தென்மேற்குப் பருவ மழையின் தீவிரம் கூடியிருந்த ஜுலை மாத மழைநாளில், நாங்கள் குவாஹாத்தி சென்றடைந்தோம். சராய்காட் பாலத்தில் ரயில் நுழைந்ததுமே, கண்முன் விரிந்த காட்சியைக் கண்டு உடல் சில்லிட்டுக் கண்கள் பனித்தன. ``நமாமி பிரம்மபுத்ரோ, நமாமி பிரம்மபுத்ரோ" என்ற பரவசக் குரல்கள் ரயிலினுள்ளிருந்து கேட்டன. திகைப்பில் மூர்ச்சித்துப்போன மூளையின் கட்டளைக்குக் காத்திராமல் கைகள் தானாகக் குவிந்து தலை தாழ்த்தி வணங்கின. கருநீல வானம் தரையில் புரள்வது போன்ற அந்த மகாநதியின் கதைகள் இனிவரும் காலம் முழுமைக்கும் என்னை ஆக்கிரமித்துக்கொள்ளப்போவதை அன்றே மனம் புரிந்துகொண்டது.

ஐந்து நாட்டு எல்லைகளுக்குள்ளும் பாய்ந்தோடி, இறுதியில் வங்கதேசத்தில் கங்கையைப் புணர்ந்து கடலுக்குள் இருவருமாகச் சரணடையவேண்டிய வேட்கையைத் தன்னுள் சுமந்தபடி பாய்வதாலேயே பிரம்மபுத்திராவை ஆண்மையுடன் தொடர்ப்புபடுத்துவதாகத் தோன்றும்.
`அமைதியற்ற நதி’ (The Unquiet River) புத்தகத்தில், வரலாற்று ஆய்வு வல்லுநரும், மனிதவளத்துறை பேராசியருமான திரு.அருப்ஜோதி சய்க்யா (IIT Guwahati) பிரம்மபுத்திராவின் நெடிய வரலாற்றையும், அந்த நதி சிருஷ்டித்த மனித நாகரிகத்தையும் குறித்து விரிவாக எழுதியிருப்பார். முரட்டு நதியான பிரம்மபுத்திராவை மனித இனம் கட்டுபடுத்த முயன்று தோற்றுப்போன அநேக சாட்சியங்களை அவர் அந்தப் புத்தகத்தில் சுட்டுகிறார். பிரம்மபுத்திரா மன்னிப்பதில்லை என்பதை அங்குள்ள சாமானியர்கள் கூட கூறுவதுண்டு.
பிரம்மபுத்திராவை தன்னினத்தின் அடையாளத்தோடு மட்டுமே அழைக்க வேண்டும் என்ற உறுதி அவர் குரலில எப்போதும் ஒலிப்பதுண்டு. பத்மபென்னும் பிரம்மபுத்திராவும் ஒருவர் மற்றொருவரின் பிம்பம் எனலாம்.
குவஹாத்தி ரயில் நிலையத்தினருகே ஓர் அரசாங்க ஓய்வு விடுதியில் சில மணி நேரங்கள் ஓய்வெடுத்து, மழை நின்ற பின்னர் வீடு தேடும் படலத்தைத் தொடங்கலாம் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டதை கவனித்த விடுதியின் வாட்ச்மேன், ``இங்கே மழை இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு நிக்காது" என்று பெருமூச்சுடன் புன்னகைத்தார். அருகிலிருந்த குடைக் கடையைக் காட்டி, ``அதில் ஒன்றைப் பிடித்துக்கொண்டு வீடு தேடுங்கள்" என்று சைகையில் கூறினார். புதுச் சூழல், புது மனிதர்கள், சற்றும் விளங்காத மொழி என்று மனதுக்குள் இனம் புரியாததொரு அச்சம் பெருகுவதை என்னால் உணர முடிந்தது.
