Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: `ஜம்மு தாவியின் கோடைக்காலம்... ஓர் அகப் பயணம்!’ | பகுதி 23

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்

பகல் நேரக் காற்றின் வெப்பம் அதிகரித்திருப்பதை உணர முடிந்தது. உதடு உலர்ந்துபோனது. காற்றில் ஈரப்பதம் அறவே இல்லாது கடுமையான வெப்பம் மட்டுமே நிலவியது.

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: `ஜம்மு தாவியின் கோடைக்காலம்... ஓர் அகப் பயணம்!’ | பகுதி 23

பகல் நேரக் காற்றின் வெப்பம் அதிகரித்திருப்பதை உணர முடிந்தது. உதடு உலர்ந்துபோனது. காற்றில் ஈரப்பதம் அறவே இல்லாது கடுமையான வெப்பம் மட்டுமே நிலவியது.

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்

வாழ்க்கைபோலவே பயணங்களின் தன்மையையும் பருவங்கள் தீர்மானிப்பதாகவே நான் கருதுகிறேன். ஜம்மு காஷ்மீருக்கு இடமாற்றல் வந்த செய்தியறிந்ததும், சினிமா படங்களில் பார்த்துப் பழகிய பனிமலைகளும், ஆப்பிள் தோட்டங்களும் மனக்கண் முன் தோன்றின. மனம் கற்பனைக் கோட்டையைக் கட்டத் தொடங்கியது. சென்னை நகர நடுத்தர வாழ்வின் புழுக்கமும், புழுதியும் மறந்து சில வருடங்கள் ஆப்பிள் தோட்டங்களின் நடுவே ரோஜா பூக்களின் மயக்கத்தில் வாழலாம் என்று மனக்குதிரையானது கற்பனைக் களத்தில் வேகமாக பாய்ந்தோடிக்கொண்டிருந்தது.

கையில் நான்கு மாதக் குழந்தையுடன் சென்னை-ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியபோது வரவிருக்கும் நாள்கள் என் உளவியலுக்கும் ஆளுமைக்கும் மாபெரும் சவாலாக அமையப் போகின்றன என்று சிறிதும் அறிந்திலேன். "இத்தனை சிறிய வயதில் தாய்மையை எப்படி ஏற்க முடிந்தது உங்களால்?" என்றார் என்னுடன் பயணித்த மேலை நாட்டுப் பெண்மணி. அவர் இந்தியப் பெண்களின் வாழ்வியல் குறித்து ஆவணப்படம் இயக்குவதற்காக இந்தியா முழுதும் சுற்றித்திரிவதாகக் கூறினார். அவரது கேள்வி எனக்குப் புரியவில்லை. "பெண்ணின் திருமண வயது என்று அரசாங்கம் அனுமதித்த வயதில்தான் திருமணம் செய்தேன்" என்றேன்.

"திருமணம் வேறு, குழந்தைப்பேறு என்பது வேறல்லவா... நீங்கள் குழந்தைப் பெறுவதற்கு மனதளவில் தயாராகியிருந்தீர்களா?" என்றார்.

"இல்லை நான் இதுவரை எதற்குமே தயாராக இருந்ததில்லை. நதி போகும் போக்கில் மிதந்தோடும் சருகுபோல, எப்படியெல்லாம் விதி வலிந்து இழுத்ததோ அவ்வழியெல்லாம் பயணித்து வந்திருக்கிறேன்" என்றேன். "குழந்தையின் கையிலிருக்கும் பொம்மைபோல் இந்தக் குழந்தை உங்கள் கைகளில் சிக்கிக்கொண்டிருக்கிறது" என்றார். அவர் கூறிய அச்சொற்கள் என்னை மிகவும் காயப்படுத்தின. குழந்தைப்பேறு காலத்தின் ஹார்மோன் மாற்றங்கள், தூக்கமின்மையால் விளைந்த உடற்சோர்வும் மன அழுத்தமும் அவர் கூறிய சொற்களால் என்னை மேலும் மனமுடையச் செய்தன. அடக்க முடியாமல் பெருக்கெடுத்த கண்ணீரானது என்னை பலவீனப்படுத்தியது. அப்பெண்மணி கூறியதுபோல் நான் அப்போது ஒரு சிறுமியாக உணர்ந்தேன். என்னைத் தேற்றுவதற்கே மனிதர்கள் தேவைப்படும்போல் இருந்தது. என் கையிலிருந்த குழந்தையோ தனக்கும் எதற்கும் சம்பந்தமில்லாததுபோல் பால் சுரந்து கட்டியிருந்த எனது மார்பை வேகமாக முட்டியது.

