``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்
உலகத்தில் எத்தனை மனிதர்கள் உள்ளனரோ அத்தனை கதைகளும் உண்டு. இதுதான் உண்மை என்று ஆணித்தரமாக எதையும் ஏற்க வேண்டியதில்லை என்றாலும் ஒரு உண்மையைப் போல் பல்வேறு உண்மைகளும் உள்ளன எனும் அடிப்படையில்தான் புராணக் கதைகள் இன்றளவும் இம்மண்ணில் செழித்திருக்கின்றன என்பது வரலாற்று ஆய்வாளர்கள் பெரும்பாலானோரின் பார்வையாக இருக்கிறது.
இந்தியத் தொன்மவியல் கதைகளைத் தமது புனைவெழுத்தின் முக்கிய அம்சமாகக் கொண்டு எழுதி வரும் புகழ்பெற்ற எழுத்தாளர் திரு.தேவ்தத் பட்நாயக்,
" தொன்மவியல் கதைகளால் அறிவியல் மற்றும் பகுத்தறிவுக் கோட்பாடுகளின் கேள்விகளுக்கு விடையளிக்க இயலாதுதான். ஏனென்றால் அவை மனிதனின் மனதோடு தொடர்புடையவை. அவை உணர்வு நிலையோடு நின்று விடுபவை என்பதால் மட்டுமே அவற்றை முற்றிலுமாக புறக்ககணித்து விடவும் முடியாது" என்கிறார்.
அஸ்ஸாம் மாநிலத்தின் நீலாச்சல் மலைத்தொடரில் அமைந்திருக்கிறது காமக்யா தேவி கோயில். அம்மலைத் தொடருக்கு காமகிரி என்றொரு பெயரும் உண்டு. உயிர்ப்பு, விளைவு என்னும் பொருளில் அணுகினால் காமம் படைப்பின் ஆதாரம் என்பது தெளிவாகிறது. குவஹாத்தியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நீலாச்சல் மலைத்தொடரின் பசுமைப் போர்வைக்குள் பாறைகளின் கிண்ணங்களிலிருந்து வற்றாது சுரக்கும் மெல்லிய நீரூற்றாக வீற்றிருக்கிறாள் காமக்யா. முன்னொரு காலத்தில் சிவனுடன் கூடுவதற்கு ஏற்ற இடமாக இம்மலைச் சரிவைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்த சக்தி, கடுந்தவமிருந்து அவரை பூமிக்கு வரழைத்துக் காதல் புரிந்து வந்தாள் என்றொரு கதையும் இவ்விடத்தில் வழங்கப்படுகிறது.

அவ்வாறு வருடம் முழுவதும் விவசாயத்துக்கும் மனிதர்களின் பயன்களுக்காகவும் செழிப்புற்றிருக்கும் காமக்யா, வருடத்தில் மூன்று நாட்கள் அதாவது அஹார் மாதத்தில் பிரம்மபுத்திரா நதி பெருக்கெடுக்கும் போது மூன்று நாள்கள் தன் கருவறையை சுத்திகரித்துக் கொண்டு மீண்டும் விளைச்சலுக்குத் தயாராகிறாள். அம்மூன்று நாள்களும் வடகிழக்குப் பகுதிகளின் கோயில்கள், கலை நிலையங்கள், கல்விக் கூடங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மக்கள் தமது தொழில்களிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு , வீட்டில் உப்பில்லாத உணவு சமைத்துத் தாமும் ஓய்வெடுக்கின்றனர். அம்மூன்று நாள்களும் வெள்ளப் பெருக்கால் பிரம்மபுத்திரா நதிப் படுகையின் மணலானது கலங்குவதால் அந்நதி நீர் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். கனிமங்களின் சேர்க்கையால் நீரில் இரும்பு அளவு கூடிவிடுவதால் நதி நீரானது சிவந்து காணப்படுவதாகவும் சிலர் கூறுவர் .
