Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: `மெளனம் பேசும் உமியம் ஏரி’ | பகுதி - 7

உமியம் ஏரி
பிரீமியம் ஸ்டோரி
உமியம் ஏரி

உணர்வெழுச்சியின் தீவிரம் கூடுவதுபோலிருந்தது எனக்கு. புறவுலகின் இரைச்சல்கள் ஏதுமின்றி இயற்கையின் மொழி மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்த அவ்விடத்தில் மனம் உடலிலிருந்து வெளியே குதி்த்து புல்வெளியில் உலவிக்கொண்டிப்பதுபோலிருந்தது.

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: `மெளனம் பேசும் உமியம் ஏரி’ | பகுதி - 7

உணர்வெழுச்சியின் தீவிரம் கூடுவதுபோலிருந்தது எனக்கு. புறவுலகின் இரைச்சல்கள் ஏதுமின்றி இயற்கையின் மொழி மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்த அவ்விடத்தில் மனம் உடலிலிருந்து வெளியே குதி்த்து புல்வெளியில் உலவிக்கொண்டிப்பதுபோலிருந்தது.

உமியம் ஏரி
பிரீமியம் ஸ்டோரி
உமியம் ஏரி
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

`வரம்' என்று எதைக் குறிப்பிடுவீர்கள் என்று கேட்டால் ஒவ்வொருவரிடமும் ஒரு பதில் இருக்கும். என்னைப் பொறுத்தவரை வரம் என்பது உன்னத தருணங்கள் வாய்க்கப் பெறுவதே என்பேன். அத்தகைய தருணங்கள் என் வழியில் அமையும்போதெல்லாம், அவற்றை எவ்வித சமரசத்துக்கும் இடங்கொடாமல் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நேரத்தையும் மனத்தையும் உடையவளாக இருந்திருக்கிறேன். இதையே நான் வரமென்று கருதுகிறேன்.

இந்தச் சமூகம் கட்டமைத்துவைத்திருக்கும் வெற்றிக்கனி பறித்தலே வாழ்க்கை எனும் பந்தய ஓட்டத்தில் எனக்கு நாட்டமிருந்ததில்லை.

தேவைக்கு அதிகமாகத் தேக்கிவைத்துக்கொள்ளும் மனமும் இருந்ததில்லை. அதனாலேயே எதற்கும் காத்திருக்கும் பொறுமை இயல்பிலேயே அமைந்துவிட்டது. எதிர்பாராமல் அமையும் ஆச்சர்ய மகிழ்வுகளின் தொகுப்பிலிருந்து நினைவுகளை அசைபோடுவதும் பகிர்வதும் சாத்தியமாவதும் அத்தகைய தருணங்களால்தான்.

மறுநாள் அதிகாலை, வானம் நீலம் பூணுவதற்கு முன்னரே பபூல் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குத் தயாராகி வந்துவிட்டார். முந்தைய நாளின் அலைச்சல் சோர்வின் சிறு தடயமும் அவர் முகத்தில் தென்படவில்லை. விடுதியின் சமையற்காரர்கள் எட்டு மணிக்கு மேல்தான் உணவும் தேநீரும் தருவர் என்பது தெரிந்திருந்ததால் அவரே விறகடுப்பில் நெருப்பு மூட்டி தேநீர் தயாரிக்கத் தொடங்கினார். அதிகாலை தேநீர் மணம் ரத்த நாளங்களில் புத்துயிர் பாய்ச்சியது. எங்கள் அனைவரையும்விட பபூல் பரவசமாக இருப்பதுபோலிருந்தது.

``வேகமா வாங்க" என்று அனைவரையும் துரிதப்படுத்தினார் பபூல். எங்கள் நண்பர்களில் சிலர் தாங்கள் இன்னும் நீராடவில்லை என்றனர்.

நீராடுவதும், ஒப்பனை செய்வதையும்விட அற்புதமான விஷயங்களை அவர் காண்பிக்கப்போவதாகக் கூறினார்.

மனிதன் எப்போதும் தானிருக்கும் நிலையிலிருந்துதான் அனைத்தையும் அணுகுகிறான். என்னால் பபூலின் வார்த்தைகளிருந்த பரவசத்தை உணர முடிந்ததுபோல் மற்ற சிலரால் உணர முடியவில்லை. அவர்கள் தமது நிலையிலிருந்தே பதிலளித்தனர். அதனால் அவர்களைச் சில மணி நேரம் கழித்து பயணத்தில் இணைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து நானும், இரண்டு நண்பர்களும் பபூல் காரில் புறப்பட்டோம். பபூல் மீண்டும் ஆர்வமாக செயல்படத் தொடங்கினார்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

'மேகாலயா' என்றால் `மேகங்களின் உறைவிடம்’ என்று பொருள். கார் மிதமான வேகத்தில் பயணித்தது. கார் கண்ணாடியில் சாரல் பட்டுத் தெறிக்கும் காட்சியும் ஓசையும் மனதின் இறுக்கத்தைத் தளர்த்தி சொடுக்கெடுத்துவிடுவது போலிருந்தது. கண்காணும் தூரம் வரை பச்சை விரிப்பின் காட்சியும் வாசமும் மூளையிலிருந்து நுரையீரல் வரை உயிர்வளி நிரப்பியது.

