Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: இலக்கியமும் காதலும் சங்கமித்த வாரணாசி | பகுதி 17

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்

உண்மையைக் கண்டறியும் இடையறாத தேடலும், உண்மைக்கும் பொய்க்குமிடையேயான நிரந்தர யுத்தத்தைக் கையாளும் திறனும் ஓர் எழுத்தாளனுக்கு அவசியம்.

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: இலக்கியமும் காதலும் சங்கமித்த வாரணாசி | பகுதி 17

உண்மையைக் கண்டறியும் இடையறாத தேடலும், உண்மைக்கும் பொய்க்குமிடையேயான நிரந்தர யுத்தத்தைக் கையாளும் திறனும் ஓர் எழுத்தாளனுக்கு அவசியம்.

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள்
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

வட இந்தியாவில் வாழ்வதற்கு வாய்ப்பு அமையப்பெற்ற எவரும் ஒரு முறையேனும் வாரணாசி செல்ல வேண்டும் என்று நினைப்பதுண்டு. கங்கை தனது முழுவுருவில் பாய்ந்து பெருகியோடும் வழியில் அமைந்திருக்கும் வாரணாசி நகரம் இந்தியாவின் மிகப் பழைமையான ஊர் என்று அறியப்படுகிறது. ஜனனத்தைக் கொண்டாடும் மனிதர்கள் மரணத்தை அதன் ஒரு பகுதியாக ஏற்க மறுக்கின்றனர்.

வாரணாசியில் மரணம் கொண்டாடப்படுகிறது.

முக்தி, வீடுபேறு அடைதல் போன்ற விஷயங்களில் நம்பிக்கையுடைவர்கள் வாரணாசி வீதிகளெங்கும் காணப்படுகின்றனர். அத்தகைய நம்பிக்கைகள் ஏதுமில்லாத சராசரிப் பெண்ணான நானும் ஒருமுறை வாரணாசிக்கு பயணப்பட்டேன். மரணம், பிரிவின் அடையாளமென்றால் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு பிரிவும் ஒரு மரணமல்லவா... சற்றும் எதிர்பாராதிருந்தபோது வாய்த்த நேசமொன்று, அதே சாயலில் என்னைவிட்டகன்றபோது நான் இறந்துபோனேன். அப்பிரிவுக்கு மரணமென்றே பெயர் சூட்டினேன். பிரிவின் வெம்மை தாளாத பொழுதெல்லாம் ஆழ்ந்த வாசிப்பும், பயணங்களுமே என்னை வாழ்வை நோக்கி நகர்த்திவந்துள்ளன. அவற்றை எழுத்துகளாக மொழிபெயர்த்து, நினைவுகளின் அடுக்கில் மடல்களாகச் சேமித்துவைத்திருக்கிறேன். அதனிலிருந்து ஒன்று வாரணாசி பயணத்தைப் பற்றியது.

அன்பு சரவணனுக்கு, "நீ உச்சரிக்கும் அழகை கற்பனை செய்து பார்க்காமல் என்னால் ஒரு வார்த்தைகூட எழுத முடியவில்லை

உன்னை வழியனுப்பிவிட்டேன். மாலை நேரம், வழமைபோல், இரண்டு கோப்பையளவு தேநீர் தயாரித்துக்கொண்டு, நாமிருவரும் அமர்ந்து கதைக்கும் மொட்டைமாடி படிக்கட்டுகள் வரை வந்துவிட்டேன். நீ என்னுடன் இல்லை என்பதே இப்போதுதான் நினைவுக்கு வருகிறது.

மனம் முறிந்த பின்பும் பழக்கங்கள் முறிவதில்லைபோலும்.

விரும்பிப் பழகியவற்றைக் கைவிடுவது இன்னும் கடினம். அவற்றின் தாக்கம் குறைய சிறிது காலமாகலாம். இப்படியெல்லாம் சிந்தித்துக்கொண்டே உன் தேநீரில் படியும் ஆடை வளையங்களைப் பார்த்துக்கொண்டே என் தேநீரின் வெப்பம் தணிவதற்குள் அருந்திவிட முயல்கிறேன். நீ அப்படித்தானே... சுகங்களை வேகமாக அருந்த முற்படுபவனல்லவா?

