Published:Updated:

திருச்சி ஹேங்அவுட் - பட்ஜெட் டிரிப்: கொல்லிமலைப் பள்ளத்தாக்கில் புத்துணர்வு அளிக்கும் புளியஞ்சோலை!

திருச்சி புளியஞ்சோலை

"கொரனோவால தொலைச்ச சந்தோஷத்தை ஒரு நாளாவது அனுபவிக்கணும்னா கண்டிப்பா புளியஞ்சோலை வந்துடுங்க. குறிப்பா ஃப்ரெண்ட்ஸ்கூட வாங்க. வாழ்க்கையில மறக்க முடியாத இடமா இது மாறிடும்!"

திருச்சி ஹேங்அவுட் - பட்ஜெட் டிரிப்: கொல்லிமலைப் பள்ளத்தாக்கில் புத்துணர்வு அளிக்கும் புளியஞ்சோலை!

"கொரனோவால தொலைச்ச சந்தோஷத்தை ஒரு நாளாவது அனுபவிக்கணும்னா கண்டிப்பா புளியஞ்சோலை வந்துடுங்க. குறிப்பா ஃப்ரெண்ட்ஸ்கூட வாங்க. வாழ்க்கையில மறக்க முடியாத இடமா இது மாறிடும்!"

Published:Updated:
திருச்சி புளியஞ்சோலை
"சின்ன பட்ஜெட்ல மனசுக்கு நிறைவா, எந்த டென்ஷனும் இல்லாம, ஒரு நாள் இயற்கையோடு வாழ்க்கையை வாழணும்னா, அதுக்கு பெஸ்ட் சாய்ஸ் புளியஞ்சோலைதான்" என்று வியந்து பேசுகிறார்கள் திருச்சி மக்கள்.
திருச்சி புளியஞ்சோலை
திருச்சி புளியஞ்சோலை

பெயரில்லாத அருவிகள், தொடர்ச்சியாக அமைந்த மலைகள், நெடிந்துயர்ந்த மரங்கள், பச்சை தாவரங்கள், வன உயிரினங்கள் என அனைத்தும் கொண்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரை அவ்வளவு சீக்கிரம் யாரும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை.

புளியஞ்சோலை
புளியஞ்சோலை
இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், நமது சுற்றுச்சூழலில், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் பங்கு அளப்பரியது. இந்த மலைத் தொடர்களில் உள்ள ஒரு மலைப் பகுதிதான் கொல்லிமலை. நாமக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை ஒன்றிணைக்கும் இந்த மலைத் தொடரில், மிக முக்கியமான இடம், கொல்லிமலைப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள புளியஞ்சோலை.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருச்சி மாவட்டத்தின் உற்சாகப் பயணத்துக்கான சுற்றுலாத் தலமான புளியஞ்சோலையில்தான் கொல்லிமலையிலிருந்து கொட்டும் அருவி காட்டாறாக வேறொரு பரிணாமம் எடுக்கிறது. இதன்பின்பு, அருகில் உள்ள கிராமங்களின் வழியே ஓடிச் செல்கிறது.

புளியஞ்சோலை
புளியஞ்சோலை

பசுமை போர்த்திய கொல்லிமலையிலிருந்து வரும் மூலிகை கலந்த நீர், பாறைகளில் சலசலவென ஓடும் சத்தத்தையும், அங்கே விற்கப்படும் மலைத்தேன், பலா, அன்னாசி போன்ற பழங்களின் ருசியையும் நமக்கு நண்பர்கள் நினைவுப்படுத்திவிட, புளியஞ்சோலையின் அருகிலுள்ள நண்பர்களிடம், "இப்போ சீஸன்தானா?" எனக் கேட்டோம். "நீர்வரத்து மிக அருமையாக இருக்கிறது. தாராளமாக வாருங்கள்" என அழைத்தனர்.

திருச்சியிலும் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைக்கவே, எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனே கிளம்பினோம். திருச்சிக்கும், புளியஞ்சோலைக்கும் பெரிய தூரமில்லை என்பதே நம்மை ஆசுவாசப்படுத்த, காலை நேரத்திலேயே பைக்கில் கிளம்பினோம். திருச்சியிலிருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் வரை இருந்த வாகன நெரிசல், அதன்பின் இல்லை. நமக்கும் அதுதானே தேவை!

புளியஞ்சோலை
புளியஞ்சோலை

பின்பு துறையூரில் காலை உணவை முடித்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். வெயிலின் தாக்கம் மெதுவாகக் குறைய ஆரம்பித்திருந்தது. மழை இல்லை. ஆனால், மழை மேகங்களும், காற்றும் நம்மை வசீகரிக்க... அந்தச் சூழலே மனதை லேசாக்கியது. துறையூரிலிருந்து புறப்பட்ட அரைமணி நேரத்தில் புளியஞ்சோலையை அடைந்தோம். பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறிது நேரம் காட்டாற்றின் சத்தத்தைக் கூர்ந்து கவனித்தோம்.

