Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: ஜெஹ்லம் நதி பாடல் - அடையாளமெனும் பெரும்பாரம் சுமக்கும் மனிதர்கள் | பகுதி 25

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள் ( pixabay )

எல்லாம் தலையெழுத்து என்று தனது நெற்றியில் விரல்களால் கோடிட்டுக் காட்டி சிரித்தாள் நஸீம். வேலையின் மும்முரத்தில் கூட அவளது தலையின் முக்காடு ஒருமுறை கூட அவிழ்ந்ததில்லை.

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: ஜெஹ்லம் நதி பாடல் - அடையாளமெனும் பெரும்பாரம் சுமக்கும் மனிதர்கள் | பகுதி 25

எல்லாம் தலையெழுத்து என்று தனது நெற்றியில் விரல்களால் கோடிட்டுக் காட்டி சிரித்தாள் நஸீம். வேலையின் மும்முரத்தில் கூட அவளது தலையின் முக்காடு ஒருமுறை கூட அவிழ்ந்ததில்லை.

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள் ( pixabay )

"நான் இருப்பதா இருக்க வேண்டாமா, எது என் இருத்தலின் அல்லாது இல்லாதிருத்தலின் அடையாளம். என் அடையாளம்தான் என்ன..?"

ஷேக்ஸ்பியரின் கதாநாயகர்களில் ஒருவனான ஹேம்லட் தன் அடையாளச் சிக்கல் குறித்து தனிமொழிக் கூற்றாக பேசும் பகுதி இலக்கிய ஆர்வலர்களிடையே பெரிதும் கவனம் பெற்றதொரு பதிவாகும். மனிதன் தன்னை எதனுடனாவது அடையாளப்படுத்திக் கொள்ளும் முயற்சிகள்தான் அரசியல் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார சுரண்டல் இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணங்களாகின்றன என்னும் தெளிவு நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது. மனிதன் எனும் அடையாளம் மட்டுமே மனிதனுக்கு நிறைவு தந்துவிடுவதில்லை.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் நான் வாழ்ந்த நாள்களில் ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்குபவர்களாக மாறிய பல வாழ்வியல் அனுபவங்கள் கிடைக்கப்பெற்றேன். மனிதன் மனிதத்தை அழித்துத் திளைக்கும் அனுபவங்கள் அவை என்று கூறினால் அது மிகையாகாது.

பெருந்தேடலுக்குப் பிறகு எனக்கு நஸீம் கிடைத்தாள். அறுவைசிகிச்சை ஒன்றின் விளைவுகளால் உடல் நலிந்திருந்த நேரத்தில் அன்றாட வேலைகளே பெருஞ்சுமையாகிப் போயிருந்த நாள்கள் அவை. வீட்டுப் பணிப்பெண்ணாக நஸீம் எனக்கு அறிமுகமானாள்.

வயதில் எங்களிருவருமிடையே பெரிய வித்தியாசங்கள் இல்லையென்றாலும் வாழ்வியல் தகுதிகளால் நான் அவளைவிட சுகமான வாழ்வையே பெற்றிருந்தேன்.

என்னைப் போன்றவர்களுக்காகவே நஸீம்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் எனக்கும் இருந்தது. நான்கு குழந்தைகளை ஈன்றெடுத்த நசீம் தன் நான்காவது குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே சுற்றுப்புற அதிகாரிகள் வீடுகளில் பணிப்பெண்ணாக வேலைப் பார்க்கத் துவங்கினாள். ஒரு அதிகாரியின் பரிந்துரையால் அவள் என் வீட்டிற்கும் வரத் துவங்கினாள். அனைவரது வீட்டு அலுவல்களையும் முடித்துவிட்டப் பிறகே அவளால் என் வீட்டிற்கு வர முடிந்தது. அவள் வருதவதற்குள் நாள் நண்பகலைத் தாண்டியிருக்கும். வீடு குப்பைக்கூடமாக இருந்தாலும் நஸீம் வரும்வரை நான் காத்திருந்தேன். நான் அப்படித்தான் அயோதிருந்துஇருந்தேன். எனது கைகால்கள் மேல் எனக்கே நம்பிக்கை இல்லாது போன நாள்கள் அவை.

