Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: பஞ்சாப் நாள்களும் மன்ட்டோ, குஷ்வந்த் சிங் கதைகளும்! | பகுதி 18

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள் ( pixabay )

பஞ்சாபிகள் கட்டியணைத்து அன்பு செய்பவர்கள். அவர்களது பிடி இறுகி இளகுவதற்குள் நாம் கரும்பிலிருந்து ரசத்தை எடுத்தாற்போல் உணர்வோம்.

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: பஞ்சாப் நாள்களும் மன்ட்டோ, குஷ்வந்த் சிங் கதைகளும்! | பகுதி 18

பஞ்சாபிகள் கட்டியணைத்து அன்பு செய்பவர்கள். அவர்களது பிடி இறுகி இளகுவதற்குள் நாம் கரும்பிலிருந்து ரசத்தை எடுத்தாற்போல் உணர்வோம்.

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள் ( pixabay )
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

தந்தை, மகள் உறவின் மேன்மை பேசும் தமிழ் நாவல் ஒன்றை இந்நாள்களில் வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு பெண், தான் சந்திக்கும் ஒவ்வோர் ஆணிடமும் தன் தந்தையின் நீட்சியைக் காணவே விரும்புகிறாள் என்கிற மிகை அவதானிப்பின் மேல் கட்டியெழுப்பப்பட்ட நாவல். சுவாரஸ்யத்துக்கும் உணர்வெழுச்சிக்கும் எவ்விதத்திலும் குறைவைக்காத நாவல் என்றே கூற வேண்டும். பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறுவதுபோல்

`ஏதாவது ஒரு கற்பனையான மிதவையைப் பிடித்துக்கொண்டு வாழ்வெனும் பெருங்கடலை மனிதர்கள் கடக்க முயல்கிறார்கள்.

பெரும்பாலானவர்கள் அதில் வெற்றியும் கண்டுவிடுகிறார்கள். அதனால் மட்டுமே அவர்களது கற்பனை மிதவைகளுக்கு உயிர் வந்துவிட்டது என்றாகிவிடாது.’

பயணங்கள், புது இடங்கள், புது மனிதர்கள் குறித்த ஆர்வம் என்னுள் மேலிட என் தந்தையின் பயண அனுபவங்களே காரணமென்று நான் இதுவரை யாரிடமும் கூறியதில்லை. ஹாக்கி விளையாட்டு வீரரான அவர், போட்டிகள் நிமித்தம் இந்தியாவின் பல்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்வது வழக்கமாக இருந்தது. மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இருபது நாள்கள் பயணமாக எங்காவது சென்றுவிடுவார். போட்டிகள் முடிந்து கோப்பைகள், பரிசுப்பொருள்கள் சகிதம் திரும்பி வரும் அவரை ஒரு கதாநாயகன்போல் நான் பார்ப்பேன். அவர் எங்களை உடன் அழைத்துச் செல்லாததன் கோபமெல்லாம் அவரது சாகசக் கதைகளை கேட்கும்போது மறந்துபோய்விடும். மறுமுறை நிச்சயம் கூட்டிச்செல்வதாகக் கூறுவார். மறுமுறை என்ற ஒன்று வந்ததேயில்லை.

ஹாக்கி போட்டிகளைப் பற்றி விவரிக்கும்போதெல்லாம் அவர் பஞ்சாப் அணியை மட்டும் அதிகம் சிலாகித்துப் பேசுவார்.

பஞ்சாப்காரர்களுடன் மோதுவது யானைகளுடன் மோதுவது போன்றது என்று கண்கள் விரிய கூறுவார்.

