Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: டெல்லியின் சில நிறங்கள்... | பகுதி 16

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்

``பயணங்கள் வேண்டும் ஆனால் திசைகள் வேண்டாம், வழிகள் வேண்டாம் என்கிறாய். தொலைந்துபோவதில் ஆர்வமுள்ளவள்போல் தெரிகிறாய்" என்று நெஞ்சோடு உரைத்துக்கொள்வேன்.

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: டெல்லியின் சில நிறங்கள்... | பகுதி 16

``பயணங்கள் வேண்டும் ஆனால் திசைகள் வேண்டாம், வழிகள் வேண்டாம் என்கிறாய். தொலைந்துபோவதில் ஆர்வமுள்ளவள்போல் தெரிகிறாய்" என்று நெஞ்சோடு உரைத்துக்கொள்வேன்.

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

நீங்கள் எனக்கு விதிக்கும் கால அளவுக்குள் என்னால் ஓர் இடத்தைச் சென்றடைய முடியாது. எனக்கு திசைகள் அறிவதில் சிறுபிராயந்தொட்டே சிக்கலுண்டு. என்னால் திசைகள் இடவலம், வடக்கு தெற்கு என்று துரிதமாக கணித்து பயணிக்க முடியாது. என்னுடன் பயணம் செய்த நண்பர்கள் இதை நன்கறிவர். ஒவ்வொரு முறையும் யாரிடமேனும் வழி கேட்டுக்கொண்டுதான் மேற்கொண்டு பயணிப்பேன். அது எத்தனை முறை சென்று வந்த இடமாக இருந்தாலும் என்னால் திசைகளைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. வாகனம் ஓட்டப் பழகுவதிலும் அதனால் சிக்கல். சட்டென்று இடவலம் கணித்து வாகனத்தைச் செலுத்துவது என்னால் இயலாத காரியம். இடப்புறம் திரும்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வலப்புறம் வண்டியைச் செலுத்தி கடும் விபத்துகள் நேர்ந்ததுண்டு. கவனமின்மை, பொறுப்பின்மை என்று எத்தனை முறை முத்திரைக் குத்தினாலும் என் மூளையால் திசைகளையும் வழிகளையும் நினைவு வைத்துக்கொள்ள முடிவதில்லை. திசைகளை நினைவு வைத்துக்கொள்வது மூளை நரம்புகளில் வலி உண்டாகுமளவுக்குக் கடுமையான பயிற்சியாக எனக்குத் தோன்றும்.

"பயணங்கள் வேண்டும் ஆனால் திசைகள் வேண்டாம், வழிகள் வேண்டாம் என்கிறாய், தொலைந்துபோவதில் ஆர்வமுள்ளவள்போல் தெரிகிறாய்"

என்று நெஞ்சோடு உரைத்துக்கொள்வேன்.

வழிகள் மறந்து போகும்போதெல்லாம் அடையாளங்களே எனக்கு உதவியிருக்கின்றன. போட்டோ மெமரி (Photo memory) யின் உதவிகொண்டு அடையாளங்களைவைத்து வழி கூறுவேன். உதாரணத்துக்கு, அங்கு ஒரு பெரிய ஆலமரம் இருந்தது அல்லது அங்கு ஒரு குளமிருந்தது, அங்கிருந்து பார்த்தால் ரயில் நிலையம் தெரியும் என்பது போன்ற நினைவுக் குறிப்புகளைக்கொண்டே வழி கூற முயல்வேன். எனக்கு அது ஒரு குறைபாடாகவே தோன்றியதுண்டு. ஒரு சமயம் எனது நண்பர் ஒருவர், ``நீங்கள் வருந்தும் அளவுக்கு இது ஒரு குறைபாடல்ல. ஒருவேளை உலகம் தட்டையாக இருந்தால் நீங்கள் வருந்துவதில் நியாயமுள்ளதென்பேன். உலகம் உருண்டையானது அல்லவா, நீங்கள் ஒரே இடத்துக்கு வெவ்வேறு வழிகளில் சென்றடையலாம், அது சாத்தியமே. இதுதான் வழி என்று எதையும் அறுதியிட்டுக் கூற இயலாதுதானே... இந்தியாவையும் சீனத்தையும் கண்டுபிடிக்கும் எண்ணத்தில் புறப்பட்ட கொலம்பஸ் பஹாமாஸ் தீவுகளை இந்தியாவென்று நம்பி அங்கு இறங்கினார். அவர் நினைத்த இடத்துக்கு சென்றடையாவிட்டாலும் ஏதோவொரு புதிய நிலத்தை கண்டறிந்தாரல்லவா? அதுபோல தொலைந்துபோவதும் கண்டடைதலின் மறுபெயரே" என்றார்.