காமக்யாவின் உதிரமே நதிநீரால் அடித்துச் செல்லப்படுகிறது என்பது மத நம்பிக்கையுள்ளோரின் கூற்று. எது எப்படியிருப்பினும் ஒரு பெண்ணாக எனக்கு அந்த மூன்றாவது கோணம் பிடித்திருந்தது. காலங்காலமாக தீட்டு, அசுத்தம், பெண்களின் சாபம் என்றே கேட்டு பழகிய உடலின் இயற்கையான செயல்பாட்டிற்கு அங்கு அளிக்கப்படும் சிறப்பும், முக்கியத்துவமும் மனதளவில் பிடித்திருந்தது.
காமக்யா தேவி மீண்டும் வீரியத்துடன் நிலமலர்ந்து செழிக்கத் தொடங்கியதும் விவசாயம், கலைத்தொழில், கல்விக் கூடங்கள் என அனைத்தும் இயங்கத் தொடங்கிவிடும். அம்புபாச்சி மேளாவின்போது தேவியின் அருளைப் பெறவேண்டி சக்தி வழிபாட்டு முறையை மேற்கொள்ளும் பாபாக்களும் சாமியார்களும் மேளா தொடங்கும் சில நாள்களுக்கு முன்பே மலையடிவாரங்களில் கூடிவிடுவர். இதில் பலர் சக்தியின் முழு அருளையும் பெற வேண்டி நிர்வாணமாகவே அங்கு வந்து தவமிருந்து வழிபடுவதுண்டு. சக்தியின் அருளை உடல் முழுவதும் பெற்றுக் கொண்டு தமது மாந்த்ரீக யோகங்களுக்கு அவர்கள் பயன்படுத்துவதும் உண்டு. பறவைகளும் மிருகங்களும் பலிபீடங்களின் வாயிலில் மருண்ட பார்வையுடன் நின்றிருக்கும். கழுத்துக்கும் நெஞ்சுப் பகுதிக்குமிடையே அவற்றின் இதயத்துடிப்புப் படபடப்பதை காண முடியும்.

பலியிடப்பட்ட மிருகங்களின் குருதியைக் உடம்பிலும் முகத்திலும் பூசிக்கொண்டு அங்குள்ள தீர்த்த குளத்தில் நீராடிவிட்டு தேவியை தரிசிக்க செல்லும் பக்தர்களைக் கண்டபோது மனம் சற்று கலங்கித்தான்போனது. தீர்த்த குளம் முழுதும் சிவப்பு நிறத்தில் குருதிக் குளம் போல் காட்சியளித்தது. நாங்கள் அங்கு சென்ற போது அம்புபாச்சி மேளாவின் இறுதி நாள்கள் என்பதால் கூட்டம் சற்று குறைந்தேயிருந்தது. மலை படிக்கட்டுகளை ஏறும்போதே வழியின் இருபுறமும் அடர்ந்த சிவப்பு செம்பருத்தி மலர்களை மாலையாகத் தொடுத்து விற்றுக் கொண்டிருந்தனர், சில சிறுமியர்.
சிவப்பின் அழைப்பு என் மனதின் சமநிலையை மெல்ல அசைத்துப் பார்க்கத் தொடங்கியிருந்தது. காணும் வழியெங்கும் பெண்கள் சர்வ அலங்கார தேவதைகளாக வலம் வந்தனர். சிலரது பாதங்களைத் தொட்டு ஆண்கள் கும்பிட்டனர். அதில் சிலர் என் பாதம் தொட்டும் வணங்கினர். மீண்டும் உடல் சிலிர்த்து அடங்கியது.
கோயிலை நெருங்கியதும் ஓர் உஷ்ண நிலையில் மனம் ஆர்பரித்தது. கோயில் மதில் சுவற்றில் பெண்ணுருவங்கள் கால்களை விரித்து வைத்து அமர்ந்திருப்பது போன்ற சிலைகள் வடிக்கப்பட்டிருந்தன. அவ்வுருவங்களின் யோனியை மனிதர்கள் தொட்டு வணங்கினர். இன்னும் சிலர் அச்சிலைகள் முன் தியான நிலையில் அமர்ந்திருந்தனர். எனக்கு இக்காட்சிகளெல்லாம் வியப்பாக இருந்தன. என்னுடன் சில தமிழக நண்பர்களும் வந்திருந்தனர்.