``பஞ்சாப் அணி ஃபைனல்ஸ்-ல பேய் மாதிரி விளையாடுனாங்க. நாங்க தோத்துட்டோம்" என்றார் ஒரு முறை. அப்பாவே கண்டு வியந்து அஞ்சிய பஞ்சாப்காரர்களை ஹாக்கி போட்டியில் வீழ்த்திக் காட்ட வேண்டும் என்று அன்றைய நானெனும் சிறுமி பல முறை மனதில் உறுதிமொழியேற்றாள். அப்பாவின் கால்களிலிருந்த அதே துரிதம் என் கால்களிலும் இருந்தது. ஓட்டப்பந்தயங்களில் எளிதாக வெற்றி கிடைத்தது. எப்படியாவது ஹாக்கி கற்றுக்கொண்டு பஞ்சாப் அணியை வீழ்த்திவிட வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக இருந்தது. தான் மகிழ்ந்து விளையாடிய அதே ஆட்டத்தை மகளும் விரும்புகிறாள் என்று தெரிந்ததும் அதை முற்றிலும் எதிர்த்தார் தந்தை. பணம் சம்பாதிக்கும் வழிகளைத் தேடுமாறு எனக்கு அறிவுறுத்தினார். அது கட்டளையாக மாறி, என்னை நெருக்கியபோது அவரின் கூற்றுக்குப் பின்னிருந்த எவ்வித நியாயத்தையும் புரிந்துகொள்ள மனம் ஒப்பவில்லை.

ஹாக்கி போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்துவதுபோல் நான் கண்ட கனவு கனவுபோலவே கலைந்துபோனது.

எனது இருபத்தி ஐந்தாவது வயதில் நான் நிஜத்தில் பஞ்சாப்புக்குச் சென்றேன். அன்றும் எனது பழைய கனவு மனதில் தோன்றி மறைந்தது. அதுவரை பஞ்சாப் பகுதி மக்களின் உடல் வலிமை, நாட்டுப்பற்று, நகைச்சுவைத்திறன் குறித்துத் திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் மூலமாக மட்டுமே அறிந்திருந்த எனக்கு அவர்களுடன் வாழ்ந்த சில வருடங்கள் சுவாரஸ்யமான பல அனுபவங்களை எனக்கு அளித்தன.

பஞ்சாப், லூதியானா, சண்டிகர், படிண்டா, அன்றைய லாஹூர் என்று அப்பகுதிகளைக் குறித்து கல்லூரி நாள்களில் மன்ட்டோ, குஷ்வந்த் சிங் போன்ற எழுத்தாளர்களின் கதைகள் மூலம் சிறிது அறிந்துகொள்ள முடிந்தது. சதத் ஹசன் மன்ட்டோ நான் போற்றி விரும்பும் எழுத்தாளர்களுள் ஒருவர்.

 சதத் ஹசன் மன்ட்டோ
சதத் ஹசன் மன்ட்டோ

``என் கதைகளை உங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லையென்றால் இந்தச் சமூகம், சகித்துக்கொள்ள முடியாத அளவுக்குக் கொடூரமாக இருப்பதை உணருங்கள்" என்று சமூக விழுமியங்களின் போலி முகத்திரையைத் தன் எழுத்துகளால் கிழித்தெறிந்தவர் மன்ட்டோ. அவர் எவ்வித பூடகமும் தரித்துக்கொள்ளாத எழுத்தாளராக இருந்தார். டைப் ரைட்டரின் பயன்பாடு வந்த பிறகும் அவர் தொடர்ந்து பென்சிலில் எழுதுவதையே விரும்பினார். தனது சட்டைப்பையில் வெள்ளைக் காகிதங்களையும் பென்சிலையும் திணித்துவைத்திருப்பார். இதைக் கண்ட அவருடைய நண்பரொருவர், ``மன்ட்டோ, நீங்கள் எழுதுவதற்கு டைப்ரைட்டர் பயன்படுத்தலாமே... எழுத்தின் வேகம் கூடி இன்னும் அதிகமாக எழுதலாமல்லவா" என்றார்

அதற்கு மன்ட்டோ "நண்பரே நானும் இது குறித்துச் சிந்தித்துப் பார்த்திருக்கிறேன்.

