Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: ரயில் கதைகள்... சர்நேம் சர்ச்சைகளும் ஒரு துறவியின் பிடிவாதமும்| பகுதி 14

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்

``நான் பந்தத்தைத் துறந்துவிட்டேன். இறைவன் சேவை மட்டுமே எனது ஒரே செயல். வேறெந்த விழைவும் எனக்கில்லை" என்று சலனமற்ற குரலில், தீர்க்கமாகப் பேசினார்.

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: ரயில் கதைகள்... சர்நேம் சர்ச்சைகளும் ஒரு துறவியின் பிடிவாதமும்| பகுதி 14

``நான் பந்தத்தைத் துறந்துவிட்டேன். இறைவன் சேவை மட்டுமே எனது ஒரே செயல். வேறெந்த விழைவும் எனக்கில்லை" என்று சலனமற்ற குரலில், தீர்க்கமாகப் பேசினார்.

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

இந்தியா ஒரு சுவாரஸ்யமான நாடு. இந்தப் பரந்த நிலப்பரப்பில்தான் எத்தனை வகையான மனிதர்கள், `என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...’ என்று நம்பி வாழும் பல கோடி நல்ல உள்ளங்களில் நானுமொருத்தி. விமானத்திலிருந்து பார்க்கும்போது கிடைக்கும் காட்சிக்கும், ரயிலிலோ பேருந்திலோ பயணம் செய்யும்போது விரியும் காட்சிக்கும் வானம் பூமியளவு தூர வேறுபாடு உண்டு. அதுபோலத்தான் இந்தியாவைப் பறவைக் கோணத்தில் பார்ப்பதற்கும், அதன் நாளங்களினூடே பயணித்து அனுபவப்படுவதற்குமான வேறுபாடு.

சில வருடங்களுக்கு முன்பு வரை பயணிகளின் பெயர்களை அட்டவணையிட்டு, ரயில் கிளம்புவதற்குச் சில நிமிட நேரத்துக்கு முன்பு அந்தந்த வகுப்புகளின் கதவுகளில் ஒட்டுவார்கள். இன்றும் சில இடங்களில் இந்த முறை கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

பயணச்சீட்டில் இருக்கை எண்ணை ஓரிருமுறை சரிபார்த்துக்கொள்வதும், அருகிலிருக்கும் இருக்கைக்குச் சொந்தக்காரர் ஆணா, பெண்ணா என்று தெரிந்துகொள்வதும் வழக்கமாக இருந்தது.

அப்படி ஒரு முறை என் பெயரைவைத்து எனது 'சர்நேம்' என்னவென்று தெரிந்துகொள்ள முடியாமல் போன தவிப்பை இறுதியில் என்னிடமே கேட்டு வெளிப்படுத்திவிட்டார் ஓர் அம்மையார்.

வட இந்தியாவில் சில காலம் மட்டுமே வாழ்ந்தவரென்றாலும் அவர்களின் 'சர்நேம்' தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை ஒருவரால் அறிந்திருக்க முடியும். சர்நேம் இடங்களில் தந்தையின் பெயரை இனிஷியலாக எழுதுவதுதான் பன்னெடுங்காலமாக நம் பக்கத்தில் பழக்கம் என்றிருக்கிறது. ஆனால் வட இந்தியர்கள் அப்படியல்ல. அதன் தேவையின்மையை உணர்ந்து சமீபகாலமாக சிலர் அதைத் தவிர்த்து வந்தாலும், இன்னும் பெரும்பாலானவர்கள் தங்களது இனம், சாதி ஆகியவற்றைப் பெருமையான அடையாளமாக 'சர்நேம்' என்று சுமந்துகொண்டுதானிருக்கிறார்கள். அந்தப் பெண்மணியும் பொறுமையாகச் சுற்றியிருந்தவர்களிடம்

தன் சர்நேம் வைத்து அறிமுகப்படுத்திக்கொண்டார். மீண்டும் என்னிடம் வந்து "உங்க சர்நேம்" என்றார்.