அதிலொருவர் கோவிலினுள் நுழைந்ததுமே ``அய்யோ என்னடா இது, இவ்வளவு ஆபாசமா இருக்கு இங்க" என்றார். ``கையெடுத்துக் கும்பிட வேண்டிய சாமிய இப்படியா தொட்டுப் பார்த்து கும்பிடுவாங்க?" என்று நொடிக்கொரு முறை தனது அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்.
என்னுடன் வந்த மற்றொரு பெண்மணியை அவரது கணவர் வாசலோடு நிறுத்தி வைத்துக் கொண்டார். ஏன் என்று அவரை வினவியதற்கு ``வேண்டாம் மேடம், இது ஏதோ சரியாப் படல, ஏதோ மந்திர தந்திர எடம் மாதிரி தெரியுது, நாங்க இங்க காத்திருக்கோம் நீங்க போய்ட்டு வாங்க" என்று கூறிவிட்டார். இப்போது எஞ்சியிருந்தது நானும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு தமிழ் நண்பரும் மட்டுமே. அவருக்கும் ஏதோ அசெளகரியமாகவே இருந்தது போலும். ஆங்காங்கே நின்று நிதானித்து பொறுமையாகவே நடந்து வந்தார். அங்கு அரங்கேறிக் கொண்டிருந்த காட்சிகள் அவரை திகைப்படையச் செய்திருக்கலாம். ஆண்களும் பெண்களும் ஒருவித அமானுஷ்ய அதிர்வுக்கு ஆளானவர்கள் போல் தன்னிலை மறந்து நடனமாடுவதும், சுருட்டுப் பிடித்துக் கொண்டு உலவியதையும் பார்க்க எனக்குமே புதுமையாக இருந்தது. ஆனால் எவ்விதத்திலும் அவை அச்சமூட்டுவதாக இல்லை.

தேவியின் கருவறைக்குச் செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்தனர் மக்கள். இந்தியக் கோயில்களுக்கே அடையாளமாகிப்போன பணம் பறிக்கும் பூசாரிகள் ஏராளாமானோர் அங்குமிருத்தனர். அதிலொருவர் எங்களைப் பார்த்ததுமே வேற்று மொழிக்காரர்கள் என்பதை புரிந்து கொண்டதால் அவரது வித்தைகளைத் தொடங்கினார். ஆக்ரோஷமாக என் கைகளைப்பற்றி இழுத்துச் சென்றவர் ஒரு சிறுமியிடமிருந்து செம்பருத்தி மாலையை வாங்கி எனக்கு சூட்டினார். மலர் மாலை அழகாக இருந்ததால் நானும் ஆனந்தமாக சூடிக் கொண்டேன். பின்னர் அவர் என்னை சிவப்புத் தீர்த்த குளத்திற்கு அழைத்துச் சென்று அதில் மூழ்கி வெளியேறுமாறு சைகையில் கூறினார். அவ்விடத்தின் குருதி வாடை என்னை பெரிதும் பாதித்தது. ``இல்ல சாமி இதெல்லாம் வேணாம் நான் வேணா தொட்டு கும்பிடுறேன்" என்று கூறி அவரது அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டேன். என்னுடன் வந்த நண்பருக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது.``வாங்க போய்ருவோம்" என்று நூறு ரூபாய் தாளை அந்த பூசாரியிடம் கொடுத்தார். பூசாரி அருள் வந்தவர் போல் செருமினார். நிலைமை இப்போது நான் சமாளிக்க வேண்டிய கட்டத்துக்கு வந்தது. நான் எனது நண்பரிடம், ``நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருங்கள், வந்து விடுகிறேன்" என்று கூறி பூசாரியைப் பின் தொடர்ந்தேன். அவரும் என்னை ஒவ்வொரு பலிபீடமாக அழைத்துச் சென்று அங்கு சிதறியிருந்த பறவைகளின் குருதித் துளிகளையெடுத்துத் திலகமிட்டுக் கொள்ளச் சொன்னார். இனி இவரிடம் பயந்தது போல் காட்டினால் இவர் நம்மை மேலும் அச்சுறுத்தக் கூடும் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது. அவரை இன்முகத்துடன் அணுகினேன்.