ஆம்! உலகம் உருண்டை வடிவிலானது. திசைகள் இங்கு தேவையில்லை. எப்படியுமே ஒரு புள்ளியில் அனைத்தும் வந்திணையும் என்று அவ்வப்போது நானே எனக்கு ஆறுதல் கூறிக்கொள்வேன்.

டெல்லி
டெல்லி
புதுடெல்லியின் சாலை அமைப்பு ஒரு கண்ணாடி பிரமை கட்டத்துக்குள் புகுந்துவிட்டதுபோல், எத்திசையில் சென்றாலும் மீண்டும் அதே இடத்திலேயே சுற்றி வருவதுபோல் தோன்றும் எனக்கு.

ஹுமாயுன் கல்லறை, நிஜாமுதீன் தர்கா, குதூப் மினார், ஜும்மா மசூதி, செங்கோட்டை, இந்தியா கேட், ராஜ்பத், நாடாளுமன்ற வளாகம், விமான நிலையம் என்று அடையாளச் சின்னங்கள் நிறைந்திருக்கும் டெல்லியின் சாலை அமைப்பு இன்றுவரை எனக்குப் புரியாததொரு புதிர் அமைப்பாகவே இருந்திருக்கிறது.

"டெல்லியின் அழகையும் முழுமையையும் காண நீங்கள் ஜும்மா மசூதியின் தெற்கு ஸ்தூபியில் (Minaret) ஏறிப் பார்க்க வேண்டும். பெரும் சாம்ராஜ்யங்கள் விட்டுச் சென்ற நினைவுகள் ஒருபுறம், காற்றாடிப் பட்டங்கள் பறக்கும் வானம், யமுனை நதியின் விரிவு மறுபுறம், இடையே புற்றீசல்போல் வாகன நெரிசல் மிகுந்த சாலைகள், அங்காடித் தெருக்கள் என டெல்லியை ஒரு சுற்றுப்பார்வையில் நீங்கள் கண்டு ரசிக்க முடியும். பகுதிகளாக டெல்லி ரசனைக்குரியதில்லை என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்" என்றார் விகாஸ்.

ஜம்மு செல்வதற்காகப் புறப்பட்ட என்னை ரோஹினி செக்டார் ரயில் நிலையம் வரை அழைத்துச் சென்ற கார் ஓட்டுநர் அவர்.
நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

டெல்லியின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ரோஹினி ரயில் நிலையத்திலிருந்து பதான்கோட் வழியாக ஜம்மு செல்லும் ரயில்கள் இயங்கும். புதுடெல்லியிலிருந்து ரோஹினிக்கு ஒன்றரை மணி நேர தூரமிருந்தது.

``தாஜ்மஹால் பார்த்தாச்சா?" இது விகாஸ்.

``இரண்டு முறை" என்றேன். அவருடன் உரையாடுவதை அந்நேரத்தில் நான் விரும்பவில்லை. சாலையை கவனித்துக்கொண்டிருந்தேன். வழமைபோல் எத்திசையும் நினைவில்லாமல் போனது. ``உங்களுக்குப் போக வழி தெரியும்தானே..." என்று அவ்வப்போது அவரிடம் கேட்டு உறுதி செய்துகொண்டேன்.

விகாஸ், ``அக்பர் கோட்டை பார்த்தீர்களா?" என்றார். "ஆம்" என்றேன். ``கோட்டையின் ஒரு பகுதியில் மல்லிகை மலர்த் தோட்டம் இருந்திருக்குமே, அதை கவனித்தீர்களா?" என்றார். ``இல்லை எனக்கு நினைவில்லை. இருந்திருக்கலாம் ஆனால் நினைவில்லை."

