒரு சிறிய அறை அளவுக்கு வடிவமைத்து வைத்திருக்கிறார்கள் என்றால் பாருங்கள். அரச குடும்பத்தினரின் வாழ்விடமாகவும், நிர்வாகத் தலைமையிடமாகவும், பேரரசின் மிக உயர்ந்த கல்வி நிலையமாகவும் இருந்த இந்த அரண்மனை இப்போது இஸ்தான்புல்லின் மிகப் பெரிய அருங்காட்சியமாக இருக்கிறது.

 அரசவையின் ஒரு பகுதி
அரசவையின் ஒரு பகுதி

இந்த மாளிகைத் தொகுதியில் நூற்றுக்கணக் கான அறைகளும் மண்டபங்களும் இருந்தாலும், இவற்றில் முக்கியமான சிலவற்றை மட்டுமே மக்கள் பார்க்க முடியும். அரண்மனையில் வழக்கமாக 5,000 பேரும், விசேஷ தினங்களில் 10,000-க்கும் மேற்பட்டோரும் தங்கும் வகையில் வசதிகள் இருந்திருக்கின்றன. பண்டைய காலங்களில் வெள்ளை திருநங்கைகளும் பின்னர் எகிப்தின் ஓட்டோமான் ஆளுநரால் பரிசளிக்கப்பட்ட கறுப்பினத் திருநங்கைகளும் அரண்மனையின் காவலர்களாக பணி யமர்த்தப்பட்டிருக்கின்றனர். ஓட்டோமான் பேரரசியர்களின் `ஹாரம்' என்றழைக்கப்பட்ட அந்தப்புரம், நிதிக் கருவூலம், அரசவையாகப் பயன்படுத்தப்பட்ட அரங்குகள், நூற்றுக்கணக் கான சமையலறைகள் ஆகியவற்றை நாம் பார்வையிடலாம். அருங்காட்சியகச் சேகரிப் பில் ஓட்டோமான் உடைகள், ஆபரணங்கள், ஆயுதங்கள், பாதுகாப்புக் கவசங்கள், சிற்றோவியங்கள், மதம் சார்ந்த எச்சங்கள், கையெழுத்துப்படிகள் போன்றவை உள்ளன.

 துருக்கிய மசாலாப் பொருட்கள்
துருக்கிய மசாலாப் பொருட்கள்

பக்லவா கண்டுபிடிக்கப்பட்ட அரண் மனையின் சமையலறையில் 1,000 பேர் பணிபுரிந்திருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அங்கே சுமார் 7,000 பேருக்கு உணவு தயாரிக்கப் பட்டிருக்கிறது. ஓட்டோமான் பேரரசு, சாம்ராஜ்ஜியம் என்றெல்லாம் சொல்கிறேனே... அது எத்தனை பெரியதாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்திருக்கிறீர்களா?

அல்பேனியா, அல்ஜீரியா, போஸ்னியா, பல்கேரியா, சைப்ரஸ், எகிப்து, எரித்ரியா, கிரேக்க நாடு, ஹங்கேரி, இராக், ஜோர்டான், கொசோவோ, லிபியா, மெசடோனியா, மாண்டெனெக்ரோ, இஸ்ரேல், செர்பியா, சூடான், டுனிசியா, துருக்கி, உக்ரேன் என 21 நாடுகளை ஓட்டோமான் சுல்தான்கள் 624 ஆண்டுகள் ஒற்றை வெண்கொற்றக் குடையின்கீழ் ஆண்டு வந்திருக்கின்றனர்.

தீரா உலா: ராஜகிரகம்

அரண்மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வெகு சில பகுதிகளைச் சுற்றிப் பார்த்து முடிக்கவே நிச்சயம் ஒரு நாள் போதாது. அம்மு கால் வலிக்கிறது என்று சித்துவின் தோளில் ஏறி சவாரி செய்தாள். கீர்த்து பேபி கேரியரில் வசமாக அமர்ந்து என் மார்போடு ஒட்டிக்கொண்டு சுகமாக நாளெல்லாம் உறங்கினாள். அருங்காட்சியகத்தில் சித்து அம்முவைக் கீழே இறக்கி விட்டுவிட்டு, ஓட்டோமான் பேரரசர்களின் சிலைகளை ஆர்வமாகப் புகைப்படமெடுத்தார். அவள் உடனே அருங்காட்சியகம் முழுவதும் ஓடி ஓடி ஆங்காங்கே ஒளிந்துகொண்டு விளையாட ஆரம்பித்தாள். என்ன சொல்லியும் கேட்காத கோபத்தில் வேகமாகப்போய் அவள் காதைப் பிடித்து, அடிப்பதுபோல கையை ஓங்கிய நொடி... அவள் பின்னால் நின்றிருந்த இரண்டு துருக்கியப் பெண் காவல்துறை அதிகாரிகளைப் பார்த்தேன். அதில் ஒருவர் கடுமையான எச்சரிக்கும் பார்வையுடன் என்னைப் பார்த்து, வலக்கையை உயர்த்தி ஆட்காட்டி விரலை ‘கூடாது’ என்பது போல அசைத்தார். அவ்வளவுதான்... எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளை அடிப்பதும் அவர்களிடம் கடுஞ்சொற்களைப் பிரயோகிப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. ‘ஆசையாகச் சுற்றிப் பார்க்க வந்த இடத்தில் ஜெயிலில் களியோ குபூஸோ தின்னும்படி ஆகிவிடப்போகிறதோ...’ என்கிற பயத்தில், ‘நாம யாரு வம்புக்கும் போறதில்ல, யாரு தும்புக்கும் போறதில்ல’ என்று வைகைப்புயல் வடிவேலு போல நேக்காக ஜகா வாங்கிவிட்டேன் என்றாலும், அப்போது அம்மு பார்த்த பார்வைதான்... `ஒரே அசிங்கமா போச்சு குமாரு' மொமென்ட்!

 துருக்கிய வீரர்கள்
துருக்கிய வீரர்கள்
தீரா உலா: ராஜகிரகம்

அங்கிருந்து கிளம்பி துருக்கியின் மிகப் பழைய கடைவீதிகளில் சுற்றினோம். கடைக்காரர்கள் முகத்தைப் பார்த்தே இந்தியர் என்று அடையாளம் கண்டுகொள்கிறார்கள். சித்துவை `ஹேய் ஷாரூக் கான்' என்றும், என்னை `கேத்ரீனா கைஃப்' என்றும் கூவிக்கூவி அழைத்தது சிரிப்பாயிருந்தது. குவைத்தில் எங்கள் குடியிருப்பில் வசிக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அம்மணி ஒருமுறை `பாரதியார்' என்றால் யாரென்று கேட்டார். வீட்டைச் சுத்தம் செய்ய வந்துபோகும் தெலுங்குப் பெண்மணி எம்.ஜி.ஆர் யாரென்று தனக்குத் தெரியாதெனச் சொன்னார். அப்போதெல்லாம் வந்த வியப்பை விடவும், அபிதாப் பச்சன், ஷாரூக் கானைத் தவிர இந்திய நடிகர்கள் யாரையும் தெரியாதென அவர்கள் சொன்னபோது வந்த ஆச்சர்யம் மிகுதியாக இருந்தது. ஒரு கடையில், துருக்கியர் பால் கலக்காத தேநீர் அருந்துவதற்கென பயன்படுத்தும் குவளைபோன்ற அழகிய கண்ணாடித் டம்ளர்களையும், அதில் சர்க்கரையைப் போட்டுக் கலக்கும் சின்னஞ்சிறிய கண்ணாடி ஸ்பூன்களையும் பார்த்து மயங்கி, பலமாகவே பேரம் பேசி இந்திய மதிப்பில் 1,000 ரூபாய்க்குப் பெருமையாக ஆறு குவளைகளை வாங்கி வந்தேன். அது குவைத்திலேயே கிடைக்கும் என்பதும், குவைத்தில் அதன் விலை இந்திய மதிப்புக்கு 200 ரூபாய்தான் என்பதும் அடுத்த சில மாதங்களில் தெரியவந்தது ‘ஒரே அசிங்கமா போச்சு’ பார்ட் 2 மொமென்ட்!

தீரா உலா: ராஜகிரகம்

அன்றிரவு அறைக்குத் திரும்ப வெகு நேரம் ஆகிவிட்டதால் வழியிலேயே இரவு உணவை முடித்துக்கொள்ளலாம் என முடிவு செய்தோம். முந்தைய நாள் போலவே வழியெங்குமிருந்த கடைகளில் ஒன்றில் குபூஸ் சாப்பிடாமல், கூகுளின் உதவியுடன் ஓர் இந்திய உணவகத்தைத் தேர்வு செய்தார் சித்து. ‘பக்கத்துலதான், நடந்துடலாம்’ என்றார். கூகுளுக்கு எங்கள்மீது என்ன கோபமோ, `தீரன் - அதிகாரம் 1' படத்தில் வரும் தாத்தா போல ‘தோ கிலோமீட்டர், தோ கிலோமீட்டர்’ என்று ஊரெல்லாம் அலையவிட்டு எங்கெங்கோ மலையேற வைத்து செங்குத்தாக நின்ற ஓர் இந்திய உணவகத்தில் கொண்டு சேர்த்தது.

 கனாஃபா
கனாஃபா

சிக்கன் பிரியாணி, நான் - பாலக் பனீர், பாஸ்மதி ரைஸ் - தால் தட்கா ஆர்டர் செய்தோம். இத்தனை வருடங்கள் கழித்தும் எப்படி இத்தனை துல்லியமாக ஞாபகம் இருக்கிறதென்றால், அவையனைத்துமே அத்தனை கேவலமாக இருந்தன. `அடப்பாவிகளா... இஸ்தான்புல்லில் இந்திய உணவின் பிரதிநிதியாக இருக்கும் ஒரே ஓர் உணவகத்திலும் இத்தனை மோசமாகச் சமைத்தால் இங்கே வருபவர்கள் நம் நாட்டு உணவைப் பற்றி என்ன நினைப்பார்கள்... ‘இத பிரியாணின்னு சொன்னா தயிர்ப்பச்சடி கூட நம்பாதேடா’ என்று நொந்துகொண்டு பில் வந்ததும் நம்மூரில் கொடுப்பது போல நாலைந்து மடங்கு காசைக் கொடுத்துவிட்டு, அறைக்குத் திரும்பி பிரெட்டும் ஜாமும் சாப்பிட்டுப் படுத்தோம்.

(வாருங்கள் ரசிப்போம்!)