"ஆறிப்போன பெறகு அதென்ன டீ?"

இதை அன்றாடம் நீ கூறிக் கேட்டதன் விளைவு, இன்று நீ இல்லாமலும் அச்சொற்கள் கேட்கவே செய்கின்றன.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

ஒரு முறை அண்டைவீட்டு செல்வந்தர், தன் வீட்டுத் தோட்டத்தை அலங்கரிக்கும் பொருட்டு அஸ்ஸாமிலிருந்து பருத்த மூங்கில் கொம்புகளை வரவழைத்து, அவற்றைச் செதுக்கி தன் வீட்டுச் சுவற்றிலிருந்து, கார் ஷெட் கூரை வரை அனைத்தையும் மூங்கில்மயமாக மாற்றியதை நம் வீட்டு மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.

அப்போது நீ...

"ப்ரியா, சும்மா ரெண்டு மூங்கில் கம்புகளைத் தட்டிப் பாரேன், அதுல எழும்பும் ஓசை அவ்ளோ ரம்மியமா இருக்கும்" என்று கூறிவிட்டு உடனே படியிறங்கிச் சென்றாய். குப்பையோடு குப்பையாக வீசப்பட்டிருந்த மூங்கில் துண்டங்களை எடுத்து வந்து, அவற்றைச் செதுக்கி, காற்று மணிக் குழல்களாக மாற்றி அறைக்கு ஒன்றாக நான்கு அறைகளிலும் அணிவித்தாய். எத்திசையில் காற்று வீசினாலும் ஏதோவொரு மூங்கில் மணி அசைந்து அதன் ஓசை வீடெங்கும் நிறையும். அதன் ஓசைக்கு உன் குரலின் தொனி. அவ்வோசை மட்டுமே இப்போது என் செவிகள் வரை வந்தடையும் ஓசையாக இருக்கிறது. ஒலியைப்போலவே, ஒலியின்மையையும் நான் விரும்பியே தேர்வு செய்கிறேன். நீயும் நானும் பிரிய வேண்டியவர்களே அல்ல. அது ஒரு காரணம் போதாதா நாம் பிரிந்துவிட. இதோ அந்நாளின் வாசலுக்கு வந்து விட்டோம். நான் இந்நாளை எதிர்பார்த்தேன் என்று கூறினால் நீ நிச்சயம் ஆமோதிப்பாய்தானே... "ப்ரியா, நாம பிரிய வேண்டியவங்க" என்று ஒருநாள் அதிகம் குடித்திருந்தபோது கூறினாய். மறுநாள் `அப்படிக் கூறவேயில்லை’ என்று சத்தியமும் செய்தாய்.

சரவணா, உன்னை நீ மறந்திருந்த நேரங்களிலும் நான் உன்னை மறந்திருக்கவில்லை.

"ப்ரியா, நீ உன்னைய மட்டும்தான் நேசிக்குற, அதனாலதான் நமக்குள்ள இவ்வளவு வாதங்களும் சச்சரவுகளும். விட்டுக் கொடுத்துப் போக மாட்டியா?"

"நான் விரும்பிச் செய்யும் ஒரு காரியத்தை எப்படி விட்டுக் கொடுப்பது? நீ பேசிக் கேட்பதும், உன்னுடன் சண்டையிட்டு உன்னை வீழ்த்தி நான் வீழ்வதும், உன் கோபங்களுக்கெல்லாம் நானே காரணமும் தீர்வாகவும் இருக்க வேண்டுமென்னும் பட்டாம்பூச்சி ஆசைகள் எனக்குமுண்டு.

பிரிவதற்கான காரணமேதும் என்னிடமில்லை. நீ விரும்புகிறாய். அதனால் விடை கொடுக்கிறேன்.

நாடோடிச் சித்திரங்கள்: இலக்கியமும் காதலும் சங்கமித்த வாரணாசி | பகுதி 17

என் பயணங்கள் நிரந்தரமானவை. மீண்டும் நானும் என் கால்களும் மட்டுமே என்றாகிப்போன அற்புதத் தனிமையுடன் வாரணாசி செல்கிறேன். பனிக்காலம் தொடங்கிவிட்டது. எலும்பை உலுக்கிப் பார்க்கும் குளிருக்கு இதமாக தெருவோரவாசிகளுடன் அமர்ந்து நெருப்பு மூட்டி குளிர்காய்கிறேன். காகிதக் குப்பைகளை அவர்கள் தீயிலிடுகையில், நம் கவிதைச் சருகுகளை நான் அவற்றுடன் சேர்க்கிறேன். தெறித்தெழும் நெருப்புக் கீற்றுகளின் நடுவே உன் சிரித்த முகம் தெரிகிறது. கவிதை முகம் உனக்கு. எனக்குப் பின் வேறு யாரேனும் அவ்வெப்பத்தில் சுகிக்கலாம். எது எப்படியிருப்பினும், நான் என் ஆடைகளின் தூசு தட்டிவிட்டு புறப்பட்டுவிட்டேன்.

வாரணாசியின் கங்கையில் நீராடி மோட்சம் பெற விரும்பித் தொடங்கிய பயணமல்ல இது. ஆனால் அதற்கிணையான ஓர் அனுபவத்தைத் தேடியே செல்கிறேன். 'அசம்கர்- லம்ஹி' என்னும் சிற்றூருக்குச் செல்கிறேன். உன்னிடம் கொண்ட மயக்கத்துக்கு சற்றும் குறைவில்லாதது இலக்கியம் மீது நான் கொண்ட மயக்கம். நீ இல்லாமல் போனாலும் எனக்கு ஒரு புகலிடம் இருக்கவே செய்கிறது என்ற ஆறுதல் மட்டுமே நீ பரிசளித்துச் சென்றுள்ள வெறுமையைத் தின்று செரிக்கத் தேவையான சக்தியை எனக்கு அளிக்கிறது.

உனக்கு நான் வாசித்துக் காட்டிய 'ஈத்காஹ்' சிறுகதை நினைவிருக்கிறதா? முன்ஷி பிரேம்சந்தின் சிறுகதை அது. ஹிந்துஸ்தானியில் எழுதப்பட்ட அக்கதையை குஷ்வந்த் சிங் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்ததை நான் உனக்கு வாசித்துக் காட்டினேன். நாமிருவரும் `ஹமீத்’ என்னும் அந்தச் சிறுவனின் அன்பை எவ்வளவு வியந்தோம்.

முன்ஷி பிரேம்சந்த்
முன்ஷி பிரேம்சந்த்

அவன் தனது பாட்டி அமீனாவுக்கு ஈகைத் திருநாள் பரிசாக, ரொட்டி சுடுவதற்காக 'சிம்டா' ஒன்றை வாங்கிப் பரிசளிக்கும் காட்சியை பிரேம்சந்த் தனது வார்த்தைகளால் செதுக்கியிருப்பார். `சிற்பி, கல்லுக்கு உயிர் கொடுப்பதுபோல் ஓர் எழுத்தாளன் சொற்களைச் செதுக்கி அவற்றுக்கு உயிர் கொடுக்கிறான்’ என்று நான் கூறியதை ஆமோதித்து நீ சிரித்தபோது அவ்வளவு அழகாகத் தெரிந்தாய் எனக்கு. `லம்ஹி’ என்னும் இச்சிற்றூரின் நுழைவாயிலுக்கு `முன்ஷி பிரேம்சந்த் த்வார்’ என்று பெயர். அவரது படைப்புகளில் அவர் காட்சிப்படுத்தியிருக்கும் நிலமும் மக்களும் இங்கு உயிர் பெற்றிருப்பதைக் காண முடிகிறது. ஆடு மாடுகளை மேய்க்கும் இடையர்கள், சிதிலமடைந்த பழைய மண் வீடுகள், முக்காடுப் பெண்கள், விவசாயப் பெருமக்கள் என அவரது கதை மாந்தர்கள் யாவரும் இங்கு நிஜத்தில் உலவுவதைக் காண முடிகிறது. பொதுவுடைமை, பெண்ணியம், முற்போக்கு அறிவுடைமை என தன் காலத்தின் முன்னோடியாக அவர் கொண்டிருந்த கொள்கைகளும், சமூகத்தின் விளிம்புநிலை குடிமக்களாகிய கடைநிலை ஊழியர்கள், பாலியல் தொழிலாளர்கள் போன்றோரை அவர் தமது படைப்புகளின் தலைமை கதாபாத்திரங்களாக வடித்து எழுதிய கதைகளும் அவர் மொழியையும்விட அவரது மனிதம் மீது அதிக மதிப்பு உண்டாகக் காரணங்களாக இருக்கின்றன. `இலக்கியம் என்பது மனித வாழ்வை ஆராய்ந்தறியப் பயன்படும் ஒரு கருவி’ என்று அவர் எப்போதும் கூறுவார் என்று அவரின் படைப்புகளைப் பாதுகாக்கும் அருங்காட்சியகத்தின் மேலாளர் திரு தூபே கூறினார். நானும் திரு தூபேவும் வெகு நேரம் உரையாடினோம். அப்போது பிரேம்சந்த் எனும் கலைஞனின் வெவ்வேறு பரிமாணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. `உண்மையைக் கண்டறியும் இடையறாத தேடலும்,

உண்மைக்கும் பொய்க்குமிடையேயான நிரந்தர யுத்தத்தைக் கையாளும் திறனும் ஓர் எழுத்தாளனுக்கு அவசியம் இருக்க வேண்டும்’

என்று பிரேம்சந்த் ஆணித்தரமாக நம்பினார்.

அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுகளாகவே அவரது படைப்புகள் இருந்தன. அதிலும் குறிப்பாக, பெண்களை அவர் சித்திரித்தவிதம், ஒரு பெண்ணாக நான் பெரிதும் வியக்கும் ஒரு விஷயம். அவரது பெண் கதாபாத்திரங்களை பலவீனமானவர்களாக அவர் சித்திரித்ததேயில்லை எனலாம். யதார்த்தத்தின் சுமையைத் தாங்கி நிற்கும் அதேவேளையில், அவரது கதாநாயகிகள் எல்லோரும் தமது பாதைக்கான வெளிச்சத்தைத் தாமே தேடிக் கண்டடையும் ஞானம் பெற்றிருப்பதைக் காண முடியும். 1914-ம் வருடம் வெளிவந்த `மிஸ். பத்மா’ கதையில், அவரது கதாநாயகி அப்போதே, அந்தக் காலகட்டத்திலேயே திருமணம் எனும் சடங்கில் நாட்டமில்லாமல் இருப்பதையும்,

தான் விரும்பிய ஆணுடன் மணம் முடிக்காமலேயே வாழ்வதாகவும் அதனால் ஏற்படும் சமூக அழுத்தங்களையும், ஏமாற்றங்களையும் அவள் எப்படி ஏற்றும் கடந்தும் வாழ்கிறாள் என்று எழுதியிருப்பார்.

யதார்த்தத்தை மறுக்கும் இரைச்சலான புரட்சிகள் ஏதுமில்லாமல் மிக ஆழமாக அங்கு ஒரு சமூக மாற்றத்துக்கு வித்திடும் நிஜம் ஒன்றை அரங்கேற்றியிருப்பார் பிரேம்சந்த். அவரை வாசிக்கும்போதெல்லாம் நான் நிஜத்தின் அருகிலிருப்பதாகவே உணர்கிறேன். உன்னோடு இருக்கும்போது நான் உணர்ந்த அதே உணர்வு அது.

ரஷ்ய இலக்கியத்தின் மீதும், ரஷ்யப் புரட்சிக் களத்தின் மீதும் பெருமதிப்பு கொண்டிருந்தவர் பிரேம்சந்த். மாக்ஸிம் கார்க்கியின் தீவிர அபிமானியாக இருந்தவர். செக்காவ் அவர்களை `சிறுகதைகளின் நாயகன்’ என்பார். `துர்கனேவின் படைப்புகளில் மெல்லிய இழைகளாக பின்னியோடும் கவலை ரேகைகள் அற்புதமானவை’ என்றும், `கார்க்கி, பாட்டாளி மக்களின் தோழன்’ என்றும், `தல்ஸ்தாய் ரஷ்ய இலக்கியத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்’ என்றும் பிரேம்சந்த் தன் கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருப்பார்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

மாக்ஸிம் கார்க்கியின் எழுத்தின் மீது அளப்பறியா மதிப்புக் கொண்டிருந்த அவர்,

`நம் ரசனையை மேம்படுத்தாத, நம் ஆன்மாவுக்கு நிறைவளிக்காத, நம் மனதிட்பத்தையும், செயலாற்றலையும் செப்பனிடாத, மனதில் கலையின் மென்மையைப் புகுத்தாத, வாழ்வின்மீது நம்பிக்கைகொள்ளச் செய்யாத எந்தவொரு படைப்பும் இலக்கியம் என்ற தகுதியைப் பெறவே முடியாது’ என்று திண்ணமாக நம்பினார் பிரேம்சந்த். அந்த நம்பிக்கையைத் தன் படைப்புகளின் வாயிலாக நிரூபிக்கவும் செய்தார்.

`சமூகத்தில் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் எதற்கு? இவ்வுலகை மனிதன் படைத்திருந்தால், இவற்றை அழித்து புத்துலகம் படைக்கும் திராணியும் அவனுக்குண்டு.

ஒருவேளை இறைவன் என்பவன் இந்த உலகைப் படைத்திருப்பானேயானால், இங்கு அநீதி என்னும் சொல்லுக்கு இடமேது?’

என்று 'கர்மபூமி' என்னும் கதையில் ஒரு கதாபாத்திரம் கூறுவதாக வரும். இவ்வளவு ஆழமான, புரட்சிகரமான சிந்தனையை பாமரனின் மனதில் விதைத்த பெருமை பிரேம்சந்தின் கதைகளுக்கு உண்டு.

`அரசியல் பார்வையற்ற, சமூகச் சீர்கேடுகளை விமர்சிக்காத கலைஞன் என்பவன் போதைப்பொருள் விற்பவனுக்கு ஒப்பானவன். அவன் தன் எழுத்தை மயக்கம் தரும் போதைப்பொருளாகக்கொண்டு அதன் பிடியில் வாசகனை சிறைப்படுத்த முயலும் கீழான செயலைச் செய்பவனாகவே கருதப்படுவான். அவனால், அவனது படைப்புகளால் மனித இனத்துக்கு யாதொரு பயனும் இருக்க வாய்ப்பில்லை. மந்தைகளை உருவாக்குபவன் அவன்’ என்று எழுதியிருந்த பிரேம்சந்த் அவர்களின் கையெழுத்துப் பிரதியொன்றை திரு. தூபே என்னிடம் கொடுத்து `இதை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள், பாதுகாப்பாக வைத்திருங்கள்’ என்றார். `நிச்சயமாக வைத்துக்கொள்கிறேன். இந்தப் பிரதியும் இதில் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு சொல்லும் என்னிடம் பாதுகாப்பாக இருக்கும்’ என்று கூறி அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டேன்.

``சரவணா, அலைந்து திரியும் இந்தக் கால்கள் இளைப்பாறத் தவிக்கும்போதெல்லாம் உன்னை மட்டுமே தேடுகின்றன.

அப்போதெல்லாம் என் பாதங்களில் கண்கள் முளைத்து, அவை வடிக்கும் கண்ணீர்தான் பூமியைப் பிளந்தோடும் நதிகளாக மாறுவதுபோலவும் நினைத்துக்கொள்கிறேன். எனக்குத் துணையாக இதோ கங்கை பெருங்குரலெடுத்து அழுகிறாள்.

என் மூங்கில் கூடு நீ."

அன்புடன்

ப்ரியா.

பிரிவின் பயணங்கள்

(தொடரும்...)