
பயணம்|சாகர் ட்ரெக்கில் சாகசப் பயணம் - 4
சில நேரம் சில இலக்குகளை நோக்கி நகரும் முடிவுகளை எடுப்பதில் பெரும் குழப்பம் இருக்கும், ஆனால், அங்கே நிலவும் சூழல் நம்மை மெல்ல நகர்த்தி அந்த இலக்கை அடையச் செய்துவிடும். நாங்கள் லே அரண்மனையை விட்டு வெளியே வந்ததுமே ரவிக்கு உடல்நிலை சரியில்லை. இருந்தும் அவர் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இரு கைகளையும் பின்புறமாகக் கட்டிக்கொண்டு நகர்ந்துகொண்டே இருந்தார்.
நாங்கள் அவரைப் பின்தொடர்ந்துகொண்டிருக்கும் போது சூர்யா, ``பிரசன்னா ப்ரோ, ட்ரெக்கிற்கு நான் வரவில்லை என்னால் சமாளிக்க முடியாது, நீங்கள் போய்வாருங்கள்'' என்றான் விரோதியாக. எல்லாம் இந்தச் சிறிய மலையேற்றம் படுத்திய பாடு. சூர்யாவிடம் இருந்து வந்த வார்த்தைகள் நாங்கள் எதிர்பார்த்ததுதான் என்றாலும், பிரசன்னா அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு, ``நாளை மெடிக்கல் டெஸ்ட் வரை நமக்கு நேரம் இருக்கு, அதுவரை பொறுமையாக இரு'' என்று சூர்யாவை ஆசுவாசப்படுத்தி அங்கிருந்து நகர்ந்தான்..

நாங்கள் லே மார்க்கெட்டை அடைந்தபோது நல்ல வெயில், எங்கள் ஜெர்கினைக் கழற்றிவிட்டு சற்று வெயிலில் உட்கார்ந்தோம். நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு எதிரே கட்டடத்தின் மடியில் `BBQ & GRILL' என்று ஒரு உணவகம் திறந்திருப்பதுபோல் இருந்தது. மேலே சென்று பார்த்தால் மாலை மூன்று மணிக்குத்தான் எல்லாம் ரெடி ஆகும் என்றார்கள். சரி அடுத்த கடை பார்க்கலாம் என்று திரும்பிய நேரத்தில் உணவக உரிமையாளர், ``நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?'' என்று கேட்க, ``நாங்கள் தமிழ்நாடு, சாதர் ட்ரெக் பார்க்க வந்தோம்'' என்று கூறியதும், உணவக உரிமையாளருக்கு ஒரே சந்தோஷம். ``அவ்ளோ தூரத்தில் இருந்து சாகசம் பண்ண வந்திருக்கீங்க, உங்களுக்கு ஏதாவது செய்து தரேன், கொஞ்சம் உட்காருங்க'' என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்குச் சென்றார்.
அந்த உணவகம் அமைந்திருந்த இடமும் அழகாக இருந்தது. அங்கே அமர்ந்து மொத்த மார்க்கெட்டையும் வேடிக்கை பார்க்கலாம். உணவகம் வெளியே இருந்த நாற்காலியில் அமர்ந்து காலியான மார்க்கெட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.
அடுத்த அரை மணி நேரத்தில் ஆளுக்கு இரண்டு ஆலு பரோட்டா கொடுத்தார். தொட்டுக்கொள்ள வெஜ் மிக்ஸ் ஊறுகாய் மற்றும் தயிர். சிம்பிள் அண்ட் சூப்பர் காம்பினேஷன். இருந்த பசிக்கு அரை நொடியில் அனைத்தும் காலி, அடுத்ததாக பிரெஞ்சு ப்ரைஸ் மற்றும் பிளாக் டீ கொடுத்தார். எல்லாம் முடித்த பின் பில் கேட்டபோது உரிய கட்டணத்தைச் சொல்லாமல் குத்துமதிப்பாக வாங்கியதோடு, ``சாதர் ட்ரெக் சிறப்பாக முடித்துவிட்டு வாருங்கள்'' என்று எங்களை வாழ்த்தி அனுப்பினார். நாம் எதை நினைத்து பயந்துகொண்டிருக்கிறோமோ அதற்காகவே நம்மை வாழ்த்துகிறார் என்று மனதுக்குள் தோன்ற, சிறிய உற்சாகம். அதே உற்சாகத்தோடு `ஆர்மி ஜெனரல் ஸ்டோர்' நோக்கி நடந்தோம்.