எப்படியோ சமாளித்துக்கொண்டு நாங்கள் வசிக்கவேண்டிய 'சத்காவ்' பகுதியை வந்தடைந்தோம். எங்களை அவ்விடத்தில் இறக்கிவிட்டு புறப்படவிருந்த ரிக்ஷாக்காரர் என்ன யோசித்தாரோ தெரியவில்லை ``நானும் உங்களுடன் வருகிறேன்" என்று சைகையில் கூறினார். மனம் சற்று ஆசுவாசமடைந்தது. ``இந்தி புரியுமா?" என்று அஸ்ஸாமியும் இந்தியும் கலந்த மொழியில் கேட்டார். ``ஓரளவுக்குப் புரியும்" என்றேன். அப்போதிருந்து எங்களுக்கிடையே மொழித் தடையில்லாதிருந்தது. ``மழைக்காலத்தில் வீடு வாடகைக்குக் கிடைப்பது கடினம், இருப்பினும் முயல்வோம் வாங்க" என்றார். அருகிலிருந்த ஒரு பெட்டிக் கடையில் தேநீர் அருந்தி முடித்ததும், எங்களது தேடுதல் வேட்டை தொடங்கியது. காற்றில் ஒருவித ரசாயன நெடி படர்ந்திருப்பதுபோல் தோன்றவும், அவர் அதைப் புரிந்துகொண்டு, கரும்புகை வெளியேறிய உயரமான புகைபோக்கியைச் சுட்டிக்காட்டினார். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அது. கரும்புகைப் படலம் கருமேகங்களை மேலும் கருமை ஆக்குவது போலிருந்தது.

அதன் விளைவாக காற்றும் நீரும் மாசுபட்டு மக்கள் தோல் நோய்களாலும், நுரையீரல் நோய்களாலும் பீடிக்கப்படுகின்றனர் என்றும் கூறினார். அவருமே வழி நெடுகிலும் இருமிக்கொண்டே வந்தார். `தாமூல்’ என்றழைக்கப்படும் பாக்குக் கொட்டையை கீழுதட்டினடியிலும், கடைவாய் இடுக்கிலும் அதக்கிக்கொண்டு சுவைப்பது அந்தப் பகுதி மக்களிடையே காணப்படும் பொதுவான பழக்கமாகயிருந்தது. அவரும் அதையே செய்தார்.
சிறிதும் சோர்வில்லாமல் இன்முகத்துடன் எங்களுக்கு வழிகாட்டி வந்த அந்த ரிக்ஷாக்காரரை `கடவுளின் தூதுவன்’ என்று என் மகனிடம் கூறினேன்.
நேரம் பிற்பகலைத் தாண்டி மாலைக்குள் வேகமாக பிரவேசித்துக்கொண்டிருந்தது. அதுவரை ஒரு வீடும் அமையவில்லை. ரிக்ஷா கடவுளும் சலிக்காமல் எங்களை ஒவ்வொரு வீதியாக அழைத்துச் சென்றார். ஒரு கட்டத்தில் மழை ஈரம் உடம்பெங்கும் படர்ந்து, கடும் அயர்ச்சியைத் தரவே அவர் என்னை ஒரு சிமென்ட் திண்டில் அமரவைத்துவிட்டு தான் சென்று தேடிவருவதாகக் கூறினார். அறிமுகமில்லாத அந்த ஆணின் வழிகாட்டுதலுக்குப் பணிந்து அங்கு அமர்ந்திருந்தேன். அவர் கடவுளின் தூதுவனாயிற்றே.