சுற்றுலா பயணிகள்
சுற்றுலா பயணிகள்

நீரின் சலசலப்பும், சூழலும் நாம் ஒரு மலைப்பிரதேசத்துக்குள் இருக்கிறோம் என்ற உணர்வை உருவாக்கி, மனதை மேலும் இதமாக்கி புத்துணர்வை அளித்தது. நீர்வரத்து இருப்பதால், இங்குள்ள தெய்வங்களை வழிபட வந்தவர்கள், குடும்பத்துடன் சுற்றிப் பார்க்க வந்தவர்கள், ஆற்றில் உற்சாகக் குளியல்போட வந்தவர்கள் என புளியஞ்சோலையில் கார், வேன், பைக்குகள் நிறைந்திருந்தன.

இங்குக் கொல்லிமலை பழங்கள்தான் நம்முடைய உணவாக இருக்கும் என அங்குள்ளவர்கள் நினைத்துவிட்டார்களோ என்னவோ, ஹோட்டல் எதுவும் கண்ணில்படவில்லை என்பதை நாம் அங்குச் சென்றுதான் உணர்ந்தோம். அங்கிருப்பவர்களிடம் விசாரித்தபோது, "கொரோனாவுக்கு முன்பு இங்கு நிறைய கடைகள் இருந்தன. ஆனால், தற்போது கூட்டம் பெரிதாக இல்லாததால், கடைகளைத் திறக்கவில்லை. ஆனால், சமைத்துத் தரச் சொல்லி, பணம் கொடுத்தால், சமைத்துத் தருவார்கள்'' என்று வந்து விழுந்த வார்த்தைகள் அந்த நேரத்தில் ஆறுதலாக இருந்தது. சமைப்பதற்கு பணம் கொடுத்துவிட்டு, ஆற்றில் இறங்கினோம்.

புளியஞ்சோலை
புளியஞ்சோலை

குழந்தைகளுக்கான பூங்கா அமைத்திருக்கிறார்கள். குழந்தைகள் ஊஞ்சலில் விளையாடுவதை ரசித்துக்கொண்டே ஆற்றுக்குள் கவனமாக நடக்க ஆரம்பித்தோம். பாறைகள் மிகுந்து கிடக்கும் இடம் என்பதால், ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு முன்னேறினோம். இயற்கையே வடிவமைத்துக் கொடுத்துள்ள நீச்சல் குளம் போன்ற இடத்தை நண்பர் தெரியப்படுத்த, அதை நோக்கிச் சென்றோம். சுமார் 200 மீட்டர் ஆற்றுக்குள் கடந்த பின்பு, அந்த இடம் தெரிய ஆரம்பித்தது. இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக டைவ் அடித்து, நீச்சலடித்து உற்சாகக் குரல் எழுப்பிக்கொண்டிருக்க... நாமும் உள்ளே இறங்கினோம்.

வாவ்! விவரிக்க வார்த்தையே இல்லை. ஆற்று நீரின் குளுமை நம் உடலுக்குள் ஜிவ்வென்று ஏறி, உடல் சூடு வெளியேறி உடலும் நீரும் ஒன்றான உணர்வு பேரானந்தத்தைத் தந்தது. ஆற்றிலிருந்து பார்த்தால் நெடிந்துயர்ந்த கொல்லிமலை, ஜில்லென்ற மூலிகை வாசத்துடனான நீர் என மனது மிதந்தது. வெயிலும் இல்லாமல், மழையும் இல்லாமல் அப்படி ஒரு கிளைமேட். வெயில் வந்தாலும் பரவாயில்லை என்று தோன்றவைக்கும் குளிர்ச்சி.
சுற்றுலா பயணிகள்
சுற்றுலா பயணிகள்

அலுப்பு தீர, ஆசை தீர கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீரில் மிதந்தோம். கண் சிவக்க மேலேறியபோது வயிறு கபகபவென பசிக்க ஆரம்பித்தது. கொல்லிமலையில விளையும் பழங்களின் வாசம் நம்மை 'வா... வா...' என அழைக்க... அன்னாசி, மாம்பழம், பலா ரகத்துக்கு ஒவ்வொன்றாகச் சாப்பிட்டோம். உண்மையிலேயே மலைப் பழங்களுக்கு தனி ருசிதான்.

