கட்டுரைகள்
Published:Updated:

கடும்குளிர் பூமியில், களிமண் அரண்மனை!

சாகர் ட்ரெக்
பிரீமியம் ஸ்டோரி
News
சாகர் ட்ரெக்

பயணம் - சாகர் ட்ரெக்கில் சாகசப் பயணம் - 3

அன்று காலை மீட்டிங் முடிந்த பின் அனைவரும் உணவருந்தச் சென்றுவிட்டோம் (பல் துலக்கிவிட்டுதான்!). காலை உணவு பஃபே முறையில் உப்புமா, பிரெட் மற்றும் டீ, பால் எல்லாம் இருந்தன.

உணவருந்திக்கொண்டிருக்கும்போதே ஸ்டேன்ஸின் உதவியாளர் வந்து, ‘‘அனைவரும் இன்னும் ஒரு மணி நேரத்தில் தயாராக இருங்கள் லே பேலஸ் நோக்கி சின்ன மலை ஏற்றம் இருக்கிறது. இது ஒரு சோதனை வகுப்புதான். முடிந்த அளவு அனைவரும் கலந்துகொள்ளுங்கள்...'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

முதல் நாள் ஆல்டிடியூட் சிக்னெஸ் அடித்த அடியில் சூர்யா சற்று மிரண்டு போய்தான் இருந்தான். அவனுக்கு இந்தச் சிறிய மலையேற்றம் தன்னைத்தானே சோதித்துக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. ஒருவேளை மலை ஏறும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், சாதர் செல்ல வேண்டாம் என்ற எண்ணமும் இருந்தது அவனுக்கு. ரவியும் அதே மூடில்தான் லே பேலஸ் கிளம்பினார்.

லே பேலஸ், 17 ஆம் நூற்றாண்டில் செங்கி நாம்க்யால் என்ற அரசரால் கட்டப்பட்டது. திபெத்தின் லாசா நகரத்தில் உள்ள பொடாலா அரண்மனையின் மாதிரியில் இதன் கட்டமைப்பு இருக்கும். இதன் மாடியில் இருந்து பார்த்தல் லே நகரம் அழகாகத் தெரியும். எங்கள் விடுதியில் இருந்து லே பேலஸிற்கு நடந்து செல்லும் தூரம்தான், ஓர் ஐந்நூறு மீட்டர் மலை மட்டும் ஏற வேண்டும். உணவை முடித்துவிட்டு அனைவரும் பேலஸை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டோம்.

சாகர் ட்ரெக்
சாகர் ட்ரெக்

ஹைதராபாத்தைச் சேர்ந்த வித்யாசாகர் நிறைய ட்ரெக்கிங் சாகசங்களைச் செய்திருப்பதாக மீட்டிங்கில் சொல்லியிருந்தார், அவரிடம் ரவி டிப்ஸ் வாங்கலாம் என்று பேச்சுக் கொடுத்தார். ரவி, தன்னை அவரிடம் அறிமுகப்படுத்தியதும் வித்யாசாகரும் ஆர்வமாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, எங்களை நோக்கி சில கேள்விகள் கேட்டார். முதலில், ‘‘நீங்கள் இருக்கும் ஊரில் இப்படித்தான் குளிருமா?'' என்று கேட்டார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அடுத்து சற்றும் தாமதிக்காமல், ‘‘இல்லை நான்தான் இங்கே அதிகமாகக் குளிர்வதுபோல் உணர்கிறேனா'' என்று எங்களிடம் சந்தேகமாகக் கேட்டார்.

சூர்யா, `‘பாஸ் நீங்க சொல்றது ஒண்ணும் புரியல. தயவுசெய்து தெளிவா சொல்லுங்க'' என்றதும் ஆரம்பித்தார்...

‘‘நான் உள்ளே ஒரு ஸ்வெட்டர், வெளியே ஒரு ஸ்வெட்டர் அதற்கு மேல் ஜெர்கின், கையுறை, குல்லா இப்படி அனைத்தையும் போட்டே குளிருது. வெறும் ஜெர்கின் மட்டும் போட்டுக்கிட்டு எப்படி ஊருக்குள்ள சுத்துறீங்க?'' என்று ஆச்சரியப்பட்டார்.

அதெல்லாம் வாங்குவதற்காக வைத்திருந்த பெருந்தொகையைத்தான் ட்ரெக் கட்டணமாகக் கட்டிவிட்டு, இப்போது குளிரைச் சமாளித்துக்கொண்டிருக்கிறோம் என்பது அவருக்குத் தெரியாது.

சாகர் ட்ரெக்
சாகர் ட்ரெக்

``என்னவெல்லாம் தேவைப்படும்?'' என்று பிரசன்னா கேட்க, தன்னிடம் என்னவெல்லாம் இருக்கிறதென்று சொல்ல ஆரம்பித்தார் வித்யாசாகர். உல்லன் குல்லா, ஹெட் டார்ச், தெர்மல் வேர், வாட்டர் ப்ரூப் பேண்ட், ஹேண்ட் கிளவுஸ் இப்படி அடுக்கிக்கொண்டே போனார். மொத்தம் ஒரு லட்ச ரூபாய்க்குக் கணக்குச் சொன்னார். இதைக் கேட்கக் கேட்க, சூர்யாவிற்கு நெஞ்சில் வந்த குடைச்சல் எங்களையும் தொற்றிக்கொண்டது. ‘ஏ... யப்பா... எங்க மொத்த டூர் பட்ஜெட்டே அவ்ளோதான் பாஸ்' என்று நாங்கள் மனதுக்குள் நினைத்துக்கொண்டே வாயைப் பிளக்க. அவரும் எங்கள் நிலையைப் புரிந்து கொண்டதுபோல் ஒரு யோசனை சொன்னார். ‘‘லே பேலஸில் இருந்து இறங்கியதும் லே மார்க்கெட்டில் உள்ள ‘ஆர்மி ஜெனரல் ஸ்டோர்' செல்லுங்கள் உங்களுக்குத் தேவையானது கிடைக்கும். அலட்சியமாக இருந்து உயிரை விட்டுவிடாதீர்கள்'' என்று வார்னிங் கொடுத்து முன்னே நடக்க ஆரம்பித்துவிட்டார்.