ஏமாற்றம் தோய்ந்த முகத்துடனேயே அவர் ஒவ்வொரு வீதியிலிருந்தும் வெளியே வந்தார். தலையில் சுற்றியிருந்த ஈரத்துண்டைக் கழற்றி அழுத்தமாக முறுக்கிப் பிழிந்தார். அழுக்கும் பிசுக்கும் கலந்த ஒரு திரவம் அதிலிருந்து வெளியேறியது. நானும் மகனும் ஒருவரையொருவர் புருவம் நெரித்துப் பார்த்துக்கொண்டோம். ``அம்மா இவரு தேவதையே இல்லை... இல்லை... இல்லை..." என்று ஆணித்தரமாக அவன் கூறினான். அவனுக்கு நான் அப்போது பதிலேதும் அளிக்க விரும்பவில்லை. ஆழ்ந்த யோசனையிலிருந்து மீண்டவராக அந்த மனிதர்

``சரி வாங்க கடைசியா ஒரு தெருவுக்குக் கூட்டிட்டுப் போறேன், அங்க ஒருத்தரோட வீடு காலியா இருக்கு. ஆனா ஆள் பயங்கர கடுவான். வீடும் தெருவும் அழகோ அழகா இருக்கும், வாங்க அங்க போவோம்." என்று என்னைத் துரிதப்படுத்தினார் ரிக்ஷா கடவுள்.
நி-ரி-பி-லி பத் என்று அஸ்ஸாமிய மொழியிலும், ஆங்கில மொழியிலும் எழுதியிருந்த பெயர்ப்பலகையை ரிக்ஷா கடப்பதற்குள் ஓரிரு முறை அந்தத் தெருவின் பெயரை மனதில் கூறிப் பார்த்துக்கொண்டேன்.
``வீட்ல அந்தாளும் அவங்க வீட்டம்மாவும்தான். மாடி போர்ஷன் காலியாயிருக்கு. அந்தம்மா கங்கை நதின்னா அந்தாளு பிரம்மபுத்திரா. நல்லவரு. ஆனா அழுத்தமானவரு. இந்தப் பகுதியில நெறைய மாற்றங்களை உருவாக்கினது அவர்தான். அரசாங்கம் வரைக்கும் கேள்வி கேட்டு லெட்டர் எழுதுவாரு. நல்லது செய்வாரு. ஆனா பயங்கர முசுடு. சிடுமூஞ்சி.’’ மேற்கொண்டு சூழலைக் கையாள இந்த அறிமுகம் எனக்குப் போதுமானதாகயிருந்தது.
ரிக்ஷா கடவுள் வாசலில் நின்று கொண்டது. நான் வீட்டுத் தோட்டத்தில் மூங்கில் மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அழைப்பு மணியை அழுத்தினேன். மறுபுறம் குழலிசை கேட்டது. அழைப்பு மணியாக குழலிசை ஒலிப்பதை முதன்முறையாகக் கேட்பது என்னுள் மேலும் ஆர்வத்தைத் தூண்டியது. சுற்றும் முற்றும் பார்வையைச் செலுத்தியதில் மேலும் சில அழகிய ஆச்சர்யங்கள் காணக்கிடைத்தன. காம்பவுண்ட் சுவற்றையொட்டிய இரு மூலைகளிலும், நெடிதுயர்ந்த பாக்கு மரங்கள் நின்றிருக்க அவற்றைப் பற்றிப் படர்ந்திருந்தன வெற்றிலைக் கொடிகள். இளம்பச்சை நிற வெற்றிலைகள் மழைக்கு சிலிர்த்துக்கொண்டு படர்ந்திருந்தன. பல வண்ணப் பூக்களால் தோட்டம் நிரம்பியிருந்தது.

வீட்டின் பின்புறத் தோட்டத்தில் வாழை, எலுமிச்சை, கறிவேப்பிலை, தென்னை மரங்கள் முறையே இடைவெளி விட்டு நின்றிருந்தன. ரிக்ஷா கடவுள் கொடுத்த அறிமுகத்துக்குச் சற்றும் பொருந்தாமலிருந்தது வீட்டின் அழகியல் நிறைந்த சுற்றுப்புறச் சூழல். ஒருவேளை ஆஸ்கர் வொயில்டின் `The Selfish Giant' போன்றவராயிருப்பாரோ வீட்டு உரிமையாளர் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே கதவு திறக்கும் ஓசை கேட்டது.