நஸீம் தவறியும் ஒரு வார்த்தைக் கூட பேசிவிட மாட்டாள். இயந்திரம் போல் வேலை செய்வாள். வேலை முடிந்ததும் நான் தரும் பண்டங்களை தனது பாலித்தீன் பையில் திணித்துக் கொண்டு வேகமாக வெளியேறிவிடுவாள். அன்றைய நாளுக்கான அவளது நேரம் அப்பொழுதுதான் துவங்கும் போலும். அப்பொழுது அந்தி சாயத்துவங்கியிருக்கும்.

சில மாதங்கள் வரை மெளனமாகவே தொடர்ந்த எங்களது உறவு நிதானமாக இயல்பு நிலையை அடைந்தது. இருவரின் மொழியும் வெவ்வேறாக இருந்ததால் சைகைகளும் புன்னகைகளும் மட்டுமே எங்களது தொடர்பு மொழியாக இருந்தது.

நாடோடிச் சித்திரங்கள்: ஜெஹ்லம் நதி பாடல் - அடையாளமெனும் பெரும்பாரம் சுமக்கும் மனிதர்கள் | பகுதி 25
pixabay

"நான்கு குழந்தைகள் இவ்வளவு சிறிய வயதில் எப்படி?" என்றேன் ஒருமுறை... `எல்லாம் தலையெழுத்து' என்று தனது நெற்றியில் விரல்களால் கோடிட்டுக் காட்டி சிரித்தாள் நஸீம். வேலையின் மும்முரத்தில் கூட அவளது தலையின் முக்காடு ஒருமுறை கூட அவிழ்ந்ததில்லை. பெண்களுக்காக கச்சிதமாக உருவாக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள் தன்னை பொருத்திக் கொண்டிருக்கிறாள் நஸீம் என்பது எனக்கு புரியாமலில்லை.

உடற்வியர்வையின் வீச்சம் நஸீமை நெருங்குவதிலிருந்து என்னை தடுத்தது. நட்புடன் ஒரு முறை "குளிச்சுட்டு வரலாம்ல" என்றேன் சைகை மொழியில். "அதற்கெல்லாம் என்னிடம் நேரமில்லை" என்று அசட்டையான உடற்மொழியால் உணர்த்திச் சென்றாள் நஸீம். அன்று அவளுக்கு குழந்தைகளுக்கு அளிக்கும் செரலக் பொட்டலம் ஒன்றை வழங்கினேன். அதைத் தயார் செய்வது எப்படி என்று கவனமாக கேட்டுத் தெரிந்து கொண்டாள். முன்பின் அறிமுகமில்லாத வெவ்வேறு நிலம், மொழி, இனம் என்று எத்தனையோ விஷயங்கள் எங்களை பிரித்து வைத்திருந்தாலும் அவளுக்கு நானும் எனக்கு நானும் அந்நேரத்தில் மிகவும் அவசியமானவர்களாக இருந்தோம்.

நஸீமிற்கு சஃபையர் நிற நீல கண்கள். தேவதை கதைகளில் வருவது போல் அவளை நீராட்டி அணிகலன்கள் சூட்டி அழகுப் படுத்தினால் அரேபிய அழகிகளுக்கு சற்றும் சளைக்காத செளந்தரியம் அவளுக்கிருந்தது. இதை நான் நஸீமிடம் கூறிய பொழுது அவள் தனது நீலக்கண்களில் ஒளிரச் சிரிக்க மட்டுமே செய்தாள்.

அதுவே அவளது அழகின் செருக்கை வெளிப்படுத்துவதாக இருந்தது. "ஆம் எனக்கு தெரியும்" என்ற ஆமோதிப்பின் புன்னகை அது.

ஜம்முவின் கத்துவா பகுதியைச் சேர்ந்த ராஜீவ் ஷர்மா எனும் மனிதர் எங்கள் குடியிருப்பின் முதல் தளத்தில் தனது குடும்பத்தோடு குடிவந்தார்.

"கஷ்மீரி பண்டிட் நாங்கள்" என்று அவரது குடும்பத்தில் ஒவ்வொருவரும் தங்களின் அடையாளத்தை ஏதாவதொரு வகையில் பறைசாற்றியபடி இருந்தனர்.