வித்யாசாகர் சொல்வது சரியாக இருந்தாலும் கையில் இருக்கும் காசு சற்று யோசிக்கவைத்தது. இந்த சிந்தனைக்கு நடுவே பிரசன்னா குறுக்கிட்டு, ‘‘இப்போ லே பேலஸ் போவோம். அதன்பின் ஆர்மி ஜெனரல் ஸ்டோர் சென்று பார்த்துவிட்டு முடிவெடுப்போம்'' என்றான். அதுவும் சரிதான் என்று பேலஸை நோக்கி நகர ஆரம்பித்தோம். எப்படியோ தவழ்ந்து தவழ்ந்து பேலஸ் வாசலை அடைந்தோம்.

`நமக்கு வெறும் கையை வீசிக்கொண்டு அரை கிலோமீட்டர் மலை ஏறி வருவதற்கே இவளோ கஷ்டமாயிருக்கிறதே... இந்த அரண்மனையை எப்படிக் கட்டியிருப்பார்கள்?' என்று யோசிக்கும்போதே நமக்கு மூச்சு வாங்கியது. அந்த அளவிற்கு பிரமாண்டமாகவும் இருந்தது லே அரண்மனை.

கடும்குளிர் பூமியில், களிமண் அரண்மனை!

அரண்மனை என்றதும் கம்பீரமான தூண்கள், விலாசமான அறைகள் என்று பிரமாண்டமாகத்தான் பார்த்திருப்போம். ஆனால், லே அரண்மனை... ஆள் உயர குறுகிய பாதைகள், தலைதட்டும் நுழைவாயில்கள், மரத்தினால் ஆன தூண்கள், களிமண் சுவர் என்று பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்தது. இந்த அரண்மனையை, நாம்க்யால் அரச பரம்பரையைச் சேர்ந்த ட்ஸ்வாங் நாம்க்யால், 1553-ல் கட்டத் தொடங்கினார். பின்னர் அவருடைய மருமகன் செங்கி நாம்க்யால் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது இந்த அரண்மனை இந்தியத் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் பார்வையிட, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த அரண்மனை ஒன்பது மாடிகளைக் கொண்டது. மேலே உள்ள மாடிகளில் அரச குடும்பத்தினர் தங்கினார்களாம். கீழே உள்ள பகுதிகள் பொருட்கள் சேமிக்கும் அறையாகப் பயன்படுத்தப்பட்டனவாம்.

அரண்மனையில் சில அறைகளில் சிறிய துளைபோல இருக்கும் ஜன்னல்கள் வழியாகக் காற்று வந்த வண்ணம் இருந்தது. அறைகள் தாழ்வான கூரைகள் கொண்டிருக்கின்றன. அவை வெப்பத்தைத் தக்க வைக்க ஏதுவாக இருக்கிறது. மாடியிலிருந்து லே பள்ளத்தாக்குப் பகுதி முழுவதையும் காணமுடிகிறது. இன்னொரு விஷயம், இந்த அரண்மனையின் பின்புறம்தான் இமயமலைத் தொடர்.

சாகர் ட்ரெக்
சாகர் ட்ரெக்

அரண்மனை அருங்காட்சியகத்தில் விலையுயர்ந்த நகைகள், ஆபரணங்கள், உடைகள் மற்றும் மணிமுடிகள் உள்ளன. 450 வருடத்திற்கு முந்தைய சீன பாணி ஓவியங்களும் உள்ளன (படம் பிடிக்க அனுமதி இல்லை). இவை பிரகாசமான வண்ணங்களுடன் புதிது போல் காணப்படுகின்றன. வண்ணங்களுக்காக கற்களைப் பொடி செய்து பயன்படுத்தியுள்ளனர். அவை, இன்றளவும் மங்காமல் இருப்பது அதிசயமே.

அரண்மனையின் அழகு அத்தனையையும் அதிசயத்துடன் ரசித்துவிட்டு வெளியே வந்தால், மதியம் ரெண்டு மணி. அனைவருக்கும் நல்ல பசி. அந்த மலையின் உச்சியில் இருந்த அரண்மனை வாசலில் நின்றபடி பிரசன்னாவிடம், ‘‘தலைவரே, நாம எங்க சாப்பிடப் போறோம்?'' என்று ரவி கேட்க... ‘‘அதோ அங்கேதான்..!'' என்று எங்கள் கண் முன் விரிந்து கிடந்த லே நகரத்தின் மையத்தைக் காட்டிச் சொன்னார் பிரசன்னா. தூரத்தைப் பார்த்தே மலைத்துப்போனோம். சாப்பிட வேண்டுமென்றால் நடந்துதானே ஆகவேண்டும்.

- பயணிப்போம்...