நாடோடிச் சித்திரங்கள்: டெல்லியின் சில நிறங்கள்... | பகுதி 16

``உங்களுக்குத் தெரியுமா... இளவேனிற்காலத்து பெளர்ணமி நாள்களில் பேரரசர் அக்பர் அந்த மல்லிகை மலர்த் தோட்டத்தில் நீண்ட நேரம் அமைதியாக அமர்ந்திருப்பாராம். அப்பகுதியில் இன்றும் மல்லிகை மலர்த்தோட்டம் அமைத்து பராமரித்துவருகின்றனர். அடுத்த முறை அங்கு சென்றால் நிச்சயம் நான் கூறியதை நினைவில்கொள்ளுங்கள்" என்றார்.

விகாஸ் அடுத்தடுத்து பல தகவல்களால் என்னை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே வந்தார். ``அங்கு பாருங்கள்... அதுதான் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு. இங்கிருந்து சில நிமிட தூரத்தில் அஸெம்பிளி இருக்கிறது" என்றார். அவர் கூறிய அனைத்தையும் கவனித்துக்கொண்டே வந்தேன். சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தவர்போல் விகாஸ், ``மேடம், நானொரு விந்தணு டோனர் ( தானம் செய்பவர்)" என்றார். எனக்கு அவர் கூறியது புரியவே சில நொடிகள் ஆகின.

இவர் ஏன் இதை என்னிடம் கூறுகிறார் என்ற குழப்பத்துடன் ``ஓஹோ’’ என்று தலையசைத்தேன்.

``உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?" என்றேன்.

``ஓ ஆகிவிட்டதே, எனக்கு நான்கு குழந்தைகள்."

``அதன் பிறகும் விந்தணு தானம் செய்கிறீர்களா?" என்றேன்.

``ஆம் மேடம், இதுவரை ஆறு தம்பதிகளுக்கு விந்தணு கொடுத்து உதவியிருக்கிறேன். தேவையேற்படும் பொழுது மருத்துவர் என்னை அழைப்பார். என்னைப்போலவே இன்னும் சில வாலன்ட்டியர்கள் இருக்கின்றனர். ஆனால் எனக்குத்தான் டிமாண்ட் இருப்பதாக டாக்டர் கூறுவார். நான் ராசியானவனாம். சில தம்பதிகள் மனமுவந்து பெருந்தொகையை அன்பளிப்பாக வழங்குவார்கள், அத்தொகை குடும்பத் தேவைகளை சந்திப்பதற்கு உதவியாக இருக்கிறது" என்றார்.

நான் விகாஸ் எனும் அம்மனிதரை சில நொடிகள் ஆழமாக கவனித்தேன். அவர் ஏதோ ஒரு பதற்றத்தில் இருப்பது போன்றிருந்தது. அவர் அளித்த தகவல்களின் கோர்வையின்மை, அவர் வேக வேகமாகப் பேசிய விதம், வியர்வையால் நனைந்திருந்த அவரின் உடை என அனைத்தும் அவரது பதற்ற நிலையை உணர்த்தின. அவரின் பதற்றம் குறித்து நான் எதுவும் கேட்கவில்லை.

நிச்சயம் அதற்கும் சில காரணங்கள் இருக்கும். அவை நியாயமானதாகவும் இருக்கக்கூடும்.

எனக்கு அச்சமயம் அது பற்றி யோசிக்க விருப்பமில்லாமலிருந்தது. அடுத்த நான்கு வருடங்களுக்கு நான் ஒரு புதிய இடத்தில் வாழ வேண்டும். அனைத்தையுமே முதலிலிருந்து தொடங்க வேண்டும். எனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை எண்ணி வருந்திக்கொள்வது அப்போது எனக்குப் பிடித்திருந்தது. காயங்களை வருடும் சுகம் அது. பெருநகர வாழ்க்கை, அடுக்குமாடிக் குடியிருப்பின் பகட்டு, நண்பர்களுடன் வார இறுதிக் கொண்டாட்டங்கள் என வளமையின் அடையாளங்களாக இவற்றையே நினைத்திருந்தேன்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