சுற்றியுள்ள மனிதர்களின் குரல்கள் மெல்ல கரைந்து காற்றில் கலந்துவிட்டதுபோல் ஏகாந்தம் எங்களைச் சூழ்ந்துகொண்டது. பபூல் அர்த்தம் பொதிந்த பார்வையோடு எங்களைப் பார்த்து புன்னகைத்துவிட்டு காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். ``சூரிய உதயத்தின் நேரம் நெருங்கிவிட்டது, இதுதான் உமியம் ஏரி. உமியம் நதியின் நீர் நிரம்பிய ஏரி. சென்று இளைப்பாறிவிட்டு வாருங்கள்" என்று மேகக்கதவுகளை திறந்துவிட்டார் பபூல்.

`The Silent lake’ என்ற வரவேற்பு பலகையைக் கடந்து செல்லும்போதே மனதில் மெளனம் மேகம்போல் படர்வதை உணர முடிந்தது. நானும் நண்பர்களும் எந்த அறிவிப்புமின்றி அவரவர் வழியே பிரிந்து செல்லத் தொடங்கினோம். எங்களுக்குப் பேச்சுத்துணை தேவையாயிருக்கவில்லை. நாங்கள் எங்களுடனேயே பேசிக்கொள்ள விரும்பினோம்.

`சரி, தவறு என்ற இரு நிலைகளையும் கடந்த வெளியொன்று இருக்கிறது.

அந்தப் புல்வெளியில் ஆன்மா இளைப்பாறிக் கிடக்கையில் உலகத்துக்கு உரையாடல்களின் அவசியமின்றி போகிறது.’
- ரூமி.

ரூமியின் இவ்வரிகள் செவிகளில் ஒலித்தபடி இருந்தன.

காசி மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில், ஊசியிலை மரங்கள் சூழ்ந்திருக்கும் பள்ளத்தாக்குகளில், நீர்பாசனத் தேவைகளுக்காகவும் அப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவை, பொருளாதார மேம்பாட்டுக்காகவும் உமியம் நதியின் நீர் உமியம் ஏரியாகச் சேகரிக்கப்படுகிறது.

விடியலுக்கு முன்னதான கருநீல வானம், ரகசியங்களைச் சுமந்திருக்கும் வயோதிகச் சாயல்கொண்டிருந்தது. நிச்சலனம் பூண்டிருந்த நீர்ப்பரப்பின் அமைதியோடு சலனங்களால் நிரம்பிய என் மனம் அலைவரிசை பொருந்தாமல் தவித்தது. வலி, சினம், பயம், ஆற்றாமை, ஏக்கம், வெறுமை என ஒவ்வோர் உணர்வும் முறையே மேடையில் தோன்றும் கதாபாத்திரங்கள்போல் என் மனக்கண் முன் தோன்றின.

நான் சிறுமியாயிருந்தபோது, தினமும் தொலைந்துபோன என் அம்மாவைத் தேடி வெகு தூரம் பயணிப்பது வழக்கம்.

அம்மா தினமும் தொலைந்துபோவாள். நான் அம்மாவைத் தேடிப் போவேன். நான் தேடி முடித்து வீடு திரும்பும்போது அம்மா வீட்டுக்கு வந்திருப்பாள். இது எனது புரிதலாக இருந்தது. தேடிச் சென்றால்தான் அம்மாகூட வருவாள். தட்டினால்தான் கதவுகள் திறக்கும், அழுது அரற்றினால்தான் அன்புகூட வாய்க்கப் பெறும் என்ற எண்ணம் மனதில் ஆழமாகப் புதைந்து வேர்விடத் தொடங்கிய குழந்தைப் பருவம் அது. அப்போது அம்மாவின் தேவை எனக்கிருந்தது. அதனால் அவளை தினமும் தேடிச் செல்வேன்.

