Published:Updated:

தீரா உலா: நதியே... நைல் நதியே... நீயும் பெண்தானே!

- காயத்ரி சித்தார்த்

பிரீமியம் ஸ்டோரி
பூவிரிந்து வானெங்கும் தேன்விரிந்து பொன்விளைந்தாற் போலும் நறும்பொடி விரிந்து கா விரிதல் போலெங்கும் விரிதலாலே காவிரியாறு என்றார்கள். - பாரதிதாசன்

இலங்கையிலிருந்து எங்களுடைய இருப்பிடமான குவைத் திரும்பியபிறகு, அடுத்து டூர் செல்லும் நாளைக் குறித்துவிட்டோம். ஆனால், எங்கே செல்லப் போகிறோம் என்பது எங்களுக்கே சஸ்பென்ஸ்தான்.

“நீங்கள் ஏன் எகிப்து போகக் கூடாது? உலகிலேயே அழகான நாடு!” என்றான் மஹ்மூது. மஹ்மூது எங்கள் குடியிருப்பில் வசித்த எகிப்திய பேச்சிலர் இளைஞன். குவைத்தில் வாழும் வெளிநாட்டவர்களில் எகிப்தியர்களின் எண்ணிக்கை இரண்டாமிடத்தில் இருக்கிறது. இந்தியர்களைப் போன்றே அடிமட்ட வேலைகளிலிருந்து உயரதிகாரிகள், மருத்துவர்கள் வரை எகிப்தியர்கள் இங்கே விரவியிருக்கிறார்கள்.

எகிப்தியர்களுக்கு நாட்டுப்பற்றும் எகிப்து குறித்த பெருமிதமும் அளவிட முடியாததாக இருக்கிறது. அதற்கு காரணம் இல்லாமலில்லை என்பது, எகிப்து போன பிறகுதான் புரிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் சொந்த ஊர் ஈரோடு. இலக்கியங்கள் புகழும் காவிரியாற்றங்கரையில் வளர்ந்தவள். என் பால்ய காலங்களில் காவிரி நிறைகுடம் போல தளும்பிக்கொண்டிருந்தது. விரிப்பின் அகலும், தொகுப்பின் எஞ்சும் என இக்கரைக்கும் அக்கரைக்குமாக கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீராலாகிப் பரந்திருந்தது. பார்ப்போர் எவருக்கும் இந்நதி ஒருநாளும் வற்றவே போவதில்லை என்று தோன்றும்படியாகக் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. வருடா வருடம் தாத்தம்மாவின் திதி வரும்போது, அப்பா எங்களை ஆற்றில் குளிக்க அழைத்துப்போவார். நீரில் தலை முழுகும்படி செய்ய மாட்டேன் என்று ஒவ்வொரு முறையும் தவறாமல் பொய்ச் சத்தியம் செய்வார். ஆற்றில் இறங்கிய பின்னால் நாங்கள் ஏமாந்திருக்கும் கணத்தில் ஒரு கையால் எங்கள் மூக்கைப் பிடித்துக்கொண்டு மறுகையை தலையில் வைத்து சட்டென்று நீருக்குள் அழுத்துவார். அப்போது நாங்கள் பார்த்தது ஒரு மாய உலகம். மணலெல்லாம் பொன்னென மின்ன அதில் சிப்பிகளும் சங்குகளும் நீர்ச்செடிகளும் வெள்ளி மீன்களும் மெல்லென நகர்ந்து கொண்டிருக்கும். கதறிக் கதறி அழுதாலும் மீண்டும் மீண்டும் அந்த அனுபவத்துக்காக அச்சம் கலந்த குறுகுறுப்போடு காத்திருப்போம்.

தீரா உலா: நதியே... நைல் நதியே... நீயும் பெண்தானே!

வானம் போல, சூரிய சந்திரர் போல இந்த ஆறும் ஒருநாளும் மாறாமல் இப்படியேதான் இருக்கப்போகிறது என்று அந்த வயதில் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், எனது 25 வயதுக்குள்ளாகவே திரண்டு புனலோடிய காவிரி, முற்றிலும் வறண்டு மணலோடிக் கிடப்பதைப் பலமுறை பார்த்து விட்டேன்.