வயதும் அனுபவமும் மிகுந்திராத அப்பருவத்தில், "எங்க ஊர்ல சர்நேம் கிடையாது, இனிஷியல்தான். அப்பாவோட பெயரை இனிஷியலாக வைத்துக்கொள்வோம்" என்றேன். எத்தனை பேரிடம் இதே பதிலைக் கூறியிருப்பேன் என்று தெரியாது, ஆனால் பலமுறை இதையே சலிக்காமல் கூறியிருக்கிறேன். ஒருவரின் சாதியைத் தெரிந்துகொள்ள ``உன் சாதியென்ன’’ என்று கேட்காமல், சர்நேம் என்னவென்று கேட்கிறார்கள் என்று புரிந்துகொள்ள எனக்குச் சில காலம் தேவைப்பட்டது.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

குறிப்பிட்ட சில சாதிகள் தவிர்த்து அவர்களுக்கு வேறு சாதிகள் தெரிந்திருப்பதில்லை என்பதும் நிதர்சனம். ``ஆர் யூ ஐயர்?" என்பார்கள். ``இல்லங்க" என்றால் மீண்டும், ``ஆர் யூ பில்லேய்?" என்பார்கள். ``அதுவுமில்லங்க" என்றால் இனம்புரியாத குழப்பத்தில் ஆழ்ந்துபோவார்கள். அப்படித்தான் அப்பெண்மணியும் நெடுநேரம் முயன்று எப்படியெல்லாமோ வடிகட்டிவிடலாமென்று கேட்டுப் பார்த்தார். ஒரு கட்டத்தில் ``பிரியதர்ஷினி உங்க கேஸ்ட்டா?" என்றார்.

``என் சாதியைத் தெரிஞ்சுக்க என்ன அவ்வளவு ஆர்வமா இருக்கீங்க?" என்று கேட்டதற்கு, ``அதில்ல... நான் விரதமிருக்கேன்

அதான் பக்கத்துல நாம ஒண்ணா ட்ராவல் பண்ணணும். அதனால கேட்டேன், தப்பா எடுத்துகாதீங்க" என்றார்.

``இதற்கு மேல் தப்பா எடுத்துக்க என்னங்க இருக்கு? நான் எந்தச் சாதியா இருந்தா உங்க விரதம் தீட்டுப்படாதோ அந்த சாதின்னு நெனச்சுக்கோங்க" என்றேன்.

அவருக்கு அப்போதும் சமாதானம் ஏற்படவில்லை. சிறிது நேரம் கழித்து, ``எக்ஸ்கியூஸ் மீ, அவர் எங்கள் குடும்ப நண்பர். நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா அந்த சீட்ல உக்காந்துக்குறீங்களா? நாங்க பேசிட்டே வருவோம் அதான். மத்தபடி ஒண்ணுமில்ல" என்றார். விவாதம் செய்ய மனமில்லாத நான் அவ்விடம்விட்டு நகர்ந்தேன். பின்பு டிடிஇ டிக்கெட் பரிசோதனையின்போது அவர்களிருவரையும் ஒரே 'சர்நேம்' வைத்து அழைத்தபோது விஷயம் தெளிவாகியது. அப்போது இந்தியா அதன் உண்மையுருவில் எனக்குத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது எனலாம். முதல் சம்பவத்துக்குப் பிறகான சம்பவங்களால் தாக்கம் பெரிதாக இருப்பதில்லை எனும் கருத்து மற்ற விஷயங்களுக்குப் பொருந்துவதுபோல் நமது சாதியை அறிந்துகொள்ளத் துடிக்கும் முயற்சிகளுக்குப் பொருந்தாது. ஒவ்வொரு முறையும் முன்னிலும் அதிகமாக வலி தோற்றுவிக்கும் விஷயம் அது.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

``உன்னைவிட உயர்ந்த சாதியென்கிறேன். நீ எனக்கு கைகட்டி பதில் சொல்வாயா... வா என் காலணிகளைச் சுத்தம் செய்" என்று சிலரிடம் எரிச்சலடைந்த அனுபவங்களுமுண்டு.

``சர்நேம் முக்கியம் அமைச்சரே" என்று எள்ளி நகையாடிய அனுபவங்களுமுண்டு.

புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்ததாகக் கூறுவார்கள். ரயில்கள் என்பவை நகரும் போதி மரங்கள். உங்கள் ஞானக்கண்களைத் திறந்துவைக்கும் ஒரு சாமியாரைக்கூட நீங்கள் ரயில் பயணத்தின்போது சந்தித்திருக்கவில்லையென்றால் உங்கள் பயணங்கள் முழுமையடையவில்லை என்று பொருள். இந்தியா சாமியார்களின் நாடு. மேற்குலகவாசிகள், `கிழக்கில் முக்தி உண்டு’ என்று நம்பி இந்தியாவுக்கு பெரும்பக்தியுடன் வந்து மோட்சத்துக்கு வழிதேடும் காட்சிகளை சகபயணிகளாக அவர்கள் வரும்போது, அவர்களது விவரணைகளிலிருந்து தெரிந்துகொள்ள முடியும். அப்படி வருபவர்களுக்கு தலைநர் டெல்லியைக் கடக்காமல் போக முடியாது. அதனால் அங்கு அனைத்து மதங்களின் நிறுவனங்களும் திறம்படச் செயல்படுவதைப் பார்க்க முடியும். அப்படி அகிலமெங்கும் புகழ்பெற்ற,

பல மேற்குலக பக்தர்களின் புகலிடமாக திகழும் ஓர் ஆன்மிக வழிகாட்டுதல் நிறுவனத்தின் முதன்மைச் சீடர் ஒருவருடன் ஒரு முறை பயணிக்க நேரிட்டது.