எங்களை வரவேற்றார் ஒரு பெண்மணி. நான்கடிக்குச் சற்று குறைவான உயரம், மலர்ந்த முகத்தில் மென்மையும் கருணையும் ததும்பின.`ஆம் இவருக்கு கங்கை உவமை பொருந்துகிறது’ என்று மனதோடு கூறிக்கொண்டேன். பரஸ்பர அறிமுகத்துக்குப் பிறகு அவரது பேச்சைவிடவும் வீட்டு வரவேற்பறையின் அமைப்பு என் கவனத்தை திசைதிருப்பியது.
தாகூரின் உருவ ஓவியம் ஒரு பக்கச் சுவரை அலங்கரித்தது. மறுபுறம் பாடகர் பூபென் ஹசாரிகாவின் நிழற்படம் இருந்தது.
இரண்டு படங்களையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்த என் பார்வையின் கேள்விக்கு அந்தப் பெண்மணி சலிப்புடன் பதிலளித்தார். ``எல்லாம் அவரோட ரசனைகள், எனக்கு எதுவும் தெரியாது" என்று சிறுபிள்ளையின் அப்பாவித்தனத்துடன் சிரித்தார். ``நெளமி" என்று அழைத்துக்கொண்டே பத்மபென் வெண்ணிறத் திரைச்சீலையை விலக்கி வெளியே வந்தார். அறுபது வயதை நியாயம் செய்யும் தோற்றமும் நடையும்தான் என்றாலும் குரல் மட்டும் வெண்கலம்போல தொனித்தது.
ரிக்ஷா கடவுளின் எச்சரிக்கையின் உதவியால் நானும் ஒருவித கடினத்தை முகத்தில் வருவித்துக்கொண்டு அவரிடம் பேசினேன். பத்மபென் நெளமியிடம் ஓரிரு முறைகள் ஒப்புதல் பெற்றுக்கொண்டு மாடி போர்ஷனில் வாடகைக்குத் தங்குமாறு கூறினார். நினைத்ததைவிட எளிதாக அவர் ஒப்புக்கொண்டதில் எனக்கும் பெரிதாக வியப்பேதுமிருக்கவில்லை. பத்மபென், நான் இருவருக்குமிடையே அலைவரிசைப் பொருத்தமிருப்பதை முதல் பார்வையிலேயே இருவரும் புரிந்துகொண்டோம். நெளமிக்கு அது புரிந்ததா என்று தெரியவில்லை.

வழிகாட்டிய ரிக்ஷா கடவுளுக்கு பணம் கொடுத்து, கூடவே நிறைய நன்றிகளும் கொடுத்தனுப்பிவிட்டு அவர் தெருவைக் கடந்து மறையும் வரை அவரை நன்றியுடன் பார்த்திருந்தேன்.
அதன் பிறகு நானும் பத்மபென்னும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளவில்லை என்றாலும், சந்தித்துக்கொண்ட நாள்களிலெல்லாம் மணி நேரங்கள் கழிவது தெரியாமல் உரையாடினோம். அவர் தேநீர் தயாரித்து எடுத்து வருவார். நான் வடைகள் அல்லது பக்கோடா செய்து எடுத்துச் செல்வேன். பிற்பகல் நேரத்துத் தேநீர் பொழுதுகள் அறிவார்ந்த உரையாடல்களாகவே பெரும்பாலும் இருந்திருக்கின்றன. பக்கத்து அறையில் நெளமி உறங்கிக்கொண்டும், அஸ்ஸாமியப் பாடல்கள் பாடிக்கொண்டும் இளைப்பாறியிருப்பார். என் மகனை பத்மபென் நட்புடனேயே அணுகினார். ஒருமுறை அவன் அவரை `தாத்தா...’ என்றழைத்தபோது அதை உடனே மறுத்து, தன்னை `பத்மா...’ என்றே அழைக்குமாறு கூறினார். எனக்கும் அதே விதியை வலியுறுத்தினார்.
