Published:Updated:

``எல்லா மாநிலத்துக்கும் போய் கல்யாணம் பண்ணிப்போம்!”

 செலிபிரிட்டி டிராவல்: சிக்கிம்
பிரீமியம் ஸ்டோரி
News
செலிபிரிட்டி டிராவல்: சிக்கிம்

செலிபிரிட்டி டிராவல்: சிக்கிம்

‘புதுப்புது அர்த்தங்கள்’ , ‘சில்லுனு ஒரு காதல்’ போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கு ஸ்க்ரீன் ப்ளே எழுதிக் கொண்டிருக்கிறார் பத்மாவதி. இவருடைய கணவர் அருண்பாரதி, திரைப்படப் பாடலாசிரியராக இருக்கிறார். இருவரும் வெறித்தனமான வாண்டர்லஸ்ட்கள். பொதுவாக ஊர் சுற்றிகள், அந்தந்த ஊர் கலாசாரப்படி உணவருந்த விரும்புவார்கள்; உடை அணிய விரும்புவார்கள். ஆனால் பத்மாவதி-அருண்பாரதி தம்பதியினர், அந்தந்த ஊர்க் கலாசாரப்படி திருமணமே செய்து வருவார்கள். அப்படி நான்கைந்து திருமணங்கள் முடிந்து விட்டன இருவருக்கும். சமீபத்தில் சிக்கிம் சென்றவர்கள், அந்த ஊர் கலாசாரப்படி எக்ஸ்ட்ரா திருமணம் செய்ததை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.

``ஒரே மாதிரியான சடங்குகளோட தான் நம்மூரில் திருமணம் நடக்குது. அம்மா, அப்பா, சொந்தக்காரங்க மத்தியில் ஒவ்வொருத்தர் பின்பற்றுகிற முறைப்படி திருமணம் நடைபெறும். அதிலிருந்து மாறுபட்டு வெவ்வேறு ஊர்களுக்கு டிராவல் பண்ணி, அந்த ஊர் முறைப்படி திருமணம் செய்துக்கணும் என்பது என் ஆசையா இருந்துச்சு. என் கணவருக்கும் அது பிடிச்சிருந்ததால கண்டிப்பா அப்படிப் பண்ணலாம்னு முடிவெடுத்தோம். இதுவரை கிட்டத்தட்ட 4, 5 முறைப்படி திருமணம் செய்திருப்போம். அதில், எனக்கு ரொம்ப ஃபேவரைட்டானது சிக்கிம் முறைப்படி நடந்த திருமணம்.

எப்பவுமே டிராவல் ஏஜென்சி மூலமா டிராவல் பண்றதை நான் தேர்ந்தெடுக்க மாட்டேன். ஏன்னா, அவங்க குறிப்பிட்ட இடங்களை மட்டும்தான் காட்டுவாங்க. தனியா போனால்தான் பல விஷயங்களை எக்ஸ்ப்ளோர் பண்ண முடியும். டிராவல் கைடு பயன்படுத்திக்கலாம். அது நம்மளோட பயணத்துக்கு ரொம்பவே உதவியா இருக்கும்.

பெரும்பாலும் டிரிப் போகணும்னு முடிவு பண்ணிட்டா, அதுக்காக டைம் எடுத்து மெனக்கெட்டு ஹோம் ஒர்க் பண்ணுவேன். பிளான் பண்ணியிருக்கிற ஊர் எப்படி இருக்கும்.. அங்குள்ள மக்கள் எப்படி இருப்பாங்க.. என்னென்ன இடங்களை மிஸ் பண்ணாமப் பார்க்கணும்...ஏற்கெனவே அந்த ஊருக்கு டிராவல் பண்ணினவங்க அந்த ஊர் பற்றி என்ன சொல்லியிருக்காங்க.. எவ்வளவு பட்ஜெட் ஆகும்னு எல்லாத்தையும் ஒர்க்அவுட் பண்ணிப்பேன்.