ஆனால் டைப்ரைட்டரின் சப்தத்தில் என் மனதில் வந்தமரும் பட்டாம்பூச்சிகளெல்லாம் பறந்துவிடுகின்றன.

பென்சிலில் எழுதும்போது கோடுகள் இழுக்கும் சப்தம்கூட எழுவதில்லை. அதனால் நான் அப்படியே எழுதிக்கொள்கிறேன்" என்றார். மன்ட்டோ எனும் புரட்சியாளனின் மனதில் வந்தமர்ந்த பட்டாம்பூச்சிகளின் ரசிகையாகிப்போனேன் நான்.

'டோபா டெக் சிங்' மன்ட்டோ எழுதிய ஒரு சிறுகதை. முழுவதும் அங்கதச் சுவையால் நிரம்பிய கதை. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்தேறிய அபத்தமான கொடுமைகளை பின்னணியாகக்கொண்ட கதை. பிரிவினைக்குப் பிறகு லாஹூர் பாகிஸ்தான் ஆகிவிட்டதால், அப்பகுதியின் விடுதிகளிலிருந்த பைத்தியக்காரர்களை இந்தியாவுக்கும், இந்தியாவின் விடுதிகளிலிருந்த பைத்தியக்காரர்களை பாகிஸ்தானுக்கும் மாற்றியனுப்புவது தொடர்பான ஏற்பாடுகளை பகடியாக எழுதியிருப்பார் மன்ட்டோ.

தான் எவ்விடத்துக்குச் செல்ல வேண்டும் என்று புரியாமல் பைத்தியக்காரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எதிர்வினையாற்றுவார்கள்.

அவர்களுள் பிஷன் சிங் என்பவர் தனது சொந்த நிலமான 'டோபா டெக் சிங்' எப்பகுதிக்குட்பட்டது என்று கேட்டுக்கொண்டேயிருப்பார். சிலர் இந்தியாவுக்குட்பட்டது என்றும், வேறு சிலர் அந்நிலம் பாகிஸ்தான் பகுதிக்குட்பட்டது என்றும் அவரைக் குழப்புவார்கள். இறுதியில் வாகா எல்லையின் நடுவே அவர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து இறந்துவிடுவார்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
அவரது உடலின் ஒரு பகுதி இந்தியாவை நோக்கியும் மறுபகுதி பாகிஸ்தானை நோக்கியும் காட்டும். உடலின் நடுப்பகுதி மட்டும் யாருக்குமே தெரியாத 'டோபா டெக் சிங்'

பகுதியில் துடித்து மடியும். சிறுகதையை வாசித்து முடித்த பின்னும் வெகுநேரம் மனம் அமைதியிழந்து தவித்தது. பிரிவினைகள் சாமானியர்களின் மனதில் எவ்வளவு ஆழமான காயங்களை வடித்துச் சென்றிருக்கின்றன என்பதை அக்கதை விளக்கியது. இரு நாடுகளும் பிரிந்தபோது நிகழ்ந்தேறிய அவலங்கள் கண்முன்னே விரிந்தன.

`யார் சிறந்த சிறுகதைகள் எழுதுகிறவர், கடவுளா அல்லது நானா (மன்ட்டோ)’ என்ற வரிகள் அப்போது நினைவுக்கு வந்தன.

மன்ட்டோவின் எழுத்துகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை குஷ்வந்த் சிங் அவர்களின் எழுத்து. அவரின் எழுத்து தொனியில் நகையுணர்வு மிகுந்திருக்கும். அது பஞ்சாபிகளுக்கே உரித்தான ஒரு குணாதிசயம் எனலாம். அவரின் கதாபாத்திரங்கள்போல்தான் அப்பகுதி மக்களின் குணங்களுமிருக்கும். அவர் எழுதிய `Train to Pakistan’, `The Company of Women’ இரண்டும் நான் மீள்வாசிப்பு செய்யும் நாவல்கள்.

`The Company of Women’ நாவலில், கதாநாயகனுக்குப் பல பெண்களுடன் அரங்கேறும் உடலுறவு நிகழ்வுகளை சுவாரஸ்யமாக எழுதியிருப்பார் குஷ்வந்த் சிங். பல்வேறுவிதமான பெண்கள், வெவ்வேறு மாநிலங்கள், வெவ்வேறு மொழி பேசும் பெண்கள், ஆங்கிலேயப் பெண்மணிகள் என அவனுக்கு ஏற்படும் அனுபவங்களைத் தொகுத்திருப்பார் சிங்.

அதில் வரும் தமிழ்ப் பெண் பேசுவதாக வரும் வசனங்கள் வாசகர்களிடையே விமர்சனங்களை எழுப்பின.

இலக்கிய வாசிப்பின் மூலமாகக் கிடைத்திருந்த அறிமுகத்தைத் தவிர பஞ்சாப் குறித்த வேறெந்த அனுபவமுமில்லாததால் எல்லா புதிய இடங்களிலும் உணரும் அந்நியத்தன்மையை அங்கும் என்னால் உணர முடிந்தது. நான் அங்கு செல்வதை அறிந்த தோழியொருவர், ``பஞ்சாபிகள் கட்டியணைத்து அன்பு செய்பவர்கள். அவர்களது பிடி இறுகி இளகுவதற்குள் நாம் கரும்பிலிருந்து ரசத்தை எடுத்தாற்போல் உணர்வோம். ஆதலால் கைகள் கொண்டு காத்துக்கொள்ளவும்" என்றார். நாங்கள் சிரித்துக்கொண்டோம்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
pixabay

அவர் கூறியது எவ்வளவு உண்மை என்பது பீம்லா என்னை கட்டியணைத்து வரவேற்றபோதுதான் புரிந்தது. அவரது பிடியிலிருந்து விலக முயலாமல் மூச்சடைத்துப் போகுமளவுக்கு இறுக்கமாகக் கட்டியணைத்தார் அவர். பெண்ணுடல்களுடன் நெருங்குவது எனக்கு அசெளகரியத்தைத் தந்தது. இணை துருவங்கள் விலகியிருப்பதுதானே நியாயம். அதற்குப் பின்னான மூன்று வருடங்கள் பீம்லாவின் அணைப்புகளைத் தவிர்ப்பதென்பது இயலாத காரியமாகவே இருந்தது.

பீம்லா- மதன் சிங் தம்பதியர் அடிப்படையில் விவசாயிகள் என்பது அவர்கள் பராமரித்துவந்த தோட்டத்தைப் பார்த்தபோதே எனக்குப் புரிந்துவிட்டது. கரும்பு, சோளம், பட்டாணி, கீரை வகைகள், கேரட், பாகற்காய், பூசணி, கொத்துமல்லி என அனைத்து வகையான காய்கனிகளும் அவரின் தோட்டத்தில் விளைந்தன. அதிகாலை சில மணி நேரம் மதன் சிங் தோட்டத்தில் வேலை செய்வார். முற்பகல் நேரந்தொட்டு பிற்பகல் வரை பீம்லா தோட்டத்தில் வேலை செய்வார். அவர்களது தோட்டத்தையொட்டி எங்கள் வீடு இருந்ததால், சமையலறையிலிருந்து அவர்கள் வேலை செய்வதை என்னால் பார்க்க முடிந்தது. நெடுநேரம் குனிந்தபடியே வேலை செய்த பீம்லாவின் உடல் வலிமையைக் கண்டு வியந்தேன்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
representative image / pixabay

அதை அவரிடமும் கூறினேன். மேலும் அவர்களது விவசாய அறிவையும் வெகுவாகப் பாராட்டினேன். ``நகரத்திலேயே வளர்ந்து பழகிய எங்களுக்கு இதெல்லாம் பெரிய காரியங்களாகத் தெரிகின்றன" என்று மனதாரக் கூறினேன். இந்தி அவ்வளவு சுலபமாகப் பேச வராத காலங்கள் அவை. அதனால் ஆங்கிலத்தில் ஓரிரு இந்தி வார்த்தைகள் கலந்து கூறுவேன். முதலில் அவற்றைப் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்ட பீம்லா, சில நாள்களுக்குப் பிறகு நான் ஆங்கிலத்தில் பேசும்போது இறுக்கமான முகபாவனைகள் செய்தார். பின்னர் ஒருமுறை வெளிப்படையாகக் கூறிவிட்டார்

"வெள்ளையனின் மொழியை பேசுவதில்தான் இந்த மதராஸிகளுக்கு எவ்வளவு பெருமை... ஏன் இந்தி கற்றுக்கொண்டால்தான் என்னவாம்.

நீங்கள் இங்கு வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இன்னுமா இந்தி கற்க முடியவில்லை உங்களால்?" என்றார்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

அதன் பிறகு நான் அவருடன் உரையாடுவதை வெகுவாகக் குறைத்துக்கொண்டேன். அவரின் மகள் பிங்கி என்கிற பிரியங்கா என்னிடம் ஆங்கிலம் கற்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டாள். நானும் ஒப்புக்கொண்டேன். ஆனால் கட்டணம் ஏதும் வாங்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டேன். "இலவசமாகவே கற்றுத் தருகிறேன்.

இந்தி போலவே ஆங்கிலமும் ஒரு மொழி. ஆங்கிலம் போலவே இந்தியும் எனக்கு அந்நிய மொழிதான்"

என்று அவருக்குப் புரியுமாறு கூறினேன். அதன் பிறகு எங்கள் சந்திப்புகள் இன்னுமே குறைந்துவிட்டன.

ஒரு சமயம் பீம்லா, தனது தோட்டத்தில் முள்ளங்கி, பசலைக்கீரை, வெந்தயக்கீரை, சூரியகாந்திச் செடிகள் பயிரிடுவதற்காக தோட்டத்தைச் செப்பனிட்டுக்கொண்டிருந்தார். நீர்பாய்ச்சலினால் மண்சரிந்து, சமையலறையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்களை அடைத்துக்கொண்டது. அதை அவரிடம் கூறி, நீர் பாய்ச்சும் வேகத்தைக் குறைக்குமாறு கூறினேன். அவருக்கு எப்படிப் புரிந்ததென்று புரியவில்லை. மிகவும் சினங்கொண்டு பேசினார். "உன்னால் முடிந்தால் விவசாயம் செய்து காட்டு பார்ப்போம். ஒரு விதையை நடவு செய்து விளைவித்துக் காட்டு பார்ப்போம்" என்றார். முதலில் எங்களுக்குள் மொழியினால் தகராறு ஏற்பட்டது. இப்போது அது மேலும் வளர்ந்து கிராமமா நகரமா என்கிற போக்கில் வளர்ந்துவிட்டதை உணர்ந்தேன். ஆனாலும் அவரது மகள் என்னிடம் ஆங்கிலம் கற்க வருவதை மட்டும் அவர் தடை செய்யவில்லை. நானும் அவளுக்கு கற்பிப்பதை நிறுத்தவில்லை. பீம்லாவின் மனதில் என்னைக் குறித்த தவறான எண்ணம் எழுவதற்கான காரணங்கள் குறித்து சிந்தித்தபோது ஒரு விஷயம் எனக்கு விளங்கியது. உலக வரலாற்றில் நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்னைகளும், மொழி, இனம் சார்ந்த பிரச்னைகளும் இத்தகு புள்ளிகளிலிருந்தே தொடங்கியிருக்கின்றன. `என் மொழி, என் இனம், என் நிலம்’ என்கிற உரிமைப் போராட்டங்களே போர்களாக வடிவம்கொண்டு ஓர் இனம், மற்றோர் இனத்தின் மேல் ஆதிக்கம் செலுத்தக் காரணங்களாக அமைந்தன.

போராட்டங்களும் சமரசங்களும் நிறைந்த பயணங்கள் தொடரும்..!