``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.
ஹர்மந்திர் சாஹிப் பொற்கோயிலின் அதிகாலை நிச்சலனம் மனிதர்களின் வருகையால் மெல்ல குறையத் தொடங்கியது. அது ஏப்ரல் மாதமாக இருந்ததால் வெயிலின் கடுமை அதிகமாகியிருந்தது. நேரம் முற்பகலைத் தொடுவதற்குள்ளாகவே பொற்கோயில் வளாகம் மனிதர்களால் நிரம்பி வழிந்தது. நீல நிற தலைப்பாகை அணிந்த `கர சேவகர்கள்' கைகளில் வாளேந்தியபடி ஆங்காங்கே நின்று மேற்பார்வையிட்டனர். இறைமை, அமைதி, நம்பிக்கை போன்ற விஷயங்களெல்லாம் மனதோடு நின்றுவிட, புறத்தில் ஒழுங்குமுறைகள் விதிக்கும் மதச் சடங்குகள் அரங்கேறின.
தலையை மறைத்துக்கொள்ளும் வழக்கமில்லாததால் அவ்வப்போது முக்காடு நழுவியதை நான் கவனித்திருக்கவில்லை. அப்போதெல்லாம் பின்னாலிருந்து ஒரு குரல் `தலையில் முக்காடிடுங்கள்’ என்று கூறிவிட்டுச் செல்லும். இப்படி அங்கு அனைத்துமே நெறிமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தன. வரிசைகள் ஒழுங்குப்படுத்தப்பட்டன. கர சேகவகர்களின் ரோந்துப் பணி அதிகரித்தது.

நாங்கள் `புனித கிரந்தம்' வாசிக்கப்படும் கருவறைக்குச் செல்லும் வரிசையில் நின்றிருந்தோம். திடீரென வரிசையில் சலசலப்பு. `திருடன், திருடன்...’ என்று ஒரு பெண் அலறினார். எங்கிருந்தோ பாய்ந்தோடி வந்த கர சேவகர் ஒருவர் கூட்டத்தை விலக்கிக்கொண்டு கையில் உலோகத் தடியுடன் அவனை விரட்டிச் சென்று பிடித்தார். பின்னர் அவருடன் நான்கைந்து கர சேவகர்கள் இணைந்து அந்த மனிதரை கோயில் அலுவலகத்துக்குள் இழுத்துச் சென்றனர். அந்தக் காட்சி அதுவரை நான் பெற்றிருந்த புரிதலை அசைத்துப்பார்த்தது. அங்கு அனைத்துமே இலவசமாகக் கிடைத்தபோதிலும் எது ஒரு மனிதனை திருடத் தூண்டியிருக்கும்?
என்பது போன்ற கேள்விகள் மனதைத் துளைத்தன. அருகிலிருந்த மூதாட்டியிடம் எனது சந்தேகத்தை வெளிப்படுத்தினேன். அதற்கு அவர் `காரணங்கள் எதுவும் மனிதருக்குத் தேவையில்லை. சிலருக்கு அமைதியை உருவாக்குவது எவ்வளவு பிடிக்குமோ அதேபோல் மற்ற சிலருக்கு அமைதியைக் குலைப்பது பிடிக்கும். அதற்கு அவர்களுக்கு எந்தக் காரணமும் தேவையிருப்பதில்லை. அவர்களுக்கும் பூமியில் இடமுண்டு’ என்றார்.
அவர் கூறியதைக் கேட்ட பின் புனித கிரந்தம் வாசிக்கும் கருவறை வரை செல்லவேண்டிய அவசியமிருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. எனக்கான வாக்கு அவரிடமே கிடைத்துவிட்டது போன்ற நிறைவு தோன்றவே நான் வரிசையைவிட்டு விலகினேன். ரோசி மற்றும் அவரது குடும்பத்தினர் பக்தியுடன் வரிசையில் முன்னேறிச் சென்றனர். அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு நான் என் வழியே புறப்பட்டேன்.
அவ்விடம் நோக்கிப் புறப்பட்டேன். பிரார்த்தனை முடித்து வரும் மக்கள் ஒன்று கூடி இளைப்பாறுவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த அந்தத் தோட்டத்தில்தான் இந்திய வரலாற்றின் ஆகப்பெரிய கொடுமைகளுள் ஒன்றான 'ஜாலியன் வாலா பாக்' படுகொலைகளை பிரிட்டிஷ் காலனிய அரசாங்கம் நிகழ்த்தியது.