எங்கள் உணவுமுறை , எங்கள் இலக்கியம், எங்கள் பண்பாடு, உடை கலாசாரம் என்று கஷ்மீரி பண்டிட்டுகளின் உயர்குணங்களை காண்போரிடத்திலெல்லாம் கூறுவதை வழமையாக்கியிருந்தனர். "ராஜீவ் ஷர்மா மகா சாமர்த்தியசாலி, அவனது பார்வையிலிருந்து எதுவும் தப்பிவிடாது. அறிவும் சாதுர்யமும் அவனது அடையாளங்கள்" என்று மேலதிகாரி ஒருமுறை ராஜீவ் ஷர்மாவிற்கு சாமரம் வீசினார். ராஜீவ் அவர் முன் கைக்கட்டி வாய்பொத்தி நின்று மரியாதை செய்வான். ஒரு கஷ்மீரி பண்டிட் தனக்கு அடிப்பணிந்திருப்பதை தனது பிறவிப்பயனாக கருதிய அந்த அதிகாரி அவனை தவறாமல் புகழ்ந்தார்.

"நீங்கள் பணிவாக இருப்பது தவறில்லை ஆனால் இவ்வளவு இனிமையும் பணிவும் அவசியம்தானா? நீங்கள் பழக்கப்படுத்துவது மற்றவருக்கு பாதகமாக முடிவதைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்" என்றேன். அப்போது ராஜீவ் ஷர்மா "ஷாலினி, தங்க செருப்பை பிரயோகிக்கத் தெரிந்திருக்க வேண்டும்" என்றான். "அதென்ன தங்க செருப்பு?" என்றேன். ``நாம் அனைவரையும் அவரவர்க்கு ஏற்றார்போல் ஒரு செருப்பு கொண்டு அடித்திட வேண்டும், நான் சிலரை வெற்று செருப்பால் அடிக்கிறேன். மற்றவரை தங்க செருப்பால் அடிக்கிறேன். அவ்வளவுதான். அதிகாரிக்கு தங்க செருப்படி கொடுக்கிறேன். பாருங்கள் அவரும் அகமகிழ்ந்திருக்கிறார். என் பணிவெனும் தங்க செருப்புக் கொண்டு அவரை அடித்தேன்" என்றார் ராஜீவ் ஷர்மா. பொங்கியெழுந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். ``மற்றவரை அணுகுவதே செருப்பால் அடிப்பது போன்ற செயல் என்ற எண்ணமே எவ்வளவு இழிவானது. இதில் பெருமை வேறு உங்களுக்கு" என்றேன். ராஜீவ் ஷர்மா சிரித்தார்.

"உங்களுக்கு பிழைக்கத் தெரியவில்லை என்றால் அதற்கு நான் எவ்வகையிலும் உதவ முடியாது." என்று சிரித்துவிட்டு சென்றார்.

அவன் கூற்றைப் பற்றி நண்பர்களுடன் விவாதிக்கையில் அவர்களில் பெரும்பாலானோர், ``அவன் கஷ்மீரி பண்டிட் ஷாலு, சாதுர்யத்திற்கும் சாணக்கியத்தனத்திற்கும் குறைவே இருக்காது, அவனிடம் விவாதிப்பதோ தர்க்கம் புரிவதோ நேர விரயம். நாம் செயல்பாடுகளைக் குறித்து ஆலோசித்திருக்கையில் அவர்கள் முடிவுகள் எடுத்து முடித்திருப்பார்கள்" என்றனர். "Diplomacy runs in their blood" என்று தனது புகழுரையை முடித்தார் மற்றொரு நண்பர். மனிதர்கள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிராத வெகுளிப் பெண்ணாகவே அப்போது நானிருந்ததால் ராஜீவ் ஷர்மா மற்றும் அவரது குடும்பத்தாருடன் உறவாடுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டேன். நஸீம் போன்ற மனிதர்களுடன் வாழ்க்கை யதார்த்தம் தழுவியிருப்பதையே நான் எப்பொழுதும் விரும்பினேன். இப்பொழுதும் விரும்புகிறேன்.

நஸீம், வேலை நேரத்தில் பாடல்களை முணுமுணுப்பது வழக்கம். ஒருமுறை ஜெஹ்லம் நதி பற்றிய பாடல் ஒன்றை பாடினாள்.

``தாய்மார்கள் தங்களது மணமக்களின் குருதித் தோய்ந்த புத்தாடைகளை ஜெஹ்லம் நதியில் சுத்தம் செய்கின்றனர், ஜெஹ்லம் நதி தனது கரையைத் தொலைத்துவிட்ட அங்கலாய்ப்பினால் ஒழுங்கின்றி பாய்கிறது. அபலைகளின் கண்ணீரால் அதன் கொள்ளளவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது" என்று ஊர்துஉ மொழியில் அவள் பாடினாள். அவளது நீலநிறக் கண்கள் அப்பொழுது கலங்கின.

நாடோடிச் சித்திரங்கள்: ஜெஹ்லம் நதி பாடல் - அடையாளமெனும் பெரும்பாரம் சுமக்கும் மனிதர்கள் | பகுதி 25
pixabay

ராஜீவ் ஷர்மா குடும்பத்திற்கு நஸீம் எங்கள் குடியிருப்புப் பகுதிக்கு பணியாளாக வருவதில் சிறிதும் உடன்பாடில்லை. ஒருமுறை நஸீமை வழிமறித்து அவளது அடையாள அட்டையை காண்பிக்குமாறு வற்புறுத்தினான் ராஜீவ் ஷர்மா. நஸீமின் அடையாள அட்டை சில தினங்களுக்கு முன்பு மழைநீரில் நனைந்து முற்றிலுமாக அதன் குறிப்புகள் அழிந்து போயின. யாரிடமும் அதனை கூற வேண்டாம் என்று நஸீம் என்னிடம் கேட்டுக்கொண்டாள். ஒரு முறை அடையாள அட்டை தொலைந்து விட்டால் மறுபடியும் மேலிடத்தில் முறையிட்டு அதனை பெறுவதற்கு பல மாதங்கள் ஆகக்கூடுமென்பதாலும் அதனால் அவளது பிழைப்பே பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதாலும் நான் அவளுக்கு உதவ முன் வந்தேன். என் அலைபேசி எண்ணை வாயிற்காவலர்களிடம் கொடுத்துவிட்டு உள்ளே வருமாறு ஏற்பாடு செய்திருந்தேன். ஆயிரம் கண்ணுடைய ராஜீவ் ஷர்மாவிற்கு அது தெரிந்து விட்ட பிறகு எங்களால் உண்மையை வெகுநாள்கள் மறைக்க முடியவில்லை.

``இதை நீங்கள் ஏன் வேலைக்கு வைத்திருக்கிறீர்கள். இதன் உடையும் கோலமும் காண சகிக்கவில்லையே" என்றார் ராஜீவ் ஷர்மாவின் மனைவியார். அஃறிணை முறையில் தன்னை அழைப்பதை விரும்பாத நஸீம் ஒரு நாள் பெருங்கோபம் கொண்டாள். ``அண்ணி, நீங்கள் என்னை அது இது என்கிறீர்கள், அது தவறு நானும் உங்களைப் போல் ஒரு பெண் என்பதை நீங்கள் மறக்க வேண்டாம்" என்று தனது நீல நிறக்கண்களின் ஜவாலையால் ராஜீவின் மனைவியை எச்சரித்தாள். அங்கு ஒரு பெரும் சொற்போர் அரங்கேறியது. முடிவில்,

``நாளை முதல் நீ இந்த பக்கமே தலைகாட்ட முடியாமல் செய்கிறேன் பார்"

என்று சூளுரைத்தாள் ஷர்மாவின் மனைவி. நிலைமையின் தீவிரம் கைமீறி விட்டதை என்னால் உணர முடிந்தது .