``நீ மட்டும்தான் செட்டில் ஆகாம நாடோடி மாதிரி சுத்திக்கிட்டிருக்க. எல்லாரையும் பாரு... வீடு, கார்னு செட்டில் ஆகிட்டாங்க" என்று உறவு வட்டத்தில் யாரேனும் கூறினால் அவர்களுக்கு பதில் கூறும் பக்குவம் எனக்கு வாயத்திருக்கவில்லை. நான் அவர்கள் கூறியதை அன்றும் ஏற்றுக்கொண்டேன். இன்றும் ஏற்றுக்கொள்கிறேன். மனநிலை மட்டும் அன்றுபோல் இன்று இல்லை. நான் மற்றவர்களைக் காட்டிலும் நிதானமாக வாழ்கிறேன் என்கிற நிறைவு எனக்கு இருக்கிறது. அனுபவங்களால் மெருகூட்டப்பட்டிருக்கிறது எனது வாழ்க்கை. நானிழைத்த பாவங்களுக்கு நியாயம் செய்தாலே எஞ்சியிருக்கும் சில ஆண்டுகளை வாழ்ந்து முடித்து மடியலாம் என்கிற இலக்கு எனக்கிருக்கிறது.

``ஞானிக்குக் கடந்தகாலம் இருக்கிறது. பாவிக்கு வருங்காலம் இருக்கிறது."

அவ்வகையில் என் வருங்காலம் மிகப் பிரகாசமாக என் கண்களுக்குத் தெரிகிறது.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

யோசனையில் ஆழ்ந்திருந்த என் கவனத்தை வேறு ஒரு காட்சி திசைதிருப்பியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தார்ப்பாய் மூடிய அலுமினிய தகட்டுக் கூடாரங்கள் வரிசையாகக் காணப்பட்டன. தெருவில் சிறுவர்கள் மலம் கழித்துக்கொண்டிருந்தனர். அருகிலேயே பெண்கள் செங்கற்களைத் தடுப்பாகக்கொண்டு நெருப்பு மூட்டி சமைத்துக்கொண்டிருந்தனர். ராட்சத சாக்கடை ஒன்று அங்கு ஓடியது.

``யார் இவர்கள், நகரின் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருக்கிறார்களே?" என்றேன்

விகாஸ், ``மேடம்... இவங்க எல்லாம் பாகிஸ்தான் போக முடியாம இங்கேயே தங்கிட்டாங்க" என்றார்.

அவர் கூறுவதன் பின்னணி புரியாததால் அவருடன் மேற்கொண்டு நான் உரையாடவில்லை. சில நாள்கள் கழித்து டெல்லியின் அப்பகுதியின் பெயரையும் அங்கு ஆக்கிரமித்திருந்தவர்களைப் பற்றியும் இணையத்தில் தேடியபோது அவர்கள் `ரோஹிங்கியா இஸ்லாமியர்கள்’ என்பது தெரிந்தது.

மியான்மரில் ராணுவ நடவடிக்கைக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் இந்தியாவின் ஜம்மு, உத்தரப்பிரதேசம், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் குடியேறினர்.

`உலகின் மிக அதிக துன்புறுத்தலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகியுள்ள சிறும்பான்மை இனம்' என ஐ.நா சபையால் அறிவிக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்கள்,

இந்தியாவில் சில வடகிழக்கு மாநிலங்களிலும், தலைநகர் டெல்லியிலும், சென்னையிலும் அத்துமீறிக் குடியேறியிருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. அவர்கள் அகதிகளாகவும் இன்று வரை அங்கீகரிக்கப்படவில்லை. நாட்டின் பாதுக்காப்புக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படும் அவர்களை மனிதநேயத்துடன் அணுகி, சில வசதிகள் செய்து தரும் அதேநேரத்தில் அவர்களை அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் பணிகளையும் அரசாங்கம் முழு வீச்சில் செயல்படுத்திவருகிறது.

மழலை மாறாத பார்வையால் அன்று என்னைப் பார்த்த சிறுவர்களில் யாரேனும் ஒருவர் தன் இனத்தின் உரிமைகளுக்காகப் போராடும் தலைவனாக நாளை உருவாகக்கூடும். மறுமலர்ச்சி எனும் விதைக்கு நெடுந்துயரமும் ஒடுக்குமுறையுமே உரமாக அமைகின்றன.

திசையறியாத பறவைகளின் வானத்தில் விடியல்கள் என்றும் புதிதாகவே இருக்கின்றன. பயணங்களிலெல்லாம் நான் கண்ட நிலையான உண்மை அதுவே.

விடியும்வரை...

பயணம் தொடரும்!