மூளைவரை மின்னல்போல் பாய்ந்த வலியால் நான் மூர்க்கமானேன். உலகின் மேலிருந்த ஒட்டுமொத்த கோபமும் அந்தக் குழந்தையின் மீது திரும்பியது. அது அப்போதும் எதுவும் புரியாமல் தன் பசியை மட்டுமே பிரதானமாகக் கருதி என்னைத் தொந்தரவு செய்தது. நான் அக்குழந்தையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் குரலில் ஏக்கம் மறைந்து பசியின் மூர்க்கம் எழும்பியது.

தன் பசிக்காக அது போராடத் தொடங்கியது. அழுகை கோபமாக மாறியது. நாங்களிருவரும் ஒருவித மூர்க்கத்தனமான விளையாட்டில் ஈடுபட்டோம்.

என் கண்ணீர் உனக்குப் பெரிதல்ல... உன் கண்ணீர் எனக்குப் பெரிதல்ல என்று நானும் அதனுடன் போராடினேன். தாய்மை தியாகத்தின் வெளிப்பாடு, அது இறைமையின் மறுபெயர் என்பதெல்லாம் மனிதன் கட்டமைத்த மாய பிம்பங்கள். "விலங்குகளைப் பாருங்கள்... தான் ஈன்ற ஒவ்வொரு மகவையும் அதனதன் வலிமையைப் பொறுத்தே அது கையாளும். பலவீனமான குறைபாடுள்ள குட்டிகளைத் தாயே கொன்றுவிடும். மனிதனும் அடிப்படையில் ஓர் உயிரியல் படைப்பு. மனிதன் என்றால் அதில் பெண்ணும் அடக்கம்."

ஜம்மு- தாவி என்று எழுதப்பட்டிருந்த பெரிய பலகை அருகே காத்திருக்குமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அங்கிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் நாங்கள் வசிப்பதற்கான குடியிருப்பு இருந்தது. பாதுகாப்பு சோதனைகள் முடிவடைந்ததும் எங்களை அனுப்பிவைப்பதாகக் கூறினர். புரியாத மொழி, முற்றிலும் புதிய நிலம், அறிமுகமில்லாத மனிதர்களென எதுவுமே எனக்கு அப்போது சாதகமாக இருக்கவில்லை.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
pixabay

அங்கு கடுமையான வெப்பம் நிலவியதை என்னால் உணர முடிந்தது. கற்பனையில் நான் கட்டிய பனிமலைக் கோட்டைகள் தகர்ந்து விழுந்தன. "இங்கே பனிமலை இருக்குமே... அது எங்கே?" என்று அப்பாவியாக ஒரு ராணுவ சிப்பந்தியிடம் கேட்டேன்." மே மாதத்தில் இங்கு ஏது பனி, டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் பனி பொழிய வாய்ப்பிருக்கிறது, அதுவும் இங்கு ஜம்முவில் பனிப்பொழிவு இருக்காது. அதற்கு நீங்கள் இன்னும் நூற்றைம்பது கிலோமீட்டர் மலையேறி 'பட்னிடாப்' வரை செல்ல வேண்டும்" என்றார்.

"ஓ அப்ப பனிமலை இங்க இல்லையா?" என்றேன். அவர் இல்லையென்று வேகமாகத் தலையசைத்துவிட்டு என்னைக் கடந்து சென்றார். ஏமாற்றத்தின் அழுத்தம் கூடி, அழுவதைத் தவிர வேறு வழி தெரியாமல் அப்போதும் அழுதேன். என் கைகளில் வீற்றிருந்த குழந்தை மீண்டும் பசி தேடலைத் தொடங்கியது. "அதற்குள் பசித்துவிட்டதா உனக்கு, இங்கு மறைவிடத்துக்கு நான் எங்கு செல்வேன்... என் மானத்தை எள்ளி நகையாடவே நீ வந்திருக்கிறாயா" என்று கோபித்துக்கொண்டேன். அது என் நெஞ்சில் வேகமாக அடித்து தன் பசியை உணர்த்தியது. அருகே சில மணற்மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதன்மீது இன்சாஸ் ரக துப்பாக்கி ஒன்றிருந்தது.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

வேகமாக அதை அப்புறப்படுத்தினேன். அதைப் பார்த்த ராணுவ வீரர் பதற்றத்தில் அலறினார் "ஏய் பெண்ணே, அது குண்டுகளால் லோட் செய்யப்பட்டிருக்கிறது. எங்காவது அழுத்தி வெடித்துவிட்டால் யார் பொறுப்பு... இப்படியா கவனமின்றி கையில் எடுப்பாய், முட்டாள் பெண்ணே" என்று இந்தியில் கடிந்துகொண்டார். "லோட் செய்த துப்பாக்கியை கவனமின்றி வைத்துவிட்டுச் சென்றது உனது தவறுதானே" என்று அந்த ஆணை முகத்தில் அறைந்து கேட்க வேண்டும்போலிருந்தது. ஆனால் அப்போது நான் எதற்கும் திராணியற்றவளாக இருந்தேன். ஒரு முட்டாள் பெண்ணாக இருந்தேன். உண்மைதான்.

அந்த ஆண் என்னை மிகவும் அவமானப்படுத்தியதாக அப்போது உணர்ந்தேன். அருகிலிருந்தவர்களின் பார்வை முழுதும் என்மீதிருந்தது. நான் துப்பாக்கியைத் தீண்டியதற்கு வேறெந்த நோக்கமாவது இருந்திருக்கக்கூடுமோ என்கிற கோணத்தில் பாதுகாப்பு வீரர்கள் சிந்திக்கத் தொடங்கினர். அதனால் எனது பாதுகாப்பு சோதனை முடிய நேரமானது. மூட்டைகளின் மறைவில் அமர்ந்து குழந்தைக்குப் பாலூட்டினேன். "உன் பசிக்கு ஓர் அளவில்லையா, பார் உன்னால் நான் அனைவரிடமும் அவமானப்படுகிறேன். சிறிதும் கருணையென்பது உனக்கில்லையா?" என்று அதனிடம் முறையிட்டேன். அது ஒரு பக்கம் முடித்து அடுத்த பக்கத்துக்குத் தாவிச் சென்று பாலருந்தத் தொடங்கியது. "உனக்கு எதுவுமே புரியவில்லை... அப்படித்தானே" என்றேன். அது தன்போக்கில் பசியாறிக்கொண்டிருந்தது. "மனித மிருகத்தின் குட்டியே" என்று அதைச் சாடினேன்.

பகல் நேரக் காற்றின் வெப்பம் அதிகரித்திருப்பதை உணர முடிந்தது. உதடு உலர்ந்துபோனது. காற்றில் ஈரப்பதம் அறவே இல்லாது கடுமையான வெப்பம் மட்டுமே நிலவியது. மனித நடமாட்டமின்றி தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. உடலின் நீர்ச்சத்து குறைவது நன்றாகத் தெரிந்தது. எவ்வளவு நீரருந்தினாலும் உடற்சோர்வு நீங்கவேயில்லை. நெடுநேரம் குழந்தையைத் தாங்கிப் பிடித்திருந்த இடுப்பில் வலியெடுக்கத் தொடங்கியது. அது தண்டுவடத்திலும் பரவியது. பாதுகாப்பு சோதனை முடிந்து அனைவரையும் ஒரு ட்ரக்கில் ஏற்றினர். ஏதோ கொதிகலனுக்குள் இறக்கிவிட்டாற்போல் வெப்பம் தகித்தது. இரும்புக்கம்பிகள், இரும்பு இருக்கைகள் என அனைத்தும் கடுமையான வெப்பத்தில் கொதித்தன.

ஒருவழியாக இருக்கையில் துணி விரித்து அமர்ந்துகொண்டேன். குழந்தையை மடியில் கிடத்தினேன். அது உறங்கிக்கொண்டிருந்தது. "பசி வராமல் இருந்தால் சரிதான்" என்றேன். அது இம்முறை பதிலளிக்கவில்லை.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

வழிநெடுகிலும் இருபுறமும் நெட்டுக்குத்தாக ராட்சதப் பாறை மலைகள் நின்றன. மரங்கள் கோடையின் வெப்பம் தாளாமல் இலைகளைத் துறந்து மொட்டையாகியிருந்தன. 'தாவி நதி' வற்றிப்போயிருந்தது. அது பாய்ந்த நரம்புத் தடங்கள் மட்டுமே அதன் இருப்பை உணர்த்தின. "இப்படியொரு பருவத்திலா நான் இங்கு வர வேண்டும்" என்று என் விதியை நொந்துகொண்டேன். "பருவம் நிச்சயம் ஒரு நாள் மாறும், மீண்டும் மாரி பொழியும்" என்று எனக்கும் அப்போது விளங்கவில்லை, எடுத்துக் கூறுவோரும் யாருமில்லை. புறத்திலிருந்த வெப்பமும் அழுத்தமும் என் அகத்தையே பிரதிபலித்தன. ஏதேதோ பாதையெல்லாம் கடந்து, மனிதர்களிடமிருந்து தப்பித்துப் பிழைத்து, ஒருவழியாக எங்கோ வந்தடைந்திருந்தேன். ஒரு துளி பசுமையுமின்றி மனம் வெறுமையில் உழன்றது.