அந்த வழித் தடத்தில் ஒரு ரயில் தண்டவாளம் இருந்தது. ஒரு மாலை வேளை, வீடு திரும்பாத அம்மாவைத் தேடிப் புறப்பட்டேன். தண்டவாளத்தில் ரயில் வருவதையறியாமல் கடக்க முயன்ற என்னை வேகமாக இழுத்தன இரு கரங்கள். யாரோ மூன்றாம் மனிதர். வீடுவரை அழைத்து வந்து அம்மாவிடம் ஒப்படைத்தார். அன்று ஆசைதீர அம்மா என்னை அடித்தாள். ``நீ தொலைந்து விடாமலிருக்கவே நான் உன்னைத் தேடிச் செல்கிறேன் அம்மா" என்றேன். என்னை வீட்டுக்கு அழைத்து வந்த அந்த மனிதரிடம் அம்மா, ``சார் அடுத்த முறை இவளைக் காப்பாற்றி கூட்டி வராதீர்கள், அப்படியே போகட்டும் எங்கேயாவது..." என்றாள். அம்மாவைத் தேடிச் செல்லும் எனது பழக்கம் அன்றோடு நின்று போனது.

``உன்னைத் தேடுகிறேன் என்று உனக்கு உணர்த்தவே நித்தமும் அலைந்தேன் அம்மா. இனி உன்னைத் தேடவே போவதில்லை, நீ அருகிலிருந்தாலும்கூட"

என்று அம்மாவுக்கு கேட்டுவிடாதபடி கூறினேன். உமியம் ஏரியின் மெளனம் அவ்வரிகளை மீண்டும் நினைவூட்டியது. யாரிடமும் வெளியிடாத ரகசியத்தை அன்று மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக்கொண்டேன். ``தேடிச் சென்று, வருந்தி அழைத்து அடையும் எதுவும் எனக்குத் தேவையில்லை, அது பொருளாயிருந்தாலும்,மனிதராயிருந்தாலும், கடவுளாகவே இருந்தாலும்கூட." வானம் அப்போது விடிந்தது. இளஞ்சிவப்பும் மஞ்சளும் கலந்ததொரு மோகச் சாயம் பூசியிருந்தது வானம்.

உணர்வெழுச்சியின் தீவிரம் கூடுவதுபோலிருந்தது எனக்கு. புறவுலகின் இரைச்சல்கள் ஏதுமின்றி இயற்கையின் மொழி மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்த அவ்விடத்தில் மனம் உடலிலிருந்து வெளியே குதி்த்து புல்வெளியில் உலவிக்கொண்டிப்பதுபோலிருந்தது. அப்போது என்னுடன் பணிபுரிந்த ராகுல் எனும் நண்பரது வாழ்வும் அனுபவங்களும் நினைவுக்கு வந்தன.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

திரு.ராகுல் சிங், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு மகள் இருந்தார். பெயர் ஆஷா. ஆஷாவுக்கு மன வளர்ச்சிக் குறைபாடு இருந்தது (Autism). நான் அவரைச் சந்தித்தபோது ஆஷாவுக்கு பன்னிரண்டு வயது இருந்திருக்கும். ராகுலுக்கும், அவரின் மனைவி சப்னாவுக்கும் ஆஷாதான் ஆதியும் அந்தமும். ராகுல் எங்கு சென்றாலும் ஆஷாவை அழைத்துச் செல்லத் தயங்கியதில்லை. ஆஷாவை உலகத்தின் பார்வையிலிருந்து அவர் மறைத்துவைக்கவில்லை. சக்கர நாற்காலியில் பொட்டலம்போல் மடிந்துகிடக்கும் தன் மகளின் மனமும் உடலும் அனுபவித்த வலியை முழுமையாக தன்னுள் வாங்கிக்கொண்ட ராகுல், ஒரு நாளும் சோர்ந்து போய்ப் பேசியதோ, விரக்தியில் புலம்பியதோ இல்லை. ஆஷாவின் ஒவ்வோர் அசைவும் அவருக்கு மட்டுமே புரிந்திருந்தது.

``எவ்வளவுதான் பக்குவமான மனிதராக இருந்தாலும் ராகுல், ஆஷாவைக் குறித்தும் அவரின் எதிர்காலத்தைக் குறித்தும் உங்களுக்கு வருத்தமோ பயமோ தோன்றுவதில்லையா?"

அதற்கு ராகுல் கூறினார் , ``எனக்கு வேலை கிடைத்து நான் நன்றாக சம்பாதித்துக்கொண்டிருந்த நேரமது. வாழ்க்கையை குதிரைச் சவாரிபோல் ஆனந்தமாக வாழ்ந்து வந்தேன். ஒரு நாள் பீகார் மாநில எல்லையில் காரில் தனியாகச் சென்று கொண்டிருந்தபோது வழிப்பறி கொள்ளையர்கள் என் வாகனத்தைக் கைப்பற்றிச் சூறையாடினர். என்னிடமிருந்த பணம், நகை எல்வாவற்றையும் கொடுத்த பின்னரும் அவர்கள் என்னை விடுவதாக இல்லை. என்னைக் கொல்வதுதான் சரியென்று முடிவெடுத்தனர். நான் அவர்களிடம் என்னை உயிருடன் விடுமாறு மன்றாடினேன். ஒவ்வொருவரின் பாதத்தையும் பிடித்து, அழுது கெஞ்சினேன். உயிர் பயம் என்னை ஆக்கிரமித்திருந்தது. ஒருவன் என்னை விடுவித்துவிடலாம் என்றான். மற்றொருவனோ அப்படிச் செய்வது மடத்தனம் என்றான். நான் உயிர் பிழைத்திருப்பதும் மடிந்து போவதும் யாரோ மூன்றாம் மனிதரின் முடிவில் இருப்பது புரிந்ததும் வாழ்வின் மீதிருந்த அனைத்துப் பிடிப்புகளும், நம்பிக்கையும், பயமும் ஒருசேர மறைந்து போயின. அதற்குப் பிறகு நான் அவர்களிடம் மன்றாடவோ, முறையிடவோ இல்லை. என்ன வேண்டுமோ செய்துகொள்ளுங்கள் என்பதுபோல் அமர்ந்திருந்தேன்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

பல மணி நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன். அவர்கள் என்னை உயிருடன்விட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதே எனக்கு மறுநாள் காலையில் நினைவு திரும்பியதும்தான் புரிந்தது. மிக எளிதில், நொடி நேரத்தில் யாரோ ஒருவரால், ஏதோவொரு காரணத்தால், சட்டென்று பறிபோய் விடுமளவுக்கு பலவீனமானதுதான் என் உயிர் என்னும் தெளிவு பிறந்த பிறகு, வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வாழ வேண்டும் என்று புரிந்துகொண்டேன். ஆஷா என் மகளாக இருப்பதால், என் வாழ்க்கைக்குப் பொருள் கிடைத்திருக்கிறது. சாமானியக் கண்களுக்கு புலப்படாத பல கண்ணோட்டங்களை ஆஷா எனக்கு வழங்குவதால் நான் ஆஷாவுக்கு நன்றி செலுத்துகிறேன். எங்களிருவரின் உலகில் சொற்களைவிட அர்த்தங்களுக்கே அதிக முக்கியத்துவமுண்டு" என்று ராகுல் கூறி முடித்தபோது எனக்கான சில விடைகளையும் அவர் வாழ்விலிருந்து பெற்றுக்கொண்டேன்.

ராகுலும் ஆஷாவும் வார இறுதி நாள்களில் உமியம் ஏரிக்குத் தவறாமல் வருவதாக அவர் கூறினார். ஆஷா ஏரியையும், ஆகாயத்தையும், பறவைகளையும் பார்த்தபடி மணிக்கணக்கில் அசைவின்றி அமர்ந்திருப்பாராம். ராகுல் புல்வெளியில் பாய்விரித்துப் படுத்து, புத்தகம் வாசிப்பாராம். தென்றல் வீசும்போதும், ஏரியில் மீன்கள் குதித்து விளையாடும்போதும், பறவைக் கூட்டங்கள் வானில் வட்டமிடும்போதும் ஆஷா பரவசமாகக் குரலெழுப்பிச் சிரிப்பாராம். அச்சிரிப்பொலியைக் கேட்பதற்காகவே அவரை உமியம் ஏரிக்குத் தவறாமல் அழைத்துவருவதாக ராகுல் கூறுவார்.

ஆஷா கண்ட காட்சிகள் அனைத்தையும் நானும் அவ்விடத்தில் கண்டேன். அவரைப்போலவே பரவசமாகக் கூச்சலிட்டு யாரிடமேனும் என் மகிழ்வை வெளிப்படுத்த வேண்டும் என்று மனம் விரும்பியது. அவ்வகையில் ஆஷா அதிர்ஷ்டக்காரி. மகள்கள் தமது தந்தைகளால் அறியப்படுகின்றனர்.

பொழுது விடிந்து சில மணி நேரம் கடந்துவிட்டிருந்தபடியால் காலை உணவைத் தேடி நண்பர்கள் புறப்பட்டனர். `பரா பானி' (நிறைய நீர்) என்றழைக்கப்படும் மோன நதியான உமியம் நதியைவிட்டுப் பிரிய மனமில்லாமல் எங்கள் பயணம் தொடர்ந்தது. பபூல், ரியர் வியூ மிரரில் புன்னகைத்தார். நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். பயணங்கள் மனிதர்களைப் பற்றியவை.

கின்ரெம் அருவியை நோக்கி எங்களது பயணம் தொடர்ந்தது.

(பயணிப்போம்..!)