ஆனாலும் பசி அடங்கவில்லை. சமைத்து வைக்கச் சொன்னது சட்டென நினைவுக்கு வர, சாப்பாட்டுக் கடை நோக்கி விரைந்தோம். வாழை இலையில் சாப்பாடு, மீன் குளம்பு பரிமாற, பசியால் சுவையறிய முடியாமல், வேக வேகமாக வயிற்றுக்குள் இறங்கியது. வயிறார சாப்பிட்டுவிட்டு கடையில் இருந்து கிளம்பினோம்.

புளியஞ்சோலை
புளியஞ்சோலை

குடும்பத்தினருடன் சுற்றுலா வந்திருந்த கார்த்திகேயனிடம் பேசினோம், "எங்களுக்கு ஊர் ஆத்தூர் பக்கம். வருஷா வருஷம் சீசனுக்கு நாங்க குடும்பமா இங்க வந்துடுவோம். இங்க இருக்குற பெரியசாமியை கும்புடுட்டு, ஆத்துக்குள்ள இறங்குனா பொழுதுபோனாலும் வீட்ல இருக்குறவங்க, குழந்தைங்கன்னு யாருமே வெளில வர மாட்டாங்க. ரொம்ப அருமையான இடம்; செலவும் கம்மி. பிசினஸ், வேலை பாக்குறவங்கன்னு எல்லாருக்கும் மனசை ஸ்ட்ரெஸ் இல்லாம வெச்சிக்கிறதுக்கு இது நல்ல இடம்" என்றார்.

புளியஞ்சோலை அனுபவம் குறித்து அங்கு இருந்த இளைஞர்களிடம் கேட்டோம், "ஹாய் பாஸ்... நாங்கல்லாம் திருச்சியிலிருந்து இங்க வந்துருக்கோம். எங்க குரூப்புல, படிக்குற பசங்க, வேலை பாக்குறவங்கனு எல்லாருமே இருக்கோம். எங்க எல்லாருக்குமே புளியஞ்சோலைதான் ஆல் டைம் ஃபேவரைட் ஸ்பாட். கொரோனாவால கிட்டத்தட்ட ஒரு வருஷமா இங்க வராமலே இருந்துட்டோம்.

புளியஞ்சோலையில் உணவகம்
புளியஞ்சோலையில் உணவகம்

இப்போ திரும்பியும் வந்தது செம ஹாப்பி. இங்கயே சமைக்கச் சொல்லிடுவோம். ஒண்ணு, உள்ள எடுத்துட்டு போய் தண்ணில விளையாண்டுக்கிட்டே சாப்பிடுவோம், இல்லேன்னா, விளையாடிட்டு வந்து இங்க சாப்பிடுவோம். எல்லாமே வேற லெவல் ஃபன்னா இருக்கும். இப்போ தண்ணி வேற அதிகமா வர்றதுனால நாங்க ரொம்பவே என்ஜாய் பண்ணிட்டு இருக்கோம்.

புளியஞ்சோலை
புளியஞ்சோலை

மலை, அருவி, நல்ல கிளைமேட்... வேற என்னங்க வேணும்? கொரனோவால தொலைச்ச சந்தோஷத்தை ஒரு நாளாவது அனுபவிக்கணும்னா கண்டிப்பா புளியஞ்சோலை வந்துடுங்க. குறிப்பா ஃப்ரெண்ட்ஸ்கூட வாங்க. வாழ்க்கையில மறக்க முடியாத இடமா இது மாறிடும்" எனப் பரவசத்துடன் பேசினார்கள்.

திருச்சி புளியஞ்சோலை
திருச்சி புளியஞ்சோலை

இளைஞர்களுக்கு மட்டும் இல்லாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற இடம் இந்தப் புளியஞ்சோலை. இங்கிருந்து 9 கிலோமீட்டர் காட்டு வழியாகச் சென்றால், ஆகாய கங்கை அருவி, சித்தர்கள் வாழ்ந்த குகை, பழங்குடியினர் வாழ்விடம் போன்றவற்றை கண்டுக்களிக்கலாம். ஆனால், இங்கு ஒருவர், இருவராக வருவதைவிட குழுவாக வருவதே பாதுகாப்பானது.

திருச்சி புளியஞ்சோலை குருவாயி கோயில்
திருச்சி புளியஞ்சோலை குருவாயி கோயில்

எப்படிச் செல்வது?

திருச்சியில் இருந்து துறையூர். அங்கிருந்து பஸ், கார் என புளியஞ்சோலை வரலாம். பேருந்து போக்குவரத்து சரிவர இருப்பதில்லை. ஆகவே, கார் அல்லது பைக்கில் செல்வது வசதியானது. செலவு குறைவாக, ஒருநாள் இயற்கையோடு இயைந்து வாழ பெஸ்ட் சாய்ஸ், புளியஞ்சோலை.