இதற்கிடையில், சூர்யாவும் ரவியும் கொஞ்சம் தெளிவடைந்ததுபோல் தெரிந்தது. உண்மையில் ஆர்மி ஜெனரல் ஸ்டோரில் இல்லாத மிலிட்டரி ஐட்டங்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். துப்பாக்கி, பீரங்கிகள் மட்டும்தான் இல்லை. மற்றபடி எல்லாமே இருந்தன. விலையும் குறைவு. பொருளும் தரமாக இருந்தது. ஸ்டோரை நெருங்கியதும் வைத்திருந்த லிஸ்டை எடுத்துக்கொண்டு ரவியும் சூர்யாவும் உள்ளே மூழ்கிவிட்டனர். எங்கள் பேட்சில் பலர் அங்கேதான் இருந்தனர். நாங்கள் குல்லா, கையுறைகள் மற்றும் தெர்மல் வியர் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு. முக்கியமாக `கம் பூட்' அதாவது நம்ம ஊரில் ரோடு போடுபவர்கள் அணியும் ரப்பர் ஷூ டைப்!
‘இது இல்லாமல் ட்ரெக் வந்துறாதீங்க’ என்று சொல்லியிருந்தார்கள் அல்லவா, ஏன் அப்படிச் சொன்னார்கள் என்று பிறகு உங்களுக்கே விளங்கும்.
இதுபோக நாங்கள் எக்ஸ்ட்ராவாக வாங்கியது நான்குபேருக்கும் ரெண்டு `ஹிக்கிங் போல்' (அதாங்க, மலை ஏறும்போது கைல ஒரு குச்சி வச்சிருப்பாங்களே... அது!). அதை பிரசன்னா வேண்டாம் என்றுதான் சொன்னான். இருந்தாலும் பார்ப்பதற்கு நல்லா இருக்கே என்று நானும் சூர்யாவும் இரண்டு வாங்கிக்கொண்டோம். அனைத்தும் சேர்த்து மூவாயிரம் ரூபாயைத் தொட்டது. பணத்தை செட்டில் பண்ணிவிட்டு விடுதி அறைக்கு வந்துவிட்டோம்.
அறைக்கு வந்ததும் கணக்குப் பார்த்ததில் ஒரு கையுறையும் இரு குல்லாவும் கூடுதலாக இருந்தன. சூர்யாவும் ரவியும் மொத்தமாக வாங்கியதில் ஏதோ மிஸ் ஆகி காசு கொடுக்காமல் எடுத்து வந்து விட்டனர். ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும், இருவரும் மனதுக்குள் ஏதோ `தூம்' திரைப்பட ஜான் ஆபிரஹாம், ஹ்ரித்திக் ரோஷன் போல அப்படி ஒரு பெருமிதம்... இந்தக் கலகலப்பில் எங்கள் மனநிலையும் சரி உடல்நிலையும் சரி, கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்திருந்தது. இவ்ளோ வாங்கியாச்சு, இப்பவும் பயந்தா எப்படி என்ற எண்ணம் மேலோங்கியது.

லடாக்கில் போஸ்ட் பெய்டு சிம் மட்டுமே எடுக்கும் நால்வரில் என்னிடம் மட்டும் போஸ்ட் பெய்டு இருந்தது. ஆனால், வோடோ போன் என்பதால் அதுவும் எடுக்கவில்லை. இதற்கு முன் வந்தபோது வோடபோன் மட்டும்தான் டவர் எடுத்தது. இந்தமுறை அதைத் தவிர அனைத்து நெட்வொர்க்கும் வேலை செய்தது. இருந்தும் அப்போது எங்களுக்கு அதன் பிரச்னை தெரியவில்லை. விடுதியில் கொடுத்த வைஃபை வைத்து சமாளித்துக்கொண்டிருந்தோம். பேச வேண்டியவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாகப் பேசிக்கொண்டோம். வாழ்க டிஜிட்டல் இந்தியா!
இப்படி எல்லாம் ஸ்மூத்தாகப் போய்க்கொண்டிருக்க, எங்கள் நால்வருக்குள்ளும் ஒருவித 'பாசிட்டிவ் வைப்' பரவிக் கிடந்தது. அன்றிரவு டைனிங் ஹால் சென்றால் அங்கே அன்று சாதர் ட்ரெக் முடித்துவிட்டு வந்தவர்கள் அதனைக் கேக் வெட்டி ஷாம்பெயின் உடைத்துக் கோலாகலமாகக் கொண்டாடிக்கொண்டிருந்தனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அனைவரும் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். இதில் ஐம்பது வயதைத் தாண்டிய இரு பெண்மணிகளும் இருந்தனர். அதைப் பார்த்ததும், எங்களை யாரோ பளார் பளாரென்று அறைந்ததுபோல் இருந்தது.

சூர்யா அவர்களிடம் சென்று, ``உங்கள் பயணம் எப்படி இருந்தது..? குளிரை எப்படித் தாக்குப்பிடித்தீர்கள்..? எனக்கு சாதர் செல்ல கொஞ்சம் பயமாக இருக்கிறது. எனக்குக் கொஞ்சம் டிப்ஸ் கொடுங்க'' என்றான். அந்தக் குழுவில் இருந்த ஒருவர், ``தம்பி, உனக்கு பயமாக இருந்தால் கிளப்பி வீட்டுக்குப் போ. பயந்தாங்கொள்ளிக்கு இங்கு என்ன வேலை?!'' என்று சொல்லிச் சிரிக்க, அந்த இடம் கலகலப்பானது. அவர் தமாஷாகச் சொன்னாலும் அந்த வார்த்தை எங்களை ஏதோ செய்தது. இதில் கடுமையாக முடிவெத்தது சூர்யாதான். அவனுக்குள் இருந்த அச்சம் பெரிதும் குறைந்திருந்தது. எங்களுக்கும் ஒருவித நம்பிக்கை தொற்றிக்கொள்ள, அதே உற்சாகத்தோடு சாப்பிடச் சென்றோம்.
இதற்கிடையில் நமது டீம் இன்சார்ஜ் வந்து எங்களிடம் ஒரு படிவத்தைக் கொடுத்துவிட்டு `நாளை காலை மெடிக்கல் டெஸ்ட் இருக்கிறது, அதற்கு வரும்போது அவசியம் இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து எடுத்து வாருங்கள்' என்று சொல்லிச் சென்றார். அதேகணம் ஆர்டர் செய்த பிரெட் ஆம்லெட் வந்தது, அதையும் ஒரு பிடி பிடித்துவிட்டு, நம்பிக்கையோடு உறங்கச் சென்றோம்.
- பயணிப்போம்...