நாட்டின் விடுதலையை முன்னிறுத்திப் பல போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின காலம் அது. அச்சமயத்தில் ரெளலட் சட்டத்தை ஆங்கிலேய அரசு அறிவிக்கிறது. அதன்படி பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராகப் போராடும் எவரையும் தீவிரவாதியெனக் கருதி, இரண்டு வருடங்கள் வரை எந்த நிபந்தனையுமின்றி சிறையில் அடைக்க அனுமதி வழங்கியது. நாடு முழுவதும் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்திய அச்சட்டத்தை எதிர்த்து அனைத்துத் தலைவர்களும் களமிறங்கினர். ஒத்துழையாமை இயக்கம் பிறந்தது. பஞ்சாப் பகுதியில் போராட்டங்கள் தீவிரமாகின. தலைவர்கள் சத்யபால் சிங், சையிஃபுதின் கிச்லூ ஆகியோர் பஞ்சாப்பின் பல்வேறு பகுதிகளில் மக்களைத் திரட்டி போராட்டங்களும் மறியல்களும் நடத்தினர். அவர்களது குரல் நாளுக்கு நாள் உயர்ந்தன. அதை ஒடுக்கும்விதத்தில் கூட்டங்கள் நடந்த இடங்களிலெல்லாம் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது ஆங்கிலேய அரசு. சத்யபால், கிச்லூ இருவரும் கைதுசெய்யப்பட்டு தரம்சாலா கொண்டுசெல்லப்பட்டனர்.
அன்று விவசாயிகள் கொண்டாடும் பைசாக்கி பண்டிகை. போராட்டங்களில் பங்கு பெறாத சாமான்யர்களும் தங்கள் குடும்பங்களோடு அங்கு வந்திருந்தனர்.
ஜாலியன் வாலா தோட்டத்தின் நுழைவு வாயில் குறுகலான பாதையாக இருந்ததாக வரலாற்றுப் பாடத்தில் படித்த நினைவு. அதை நிஜத்தில் கண்டபோதுதான் அங்கு நிகழ்த்தப்பட்ட கொடூரத்தின் அளவு புரிந்தது. அரசாங்கத்தின் உத்தரவை மீறியதாகக் கூறி, அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை பெண்கள், குழந்தைகள், முதியவர்களெனப் பாராமல் கொன்றுகுவித்த அக்கொடூரக் காட்சி கண்முன் நிழலாடியது.

அந்தக் குறுகலான நுழைவாயிலில் ஜெனரல் ரெஜினால்ட் டயர் தனது படைகளுடன் நுழைந்தபோது, அங்கு கூடியிருந்தவர்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சம் கூடியது. அந்த நிகழ்வுக்குச் சில நாள்கள் முன்னர் மிஸ் ஷெர்வுட் என்கிற ஆங்கிலேய தொடக்கப்பள்ளி ஆசிரியர் அவ்விடத்துக்கருகே ஒரு தெருவில் போராளிகள் சிலரால் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. அந்நிகழ்வு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொடூர முகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. ரெஜினால்ட் டயர் அம்ரித்ஸர் வந்தடைந்தார். அதற்குப் பின் அவர் அரங்கேற்றிய கொடூரங்கள் அனைத்தும் வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் பதிந்துவிட்டன. "ஜாலியன் வாலா பாக்-கின் நுழைவாயில் குறுகலாக அமைந்துவிட்டதால் ஆயுதமேந்திய வாகனத்தை உள்ளே செலுத்த முடியவில்லை. சில படை சிப்பந்திகள் மட்டுமே உள்ளே சென்றனர்.
என்று ஆவேசமாக ரெஜினால்ட் டயர் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்தார். குண்டுகள் துளைத்த சுவரில், அத்துளைகள் வட்டமிடப்பட்டிருந்தன. சுவரில், கதவுகளில், பூந்தொட்டிகளில், பாறைகளில் என அனைத்திலும் தோட்டாக்களின் தடயங்கள். அச்சத்தில் உறைந்த மனித முகங்கள் அரூபமாகத் தோன்றி மறைந்தன.
பலூச் (Baluch regiment), கோர்க்கா (Gorkha regiment) படைகள் உள்ளே புகுந்தன. இவ்விரு படைகளைத் தேர்ந்தெடுத்ததன் காரணம், அவர்களுக்குச் சீ்க்கிய மக்களுடன் நெருங்கிய தொடர்பில்லாதிருந்ததால் அவர்களால் கருணையின்றி அனைவரையும் சுட்டு வீழ்த்த முடிந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். போர்த் தந்திரங்களில் இது மிக முக்கியமான உத்தியாகப் பேசப்படுகிறது. உள்நாட்டுக் கலவரங்களை ஒடுக்க ராணுவப்படைகளை ஈடுபடுத்தும்போது, அந்நிலப்பரப்பிலிருந்து தொலைவிலிருக்கும் நிலங்களைச் சேர்ந்த படைகளை ஈடுபடுத்துவது இன்று வரை வழக்கத்திலுள்ள ஒன்றுதான்.