நீரற்ற ஆறு, வாழ்ந்து கெட்ட வீட்டைப் போன்றதொரு தோற்றம் கொண்டிருக்கும். பாறைகள் வெளித்தெரிய, வறண்டு கிடக்கும் ஆற்றைப் பார்க்கையில், பல நாள்கள் பசியால் வாடி, முலை வற்றிப் படுத்திருக்கும் தாயொருத்தியைப் பார்ப்பது போலிருக்கும். பார்க்கப் பார்க்க இன்ன காரணமென்றறியாமல் மனதிற்குள்ளாக குற்ற உணர்ச்சி பெருகும். வரியோடிக் கிடக்கும் மணலெல்லாம் திரண்டு மேலழுந்து மாபெரும் சுட்டு விரலாகி கண்முன்னால் நீண்டு ‘நீதான் காரணம்... நீயும்தான் காரணம்’ என்று குற்றம்சாட்டும். அதற்கு மேலும் அந்தக் கரையில் நிற்கத் திராணியில்லாமல் தலைகுனிந்து திரும்பி விடுவேன்.

ஒரு நதியின் இறப்பென்பது அந்த நகரத்தின் இறப்பு. ஆண்டாண்டுக் காலம் அனுசரிக்க வேண்டிய பெரும் துக்கம். நாம் வருத்தமேயில்லாமல், ஒருதுளி கண்ணீர்கூட சிந்தாமல் எத்தனை நதிகளின் மரணங்களை வெகு இயல்பாகக் கடந்து போயிருக்கிறோம்!

நதிக்கரைகளில்தான் நாகரிகம் வளர்ந்ததாகச் சொல்கிறார்கள். நாம் எத்தனை வளர்ந்த பின்னும் நதிகளை நாகரிகமாக நடத்துவதற்குக் கற்றுக்கொள்ளவில்லை. நிழலின் அருமையை வெயிலில் உணர்வதுபோல, நாம் இழந்த நதிகளின் ஒட்டுமொத்த தூய்மையையும் நீர்மையையும் ஆழத்தையும் அகலத்தையும் எகிப்தில் நைல் நதியிடம் கண்டு வாயடைத்து நின்றேன்.

நைல் நதி உலகிலேயே மிக நீளமான ஆறு. இதனுடைய மொத்த நீளம் 6,650 கிலோமீட்டர். ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் வடக்கு நோக்கிப் பாயும் இந்த அமுதசுரபி இல்லாது போயிருந்தால், ஆப்பிரிக்காவின் தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரிட்ரியா, சூடான், தெற்கு சூடான் மற்றும் எகிப்து என மொத்தம் 11 நாடுகள் வெறும் பாலைவனமாக எஞ்சியிருக்கும்.

பரந்து விரிந்த சகாரா பாலைவனத்தின் நடுவே உள்ளங்கையின் ஆயுள் ரேகை போல நீலவண்ணத்தில் நீண்டிருக்கும் நைல் நதியும் அதன் இரு கரையோரங்களில் மட்டுமே பூத்திருக்கும் பசுமையும் எகிப்து நாட்டின் 95 சதவிகித மக்கள், நதிக்கரைகளை ஒட்டியே வாழ்வதை அறிவிக்கின்றன.

மலையுச்சியில் தொங்கும் மனிதனைக் காப்பாற்றுவதற்கென நீட்டப்பட்ட கரம் போல நைல் எகிப்தினுள் நீண்டிருக்கிறது. அக்கரத்தினை எத்தனை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள வேண்டுமென்பதை எகிப்து அரசும் மக்களும் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர். அதனால்தான் 11 நாடுகள் வழியாகப் பாயும் நைல் நதியைப் பல்லாண்டுகளாக எகிப்து மட்டுமே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. நாட்டின் வளமனைத்தும் ஒற்றை நதியில் அடங்கியிருப்பதால் அதன் தூய்மையைப் பாதுகாப்பதற்காக எகிப்து அரசு கடுமையான சட்டங்களை இயற்றி அதை நடைமுறைப்படுத்தியிருக்கிறது.

