2015-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு சர்ச்சை வெடித்தது. சுமார் ஐம்பது ஆண்டுக்காலம் இந்திய மண்ணில் கொடுங்கோல் ஆட்சிபுரிந்து, இந்துக்களின் வழிபாட்டு அடையாளங்களை அழித்த முகலாய மன்னன் ஒளரங்கசீப்பின் பெயர் டெல்லியின் முக்கியமான சாலைக்கு பெயராக இருக்கக் கூடாதென்று சீக்கிய அமைப்பினரும், வலதுசாரிக் கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தின. அதைத் தொடர்ந்து `கொடுங்கோல் மன்னன்’ என்று வரலாற்றேடுகளில் தொடர்ந்து இடித்துரைக்கப்பட்ட ஒளரங்கசீப்பின் பெயர்கொண்ட சாலையை, `டாக்டர் அப்துல் கலாம் சாலை’ என்று மாற்றுவதாக ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2015-ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நான் ஒளரங்காபாத் பயணத்தில் இருந்தேன். அஜந்தா எல்லோரா, தேவகிரி கோட்டை எனச் சுற்றியலைந்ததில் பயணத்தின் நாள்கள் ஒரு வாரத்துக்கும் மேல் ஆகிவிட்டன. பயணச் செலவுகள் திட்டமிட்டிருந்ததைவிட அதிகமாகியிருந்தன. ஊர் திரும்பும் எண்ணம் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தது. மறுநாள் இரவுப் பேருந்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்துவிட்டு, பகல் நேரத்தை அறையிலேயே இருந்து ஓய்வெடுக்கலாம் என்று முடிவு செய்தோம். இரவு உணவு முடிந்ததும் விடுதி உரிமையாளர்களிடம் பயண அனுபவங்களை விவரித்து, பேசிக்கொண்டிருந்தோம். அப்போது இரட்டையர்களில் ஒருவர் "மன்னர் ஒளரங்கசீப் கல்லறையைப் பார்த்துவிட்டு வந்தீர்களா... அனுபவம் எப்படியிருந்தது?" என்றார். "இல்லைங்க... அவரின் நினைவிடத்தைப் பார்க்கவேண்டிய அவசியமென்ன இருக்கிறது... கொடுங்கோல் ஆட்சிபுரிந்து மக்களை வதைத்த மதவெறியனின் கல்லறையைப் பார்க்க விருப்பமில்லை" என்றேன்.

``நீங்கள் பாடப்புத்தகங்கள் கூறும் வரலாற்றை நம்புபவர்போல. பயணங்களை விரும்புவதாகக் கூறுகிறீர்கள். அதேநேரத்தில் வரலாற்றை அதன் உண்மையுருவில் காணும் பக்குவம் வாய்க்கப் பெறாமலிருக்கிறீர்களே..." என்று பொருட் பொதிந்த புன்னகையொன்றை வீசினார். அவரின் சொற்களைவிட அவரது புன்னகை மனதை ஆழமாகத் தைத்தது.
`` `முகலாய சாம்ராஜ்யத்தின் பேரரசர் என்றறியப்பட்ட ஒளரங்கசீப், காலத்தின் கடிகாரத்தைப் பின்னோக்கிச் சுழற்ற முயன்று, அதன் விளைவாக அதை நிறுத்தி பிறகு உடைத்தும்விட்டார்’ என்று நேரு கூறியிருக்கிறாரே... அதை நீங்கள் அறிவீர்களா என்றறியேன். ஆனால், நான் அறிந்திருக்கிறேன். தனது மதவெறி கோட்பாடுகளாலும், இந்திய மக்களின் மீதுகொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியாலும் அவர் முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தவர்."
"அப்படியா நினைக்கிறீர்கள்... அக்பருக்கு இணையாக ஐம்பது ஆண்டுக்காலம் எந்தப் படையெடுப்பிலும் தோல்வியுறாமல், உயரிய பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டின் வளமையை மீட்டெடுத்து, எளிமையை தனது இஸ்லாமிய வாழ்க்கை நெறியாக பின்பற்றிய ஒருவர், கொடுங்கோல் ஆட்சி புரிந்துதான் இவற்றையெல்லாம் சாதித்திருப்பார் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா... சரி, தர்க்கம் செய்வதை விடுத்து நாளை காலை நாம் அனைவரும் அவரின் நினைவிடத்தையும் அவரின் மனைவி தில்ரஸ் பானுவுக்காக அவரின் மகன் எழுப்பிய 'பீவி -கா- மக்பரா'வையும் பார்த்து வருவோம் என்றார். ``நீங்கள் அவ்விடத்தில் என்ன உணர்ந்தீர்கள் என்பது பற்றிப் பிறகு விவாதிப்போம்" என்று அவர் கூறியபோது மீண்டும் அதே புன்னகை அவர் முகத்தில் தவழ்ந்தது.

மறுநாள் காலை முதலில் பீவி-கா-மக்பரா சென்றடைந்தோம். `தென்னகத்தின் தாஜ்மஹால்’ என்றழைக்கப்படும் பீவி கா மக்பராவை ஒளரங்கசீப், தன் மனைவி தில்ரஸ் பானுவுக்காகக் கட்டியதாகப் படித்திருப்போம். ஆனால், அதைக் கட்டியெழுப்பியது ஒளரங்கசீப்பின் மூத்த மகன் ஆஸம் ஷா. தனது தாயின் மீது தீவிர அன்புகொண்டிருந்த ஆஸம் ஷா, அவருக்காக தாஜ்மஹால் போன்ற நினைவிடத்தை நிறுவ வேண்டுமென்கிற கோரிக்கையைத் தன் தந்தையிடம் வைத்தார். எளிமையாகவும் நேர்த்தியாகவும் அவ்விடம் இருந்தால் போதுமென்று விலையுயர்ந்த கற்களை வாங்குவதற்கு நிதி ஒதுக்கவில்லையாம் ஒளரங்கசீப். தனது தந்தை ஷாஜஹானின் ஆடம்பர மோகத்தின் மீது கடுமையான வெறுப்புக்கொண்டிருந்தார் ஒளரங்கசீப். ஓர் இஸ்லாமியனின் வாழ்வில் பகட்டு நீங்கியிருத்தல் அவசியம் என்று நம்பி அதை இறுதிவரை தன் வாழ்விலும் கடைப்பிடித்துவந்தார்.

``நான் இவ்வுலகுக்கு அந்நியனாகவே வந்தேன். அந்நியனாகவே பிரியவும் விரும்புகிறேன்" என்று தனது இறுதி நாள்களில், தன் மகன்களுக்கு எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டிருப்பார். தனது வாழ்வின் இறுதி நாள்களில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஒளரங்கசீப், தனது ஆட்சி இறைவனுக்கு உகந்ததாக இருந்ததா என்று தெரியவில்லை என்று எழுதியிருக்கிறார். கேளிக்கை, கொண்டாட்டங்கள், மன்னர் வாழ்க்கைக்குரிய அதிகார ஆடம்பரங்களை முற்றிலும் தவிர்த்த அவர் தனது இளம் பிராயத்திலேயே தன்னை அரியணைக்கு உகந்தவரெனத் தீர்மானித்திருந்தார். கலைப் பித்தனான தன்னுடைய தந்தை ஷாஜஹான் போலல்லாமல் வலிமையான அரசியல் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பிய ஒளரங்கசீப், அதற்கான எந்தவொரு முயற்சியிலும் துவளவில்லை. அதன் விளைவாக, இந்திய நிலப்பரப்பின் தென்பகுதியுட்பட ஒட்டுமொத்த இந்தியாவும் (தென்கோடி நிலங்கள் தவிர்த்து) அவரின் முகலாயக் குடையின் கீழ் வந்தது. அவரின் இறைப்பற்று அவரது மார்க்கத்தை இறுகப் பற்றிக்கொள்ளச் செய்தது. தனது மார்க்கத்தின் நெறிகளை எவ்வித சமரசமுமின்றி அவர் கடைப்பிடித்ததே பிற்காலத்தில் அவரைப் பற்றிய விமர்சனங்கள் எழவும் காரணமானது எனலாம். நிஜத்தில் அவர் இந்துக்களை தனது அமைச்சரவையிலும் மருத்துவக்குழுவிலும் உயர்ந்த பதவிகளில் வைத்திருந்ததாகவே கூறப்படுகிறது.
ஈகை நோன்பு காலமாக இருந்ததால், குஹ்ல்தாபாத் சென்றடைந்ததுமே அங்கு இனம் புரியாததோர் இறைமையின் அமைதி நிலவுவதை மனம் உணர்ந்தது. 'ஒளரங்கசீப் ஆலம்கீர் நினைவிடத்துக்குச் செல்லும் வழி' என்று எழுதப்பட்டிருந்த வழிகாட்டி பலகை காட்டிய திசையில் சென்றோம். வழிநெடுகிலும் இருபுறமும் பச்சைப் பட்டுத்துணிகள் காற்றில் அசைந்தன. அத்தர் மணம் காற்றில் கலந்திருந்தது. ரோஜா மற்றும் மல்லிகை மலர்ச் சரங்கள் கடைகளில் தோரணங்களாக அலங்கரித்திருந்தன. நோன்பு திறந்ததும், உண்பதற்காக விதம் விதமான இனிப்புப் பண்டங்களும் உணவுப் பொருள்களும் தயார்செய்து வைக்கப்பட்டிருந்தன. சர்க்கரைப்பாகில் ஊறவைத்த கோதுமை ரொட்டிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒளரங்கசீப்பின் சமாதியைப் பார்த்துவிட்டு வந்த பிறகு அவற்றை வாங்கி உண்ண வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

அந்நாளின் மாலைத் தொழுகைக்கான நேரம் நெருங்கியது. ஆடம்பரமான கொண்டாட்டங்களை விரும்பாத ஒளரங்கசீப்பின் சமாதி, சூஃபி ஞானி ஜைனுதின் ஷிராஜியின் தர்காவினுள் அமைந்திருக்கிறது. தனது சமாதியில் எவ்வித ஆடம்பரக் கட்டுமானங்களும் இருக்கக் கூடாதென்று, தான் உயிரோடிருந்தபோதே தெரிவித்திருந்தார் ஒளரங்கசீப். தனது இறுதி சடங்குக்கான செலவையும், தனது சமாதிக்கான செலவையும் அவரே தனது இறுதில் காலங்களில் தொழுகைத் தொப்பிகள் செய்து விற்று சம்பாதித்து வைத்ததாகக் கூறப்படுகிறது. `வானமே எனது கூரை. இறையருளின் குடை அது. அதைப் பார்த்தபடி எனது ஆன்மா இளைப்பாற வேண்டும்’ என்று அவர் விரும்பினார்.
தனது முன்னோர்களான ஷாஜஹான், அக்பர், ஹுமாயூன் போலல்லாமல் தனது வாழ்விலும் வாழ்வுக்குப் பிறகும் இறைநெறியின் எளிமையைக் கடைப்பிடித்தவர் ஒளரங்கசீப். சூஃபி பாடல்கள் பின்னணியில் ஒலிக்க, அவரின் சமாதியை நெருங்கியபோது காலணிகள் தாமாகக் கால்களை விடுவித்தன. மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரங்களும், சிவப்பு வண்ண ரோஜா மலர்கள் பூத்த செடியொன்றும் அவரின் சமாதியினருகே நிலவிய இறைமையை ஒரு பங்கு அதிகரித்து பரிமளிக்கச் செய்தன.
இந்திய நிலப்பரப்பின் வரலாற்றை திரித்து இயற்றியதில் ஆங்கிலேயர்களுக்குப் பெரும்பங்கு இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அது மன்னர் ஒளரங்கசீப் விஷயத்திலும் நிகழ்ந்திருக்கலாம் என்னும் கருத்தை முற்றிலும் மறுத்துவிட முடியாது. பதினாறாம் நூற்றாண்டில், இந்தியாவில் கால்தடம் பதிக்கத் தொடங்கிய ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி தங்களை இம்மண்ணில் வலுவாக நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டபோது தங்களுக்கு முன் இந்தியாவை ஆண்ட முகலாயர்களை கொடுமைக்காரர்களாக சித்திரிக்கவேண்டியிருந்தது. அம்முயற்சியில் அவர்களுக்குச் சாதமாக அமைந்தது ஒளரங்சீப்பின் இஸ்லாமிய நெறியின் அடிப்படையில் அமைந்த ஆட்சிக்காலம்தான். சீக்கியர்களின் குரு ஒருவர் முகலாய அரசுக்கு அச்சுறுத்தலாக இருந்தார். அவரை வீழ்த்தியதால், சீக்கியர்களின் வெறுப்பும் அவர்மீது திரும்பியது. இத்தகு காரணங்களால் அவரது ஐம்பது ஆண்டுக்கால வளமிகு ஆட்சி வரலாற்றின் பக்கங்களிலிருந்து அழிக்கப்பட்டதெனலாம். இவற்றையெல்லாம் ஒரே மூச்சில் விவரித்து முடித்தனர் எங்களுடன் வந்த இரட்டையர்கள்.

``இப்போது கூறுங்கள், இங்கு வந்து பார்த்த பிறகு, அவரைப் பற்றிய உண்மைகள் தெரிந்த பிறகு எத்தகைய உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது?" என்றார் அவர்களில் ஒருவர்.
``வரலாற்று ஏடுகள் கூறுவதெல்லாம் உண்மையல்ல என்று புரிகிறது” என்றேன். திறந்த வானத்தைப் பார்த்துக் கிடந்திருந்த ஒளரங்கசீப்பின் சமாதியின் மேல் கிளைத்திருந்த ரோஜாச் செடியில் பூத்திருந்த செந்நிற ரோஜா ஒன்று தலையசைப்பதுபோல் மெல்ல அசைந்தது.
உண்மையின் பல முகங்களை உணர்த்தும் பயணங்கள் தொடரும்..!