ஒருவன் மற்றவனைவிட தான்உயர்ந்தவன் என்று நிறுவ முயலும் போது, அவன் வெவ்வேறு அடையாளக் கட்டங்களுக்குள் தன்னையே பொருத்திக் கொள்கிறான். காலப்போக்கில் அவ்வடையாளங்களை பகடையாக சுழற்றி தன்னைச் சுற்றியிருப்பவர்களைவிட தான் உயர்ந்தவன் என்று நிரூபிக்க முயல்கிறான். நேற்று வரை சாமான்யர்களாக இருந்தவர்களின் மனத்தில் புரட்சியெனும் போராட்ட விதையை விதைப்பதும் இத்தகையவர்களே. உரிமைகளைக் காக்க வெகுண்டெழுபவர்களை போராளிகள் என்று முத்திரையிட்டு அவர்களை நசுக்குவதும் இத்தகைய முதலாளித்துவ இயல்புடையவர்களே.

நஸீம் அதற்குப்பின் எங்குமே வேலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவளையும் அவளது குடும்பத்தினரின் நடவடிக்கைகள் தீவிரமான கண்காணிப்புள்ளாகின என்பதை பின்னொரு நாளில் யார் மூலமாகவோ அறிந்து கொண்டேன். தீவிரவாத அமைப்புகளுடன் அவர்களுக்கு ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்று ஆய்வு செய்யுமாறு பாதுகாப்புத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. நஸீமும் நானும் நிரந்தரமாக பிரிந்து விட்டோம். அதற்குப் பின்பு அவளை நான் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. அவளது சஃபையர் நிறக் கண்களும் அவை வெளிப்படுத்தின வெவ்வேறு உணர்வலைகளும் பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்து விட்டன.

"அன்ந்த்நாக் என்ற எங்கள் நிலம் இஸ்லாமாபாத் ஆக மாறிய கொடுங்கதை உங்களுக்குத் தெரியுமா,

பல்லாயிரக்கணக்கான இந்து பண்டிதர்கள் தங்கள் நிலங்களை விட்டு விரட்டியடிக்கப்பட்ட கதை உங்களுக்குத் தெரியுமா,

The Great Exodus of 1990 பற்றி தெரியுமா உங்களுக்கு. தீவிரவாத அமைப்புகளின் அச்சுறுத்தலால் நாங்கள் அனைவரும் எங்கள் வீடுகளை துறந்து, வயல்களை துறந்து ஜம்முவின் அடிவாரத்தை வந்தடைந்த கதை தெரியுமா உங்களுக்கு" என்று வன்மம் கொப்பளிக்க பேசினார் ராஜீவ் ஷர்மா. ``இவர்களால் நாங்கள் அடைந்த துயரங்களின் அளவை எதனாலும் அழிக்க முடியாது." என்று தனது உரையை முடித்து அமர்ந்தார்.

``பண்டிதர் ஜவஹர்லால் நேரு எனும் அரசியல் சாணக்கியரின் முடிவுகளால் இந்த நாடே அல்லலுற்ற காலத்தை நீங்கள் நினைவு கூற வேண்டும் ராஜீவ்” என்றேன் நான். ``1962 -ல் இந்திய சீன போரின் சூத்திரதாரி அவர். அவரது டிப்ளமஸி எனும் ஆயுதத்தால் அன்றைய போரில் நாம் முகங்குப்புற வீழ்ந்து அடைந்த தோல்வியை வரலாற்றின் பக்கங்களை புரட்டினால் உங்களுக்குத் தெரியும். ஒருவரது முடிவுகளால் ஒரு நாடே செயலிழந்து நின்ற நாள்களையும் நீங்கள் மறந்துவிட கூடாது" என்று எனது தனிப்பட்ட கருத்தை அழுத்தமாக முன்வைத்தேன். ராஜீவ் ஷர்மா நான் கூறுவதைக் கேட்டு சற்றுத் தடுமாறினார். "நேரு மாபெரும் தலைவர். அவர் அப்படி செய்பவரல்ல" என்று ஆதாரமற்ற வாதத்தை முன்வைத்தார்.

``உண்மை என்பது ஒன்றுதான் என்று சற்றுமுன் வரை முழங்கினீர்களே. உண்மைக்கு ஒரு முகமிருந்தாலும் அதன் விளைவுகளுக்கு பல முகங்கள் உண்டென்பதை நீங்கள் ஏன் மறந்தீர்கள் ராஜீவ். நீங்கள் மனிதர்க்கேற்றவாரு செருப்புகள் வைத்திருப்பவராயிற்றே. குரலற்று போனவர்களின் வலியும் வேதனையும் உங்களுக்கு எப்படி புரியும். அடையாளங்களைத் துறந்து சமூகத்தின் மூலைகளில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களை நசுக்கித் திளைப்பது எவ்வகையில் நியாயம். ஒருவர் இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம் ஆனால் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாமல் அரை விதவைகளாகவும், அரை அனாதைகளாகவும் வாழ்வது எவ்வளவு பரிதாபத்துக்குரியது. நசீமிடமிருந்து அவளது உழைப்பைப் பிடுங்கினீர்கள். மேலும் அவளல்லாத ஒரு அடையாளத்தை அவளுக்கு எவ்வளவு எளிதாக வழங்கினீர்கள்.

இப்போது உங்கள் செயலுக்கான நியாயத்தை தலைமுறைகளுக்கு முன் சென்று தேடிக் கொணர்ந்து உணர்ச்சிமிகு உரையாற்றி அனைவரையும் நம்ப செய்கிறீர்கள்.

இதையேதோன் மற்றவர்கள் உங்களுக்கும் செய்தார்கள். இனியும் நீங்கள் இப்படியே தொடர்ந்தால் இந்த வன்மத்தின் வேர் படர்ந்து கொண்டேதான் இருக்கும். இதற்கொரு முடிவே கிடையாது. நஸீம் எந்த வன்மத்தின் எச்சமாக வாழ்கிறாளோ நாளை உங்கள் பிள்ளைகளுக்கும் அதே நிலைதான் ஏற்படும் ராஜீவ்" என்று கூறி முடித்தபோது என்னையுமீறி பொங்கியெழுந்த கண்ணீரை ஆற்ற முடியாமல் அவ்விடம் விட்டு வெளியேறினேன்.

பாதிப்புகளை நேரடியாக சந்தித்திராத என்னைப் போன்ற சாமான்ய பெண்ணின் குரலில் அன்று வலி அதிகமிருந்ததாக நண்பர்கள் என்னைத் தேற்றினர். போர்களில் மடிந்தவர்களைவிட நிலங்களை உடைமைகளை இழந்தவர்களைவிட இவ்வனைத்தையும் ஒரு பார்வையாளனாக பார்க்கும் மனிதனின் உளவியல் அதிக பாதிப்பிற்குள்ளாகும் என்பது மனிதர்களுக்கு புரிவதில்லை. அது புரிந்தால் ஏவுகணைகளுக்கும் பீரங்கிகளுக்கும் வேலையில்லாமல் போய்விடுமல்லவா. சாட்சியங்களின் வலி மரணத்தை விட கொடியவை.

நாடோடிச் சித்திரங்கள்: ஜெஹ்லம் நதி பாடல் - அடையாளமெனும் பெரும்பாரம் சுமக்கும் மனிதர்கள் | பகுதி 25
pixabay

ராஜீவ் ஷர்மா அதற்கு பிறகு பொதுவெளியில் பெரும்பாலும் பேசுவதைத் தவிர்த்தார். அலுவலக கோப்புகளில் செய்த முறைகேடுகளுக்குத் தண்டனையாக அவருக்கு மிக விரைவாகவே இடமாற்றல் வந்துவிட்டது. விடைபெறும் போது மட்டும் நாங்களிருவரும் சந்திக்க நேரிட்டது. நஸீமின் நீலநிறக் கண்கள் தோல்வியுற்று கலங்கிய நொடிகள் மனதில் நிழலாடின. "ராஜீவ் ஷர்மா" என்று திடமான குரலில் அவரை அழைத்தேன். காரில் ஏறச் சென்றவர் ஒரு நொடி நின்று என்னை திரும்பிப் பார்த்தார்.

"உன் சொல்லாலோ செயலாலோ யாரோ ஒருவர் மனிதம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை இழக்கிறாரென்றால் நீ தோற்றுவிட்டதாகக் கொள். அதற்குப்பிறகு நீ என்று பெருமைப்பட்டுக் கொள்ள உன்னிடம் எந்த அடையாளமும் இருக்காது" என்று கூறிவிட்டு அவரை ஏறெடுத்தும் பார்க்காமல் திரும்பி நடந்தேன்.

மனிதம் உணர்த்தும் பயணங்கள் தொடரும்...