நம்மைப் போலவே எகிப்திலும் நதியைப் பெண்ணாகவும் கடவுளாகவும் உருவகித்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. கூடவே நைல் நதியில் ஏராளமான முதலைகள் இருப்பதால் அவர்கள் மதத்தில் ஆற்றுக்கடவுளாக முதலையின் தலைகொண்ட `சோபெக்' என்ற கடவுளும் இருக்கிறார்.

நைல் நதி முழுவதுமே இந்த சோபெக் கடவுளின் வியர்வையாகத்தான் கருதப்படுகிறது. நம்மைப் போல ஆற்றங்கரையில் பூஜித்து, ஆற்று நீரில் தலைமுழுகி பூஜை பொருள்களையும், உடுத்தியிருக்கும் ஆடையையும் ஆற்றிலேயே மிதக்கவிட்டு நீரை மாசுபடுத்தவிடாமல், பல்லாயிரம் வருடங்களாக நைல் நதியை இந்த முதலைக் கடவுள்தான் பாதுகாத்து வருகிறார்.

எகிப்திய அரசும் நைல் நதியை மாசு படுத்துவோருக்குப் பாரபட்சமின்றி பெரும் தொகையை அபராதமாக விதித்து அதன் தூய்மையைக் காப்பாற்றி வருகிறது. குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து நாலரை லட்சம் ரூபாய் வரை அபராதமோ சிறை தண்டனையோ விதிக்கப்படுகிறது.

 பெல்லி டான்ஸருடன் அம்மு...
பெல்லி டான்ஸருடன் அம்மு...

பண்டைய எகிப்தில் வழிபடப்பட்ட நைல் சம்பந்தப்பட்ட மற்றொரு கடவுளின் பெயர் `ஹேப்பி’. இது நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் கடவுள்.

வெள்ளப் பெருக்கால் நதியில் மீன்வளம் பெருகியதாலும், வெள்ளம் வடிந்த பிறகான வண்டல் மண்ணில் பயிர்கள் செழித்து வளர்ந்ததாலும் இக்கடவுளை `தாவரங்களைக்கொண்டு வரும் நதியின் இறைவன்’ அல்லது ‘மீன்களின் இறைவன்’ என்று அழைத்திருக்கிறார்கள்.

1999-ல் எகிப்து பற்றி அமெரிக்கர்கள் எடுத்த ‘தி மம்மி’ என்றொரு படத்தைப் பார்த்ததாலோ என்னவோ, எகிப்து என்றால் பிரமிடுகளும், ஒட்டகங்களும், பாலைவன மக்கள் வாழும் டென்ட்டு களும் மட்டும் இருக்குமிடம் என்று நினைத்திருந்தேன்.

மாலையில் கெய்ரோ விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்தால், வானுயர்ந்த கட்டடங்களோடு நவநாகரிக எகிப்து இரவு விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது. சுற்றுலா வழிகாட்டி எங்களை வரவேற்று அழைத்துச் சென்றார்.

அன்றைய இரவு உணவு டூர் ஏஜென்சியின் சார்பில், ஆடம்பரமான நைல் க்ரூஸ் ஒன்றில் எங்களுக்கான டின்னர் அன்பளிப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறிய அளவிலான சொகுசுக் கப்பல் போல அந்த க்ரூஸ் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நதிக்கரையில் நின்றிருந்தது.

நான் க்ரூஸை அலட்சியப்படுத்தி ஆர்வமாக நைல் நதியைப் பார்க்க முயற்சி செய்தேன். நதி நீர் தேங்கி நிற்கும் பாதரசம் போல, கன்றுக்குட்டியின் கண்கள் போல இருட்டுக்குள் பளபளத்துக் கொண்டிருந்தது.

க்ரூஸுக்குள் பஃபே முறையில் உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. நாங்கள் உள்ளே நுழைந்து ஜன்னலோரமாகப் போடப்பட்டிருந்த மேஜை இருக்கைகளில் அமர்ந்தோம். சற்று கழித்து, படகு புறப்பட்டு நதியில் மெள்ள நகரத் தொடங்கியது. கண்களை உறுத்தாத மெல்லிய விளக்கொளியும் பின்னணியில் ஏதோ எகிப்திய இசையுமாக பயணம் ரம்மியமாக இருந்தது.