தூரத்தில் புழுதிப்படலம் காற்றோடு சுழன்று உயர்வதுபோல் தெரிந்தது. " 'காலி ஆந்தி' தொடங்கி விட்டது, சீக்கிரம் வீடு போய்ச் சேர வேண்டும்" என்று முன்னிருக்கையில் அமர்ந்திருந்த பெண் தனது தோழியிடம் கூறினாள்.

'காலி ஆந்தி' என்றால் இந்தியில் கறுப்புப் புயல் என்று பொருள்.

கோடைக்காலத்தில் தார் பாலைவனத்திலிருந்து கிளம்பும் வெப்பப் புயலானது வட இந்தியாவின் இமயமலை அடிவாரந்தொட்டு கங்கை சமவெளி வரை முழுதும் வீசும். அப்போது வெப்பநிலை நாற்பத்தைந்து முதல் ஐம்பது டிகிரி வரை உயரும். ஈரப்பதமே இல்லாத வெப்பக்காற்று உடலின் நீர்ச்சத்தைச் சில நொடிகளிலேயே உறிந்தெடுத்து கடுமையான உடற்சோர்வும் சுகவீனத்தையும் ஏற்படுத்தும். மரணம் நேருமளவுக்கு அபாயம் விளைவிக்கும் 'காலி ஆந்தி' தொடங்கியிருந்த நேரத்தில் ஜம்முவின் நக்ரோட்டா டவுன் சென்றடைந்தோம். வெகுநேரமாகியும் பசியென்று அலறாத குழந்தையை ஒரு முறை உற்று நோக்கினேன். அசைவின்றி உறங்கிக்கொண்டிருந்தது. உதடு உலர்ந்து போய் தோலுரியத் தொடங்கியிருந்தது. ஆனாலும் குழந்தையை எழுப்ப மனம் வரவில்லை. இரண்டரை நாள்கள் பயணத்துக்குப் பிறகு உடலைத் தரையில் கிடத்திப் படுக்க வேண்டுமென்று மனம் விரும்பியது. எதைப் பற்றியும் யோசிக்க வலுவில்லாமல் குழந்தையை அருகில் கிடத்திவிட்டு உறங்கச் சென்றேன். மறுநாள் அதிகாலை பலவீனமான ஒரு விசும்பல் என்னை எழுப்பியது.

குழந்தையின் உடல் கொதித்தது. பசிக்குப் பால் அருந்தவில்லை. ஒரு சிறு அசைவுமில்லாமல் குழந்தை கிடந்த நிலை என்னுள் அச்சத்தைத் தோற்றுவித்தது.

குழந்தை அழுவதும் அலறுவதும் இப்போது எனக்கு அவசியமாகத் தெரிந்தன.

அது முற்றிலும் நின்றுபோய்விடவே மனம் பதறத் தொடங்கியது.

மருத்துவமனைக்குச் செல்வதென்றால், மீண்டும் மலைகளைக் கடந்து ஜம்மு டவுன் வரை செல்ல வேண்டும். சிறிய தூரம்கூட மலைப்பாக இருந்தது எனக்கு. ஏதோவோர் அந்நியப் பிரதேசத்தில் வாழ்க்கையைத் தொடங்கவேண்டியதே சவாலாக இருந்த நிலையில் குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமானது மனதின் வெறுமையை அதிகரித்தது.

"என் ஆயுட்காலத்தை எனக்கு நேரும் துயரங்களின் எண்ணிக்கையைக்கொண்டே அளவிடுகிறேன்" என்று யாரோ ஒரு மேலைநாட்டு எழுத்தாளரின் வரிகள் நினைவுக்கு வந்தன. அவர் யாராயிருந்தால் என்ன... அவர் எழுதியது நினைவிலிருந்தால் போதாதா?