‘சிக்கிம்’ போகலாம்னு முடிவெடுத்ததும் ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணினேன். சீஸன் டைமில் டிக்கெட் விலை டபுள் மடங்காக இருக்கும். அதே நான்-சீஸன் டைமில் கம்மியா இருக்கும். மொத்தமா டிக்கெட் செலவையே 15-16 ஆயிரத்தில் முடிச்சிட்டோம்.

பேக்டோகரா (Bagdogra) ஏர்போர்ட்டில் இறங்கினோம். அங்கிருந்து கேங்டாக்(gangtok) போக கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆகும். அங்கே போறதுக்காக ஓலாவில், அவுட் ஸ்டேஷன் போறதுக்கு வண்டி புக் பண்ணுகிற மாதிரி ஏர்போர்ட்டிலேயே ஒரு கார் வாடகைக்கு எடுத்தோம். இறங்க வேண்டிய இடத்தில் நம்மளை இறக்கி விட்டுட்டுப் போயிடுவாங்க. அதுக்கு 3,500 ரூபாய் ஆச்சு.

சிக்கிம், கேங்டாக், டார்ஜிலிங், நேபாளம் போகலாம்னு முடிவு பண்ணியிருந்தோம். ஆன்லைனில் ஹோட்டலும் புக் பண்ணியிருந்தோம். கேங்டாக்கில் 3 ஸ்டார், 4 ஸ்டார் ஹோட்டலில் தங்கினால் ஒரு நாளைக்கு மூன்றாயிரத்திலிருந்து நான்காயிரம் வரை ஆகும். நாங்க நார்மலான 2 ஸ்டார் ஹோட்டலில்தான் தங்கினோம். அதுக்கு ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் வாங்கினாங்க. நாங்க பத்து நாள் ட்ரிப் பிளான் பண்ணியிருந்தோம்.

``எல்லா மாநிலத்துக்கும் போய் கல்யாணம் பண்ணிப்போம்!”
``எல்லா மாநிலத்துக்கும் போய் கல்யாணம் பண்ணிப்போம்!”
``எல்லா மாநிலத்துக்கும் போய் கல்யாணம் பண்ணிப்போம்!”
``எல்லா மாநிலத்துக்கும் போய் கல்யாணம் பண்ணிப்போம்!”

கேங்டாக்கில் Mg Marg-ன்னு ஒரு இடம் இருக்கு. நம்ம ஊர் தி.நகர் மாதிரி அது! அந்த ஊர் மக்கள் போடுற கம்மல், டிரஸ் மாதிரியான பொருட்கள் அங்கே அதிகமா விற்பாங்க. பிறகு, Bukthang waterfall பார்க்கப் போனோம். அங்கே ஹிந்தி தெரிந்த ஒருவருடைய நட்பு கிடைச்சது. அவர் உள்ளூர்ங்கிறதனால பல இடங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

பிறகு, இந்தியா - சீனா பார்டர் கனெக்ட் ஆகிற நாத்துல்லாவிற்குப் போயிருந்தோம். அங்கே போறதுக்கு பர்மிஷன் வாங்கணும். பர்மிஷனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தோம். நாத்துல்லா போகிறதுக்கான வண்டிச் செலவுக்கு மட்டும் 3,500 ரூபாய் ஆச்சு. பர்மிஷன் கிடைக்கிற வரைக்கும் டென்ஷன் இருந்துட்டே இருந்துச்சு. ஹிமாலயாவுக்கு நெருக்கமான பகுதி நாத்துல்லா. கண்ணைத் திறக்கவே முடியாது. வாயிலிருந்து புகையா போகும். அவ்வளவு பனி. அங்கே நம்மளோட நாட்டுக்காக குளிரையும் பொருட்படுத்தாம நிற்கிற ராணுவ வீரர்களைப் பார்த்தப்போ ரொம்பவே பெருமையாவும், நெகிழ்ச்சியாவும் இருந்துச்சு.

``எல்லா மாநிலத்துக்கும் போய் கல்யாணம் பண்ணிப்போம்!”
``எல்லா மாநிலத்துக்கும் போய் கல்யாணம் பண்ணிப்போம்!”

