``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.
எனது பெரும்பாலான கனவுகளில் நீர்நீலைகள் ஏதாவதொரு வடிவில் தோன்றுவது வழக்கம். கடல், நதி, தெப்பக்குளம், ஓடை என்று கனவின் ஓர் அம்சமாக தண்ணீர் இடம்பெற்றிருப்பதை சமீபத்திய கனவுகளில்கூட என்னால் உணர முடிந்தது. உறக்கம் கலைந்த பின்னும் நினைவில் நிற்கும் கனவுகள், நிஜத்தின் நினைவூட்டல்கள் என்கிற உளவியல் கூற்றின் உண்மை விளங்கிய அனுபவம் அமிர்தசரஸ் பொற்கோயிலில் எனக்கு வாய்த்தது.
இரண்டு தங்க நிற மீன்கள் நீந்திக்கொண்டிருக்கும் பெரிய குளம் போன்றதொரு நீர்நிலை. அந்த மீன்களின் உடலிலிருந்து பொன்னிற ஒளிக்கீற்றுகள் சுற்றுப்புறப் பகுதியை ஒளிமயமாக்கியிருந்தன. நான் அந்தக் குளத்தினருகே வேகமாகச் செல்ல முற்படுகிறேன். அந்தக் குளத்தினருகே செல்லச் செல்ல குளம் பின்வாங்கியது. நான் விடாமல் முயன்றும் பயனற்றுப்போன விரக்தியில் அழுகிறேன். அழுகை அதிகரித்து மனதின் வலி கூடி இறுக்கிய புள்ளியில் கண் விழித்துவிட்டேன். கனவுகள் அப்படித்தான் கலையுமாம். விழுவதுபோல், உடைவதுபோல், மூழ்குவதுபோல், தொலைவதுபோல்.
நிஜம்தான் சுகமான முடிவுகளுக்காக ஏங்குவன.
``இங்கிருந்து பொற்கோயிலுக்குச் செல்ல எது வழி?" என்றேன்.
``எல்லா வழிகளும் அங்கேயே சென்றடைகின்றன" என்றார் தாரிவால். எங்கள் குடும்ப நண்பர். 'சர்தார்' என்று அனைவராலும் அன்போடு அவர் அழைக்கப்பட்டார். அவர் மனைவி 'ரோஸி.’ சீக்கியப் பெண்களின் தோற்றம் அவருக்கு இருந்திருக்கவில்லை. மாநிறத்தைவிட ஒரு பிடி அடர்த்தியான கருமையான தோற்றம். அவர் சிரிப்புக்கு நிறைய ரசிகர்கள் இருந்தார்கள். அழகான முத்துப்பல் வரிசை முழுதும் பளிச்சிட மனதார சிரிக்கும் இயல்புடைய ரோஸி என் நண்பராக நீண்ட காலம் ஆகவில்லை. சர்தார் தாரிவால் மற்றும் ரோஸி தம்பதியினர் எங்கள் வட்டத்தின் நட்சத்திர தம்பதிகள். அவர்களின் உறவின் நெருக்கம், ரோஸி மீது தாரிவால் கொண்ட ஈர்ப்பு, அவர்களிருவரும் அரவணைத்து குடும்பம் நடத்தியவிதம் இதெல்லாம் எங்கள் நட்பு வட்டத்தின் பேசுபொருள். ரோஸி அனைத்துக்கும் புன்னகையையே பதிலாகத் தருவாள். ஒரு முறை அவள் என்னைப் பார்த்து, ``நீங்கள் தென்னிந்தியப் பெண்ணா என்று நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள்" என்றாள். "நீங்கள் என்ன கூறினீர்கள் அதற்கு" என்றேன். "எனக்கும் தென்னிந்தியப் பெண்ணாக இருந்திருக்கலாம் என்று ஆசைதான். அவர்களைப் போன்ற வனப்பான மார்புகள் எனக்கும் இருந்திருக்கும். என் கணவரை என்னுடைய விசைக்குள் வைத்திருக்க அவை உதவியிருக்கும்" என்று என்னைப் பார்த்து கண்சிமிட்டியபடி கூறினார். அவர் என்னிடம் ஏதோ ஒன்றை கவனித்திருக்கிறார் என்று புரிந்துவிட்டது. ரோஸி ஒரு வெகுளித்தனமான பெண். வீடு, கணவருக்கு சேவை, குடும்பத்தைப் பராமரித்தல், சுவையான உணவு சமைத்தல், தன் ஆடைகளை வடிவமைத்துக்கொள்ளுதல், விரல் நகங்களுக்கு வண்ணம் பூசுதல், தோட்டம் பராமரித்தல் எனப் பல கோடி இந்தியப் பெண்களின் பிம்பம் அவர். அவரை நான் வியந்து பார்த்துக்கொண்டிருப்பேன்.