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
pixabay

அன்றிலிருந்து 'அடுத்த மூன்று நாள்களுக்கு மருத்துவர்கள் பொது வேலை நிறுத்தம்' அறிவித்திருப்பதாக நாங்கள் சென்ற அனைத்து மருத்துவமனைகளிலும் அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்தது. தனியார் மருத்துவமனைகளும் அதையே கூறின. `அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்றதற்கு, `பச்சிளங்குழந்தை என்பதால் நீங்கள் குழந்தைகள் மருத்துவமனையை அணுகுங்கள்’ என்று கூறினர். குழந்தைகள் நல மருத்துவர்களின் முகவரி எதுவும் அன்று பிற்பகல் வரை கிடைக்கவில்லை. ஜம்மு வந்து சேர்ந்த நேரத்தை நொந்துகொண்டேன். ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதி கிடைத்தது. மருத்துவர் குழந்தையைப் பரிசோதித்து பார்த்து, குழந்தையின் உடம்பில் நீர்ச்சத்து வெகுவாகக் குறைந்துவிட்டதாகக் கூறி, உடனே நரம்பு வழியாக சலைன் ஏற்றுமாறு செவிலியர்க்கு அறிவுறுத்தினார்.

குழந்தையின் மணிக்கட்டு நரம்பில் ஊசியேற்றியபோது அக்குழந்தை அழவும் திராணியற்றுப் போய் முகத்தை மட்டும் வலியில் சுருக்கியது.

ரயிலில் வந்தபோது ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு வந்த அந்த முகத்தை மனம் தேடியது.

மூன்று நாள்கள் கழித்தும் குழந்தையின் உடல்நிலையில் பெரிதாக முன்னேற்றம் ஏதுமில்லை. குடலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம், அறுவை சிகிச்சை செய்து பார்ப்போம் என்று மருத்துவர்கள் பேசிக்கொண்டனர். எல்லாம் ஒரே நாளில் தலைகீழாக மாறிப்போனது. குழந்தைக்கு வாய்வழி உணவே தர முடியாமல் ட்ரிப்ஸ் மட்டுமே ஏற்றப்பட்டது. ஒவ்வொரு முறையும் நரம்பில் ஊசி வழியாக திரவம் ஏற்றியபோதும் வலி மிகுதியில் குழந்தையின் முகம் சுணங்கியதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
pixabay

வாழ்க்கையின் மொத்தக் கசப்பையும் விழுங்கிய நேரமது. நண்பர்கள், உறவினர்கள் என்று யாரும் அருகில் இல்லாது தனித்துவிடப்பட்ட சூழலில் யாருடைய குரலையாவது கேட்டால் தேவலாம் என்றிருந்த நிலையில், மிகவும் நெருக்கமான உறவை தொலைபேசியில் அழைத்தேன். நெருக்கமென்றால் தொப்பூழ்கொடி நீளமளவு நெருக்கம். "உன் செயல்களின் விளைவுகளிலிருந்து ஒருபோதும் நீ தப்ப முடியாது" என்று கீதோபதேசம் செய்து அழைப்பைத் துண்டித்தது தொப்பூழ்கொடி உறவு.

'செயல்களின் விளைவுகளிலிருந்து தப்ப முடியாது' என்று என் செவியில் ஒலித்துக்கொண்டேயிருந்தது. பித்துப்பிடித்தவள்போல் மருத்துவமனையின் கழிவறைத் தரையில் அமர்ந்துகொண்டேன். அங்குதான் யாரும் என்னை கவனிக்க மாட்டார்கள் என்று எண்ணியிருந்தேன். "உன்னை என்றுமே யாருமே கவனித்ததில்லை பெண்ணே, இனியும் யாரும் கவனிக்கப் போவதுமில்லை. இந்த நிர்வாணத்தை நீ ஒப்புக்கொண்டால் மட்டுமே இனி நீ வாழ முடியும்" என்று என் மூளை மனதுக்கு உரைத்தது.

மருத்துவமனையில் ஒரு வாரத்துக்குமேல் கடந்த நிலையில் குழந்தையின் உடல்நலம் தேறுவதுபோல் தெரியவில்லை. மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கான வழிமுறைகளை மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். என் உள்ளுணர்வு ஏதோ உணர்த்துவதுபோலிருந்தது.

குழந்தையின் உடல்நிலையில் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை என்று ஒரு குரல் ஒலித்துக்கொண்டேயிருந்தது.

என்னைச் சுற்றியிருந்த அனைவரும் வேகமாக இயங்குவதுபோலிருந்தது.