நாங்கள் சாப்பிடத் தொடங்கியிருந்தோம். அரை மணி கழிந்திருக்கும். நான் குறுகுறுப்பாக, “ஏம்ப்பா டின்னர் கூடவே பெல்லி டான்ஸ் இருக்கும்னு சொன்னாங்களே... எதையும் காணோமே... நான் பெல்லி டான்ஸ் பார்த்ததே இல்லே” என்று சிரிப்புடன் கிசுகிசுத்தேன்.

அப்போதே அதை கேட்டுவிட்டது போல, சட்டென்று ஒரு பெண் படகின் மையத்தில் தோன்றினாள். நான் அய்யோவென்று வெட்கி கைகளால் கண்களை மூடிக் கொள்ளுமளவுக்கு மிகக்குறைந்த உடைகளும், பெண்களே பொறாமை கொள்ளும் உடலமைப்பும், உடலெங்கும் மின்னி எரியும் சரவிளக்குகளுமாக இருந்த அப்பெண்ணும் அவளருகில் நின்ற இரண்டு ஆடவர்களும் பின்னணியில் ஒலிக்கும் இசைக்கேற்ப ஆடத் தொடங்கினார்கள். கொஞ்ச நேரத்திலேயே, அது ஒரு கலை என்பதும், ஆழ்ந்த பயிற்சியோடும் திறமையோடும் அர்ப்பணிப்போடும் அவர்கள் அந்த நடனத்தை இசையில் லயித்து ஆடுவதும் புரிந்தது.

அப்பெண் ஆடிக்கொண்டே ஒவ்வொரு மேஜையாகச் சுற்றி வந்தாள். யாரெல்லாம் அவளுடலைக் கண்கொண்டு பார்க்கக் கூசி தலையைத் திருப்பிக் கொள்கிறார்களோ அவர்களையெல்லாம் வலிந்து சென்று கைப்பற்றி இழுத்து தன்னோடு ஆடச் செய்தாள்.

எங்கள் மேஜைக்கருகில் அவள் வருகையில் சித்தார்த் முகம் வெளிறி, வேடிக்கை பார்ப்பவர் போல ஜன்னல் பக்கமாகத் திரும்பிக் கொண்டார். என்னிடமும், “அய்யோ நமக்கு வேற ஆடவே வராதே” என்ற பதைபதைப்பு இருந்தது. அப்பெண் சிரித்துக்கொண்டே அம்முவை கைப்பற்றி இழுத்துப் போய் நடனமாடினாள். அம்முவுக்கோ சிரிப்புத் தாளவில்லை.

நடனம் முடிந்தபோது படகு கிளம்பிய இடத்துக்கே திரும்பி வந்திருந்தது. நடனத்தினூடே நாங்கள் கவனித்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்று...

புரியாத மொழியில் ஒலித்துக்கொண்டிருந்த அந்த இசைக்கு நடுவே திடீரென ‘பளிங்கினால் ஒரு மாளிகை... பவளத்தால் மணி மண்டபம்’ பாடலின் பல்லவி வரிகள் வெறும் இசையாக ஒலித்தன. ஆச்சர்யப்பட்டு நான் அதை மொபைலில் பதிவு செய்தேன்.

யாரிடமிருந்து யார் சுட்டார்களோ தெரியவில்லை. அந்த நேரத்தில் அந்த இசையைக் கேட்டது, இந்திய முகங்கள்கூட இல்லாத அந்நிய நிலத்தில் எதிர்பாராமல் தமிழர் ஒருவரை சந்தித்த உணர்வைக் கொடுத்தது. மகிழ்ச்சியாக அறைக்குத் திரும்பினோம்.

பயணக்களைப்பில் மூவரும் உறங்கிவிட, மறுநாள் காலை என்னுடைய பிரமிடுகளை பார்க்கப் போகும் சந்தோஷத்தில் நான் மட்டும் வெகுநேரம் விழித்திருந்தேன்.

ஆம்... அடுத்து நாம் பார்க்கவிருப்பது உலக அதிசயங்களில் ஒன்றான வானளாவிய `கிசா' பிரமிடுகள்!

(வாருங்கள் ரசிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு