Published:Updated:

தீரா உலா: எகிப்தின் மர்மப் பிரமிடுகள்!

எகிப்தின் மர்மப் பிரமிடுகள்!
பிரீமியம் ஸ்டோரி
எகிப்தின் மர்மப் பிரமிடுகள்!

காயத்ரி சித்தார்த்

தீரா உலா: எகிப்தின் மர்மப் பிரமிடுகள்!

காயத்ரி சித்தார்த்

Published:Updated:
எகிப்தின் மர்மப் பிரமிடுகள்!
பிரீமியம் ஸ்டோரி
எகிப்தின் மர்மப் பிரமிடுகள்!

“நம்முடைய வாழ்க்கை தற்காலிகமாக இருக்கலாம்; நமது உடல் தற்காலிகமாக இருக்கலாம்; ஆனால் நம் புத்தி, புத்தியிலிருந்து கிளம்பிய சக்தி தற்காலிகமா... அது ஒரு தடம்விட்டுப் போகக்கூடாதா என்று நான் யோசிப்பதுண்டு.”

- உடையார் நாவலில் பாலகுமாரன்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2017, பிப்ரவரி 22, அன்று காலை ஹோட்டல் அறையிலிருந்து நாங்கள் கீசா பிரமிடுகளை பார்க்கக் கிளம்பினோம். காருக்குள் உட்கார்ந்திருந்த வழிகாட்டிப் பெண்மணி சிரித்தபடி வரவேற்று, “உலகப் புகழ்பெற்ற எகிப்திய பிரமிடுகளை நான்தான் உங்களுக்குக் காண்பிக்கப்போகிறேன்” என்றார். பரபரப்பான கெய்ரோ நகரத்தி லிருந்து வெறும் 10 மைல் தொலைவில் இருக்கின்றன கீசா பிரமிடுகள். ஆனால், இந்த 10 மைல்களுக்கிடையில் இருப்பவை 5,000 வருடங்கள். கார் ஓட்டுநர் அடுத்த 40 நிமிடங்களுக்குள் எங்களைக்

கி.பி 2017-லிருந்து கி.மு 2580-ம் ஆண்டுக்குக் கொண்டுசேர்த்தார். பின்னணியில் கண்கூசும் சூரிய ஒளியோடு வானில் நுனி உரசுவதுபோல நின்றிருக்கும் அந்த மெகா சைஸ் பிரமிடில் என்னவொரு பிரமாண்டம். இன்ஜினீயர்கள் இல்லாத காலத்தில் கட்டப்பட்ட பேராச்சர்யம்!

 ஒட்டகப்பயணம் -  எகிப்தின் முதல் படி பிரமிடு
ஒட்டகப்பயணம் - எகிப்தின் முதல் படி பிரமிடு

இந்தப் பிரமிடு கி.மு 2560-ல் வாழ்ந்த கூஃபு எனப்படும் எகிப்திய பாரோவின் (ராஜாவின்) கல்லறை என்கிறார்கள். இதன் மொத்தப் பரப்பளவு 13.5 ஏக்கர். உயரம் 481 அடி. ஏறத்தாழ 40 மாடிக்கட்டடத்தின் உயரம். பிரமிடின் உட்புறம் கருங்கற்களையும் எரிமலைப் பாறைக்கற்களையும் அடுக்கிக் கட்டி, வெளிப்புறத்தில் 23 லட்சம் சுண்ணாம்புக் கற்களால் வெளிப்பூச்சு கொடுத்திருக்கிறார்கள். அத்தனை உயரத்தில் அடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கருங்கல்லும் 2.5 டன் முதல் 30 டன் வரை எடை கொண்டதாம். பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் இந்த பிரமிடின் வெளிப்பூச்சை மட்டுமே உதிர்க்க முடிந்திருக்கிறது.

எதற்காக ஒரு கல்லறையை இத்தனை பெரிதாகக் கட்ட வேண்டும்.... சர்வ நிச்சய மாய் காலத்தால் அழியாமல் தடம்விட்டுப் போகும் முயற்சிக்காகத்தான் என்றாலும், இது அரசர்களின் மரணத்துக்குப் பிறகான, மறுவாழ்வுக்கான இல்லமாகக் கட்டப்பட்டிருக்கிறது. இது போல கல்லறைக் கட்டடங்களை பிரமிடு வடிவில் கட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்திருக்கிறது. எகிப்துக்கு அருகிலிருக்கும் சூடானில் நுபியர்கள் 200-க்கும் அதிகமான பிரமிடுகளைக் கட்டியிருக்கிறார்கள். இருந்தாலும், எகிப்து மட்டுமே உலக அளவில் பிரமிடுகளுக்குப் புகழ்பெற்றதாக இருந்து வருகிறது. அதிலும், இந்த கீசா பிரமிடு 1647-ல் பிரான்சில் Strasbourg Cathedral கட்டப்படும்வரை தொடர்ந்து 4,000 ஆண்டுகளாக உலகின் மிகப் பெரிய கட்டடம் என்ற பெருமையைத் தக்க வைத்திருந்திருக் கிறது!

தீரா உலா: எகிப்தின் மர்மப் பிரமிடுகள்!

எகிப்தியர்களின் மதங்களில் அமூன், ஒசைரிஸ், ஹோரஸ், அதின், மூத், ஆத்தோர், கோன்சு, சகுமித்து, தாவ், வத்செட் என்ற பெயர்களில் ஏராளமான கடவுள்கள். ‘ரா’ எனப்படும் சூரியக்கடவுளும் ‘இஸிஸ்’ எனப்படும் தாய்க்கடவுளும் முக்கியமானவர்கள். இத்தனை கடவுள்கள் இருந்தாலும் மக்கள் யாரும் கடவுள்களை நேரடியாக வழிபட முடியாது. மக்கள் தங்களின் பிரார்த்தனைகளை பாரோக்கள் எனப்பட்ட எகிப்து அரசர்கள் மூலமாகவும், பார்வோன்கள் எனப்பட்ட பூசாரிகள் மூலமாகவும் மட்டுமே கடவுளுக்குத் தெரியப்படுத்த முடியுமாம். இதனால், கடவுள்களுக்கான கோயில்களுக்குள் அரசனுக்கான கோயிலும் இருக்கிறது.

தன் உடல் வைக்கப்பட இருக்கும் பிரமிடை சகல வசதிகளுடன் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கு வதுதான் எகிப்திய அரசர்கள் பதவிக்கு வந்ததும் பிறப்பிக் கும் முதல் ஆணையாக இருக்குமாம். அரச கருவூலம் முழுவதையும் காலியாக்கி தன்னுடைய பிரமிடுக்காக செலவழித்த அரசர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள்.

வழிகாட்டிப் பெண்மணி இந்தக் கதைகளையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கையில், அம்முவும் கீர்த்துவும் அத்தனை பெரிய பிரமிடை அலட்சியப்படுத்தி, அதைச் சுற்றியிருந்த பாலைவனத்தில் சிதறிக்கிடந்த கற்களை ஆர்வமாகச் சேகரித்துக்கொண்டிருந்தார்கள். இன்னோர் ஆச்சர்யமாக அவர்கள் சேகரித்துவந்த கற்களோடு நிறைய சிப்பிகளும் இருந்தன. பாலைவனத்தில் எப்படி சிப்பிகள்... ``எகிப்து முழுவதுமே முன்னொரு காலத்தில் கடலில் மூழ்கியிருந்த பகுதிதான்'' என்றார் அந்தப் பெண்மணி.

 இம்ஹோடெப்
இம்ஹோடெப்

எகிப்தியர்கள், இறப்புக்குப் பிறகு இன்னொரு வாழ்க்கை நிச்சயம் உண்டு என்று ஆணித்தரமாக நம்பியிருக்கிறார்கள். அந்த மறுவாழ்க்கைக்கு உடல் தேவை என்பதால்தான் உடலை அழிந்து போகாமல் பதப்படுத்திவைக்கும் `மம்மிபிகேஷன்' முறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அரசர் இறந்ததும் அவர் உடலை மம்மியாக்கி `சர்க்கோபாகஸ்' என்னும் கல் தொட்டிக்குள் வைத்து அதைத் தங்கத்தால் முலாம் பூசி பிரமிடுக்குள் இருக்கும் அரசர் அறையில் புதைப்பார்கள். 13 ஏக்கரில் கட்டப்பட்டிருக்கும் பிரமிடுக்குள் அரசர் அறை தவிர்த்து, அரசியர் அறை, பாதாள அறை, ரகசிய அறை, பொய் அறை என்று எக்கச்சக்க கட்டமைப்புகள் இருக்கின்றன. அரசரின் மறுமை வாழ்வுக்குத் தேவை யான உடைகள், ஆபரணங்கள், ஏராளமாகப் பொன்னாலான பொருள்கள், களஞ்சியம் போல சேமிக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள்கள் என்று குவிப்பதோடு, அரசருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்வதற்காக ஏராளமான வேலையாட்களையும் மம்மியாக்கி அறைகளில் நிரப்பி வைப்பார்களாம். அரசர் இறக்கும் போதே வேலையாட்களும் இறந்து விடுவார்களா என்ன... அவர்களுக்கு உயிர் இருக்கும்போதே ரத்தம் வடியச் செய்து மம்மியாக்கினார்களா அல்லது நஞ்சு கொடுத்து கொன்றபின் செய்தார்களா என்பது மர்மமாக இருக்கிறது.

பிரமிடுகளுக்குள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு தங்கமும் நகைகளும் கொட்டிக்கிடப்பதால், சடங்குகள் முடிந்து பிரமிடு மூடப் பட்டு அனைவரும் கலைந்த உடனேயே, கொள்ளையர்கள் பிரமிடை உடைத்து உள்ளே நுழைந்து அத்தனை செல்வங்களையும் கொள்ளையடித்துப் போக ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு பிரமிடுக்கு காவலாக அரசர் நியமித்திருக்கும் காவலதிகாரிகளே உடந்தையாக இருந்ததால் இந்த பிரமிடு கொள்ளைகளை அவர் களால் தடுக்கவே முடியாமல் இருந்திருக்கிறது. கொள்ளையர்களை ஏமாற்றுவதற்காகப் பிரமிடுகளின் அறைகளை புதிர் விளையாட்டு போலவும், உள்நுழையும் வழிகளை மிகக் குறுகலாகவும் நீண்டதாகவும், பிரமிடின் வாசலை மிக உயரத்திலும் வைத்தெல்லாம் கட்டிப் பார்த்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்று தான், அரசர் அறைக்கு முன்னால் அமைக்கப்படும் பொய்யான அரசர் அறையாம்!

தீரா உலா: எகிப்தின் மர்மப் பிரமிடுகள்!

எகிப்தின் முதல் பிரமிடைக் கட்டிய மனிதனின் பெயர் இம்ஹோடெப். எகிப்து வரலாற்றில் அதி முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் இம்ஹோடெப், பாரோவுக்கு அடுத்த நிலையில் மதிக்கப்பட்ட அரசு உயரதிகாரி. ஜோஸர் என்ற எகிப்திய பாரோவுக்காக மேற்கு எகிப்தில் சக்காரா என்ற இடத்தில் இவர் கட்டிய ‘படி' பிரமிடே (Step Pyramid) எகிப்தின் முதல் பிரமிடு. பிரமிடை முழுக்க முழுக்க கல்லால் கட்டிய பெருமையும், பாப்பிரஸ் என்ற தாவரத்திலிருந்து பேப்பர் செய்யும் முறையைக் கண்டுபிடித்த பெருமையும் இந்த இம்ஹோடெப்பையே சேரும் என்கிறது வரலாறு.

பிரமிடுகளைப் பார்த்த பிரமிப்பு குறையும்முன்பாகவே கீசா பெரும்பிரமிடின் அருகே இருந்த உலகப் புகழ்பெற்ற ஸ்பிங்ஸ் சிலையைப் பார்க்கப் போனோம். சிங்க உடலும் மனித முகமும்கொண்ட அந்தச் சிலைதான் உலகின் மிகப் பெரிய ஒற்றைக் கல்லால் செதுக்கப்பட்ட சிற்பம். இந்தச் சிலையின் வயது, சுமார் 4,500 ஆண்டுகள்.

100 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தச் சிலையின் முழு உருவமே தெரியவந்திருக்கிறது. அதற்கு முன், வெறும் தலை மட்டுமே வெளியே தெரிய, உடல் முழுவதும் மணலால் மூடப்பட்டிருந்திருக்கிறது.

தீரா உலா: எகிப்தின் மர்மப் பிரமிடுகள்!

நாங்கள் வசிப்பது பாலைவன தேசமான குவைத்தில் தான் என்றாலும், பிள்ளைகள் அதுவரை ஒட்டகங்களை நேரில் பார்த்ததில்லை. அம்மு ஒட்டகச் சவாரி போக வேண்டுமென்றாள். கீர்த்து ஒட்டகத்தின் பெரிய பற்களைப் பார்த்து அது கடித்துவிடும் என்று பயந்து அழுதாள். ஆளுக்கொரு குழந்தையுடன் இரண்டு ஒட்டகங்களில் ஏறினோம். படுத்திருக்கும்போது நம் இடுப்புயரத்துக்கு இருக்கும் ஒட்டகம் எழுந்து நின்றதும் நாங்கள் எட்டு அடி உயரத்திலிருந்தோம். இரண்டு ஒட்டகங்களும் கீசாவின் மூன்று பிரமிடுகளையும் வலம்வந்து நின்றன. பிரமிடுகளை நேரில் பார்க்க வேண்டுமென்பது எனது பள்ளிப்பருவக் கனவு.

16 ஆண்டுகள் கழித்து அந்தக் கனவு நனவான மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் அடுத்து உலகின் மிகப்பெரிய வரலாற்றுக் களஞ்சியமான எகிப்து மியூசியத்துக்குக் கிளம்பினோம்.

(வாருங்கள் ரசிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism