Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: கேக்கோவும் சாங்கா தாதாவும்... வீரத்துக்கு அச்சம் எழுதிய முன்னுரை | பகுதி 34

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்

எங்கெங்கு காணினும் கேக்கோக்கள் மட்டுமே இருந்தன. எனது படுக்கையறை ஜன்னல் கம்பிகளை அவை பற்றியிருந்தன. அவை எழுப்பும் ஒலியே எனது காலையின் சேவற்கூவலாக மாறியது.

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: கேக்கோவும் சாங்கா தாதாவும்... வீரத்துக்கு அச்சம் எழுதிய முன்னுரை | பகுதி 34

எங்கெங்கு காணினும் கேக்கோக்கள் மட்டுமே இருந்தன. எனது படுக்கையறை ஜன்னல் கம்பிகளை அவை பற்றியிருந்தன. அவை எழுப்பும் ஒலியே எனது காலையின் சேவற்கூவலாக மாறியது.

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்

ஒரு புதினத்தின் உயிர் அதன் முதலிலும் இல்லை, முடிவிலும் இல்லை. நாம் சற்றும் எதிர்பாராத ஏதோ சில பக்கங்களில் எவ்வித முக்கியத்துவமும் இல்லாத ஏதோ ஒரு கதாபாத்திரத்தின் கூற்றில் கருவறை இருளிலிருந்து எட்டிப் பார்க்கும் இறைபோல் அதனுயிர் ஒளிர்வதை ஒரு தீவிர வாசகி அறிவாள். கலையும் வாழ்வும் இணையும் புள்ளி அது எனலாம். வாழ்வில் இல்லாத எதையும் புனைவுக்குள் புகுத்திவிட முடியாது.

என் வாழ்வின் ஆச்சர்யங்கள் ஒவ்வொன்றாக மெல்ல நிறம் மாறத் தொடங்கிய காலம் அது. அசட்டுத் துணிச்சலுடன் வாழ்வை அணுகிப் பழகிய என்னை, ஆபத்தான முகடுகளில் நிறுத்தி இனி வீழ்வதா பறப்பதா என்பதை நீயே தேர்வு செய்துகொள் என்று வாழ்க்கை நகைத்தது. என்னைத் துரத்தியது விதியோ, மனிதர்களோ அல்ல. என்னைத் துரத்தியது நான்தான். எனக்கு பயந்துதான் நான் ஓடியிருக்கிறேன். என்னைச் சுற்றியிருந்தவர்களோ நான் அவர்களைக் கண்டு ஓடுவதாக நினைத்தார்கள். வேறு சிலர் நான் இலக்குகளைக் கண்டு அஞ்சுவதாகக் கூறினார்கள். மற்றும் சிலர் நான் நிலையற்ற மனம் படைத்தவள் என்றனர். நான் அவர்கள் உறவில் இல்லாமலிருப்பதே சிறந்தது என்று எண்ணினார்கள். மற்றவரை வேடிக்கை பார்ப்பதை வாழ்வாகக்கொண்ட மனிதர்களுடன் எனக்கும் எவ்வித ஒட்டுதலும் இருந்ததில்லை.

அருவியைப் பார்த்ததும், கைதட்டிக் கூச்சலிட்டு ஒதுங்கிவிடுபவர்கள் அவர்கள். நான் அருவியாகவே மாற விரும்புபவள்.

கடல் கண்டால் அதன் அலைகளில் ஒன்றாக மாறிவிடுபவள். மலை கண்டால் அதன் பாறைகளில் ஒன்றாக இறுகிவிடுபவள். எனக்கான இலக்கணங்கள் வேறு. என்னைப் போன்று யாரோ ஒருவரைக் காண நேரும்போது நான் அவரை முழுதுமாக என்னுள் அனுமதிக்கிறேன். அங்கு நான், அவர் என்கிற நிலைகள் இருப்பதில்லை. ஓர் அதிர்வலை மற்றோர் அதிர்வலையுடன் இசைவது போலொரு நிகழ்வு அது. அதற்குக் கால வரையறைகள் இல்லை. சில சுருக்கமாக முடிந்துவிடும். ஒன்றிரண்டு மலை முகடுகளில் காற்றின் எதிரொலிபோல் சில வேளைகள் வரை தொடரும். அரிதினும் அரிதாகச் சில மனிதர்களுடனான இசைவு கடல் ஆழத்தின் ஓங்காரம்போல் உயிரோசையாக நிலைபெற்றுவிடுவதுண்டு.

மலையெங்கும் வெள்ளிக்கம்பிகள்போல் அருவிகள் பிறப்பெடுக்கும் ஒரு மழைக்காலத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா சென்றடைந்தேன். 'சாங்கா தாதா' எனும் பேரதிர்வை மனித வடிவத்தில் சந்தித்த இடம் அது. நாகா பழங்குடியினத்தின் 'தலை வெட்டிகள்' (Head Hunters) இனத்தைச் சேர்ந்த 'வின்ஹே சாங்கா' தரம்சாலாவில் அரசாங்க அலுவலகத்தின் தோட்டப் பாதுகாவலராகப் பணி புரிந்துவந்தார். நாங்கள் நாகாலாந்திலிருந்து தரம்சாலாவுக்கு இடமாற்றலாகி வந்திருந்தோம். சாங்காவுடனான முதல் சந்திப்பே அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. "கேக்கோ பல்லிகளுடனான அனுபவம் எப்படியிருந்தது" என்று கேட்டார் சாங்கா. காட்டுப் பறவையொன்றைத் தீயிலிட்டு, இறகுகளைப் பொசுக்கி அதனுடலெங்கும் மஞ்சள் பூசிக்கொண்டிருந்தார்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

இறுதியாக கீரையைக் கிள்ளுவதுபோல் அதன் தலையைக் கிள்ளியெறிந்தார். சாங்காவைச் சந்திக்கும் முன்பு கேக்கோ பல்லிகளை சந்தித்துவந்தது எவ்வளவு முக்கியமானது என்று அவருடன் வாழ்ந்த நாள்கள் உணர்த்தின. "அனைத்துக்கும் வாழ்க்கையிடம் விடை இருக்கிறது, நாம் விடைக்காகக் காத்திருக்க வேண்டும். நான் இந்தப் பறவையைக் குறிவைத்து ஒரு வாரமாக காத்திருந்தேன் தெரியுமா... இன்றுதான் அகப்பட்டது" என்று தனது கரையேறிய பற்கள் தெரியச் சிரித்தார் சாங்கா தாதா.

மகாபாரதத்தில் பாண்டவர்கள் கண்ட அஞ்ஞாத வாசம்போல் ஒரு வருட காலம் நாகாலந்தின் தீமாபூர் பகுதியில் வாழ்ந்தபோது எனது உடலும் மனமும் கடுமையான தருணங்களைச் சந்தித்தன.

"எதையெல்லாம் கண்டு அஞ்சுகிறாயோ... அதையே நீ எவ்விடமும் காண்பாய்" என்னும் கூற்றுக்கிணங்க

நான் கண்டு அஞ்சிய யாவும் தீமாபூரில் எனதருகிலேயே நான் அனுபவித்தே தீரவேண்டிய கட்டாயத்துக்கு என்னை ஆளாக்கி வதைத்தன. அவற்றில் முதலானது காலம். காலம் நகராமல் உறைந்திருந்தது. எவ்வளவு முயன்றாலும் காலத்தை நகர்த்த இயலவில்லை. அங்கு வாழ்ந்த ஒரு வருட காலத்தை ஒரு யுகம் என்று கூறினாலும், அது அளவிற் குறைவே. நிமிட முள்ளைவிட நொடி முள் மெதுவாக நகர்வதுபோலுணர்வேன். மனிதனால் இயலாததொன்று உண்டென்றால் அது காலந்தள்ளுவது. வாழ முடியும், ஆனால் காலந்தள்ள முடியாது. நான் அப்போது காலந்தள்ளிக்கொண்டிருந்தேன். அதன் விளைவாக என் கால்கள் சுரணையிழந்து மரத்துப் போகத் தொடங்கின. உறக்கம் கலைந்து எழுந்தால் இரண்டு கால்களும் இரண்டு பாறைகள்போல் இறுகியிருக்கும். முடக்குவாதத்தின் அறிகுறிகள் என்று மருத்துவர் கூறிவிட்டார்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

எனது கால்கள் அசைய மறுத்துவிடுமோ என்று அஞ்சி பல மணி நேரம் வீட்டுக்குள் நடந்து கொண்டேயிருப்பேன். இரவு உறங்குவதைத் தவிர்த்தேன். என்னையும் மீறி உறங்கிவிட்டால் எனது விழிப்பு பெரும் பதற்றத்துடனேயே நிகழும். எழுந்ததும் கால்களைக் கிள்ளிப் பார்த்துக்கொள்வேன். சில நேரங்களில் சுரணை இருக்கும். சில நேரங்களில் சுரணை இருக்காது. அச்சத்தில் சிறுநீர் அடிவயிற்றை முட்டும். என் கால்கள் செயலிழப்பதும், நான் மரணிப்பதும் ஒன்றுதான். என் உயிர் என் கால்களில்தான் இருந்தது.

நாகாலாந்து பகுதியில் 'கேக்கோ' என்கிற ஒரு வகை பல்லி இனத்தை அதிக அளவில் காண முடியும். அவை ஓணான்களைவிட நான்கு மடங்கு பெரியவை. நிறம் மாறும் தன்மையுடையவை மற்றும் கேட்கவியலாத அருவருப்பான ஓர் ஒலியெழுப்பக்கூடியவை. அவற்றோடு ஒரு வருட காலம் வாழ்ந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் என் அச்சத்தின் மற்றுமோர் அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தது.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

எங்கெங்கு காணினும் கேக்கோக்கள் மட்டுமே இருந்தன. எனது படுக்கையறை ஜன்னல் கம்பிகளை அவை பற்றியிருந்தன. அவை எழுப்பும் ஒலியே எனது காலையின் சேவற்கூவலாக மாறியது. குளியலறை, சமையலறை, தோட்டம், புத்தகங்களுக்கிடையே, பாத்திரங்களுக்கிடையே என அவை புகாத இடமே இல்லையெனலாம்.

``இறைவன் ஒரு மனநோயாளி. அவன் கேக்கோக்களை படைத்தான்" என்று கவிதை எழுதினேன்.

என் கால்கள் மரத்துப்போய் முடங்கியதில் பெரும்பங்கு கேக்கோக்களுக்கு உண்டு. அவற்றை எங்கு காண்கிறேனோ அவ்விடத்திலேயே கால்கள் உறைந்து நின்றுவிடுவேன். அவை கடந்து செல்லும் வரை என்னால் நகர முடியாது. தப்பிச் செல்ல நினைத்தாலும் முடியாது. அவை வேறெங்காவது நிச்சயம் இருக்கும். அதனால் என் மூளைக்கு நான் கட்டளையிடும் முன்னரே அது கால்களுக்குக் கட்டளையிட்டு முடக்கிவிடும். என்னைச் சுற்றிலும் கேக்கோவின் ராஜ்ஜியம். நான் அவற்றின் அடிமைபோல் உணர்ந்தேன். எனது கால்கள் மரத்துப்போவது தொடர்கதையானது. அச்சம் கால்களை முடக்கியது.

என்னை நேசித்தவர்கள், வெறுத்தவர்கள் என்கிற வேறுபாடுகள் மறைந்து அனைவரும் என்மேல் கருணை காட்டத் தொடங்கினர். வெவ்வேறு ஊர்களிலிருந்து மூலிகை மருந்துகள் வரவழைக்கப்பட்டு, என் கால்களுக்கு மருத்துவம் நடந்தது. பலன் கிடைக்கும்போல் தெரிந்தபோதெல்லாம் கேக்கோக்கள் தாண்டவமாடி மீண்டும் என்னை வென்றன. நான் என் அச்சத்தை மற்றவர்களிடம் கூறியிருக்கலாம். என் புறச்சூழலை மாற்றியிருக்கலாம். ஏனோ அதைச் செய்ய மனம் ஒப்பவில்லை. நான் போராடத் தயாராகவே இருந்தேன். கால்கள் மட்டும் ஒத்துழைத்தால் போதும் என்றிருந்தேன்.

ஒருமுறை என்னைக் கழிவறைக்கு அழைத்து சென்ற ஒரு நெருங்கிய உறவினர் "எவ்வளவுதான் ஓடுவ. இப்ப நின்னுட்ட பாத்தியா, அதுக்குத்தான் மனுசங்க வேணும்ங்குறது. நாலு பேர அனுசரிச்சு போறது நல்லது" என்று கண்களில் விஷம் மினுங்கக் கூறினார்.

நான் மனிதர்களை வெறுப்பவள் அல்ல. அவர்களது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத அளவு மனதால் ஊனமுற்றவள் அவ்வளவே.

ஊனம் இப்போது என் கால்கள் வரை பரவிவிட்டிருந்தது. நான் ஓடுவதை நிறுத்தினேன். விரும்பி நிறுத்தினேன். என்னிடமிருந்து நானே ஓடுவதை நிறுத்தினேன்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

ஒருமுறை மின்சாரம் துண்டிக்கப்பட்டு வீடே இருளில் மூழ்கியது. நடுநிசி நேரம். நான் படுக்கையில் அமர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தேன். மகன் உறங்கியிருந்தான். கணவருக்கு இரவு நேரப் பணி. என் கழுத்தின் பின்புறத்தில் அது ஊர்வது தெரிந்தது. இருளின் பிடியில் நானும் அதுவும் ஒரே புள்ளியில் இணைந்திருந்தோம். என்னை ஒரு பிடிமானமாகக் கொண்டு அது என்மீது ஊர்ந்துகொண்டிருந்தது. என்னைக் கடந்து செல்ல முற்பட்டிருக்கலாம், என்னை விடுவிக்கும் முயற்சியில் என்னைவிட்டு அது விலகிச் செல்ல முயல்வதுபோல் தெரிந்தது. எனது இடது தோள்பட்டையின் மீதிறங்கி என் இடக்கை நீளமுழுதும் ஊர்ந்து இறங்கி என் தொடையைப் பற்றி மெதுவாக இறங்கியது.

என் பாதத்தில் கவனமாக இறங்கி என் கால் விரல்களை அது தீண்டியபோது என் கால் நரம்புகள் சில்லிட்டு விறைப்பதை என்னால் உணர முடிந்தது.

சில நொடிகள் மூச்சடைத்துப்போனேன். அது என் மீதிருந்து இறங்கியது தெரிந்ததும், என்னுடல் தளர்ந்தது. கால்களில் இளங்குருதியின் வெப்பம் படர்ந்தது.

``மறுநாள் காலை கேக்கோவின் குரலுக்கு செவிமடுத்து எழுந்தேன். அன்றிரவு என்னை முழுதும் ஆக்கிரமித்த அச்சத்துக்ங்கி அதை நான் வென்றேன்" என்று சாங்கா தாதாவிடம் என்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்தபோது அவ்வனுபவத்தை மீண்டுமொருமுறை வாழ்ந்து பார்த்துக்கொண்டேன்.

சாங்கா தாதா சிரித்தார். "நான் தலைவெட்டி இனத்தைச் சேர்ந்தவன். எனக்கு உன் அனுபவத்தின் ஆழம் நிச்சயம் புரிகிறது. அச்சம்தான் நம்மைக் காக்கும் ஆயுதம். அச்சத்துக்கு ஒப்புக் கொடுத்து மட்டுமே அதை ஒருவனால் வெல்ல முடியும். அச்சம் மேலிடும்போது தற்காப்பு பலப்படும். அச்சமும் வீரமும் ஒரே விதையின் விருட்சங்கள். அன்பும் குரோதமும்கூட அப்படியே."

"அனைத்துமே ஒன்றுதான் என்றால், வாழ்வின் பொருள் எதில் அமைகிறது" என்றேன்.

"உனது வேட்கையில்" என்றார். நீ இச்சைகொள்ளும் யாவற்றையும் வென்று பார்த்துவிடு. அவை இல்லாமலிருக்கும் தவிப்பிலிருந்து உன்னை நீயே விடுவித்து நிறைவடைந்துவிடுவாய்.’’

சாங்கா தாதா நான் சந்தித்த பேரதிர்வு. மனதின் தகடுகளை இடம் மாற்றி சில உயரங்கள் காணச்செய்த மனிதர் அவர். இமயமென மனமுயர, பள்ளங்களின் ஆழமறிதல் அவசியம் என்று எனக்குக் கூறியவர்.

இமயமலையில் கண்டடைந்த ரகசியங்கள் பகரும் பயணங்கள் தொடரும்..!