அவர் வணங்கச் சொல்லி வற்புறுத்திய இடங்களிலெல்லாம் வணங்கினேன். அப்போதும் அவர் என்னை விடுவதாக இல்லை. வானத்தைப் பார்த்து மந்திரங்கள் சொன்னார். பின்பு உள்ளங்கையில் குங்குமத்தை அள்ளி என்னைச் சுற்றி வீசினார். நான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் போகலாம் என்றேன். அவர் மீண்டும் கோபமாக என்னை முறைத்தார். எனக்கு அவரது வேடிக்கைகள் புரியாமலில்லை. இதற்கு முன்பே வடநாட்டில் பல கோயில்களில் பூசாரிகளின் பணம் பறிக்கும் வித்தைகளைப் பார்த்திருந்ததால் இந்த பூசாரியின் செயல்கள் எனக்கு வித்தியாசமாகத் தெரியவில்லை. அவரிடமிருந்து விடுபட வேண்டுமென்று முடிவெடுத்தேன். அவர் வேகமாக முன்னே நடந்தார் என்னை ``வா வா" என்று சைகையில் அழைத்தவாறே சென்றார். அவர் என்னை சேலைத் தலைப்பினால் முக்காடிட்டுக் கொள்ளுமாறு பணித்தார். நான் வேகமாக ``அதெல்லாம் முடியாது" என்றேன். அவர் மீண்டும் ``அகங்காரம் அழிவிற்கு வழிவகுக்கும்" என்று இந்தியில் வாக்குரைத்தார்.
வெளிப்புற அடையாளங்களை மட்டும் மாற்றினால் மனதின் அகங்காரம் நீங்கிவிடுமா என்ன? பெண்களை மட்டும் முக்காடிட்டுக் கொண்டு வருமாறு கூறுவது உங்கள் அறிவீனம், அதை உங்கள் தெய்வமும் வலியுறுத்துமென்றால் அது உங்கள் தெய்வத்தின் அறிவீனம்" என்று பதிலளித்தேன். அவருக்கு என் பதில்கள் எரிச்சலூட்டுவதாக இருந்தன என்பது புரிந்தது. சேலை முழுவதும் தீர்த்த நீரில் நனைந்து நடக்கவே இயலாமல் கழுத்தில் மாலையுடன் திணறிக் கொண்டிருந்தேன் நான். நேரம் மாலை வேளையை நெருங்கிக் கொண்டிருந்தது. சாமி தரிசனம் செய்யவுமில்லை,எனது நண்பர் பரிதவித்துக் கொண்டிருப்பார் என்பது நினைவுக்கு வந்தது. அந்த வேடிக்கை பாபா மீது கோபமாக வந்தது. ஓரிடத்தில் நின்று விட்டு அவரைக் கை தட்டி அழைத்தேன். அவர் திரும்பியதும் அவரிடமிருந்த சுருட்டை காண்பித்து அதைத் தருமாறு கேட்டேன்.
இந்தியுமல்லாத அஸ்ஸாமியுமல்லாத ஏதோ ஒரு மொழியில் வானத்தைக் காண்பித்து ஏதோ கூறினார். ``யோவ் அத குடுய்யா, உசுர வாங்குனல்ல இவ்ளோ நேரம்... மரியாதையா குடுத்துரு" என்று சரளமான தமிழில் சினங்கொண்டு பேசியது அவரது உடற்மொழியில் சலனத்தை ஏற்படுத்தியது. புகையிலைச் சுருட்டை வேகமாக எடுத்துக் கொடுத்தார். அயர்ச்சியும் பசியும் கலந்த சோர்வில் கோவில் மரத்தடியில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டேன்.
அவர் இரு கைகளையும் தலைமேல் உயர்த்தி வணங்கி விட்டுச்சென்று விட்டார். மாலை நேர ஆராதனைகள் துவங்கின. என் நண்பரும் என்னைத் தேடி வந்துவிட்டார். இருவரும் தேவியின் சன்னதிக்கு விரைந்தோம். ஆண் பெண் என்று தனித்தனி வரிசையேதுமில்லை. அனைவரும் ஒரே வரிசையில் செல்ல வேண்டியிருந்தது. தொலைவிலிருந்து கருவறை இருட்டாகத் தெரிந்தது. ஆனால் நெருங்க நெருங்க பெரிய அகல் விளக்கின் சுடரில் கருவறை ஒளிர்ந்தது. பலவகை நறுமண தூபங்களின் புகை மணமும் செம்பருத்தி மலர்களின் பிசுபிசுப்பான நெடியும் அவ்விடத்தின் சூழலை மேலும் அசாதாரணமாக்கியது. என்னுடன் வந்த நண்பர் திடீரென்று வரிசையிலிருந்து விலகினார். ``இல்ல எனக்கு உடம்பெல்லாம் கூசுது, இதுக்கு மேல வரல, நீங்க போய்ட்டு வாங்க" என்றார். துணைக்கு வந்த ஒருவரும் விலகி விட்டதால் தனியாக வரிசையில் முன்னேறிச் சென்றேன்.

அப்போது அங்கு அமர்ந்திருந்த மூதாட்டி ஒருவர் . ``தேவியை வானத்தைப் பார்த்து கும்பிடாதீர்கள், அதோ அவள் பள்ளங்களிலிருந்து ஊற்றெனப் பெருக்கெடுக்கிறாள்" என்று இந்தியில் கூறினார். அனைவரும் பரவசக் கூச்சலிட்டனர். `அங்கோதக், அங்கவஸ்த்ர' என்று இருவகை பிரசாதங்கள் சன்னதியில் வழங்கப்படுகின்றன `அங்கோதக்' காமக்யா தேவியின் ஊற்று நீர், `அங்கவஸ்த்ர' என்றால் தேவியின் மேல் அணிவிக்கப்படும் சிவப்புத் துணி. நெருக்கித் தள்ளிய வரிசையில் முன்னேறி ஒரு வழியாகக் கருவறை அருகே வந்து விட்டிருந்தேன். வெளிப்புறச் சூழலுக்கும் கருவறைக்கும் சிறிதும் சம்பந்தமில்லாததொரு குளிர்ச்சி அங்கு நிலவியது. அனைவரும் தலைகுனிந்து வணங்கினர். புனிதத் தீர்த்தத்தை அள்ளித் தெளித்துவிட்டுக் கை நீட்டி தட்சணை வாங்கிக் கொண்டனர் பூசாரிகள். பரவசம் நிரம்பிய மனிதர்களை சரியாக இனங்கண்டு அவர்களிடம் கூடுதலாக மந்திரங்கள் ஓதி கூடுதல் தட்சணை பெறப்பட்டது.
நான் அவரைப் பார்த்ததும் குறும்பாகப் புன்னகைத்தேன். அவரும் வெளிறியப் புன்னகையொன்றை பரிசளித்தார். ஆனால் என்னிடம் பணம் வாங்கவில்லை. மனித இரைச்சல், பேராசை வேண்டுதல் கூச்சல்கள், பணம் பறிக்கும் பூசாரிகளின் வியாபார அழைப்புகளென கருவறைக்கு சற்றும் நியாயம் செய்திராத அச்சூழலிலும் அவளது மடியின் ஈரம் சுரந்து கொண்டுதானிருந்தது. அதைத் தெய்வமென வணங்கினால் தெய்வம், கருணை என்று நம்பினால் அவள் கருணையின் உருவம்.
தொடரும்...!