மலை மேலே ஏறித்தான் நாத்துல்லாவிற்குப் போக முடியும். 14ஆயிரம் அடி உயரத்தில் அந்த இடம் இருக்குங்கிறதனால மலை ஏறக் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். அந்த இடத்தில் துப்பாக்கிச் சூடு எல்லாம் நடந்திருக்கு. அங்கே ஒரு ராணுவ வீரர் இறந்திருக்கார். அவர் நினைவாக ஒரு கோவில் கட்டியிருந்தாங்க. அந்தக் கோவில் பார்க்குறப்போ ரொம்ப எமோஷனலா இருந்துச்சு. அங்கே ஒரு ஏடிஎம் மிஷின் இருந்துச்சு. உலகத்திலேயே உயரமான இடத்தில் இருக்கிற ஒரே ஏடிஎம் அதுதான்! அதனால, அந்த ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்து ஞாபகார்த்தமா வெச்சிருக்கேன். அந்த இடத்துல போட்டோ எடுக்க பர்மிஷன் கிடையாது. அதற்குப் பதில்,அங்கே இருக்கிற ஆர்மி மேன்களில், நமக்குப் பிடிச்ச ஒருத்தரிடம் சான்றிதழில் கையெழுத்து வாங்கிக்கலாம். அந்தச் சான்றிதழில் நம்மளோட பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ ஒட்டியிருப்பாங்க. படத்துக்கு அருகில் கையெழுத்து இருக்கும். அதுதான் அந்த இடத்துக்கு நாம போய்ட்டு வந்ததற்கான நினைவு பரிசு.

தனியா நாமளே திட்டமிட்டுப் போகும் போது பல சமயங்களில் சொதப்பல்களும் ஏற்படும். அதை பேலன்ஸ் பண்ற திறமை நிச்சயம் இருக்கணும். சொதப்பலை எப்படி சரி செய்து அந்த டிரிப்பை என்ஜாய் பண்ணலாம்னு யோசிக்கணுமே தவிர, அப்செட் ஆகி உட்கார்ந்திடக் கூடாது. டிராவல் ஏஜென்சி மூலமா போனா அவங்களே சொதப்பல் நடந்தாலும், அதை பொறுப்பேற்று சரிசெய்திடுவாங்க. நாமளா போகும்போது எல்லாத்தையுமே அனுபவமா எடுத்துக்கணும். வித்தியாசமான இடங்களையும், பலத்தரப்பட்ட மக்களுடைய வாழ்வியலையும் நீங்க தனியா எக்ஸ்ப்ளோர் பண்ணும்போது மட்டுமே உணர முடியும்.

சிக்கிம் போகும்போது, அந்த முறைப்படி நாம திருமணம் பண்ணிக்கணும் என்கிற திட்டத்தோட போகலை. எதார்த்தமா அங்கே பார்த்ததும் பண்ணிக்கலாமேன்னு தோணுச்சு. சிக்கிம்ல இருக்கிற மக்கள் அணியுற மாதிரியான உடைகள் அணிந்து ரெண்டு பேரும் மாலை மாத்திக்கிட்டோம். பிறகு, அவங்க முறைப்படி பாசி மணிகள் மாத்திக்கிட்டோம். அந்தத் தருணம் ரொம்பவே ஸ்பெஷலா இருந்துச்சு. மொழி, இனம், சாதி எல்லாம் மறந்து அந்த நொடி அவ்வளவு நெகிழ்வா இருந்துச்சு. எல்லாருமே அதை எக்ஸ்பீரியன்ஸ் பண்ணனும்னு நினைக்கிறேன்!” என்றவரிடம், அடுத்து எந்த நாடு; என்ன மேரேஜ் பிளான் குறித்துக் கேட்டோம்.

``பார்டர் வரைக்கும் வந்துட்டோம். அடுத்து, சீனா போயிட வேண்டியதுதான். அங்கேயும் ஒரு கல்யாணம் பண்ணிட வேண்டியதுதான்!” என்றார்கள் கோரஸாக.