நான் ஒரு பெண் என்பது அப்போது மறந்துபோயிருந்தது.
தாரிவால் - ரோஸி தம்பதியர் சீக்கிய மார்க்கத்தைப் பின்பற்றினார்கள். அவர்களது வாழ்வியல் முறை சீ`க்கிய வாழ்வியல்’ (The Sikh lifestyle) என்றே அழைக்கப்பட்டது. இஸ்லாமிய மதம்போலவே பலவித ஒழுக்க விதிகளும், அன்றாட பிரார்த்தனை நியமங்களும், உடை உணவு கட்டுப்பாடுகளும் சீக்கிய வழிமுறையிலும் உண்டு.
பெளத்தம், கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களின் வரிசையில் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் தெற்காசியாவின் பஞ்சாப், பாகிஸ்தான் பகுதிகளில் காலூன்றத் தொடங்கியது சீக்கியம். இந்துத்துவ கோட்பாடுகளினின்றும், இஸ்லாமிய கோட்பாடுகளின்றும் வேறுபட்ட ஒரு மார்க்கமாக சீக்கியம் விளங்கியதால் மக்கள் அந்த மார்க்கத்தை நோக்கி அதிகம் ஈர்க்கப்பட்டார்கள். சேவை, சீக்கியம் கூறும் சத்தியம். சேவையின் மூலம் பேருண்மையை உணர்தல்.
மனிதர்களுக்கு ஆற்றும் சேவை கடவுளின் பாதங்களுக்கு ஆற்றும் சேவை என்பதும், பசியாறி வாழ்த்தும் மனிதனின் வாக்கு தெய்வவாக்கு என்பதும் சீக்கியம் கூறும் இறைமை.
லங்கர் சேவை சீக்கியத்தின் முக்கிய அம்சமாகும். எந்தவித சாதி, மத, இன, மொழி வேறுபாடுமின்றி அனைத்து மக்களுக்கும் உணவு பகிரும் சேவை `லங்கர் சேவை’ என்றழைக்கப்படுகிறது. `லங்கர்’ என்றால் பஞ்சாபி மொழியில் `சமையலறை’ என்று பொருள். மாபெரும் சமையற்கூடங்களில் ராட்சதக் கலங்களில் சுவை மிகுந்த உணவு தயாரித்து அனைவருக்கும் பரிமாறுவதை சீக்கியர்கள் இறைவனுக்கு ஆற்றும் சேவையாகவே கருதுகிறார்கள். உணவை அவர்கள் `பிரசாத்’ என்றே அழைக்கிறார்கள். உணவருந்த அமரும் ஒவ்வொரு மனிதரையும் குருவின் அவதாரமாகவே பார்க்கின்றனர். உணவருந்தும் அனைவரையும் 'வாஹே குரு' என்றழைத்து உணவு பரிமாறுகின்றனர்.

ரோஸியுடன் லங்கர் சேவையில் பணியாற்றச் செல்வது அப்போது எனக்குப் பிடித்தமான மன ஒருமைப்பாடு பயிற்சியாக இருந்தது. உறவினர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் உணவு சமைப்பதென்பது விருந்தோம்பல் மகிழ்வைத் தரும். ஆனால், முகம் தெரியாத மனிதர்களின் பசியாற்ற உழைப்பதும், நேரம் செலவிடுவதும் மனதை ஒருநிலைப்படுத்தி நிம்மதியளிப்பதை அந்த நாள்களில் நான் உணர்ந்தேன். அந்த அனுபவம் தந்த பாடம்தான் இன்றும் முகம் சுளிக்காமல் அனைவருக்கும் சமைக்கும் பழக்கத்தை எனக்குள் விதைத்தது.
`கொடிதினும் கொடிது எது? அன்பிலா பெண்டிர் கையால் உணவுண்பது’ என்று ஔவை மொழிந்ததை நினைவில்கொண்டு உணவு தயாரிக்கும்போது மனம் அன்பால் நிறைந்திருக்க வேண்டும் என்ற தெளிவும் அப்போதுதான் பிறந்தது. நானும் ரோஸியும் மற்றும் பல நண்பர்களும் ஆண் பெண் பேதமின்றி உணவு தயாரிப்பதில் உதவுவோம். காய்கறி நறுக்குவது, ரொட்டிகள் தயார் செய்வது, தேநீர் தயாரிப்பது, உணவருந்தும் பாத்திரங்களை எச்சில் அருவருப்பு பார்க்காமல் சுத்தம் செய்வது என எங்களது நாள்கள் அழகாகக் கழிந்தன. பெளர்ணமி நாள்களில் அருகிலிருக்கும் சீக்கிய ஆலயங்களில் சென்று லங்கர் சேவை செய்வதை வழக்கமாக்கிக்கொண்டேன்.