பத்மபென் மாடித் தோட்டத்தில் வெண்டைச் செடிகள் பயிரிட்டிருந்தார். வேனிற்காலத்தில் புழுக்கம் மிகுந்திருந்ததால் நானும் அவரும் மாடியில் சென்று தேநீர் அருந்துவதை வழக்கமாக்கினோம். அங்கிருந்து பார்த்தால் தூரத்தில் பிரம்மபுத்திராவின் நீட்சி தெரியும். ``எவ்ளோ நீளமான நதி", என்றேன். சட்டென என்னைத் தடுத்து ``அது நத்" என்றார்.
``ஆமா, ஆமா நத்" என்று அவசரமாக ஆமோதித்தேன். அவர் அதை எப்போதும் வலியுறுத்துவார். பிரம்மபுத்திரா ஆண். அது ஆண்மையின் அடையாளம் என்பார். நானும் அவரை கேலி பேசுவதுண்டு. ``அதனாலதான் அழகாவே இல்லை, சாம்பல் நிறத்துல அழுத்தமா சலசலப்பே இல்லாம பாயுதோ... மன்னிக்கவோ, மறக்கவோ முடியாத ஆணவம்கொண்டது அதனால்தானோ..." என்பேன். பத்மபென் என் கண்களை ஊடுருவிப் பார்த்து ``சாலு, கருணை எவ்வளவு முக்கியமோ குரூரமும் அதேயளவுக்கு முக்கியம். அழகு எவ்வளவு தேவையோ அழகின்மையும் அதேயளவுக்குத் தேவை. சலசலப்பு எவ்வளவு இனிமையோ அதேயளவுக்கு இனிமைதான் மெளனமும், புரியுதா?" என்று அவர் கூறி முடித்தபோது அவரது மூச்சுக்காற்றின் வெப்பத்தை என் முதுகுப் பரப்பில் உணர முடிந்தது. அவரை அந்நேரம் சமநிலைப்படுத்துவது இயலாதென்பதை உணர்ந்தவளாக வேகமாக அவரைவிட்டு விலகிச் சென்று வெண்டைப் பூக்களில் ஒன்றை வெடுக்கென்று பறித்தேன். கோபத்தின் உச்சத்துக்கே சென்று விட்டார் பத்மபென். அதன் பிறகு பல மாதங்கள் நாங்களிருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை. சந்தித்துக்கொள்ள விரும்பவில்லை என்பதும் உண்மை. ஒருவேளை வழியில் சந்தித்துக்கொண்டாலும் அவர் என்னை பொருட்படுத்த மாட்டார். `இவ்வளவு முதுமையிலும் இவ்வளவு ஆணவமா...’ என்று நானும் அவரைத் தவிர்க்கத் தொடங்கினேன்.
நெளமி எப்போதும் என் நேசத்துக்குரியவள். அன்று மாடியில் பத்மபென் என்னை நெருங்கியதை அவளிடம் கூறிவிடுவேனோ என்ற அச்சத்தால் நாங்களிருவரும் சந்தித்துக்கொள்வதை அவர் தடுத்தார். ஆனாலும் நெளமி என்னை நேசித்தாள். நான் அவளை நேசித்தேன்.

பெரிய காரணங்கள் ஏதுமின்றி சில நாள்களில் மீண்டும் இயல்புநிலை திரும்பியது. தின்சூகியாவிலிருந்து புதிய வகைத் தேநீர் வாங்கி வந்திருப்பதாகவும், அதைப் பருகி அபிப்ராயம் தெரிவிக்குமாறும் அழைத்தார். அன்றைய பகல் நேர உரையாடல் இரவாகும் வரை தொடர்ந்தது. பத்மபென் புல்லாங்குழல் வாசித்தார். நான்கைந்து துளைகள் மட்டுமே இருந்த எளிமையான மூங்கில் குழல் அது. பழங்குடியினப் பெண்ணொருத்தி பரிசளித்தாக அதை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் கூறுவார்.