மருத்துவரை அணுகினேன். குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யுமாறு கூறினேன். அவர் திகைத்தார். நொய்த்தொற்றுக்கான அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று கூறினார். நான் "எனக்கு இரண்டு நாள்கள் அவகாசம் தாருங்கள், வீட்டில் வைத்து கவனித்துக்கொள்கிறேன். தாய்ப்பாலும் அரிசிக் கஞ்சியும் கொடுத்துப் பார்க்கிறேன். என் மனம் குழந்தைக்கு சரியாகி விடுமென்று கூறுகிறது’’ என்றேன். ``பாதிப்பு அதிகமாகினால் மீண்டும் அழைத்து வந்துவிடுகிறேன். தயவுசெய்து டிஸ்சார்ஜ் செய்ய அனுமதியுங்கள்" என்றேன். மருத்துவரும் வழிவிட்டு விலகினார்.

"இனி நானும் நீயும் மட்டும்தான். வா விளையாடிப் பார்ப்போம்" என்றேன் குழந்தையின் செவிகளில். அயர்ச்சி மிகுதியில் அது அசைவற்றே கிடந்தது. அன்று முழுதும் அப்படியே கழிந்தது. "உன் செயல்களின் விளைவிலிருந்து நீ என்றுமே தப்ப முடியாது" என்ற குரல் என்னைச் சுற்றி ஒலித்துக்கொண்டிருந்தது.

குழந்தை
குழந்தை

நான் குழந்தையின் விரல்களைப் பிடித்து அசைத்தேன். அது அசைவின்றி படுத்திருந்தது. அச்சம், பதற்றம், வருத்தம் போன்ற உணர்வுகள் மனதைவிட்டு முற்றிலும் அகன்றிருந்தன.

என்ன விளைவாக இருந்தாலும் அதை நான் ஏற்க தயார் என்று வானத்தைப் பார்த்து கூறிவிட்டு நிம்மதியாக உறங்கச் சென்றேன்.

கமலாதாஸ் தனது சுயசரிதையான 'என் கதை' புத்தகத்தில் நாயாடி இனத்தின் பழக்கமொன்றை குறிப்பிட்டு எழுதியிருப்பார்.

நாயாடி இனத்தில் ஒரு குழந்தை பிறந்ததும் அதை முதல் மூன்று நாள்களுக்கு மலையின் உச்சியில் வைத்துவிட்டு வந்துவிடுவார்களாம். வெயில், மழை, காற்று, விலங்குகள், நோய், பசி, அச்சம் என்று அனைத்துவிதமான அச்சுறுத்தல்களையும் மீறி எக்குழந்தை உயிர் பிழைத்திருக்கிறதோ அதுவே வாழத் தகுதியுடையதாகிறது என்று கருதி தங்கள் இனத்தில் சேர்த்துக்கொள்வார்களாம்." நான் நாயாடி இனத்தைச் சேர்ந்தவள்போல் உணர்கிறேன்" என்று கமலா தாஸ் எழுதியிருப்பார். அவ்வரிகள் என் மனதிலும் நிழலாடின. நான் அதைக் குழந்தையின் விரல் பிடித்து அசைத்துக்கொண்டே கூறினேன். எப்போது உறங்கினேன் என்று நினைவில்லை.

மறுநாள் அதிகாலை கடந்தும் உறக்கம் கலையாமலிருந்த என்னை ஒரு பலமான அழுகை எழுப்பியது.ரயிலில் கேட்ட அதே வீரியத்திலிருந்தது அந்த அழுகை. திடுக்கிட்டு எழுந்த என்னை ஒரு ஜீவன் வேகமாகத் தீண்டிக்கொண்டிருந்தது. என் நெஞ்சில் கைவைத்துத் தட்டியது. அது பசிக்கிறது என்று கூறுவது புரிந்தது. அதன் கண்கள் தெளிவாக மின்னின. கை கால்களை வேகமாக அசைத்துக் காண்பித்து

"என்னைப் பார்... நான் பிழைத்துக்கொண்டேன் எனக்கு பசிக்கிறது உணவளி" என்று ஆணையிட்டது.

நாங்கள் இருவரும் பசி விளையாட்டைத் தொடர்ந்தோம்.

அதன் செவிகளுக்கு மட்டும் கேட்குமாறு அன்று ஒரு செய்தியை அதனிடம் கூறினேன்.

"என்னை அம்மா என்று ஒருபோதும் அழைத்து விடாதே.’’

(பருவங்கள் மாறும்... பயணம் தொடரும்..!)