அமிர்தசரஸ் பொற்கோயில் பிரசாதங்கள் உலகப் பிரசித்திபெற்றவை. அங்கு செல்லும் யாவருக்கும் உயர்தர கோதுமை மாவில், சுத்தமான நெய் கலந்து தயாரிக்கப்படும் இனிப்புப் பண்டமான 'கர பிரசாத்' வழங்கப்படும். அதற்காகவே பொற்கோயில் செல்ல விரும்புவோரும் உண்டு. எனது வட இந்திய நண்பர்களே எனக்கு அவ்வாறு அறிவுறுத்தியதுண்டு. "ஷாலு அந்த ஸ்வீட் சாப்பிடுவதற்காகவே நீங்கள் ஒருமுறை அங்கு சென்று வாருங்கள்" என்பர்.
பொற்கோயிலை தரிசிக்க எனக்கு வேறு காரணம் இருந்தது. அதிகாலை நேரங்களில் தரிவால் சர்தார் தனது இல்லத்தில் ஒரு பாடல் பாடுவார். அது சீக்கியர்களின் வழிபாட்டு மூல மந்திரம். என்னையுமறியாமல் மனம் அதனொலியில் லயித்துவிடும். பாடலின் பொருள் யாதென்று விளங்கும் முன்னரே அந்தப் பாடலின் ஒலியலைகள் என்னுள் இறைமையின் அதிர்வுகளை ஏற்படுத்தின என்று கூறலாம். பல மாதங்கள் வரை அவர்கள் பிரார்த்தனை நேரத்தின்போது நானும் என்னறையில் இருந்தபடியே அவ்வொலியை தியானித்து அமர்ந்ததுண்டு. அப்பாடலுக்கு மனதை ஆற்றுப்படுத்தும் சக்தியிருப்பதாக உணர்ந்தேன். அதுபற்றி ரோஸியிடம் பேசினேன். அப்போது ரோஸி கூறினார், "ஷாலு ஹர்மந்திர் சாஹிப் சன்னதியில் அதிகாலை நேரத்தில் அந்தக் கீர்த்தனையை பாடுவார்கள்.
அதை நீங்கள் அங்கு உணரப் பெறுவீர்கள். நான் உங்களை அங்கு அழைத்துச் செல்கிறேன்" என்றாள். வாழ்வு முழுதும், வழி நெடுகிலும் எனக்கு வழிகாட்டிய பல அந்நிய மனிதர்களில் ரோஸியும் ஒருவராகிப்போனார்.

வசந்த காலம் பூத்துக் குலுங்கிய ஒரு நன்னாளில் நாங்கள் ஹர்மந்திர் சாஹிப் (பொற்கோயில்) நோக்கிப் பயணப்பட்டோம். வழியெங்கும் கடுகு மலர்கள் பூத்துக் குலுங்கிய மஞ்சள் வயல்கள் எங்களுக்குப் பொன்னொளிக் கம்பளம் விரித்து வரவேற்றன. என் மனம் இறகினும் இலகுவாகி பறப்பதை என்னால் உணர முடிந்தது. நமக்கு அழைப்பு வரும்வரை நாம் பயணம் மேற்கொள்வதென்பது சாத்தியமன்று.
`இப்போதிருக்கும் நீ இனி இருக்கப்போவதில்லை. இந்தப் பயணம் உன்னை மாற்றப்போகிறது’ என்னும் அழைப்பு என் காதில் ஒலித்தவாறு இருந்தது. அதை நான் யாரிடமும் கூறவில்லை. நம் உள் அனுபவங்களின் சாரத்தை மற்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு அந்த அனுபவத்தின் மேன்மையைக் குலைத்துவிடும் என்று நான் நம்புவதுண்டு.
மறுநாள் அதிகாலை ஹர்மந்திர் சாஹிப் சென்றடைந்தோம். இறை வழிப்பாட்டுக்குச் செல்லும் முன்னர் கடுமையாகக் காமுறுவது எனது இயல்பு. மனம் ஒரு பரவசத்தை உணரத் துடிக்கும்போது உடலானது அதை முதலில் உணரத் தொடங்கிவிடும். அதன் வேட்கையை ஆற்றுப்டுத்தாமல் இறை வழிபாடு செய்வது எனக்கு ஒவ்வாத ஒன்று. உடல் அமைதியடைய வேண்டும். இறைமைக்கு வழிவிடும் வாயில்களை உடல் திறக்க வேண்டும். மனமெனும் ஆலயத்துக்கு உடலே வழி என்கிற ஆதிமனிதனின் வழிவந்தவள் நான். கலவி முடித்ததும் கோயிலுக்குச் செல்வது எனது வழக்கம்.