டெல்லியிலிருந்து விடுமுறைக்கு வந்துகொண்டிருந்தேன். அவர் திருச்சியில் தனது இல்லம் இருப்பதாகவும், அவரின் தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் எந்நேரமும் உயிர் பிரிந்துவிடலாம் என்ற செய்தி வந்ததால், அங்கு சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார். அவரின் குரலில் சலனமோ, வருத்தமோ ஏதுமில்லை. அது நான் எதிர்பார்த்ததுதான். பந்தங்களால் ஏற்படும் அச்சத்தைத் தவிர்க்கவே இங்கு பலர் சந்நியாசி வேடத்தை வேளை வருவதற்கு முன்னரே ஏற்கின்றனர். எதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற பொறுப்புத்துறப்பு செயல். விதிவிலக்குகள் இருப்பதையும் ஏற்கிறேன்.

அவருடன் மற்றவர்கள் ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்தனர். நான் தவிர்த்துவிட்டேன். மேலும், உறவினர்களுடன் பயணித்ததால் அவர்களுடன் நேரம் செலவிடுவதும், குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வதும் எனக்கு விருப்பமாக இருந்தது. பிற்பகல் நேரம் அனைவரும் உணவருந்திவிட்டு இளைப்பாறிக்கொண்டிருந்தோம். நானும் அவரும் மட்டும் விழித்திருந்ததால் ஓர் உரையாடல் நிகழ்வதை அப்போது தவிர்க்க முடியவில்லை.

``அம்மா உடல்நிலை மோசமா இருக்கா?"

``ஆமாம், அப்படித்தான் சொல்கிறார்கள். நான் போகும்போதே உயிர் பிரிந்துவிட்டால், ஈமக்கிரியைகளை முடித்துவிட்டு ஒரு வாரத்தில் கிளம்பிவிடுவேன்.

அடுத்த இரண்டு வாரங்களில் பெரிய நிகழச்சி ஒன்று எங்கள் மையத்தில் ஏற்பாடாகியிருக்கிறது. அதில் என் பங்கு முக்கியமானது."

மீண்டும் எனக்கு அதிர்ச்சி ஏதுமில்லை. இவரைப் போன்றவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். அவர்கள் மார்க்கம் அதை கற்பிக்கிறது. ``உடம்பு நானில்லை, மனசு நானில்லை, எதுவுமே நானில்லை அதுதானே’’ என்றேன். அவர் சிரித்தார்.

``சில வருடங்களுக்கு முன்பு வரை நானும் உங்களைப்போல குடும்பம், பந்தம், பிணைப்பு என்று வாழ்ந்தவன்தான். DRDO (Defence Research and Development Organisation) -வில் பணியிலிருந்தேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு வேலை, குடும்பம் என அனைத்தும் அபத்தமாகத் தோன்றவே, அனைத்தையும் விடுத்து ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுத்தேன்" என்றார். அவருக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.

``ஏங்க திருமணமே ஆகலை. அதற்குள்ள ஏங்க இந்த முடிவு... பெரிய குடும்பமோ?"

``இல்லை. என் பெற்றோருக்கு நான் ஒரே மகன். தந்தை இறந்துவிட்டார். தாய் மட்டும் இருக்கிறார். நாளை அவரும் போய்விடுவார்."

``அட நீங்க வேற... ஏங்க விரக்தியா பேசிட்டிருக்கீங்க?" என்றேன்.