1980-களில் ஈழப்போரின் சமயத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட சமாதானப்படைகளின் பல ரெஜிமென்ட்டுகள் பஞ்சாப், கோர்க்கா ரெஜிமன்ட்டுகள். அவர்கள் அங்கு தமிழர்கள்மீது நிகழ்த்திய கட்டற்ற மனித உரிமை மீறல்களும் வன்முறைகளும் குறித்து இன்றளவும் பேசப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம் நமக்குப் பெரிதும் அறிமுகமில்லாதவர்கள் மீது நமக்குப் பரிவும் கருணையும் அதிகமாக வெளிப்படுவதில்லை. இந்தியாவின் ஒரு பகுதியில் தமிழர்கள் வாழும்போதும், இலங்கையின் தமிழர்கள் அவர்களுக்கு அயலார்களாகத் தெரிந்ததற்கும் அதுவே காரணம். ஜாலியன் வாலா தோட்டத்தில் அமர்ந்துகொண்டு இப்படியெல்லாம் சிந்தித்துக்கொண்டிருந்த எனது கவனத்தை திசைதிருப்பியது அந்த கிணறு. 1919, ஏப்ரல் 13 அன்று தங்களை நோக்கிப் பாய்ந்த தோட்டாக்களிடமிருந்து தப்பிக்க வழியறியாத பலர் அக்கிணற்றுக்குள் விழுந்து மடிந்தனர். மேலும் பலர் தோட்டத்தின் வாயிலில் நெரிசலில் சிக்கிச் சிதைந்து மடிந்தனர். பல நூறு உயிர்களின் மரண ஓலங்களை விழுங்கிய அக்கிணறு மரணம்போல் தோற்றமளித்தது.
வன்மத்தை வேறெந்த உணர்வாகவும் மடைமாற்ற முடியாது. மனதில் வன்மமெனும் பொறி கிளம்பிவிட்டால் அது சுற்றுமுற்றும் பற்றிப் படர்ந்து கொழுந்துவிட்டு எரிமலையாக வெடித்துச் சிதறிய பின்பே அடங்கும். அழிவு விளைந்து தொடக்கத்துக்கு, மாற்றத்துக்கு வித்திடும் வன்மத்தை மகாபாரதம் பேசுகிறது.

ஜெனரல் டயரின் வன்மம் அன்றுடன் அடங்கிவிடவில்லை. ஷெர்வுட் அவமானப்படுத்தப்பட்ட தெருவில் இந்தியர்கள் எவரும் நடந்து செல்லக் கூடாது என்று கட்டளை பிறப்பித்தான். அத்தெருவில் அனைவரும் ஊர்ந்து செல்ல வேண்டும் என்றான். அப்படிச் செல்பவர்களை சாட்டையால் அடித்துத் துன்புறுத்த வேண்டும் என்று தனது படைவீரர்களுக்கு கட்டளை பிறப்பித்தான். Khoo Korian அல்லது Crawling street என்று இன்றும் அது அழைக்கப்படும்
பிரிட்டிஷ் காலனிய ஒடுக்குமுறைச் செயல்களின் வன்மம் அழிவுக்கு வித்திட்டு நம் நாட்டின் சுதந்திரத்துக்கு வழிகோலியது எனலாம். ஜாலியன் வாலா பாக் கொடுங்கொலைகளுக்குப் பிறகு இந்தியர்களின் விடுதலை வேட்கை பன்மடங்கு பெருகி, 1947-ல் ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகே அடங்கியது. வன்மத்தின் விதை வன்மத்தையே விளைவிக்கும். அன்பும் அறமும் மனிதனின் அடிப்படை குணமென்றால் தெய்வங்களின் கைகளில் ஆயுதங்கள் எதற்கு, கோயில்களில் பாதுகாவலர்கள் எதற்கு, வாளேந்திய சேவகர்கள் எதற்கு, போர்கள் எதற்கு, அடக்குமுறை எதற்கு, போராட்டங்கள் எதற்கு...
கேள்விகள் அடுத்தடுத்து மனதைத் துளைக்க அட்டாரி -வாகா எல்லை நோக்கிய எனது பயணம் தொடர்ந்தது.
தொடரும்...