`பாகுபலி' திரைப்படம் வெளிவந்து நாடே அதன் பிரமாண்டத்தைப் புகழ்ந்துகொண்டிருந்த நேரம். அது குறித்து நான் அவரிடம் பேசும்போதெல்லாம் அவர் அதில் ஆர்வமில்லாதிருந்தார். `கொண்டாடப்படவேண்டியவை பகட்டான திரைப்படங்கள் அல்ல; பகட்டான இசை அல்ல’ என்று கூறுவார் பத்மபென். பூபென் ஹசாரிகாவின் பாடல்களைக் கேட்கத் தூண்டியதும் அவர்தான். ஒரு சாயலில் பத்மபென்னின் குரலும் ஹசாரிகாவின் குரல்போலிருந்தது.
புதன்கிழமை சந்தைகளுக்கு (புத் பஜார்) சென்று வருவது எங்களிருவருக்கும் மிகப் பிடித்தமான பொழுதுபோக்கு. நானும் அவரும் நடந்து செல்லும்போது ஊரார் புருவம் உயர்த்தவில்லை. எங்கள் நட்பில் புனிதமிருக்கும் என்று அவர்கள் நம்பினர். அது எனக்குப் பிடித்திருந்தது. உலகத்தின் பார்வை நம்மேல் திரும்பாத வரை நம் அந்தரங்கம் களங்கப்படாதல்லவா. அது அவசியமென்றும் தோன்றியது.
நாள்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகின. நாங்கள் குவாஹாத்திவிட்டு புறப்படும் அந்நாளும் வந்தது. பிரிவுபசார தேநீர் அருந்திவிட்டு விடைபெறும் நேரத்தில் நெளமி கண்கலங்கினாள். எனக்குமே அன்று மன அழுத்தம் அதிகரித்தே இருந்தது. அல்லி மலர் குளத்தை நெடுநேரம் பார்த்து நின்றிருந்தேன். அக்கம் பக்கத்தினர் ஒவ்வொருவராக விடைபெறத் தொடங்கினர். அப்போது ஒருவரிடம் என்னுடனான நெருக்கத்தை நெளமி தன் மகள் என்று கூறி வெளிப்படுத்தினாள். அதுவரை அறையின் ஒரு மூலையில் பக்குவமான தோரணையில் கைகட்டி நின்றிருந்த பத்மபென் ``அவள் மகள் அல்ல" என்று அழுத்தமாகக் கூறினார். நெளமி திகைத்தாள். நானுமே அதிர்ச்சியில் ஒரு நொடி அவரை வெறித்தேன்.``மகள் அல்ல"

என்று மீண்டும் கூறினார். ``பத்மபென் அமைதியா இருங்க, நெளமி நான் உனக்கு மகள்தான்" என்று அவளை ஆரத்தழுவி முத்தமிட்டேன். நெளமி வெள்ளந்தியாகச் சிரித்தாள். அவளை அப்படிப் பார்க்கவேண்டியது எனக்கு அவசியமென்று தோன்றியது. பத்மபென்னையும், அவரது அழுத்தமான சொற்களையும், அந்த பிரம்மபுத்திராவையும்கூட அந்நேரத்தில் வெறுத்தேன். கருணை மறக்கும் ஆண்களை வேறென்ன செய்வது. தன்னை மட்டுமே பிரதானப்படுத்தும் அந்தச் சுயநலத்தை வேறெப்படி அணுகுவது. பத்மபென் தனது மூங்கில் புல்லாங்குழலை என் கைப்பையில் செருகி வைத்துவிட்டு, நெளமியின் விரல் பிடித்து வீட்டினுள் அழைத்துச் சென்றார்.
`நிரிபிலி என்றால் ஏகாந்தம் என்று பொருள்’ என்று பத்மபென் ஒரு முறை கூறியிருந்தார். பெயர்ப்பலகையைக் கடந்து செல்லும்போது அதை நினைத்துக் கொண்டேன். வழிநெடுகிலும் பிரம்மபுத்திரா என்னுடனேயே பயணித்தது.
(விரியும்...)
``நத் பிரம்மபுத்ரா நமாமி பிரம்மபுத்ரா.’’