அதன் பின் மனத்தில் படைப்பாற்றல் ஊற்றெடுப்பதை உணர்ந்திருக்கிறேன். அன்றும் அவ்வாறு ஓர் அனுபவத்தை நிகழ்த்திக்கொண்டேன். அதிகாலை நேரத்து கதிரவனின் மிதமான பொன்னொளியில் பொற்கோயில் மேலும் பொன்னாகி மிளிர்ந்தது.

'ஏக் ஓங்கார் சத்னாம்' என்ற பாடல் வரிகள் ஒலித்தன. மனிதர்கள் ஆலயமெங்கும் சேவை புரிந்துகொண்டிருந்தனர். சிலர் கம்பளங்கள் விரித்தனர். சிலர் சாமரம் வீசினர். லங்கர் சேவையில் சிலர் ஈடுபட்டிருந்தனர். ரோஸியும் நானும் மற்றவர்களும் அவரவர் வழியே பிரிந்து சென்றோம். நான் தனிமையானேன். ஐம்புலன்களும் சீராகியிருந்தன. எவ்வித தவிப்புமின்றி அவை அப்பாடலின் அதிர்வுகளை உள்வாங்கிக்கொண்டிருந்தன.
அப்போது அங்கு ஒரு காட்சி அரங்கேறியது. `அம்ரித் சர்’ எனறழைக்கப்படும் நீர்க் குளம் அங்கு இருந்தது. இறைவனின் அருள் தெள்ளிய நீராக அதில் பொன்னொளி கிரணங்கள் பாய்ந்து ஜொலித்தன. மனிதர்கள் அந்தக் குளத்தை ஸ்பரிசித்து வணங்கினர். நான் அந்தக் குளத்தை பார்த்திருந்தேன். சலனமற்ற அந்நீரின் தன்மையை என் மனதிலும் உணர்ந்தேன். நெடுநேரம் அங்கேயே நின்றிருந்தேன்.
நான் என் பிம்பத்தை நீரில் பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணாடிபோல் பிரதிபலித்த என் முகத்தில் சிறு புன்னகையொன்று தவழ்ந்ததைக் கண்டேன். அப்போது அந்நீரிலிருந்த என் பிம்பத்துக்கும் என் நிஜத்துக்குமிடையே இரண்டு தங்க நிற மீன்கள் நீந்திச் சென்றன. நான் கண்ட கனவு அதுதான் என்று மனம் துள்ளியது. என் கனவில் நான் கண்ட நீர்க்குளம், அதில் நீந்திய பொன்னிற மீன்கள், பொற்கிரணங்கள் ஊடுருவிய அழகு. இவையனைத்தும் என்னுள் நிகழ்ந்தனவா அல்லது மீண்டும் கனவில் ஆழ்ந்துவிட்டேனா என்று புரியாதது போன்ற ஒரு நிலை. கண்ணீர் பெருகி உதட்டை நனைத்தபோதுதான் நான் நிஜத்தில் அங்கு நிற்கிறேன் என்ற உணர்வு தட்டியது எனக்கு.
"என்ன ஆச்சு ஷாலு, ஏன் அழறீங்க?" என்று ரோஸியின் குரல் கேட்டு இயல்புக்குத் திரும்பினேன்.
"நான் சொன்னேன்ல... இங்கு நீங்கள் சத்தியம் உணர முடியும்." என்றாள் ரோஸி.
"அப்பாடலின் பொருள் என்ன?" என்றேன்.
"கடவுள் ஒன்றுதான். அதன் பெயர் வாய்மை.
வாய்மை படைக்கிறது.
வாய்மை இருக்குமிடத்தில் அச்சம் இல்லை.
வெறுப்பு இருப்பதில்லை.
வாய்மை எங்கும் நிறைந்திருப்பது.
தோற்றம் மறைவில்லாத தன்மையது.
குருவின் அருளால் அதை உணர முடியும்.
சிந்திப்பதால் மட்டும் வாய்மையை உணர முடியாது.
எண்ணங்கள் மனதின் பசியைப் போக்குவதில்லை
எவ்வளவு ஆழ்நிலை தியானமும் அதை சாத்தியப்படுத்தாது.
பிறகு எப்படி நான் வாய்மையை உணர்வது
பொய்மையை எப்படிக் களைவது.
அது இறைமையின் பாதையில் பயணிப்பதால் மட்டுமே சாத்தியப்படும்.
என்று ரோஸி கூறி முடித்தபோது என் பயணத்துக்கான பொருளும் எனக்கு விளங்கியது.
வழிகளே பயணங்களின் இலக்கை, அவற்றின் அர்த்தங்களை நிர்ணயிக்கின்றன.
கனவுகள் நிஜமாகும் பயணங்கள் தொடரும்...