``விரக்தியா இல்லையே நான் புரிதலோடு பேசுகிறேன். எனக்கு இந்தப் பிறவிகளின் சுழற்சி புரிந்துவிட்டது. இப்போது உங்களை எடுத்துக்கொள்ளுங்கள். குடும்பம், கணவன், குழந்தைகள், உறவுகள் என்று பந்தத்தில் உழன்று உங்கள் கர்மா சக்கரத்தைச் சுழற்றிக்கொண்டேயிருக்கிறீர்கள். நன்மை, தீமை, சுகம், துக்கம், நட்பு பகை, காமம், துரோகம் என்று ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். நான் பந்தத்தைத் துறந்துவிட்டேன். இறைவன் சேவை மட்டுமே எனது ஒரே செயல். வேறெந்த விழைவும் எனக்கில்லை" என்று சலனமற்ற குரலில், தீர்க்கமாகப் பேசினார். அவர் பேசுவது ஒருபுறம் சரிதானென்று அறிவுக்கு எட்டினாலும், மனம் அதை ஏற்க மறுத்தது. ``எனக்கு ஒரே ஒரு கேள்வி உங்களிடம்" என்றேன். ``ம்ம்... கூறுங்கள்" என்று கால்களைச் சம்மணமிட்டுக்கொண்டு ஒரு துறவியைப் போன்ற உடற்மொழியில் கூறினார். ``ஒருவேளை நான் செய்வதெல்லாவற்றுக்கும் அன்பு ஒன்றே காரணமாக இருந்தால்

நீங்கள் கூறிய இந்த பந்தப் பிணைப்புகளின் விளைவுகளெல்லாம் எனக்கு வலி தருபவையாக இல்லாமல், கடந்து போகும் நிகழ்வுகளாக தோன்றுமல்லவா...

அதைத்தானே உங்கள் கடவுள்களும் கூறுகிறார்கள்... எதிலிருந்து தப்பித்து எங்கு சென்றடையப்போகிறோம்?” அவர் சிறிது நேரம் மெளனமானார். பின்பு என்னிடம் உரையாடி முடித்த அயர்ச்சியை வெளிப்படுத்தினார்.

நானும் என் இருக்கைக்குத் திரும்பி புத்தகம் வாசிக்கத் தொடங்கினேன். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் அவர் ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். ``இதைப் படியுங்கள், நான் கூறுவது புரியும்" என்றார். நான் அவரிடமே அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். ``நீங்கள் கூறுவது எனக்கு புரிகிறது அதை ஏற்கத்தான் மனமில்லை. உங்கள் அம்மா விரும்பினால் அவருடன் சிலகாலம் தங்கிவிட்டுப் புறப்படுங்கள். உயிர் பிரியும் நேரத்தில் அவள் உங்கள் நெருக்கத்தின் வெப்பத்தை விரும்பலாம். அதை அவளுக்குக் கொடுப்பதால் உங்கள் துறவுக்கு கேடொன்றும் விளையாது" என்றேன்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

``நான் என் பாதையில் தெளிவாக இருக்கிறேன். என் அழைப்பை நோக்கியே எனது பயணம் இருக்கும். யாதொரு பிணைப்பும் என்னைத் தடுக்க முடியாது" என்றார். `` `காணுகின்ற சகோதரனை நேசிக்காதவன், காணாத கடவுளை எப்படி நேசித்தவனாவான்?’ என்று திருவிவிலியம் கூறுகிறது.’’ உடனே, ``ஓ நீங்க கிறிஸ்டியனா?" என்று ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர்போல் கேட்டார். மேலும் தொடர்ந்தவர், ``அப்படியே பார்த்தாலும் ஜீசஸ்கூட அவரின் தாயையும் உறவுகளையும் பிரிந்தே வாழ்ந்தார், அவரை ``ஸ்திரீயே" என்றுதான் அழைத்தார் அல்லவா?’’ எங்களது விவாதம் ரயில் நின்ற பின்னரும் தொடர்ந்தது. இறுதியாக நான் ஒன்று கூறி அவரிடமிருந்து விடைபெற்றேன்.

``ஐயா, அனைத்தையுமே முன்கூட்டியே முடிவு செய்து, இது இப்படித்தான் சென்று முடியும், இதன் விளைவுகள் இவைதான் என்று முடிவுசெய்து வாழ்பவர்கள் அத்தகைய முடிவுகளையே அறுவடை செய்கிறார்கள். நான் ஆச்சர்யங்களை நம்புபவள், நிலையாமையை ரசிப்பவள், குறைகளையும் குணக்கேடுகளையும் மாற்றத்தின் பரிமாணங்களாகக் கருதுபவள். நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள், தவறில்லை. ஆனால், மற்றவர் வழியை இருளென்று ஒதுக்காதீர்கள். நீங்களும் நானும் ஒரே நேரத்தில்தான் இலக்கை அடையப்போகிறோம், இந்த ரயில் பயணத்தைப்போல." நான் கைகுலுக்க கையை நீட்டினேன். அவர் கைகூப்பி வணங்கிவிட்டுச் சென்றார்.

(தொடரும்...)