Published:Updated:

ஸ்ரீரங்கம் கோபுரம், மறுபுறம் மலைக்கோட்டை, அந்த நெய் புட்டு! திருச்சி காவிரி பாலத்தில் என்ன ஸ்பெஷல்?

திருச்சி காவிரி பாலம்

திருச்சி காவிரி பாலம்: "ரணமான மனதைக் கூட லேசாக்கும் பெரும் வல்லமை இந்த இடத்திற்கு உண்டு" என மக்கள் ரசித்துப் பேசியதைக் கேட்க முடிந்தது.

ஸ்ரீரங்கம் கோபுரம், மறுபுறம் மலைக்கோட்டை, அந்த நெய் புட்டு! திருச்சி காவிரி பாலத்தில் என்ன ஸ்பெஷல்?

திருச்சி காவிரி பாலம்: "ரணமான மனதைக் கூட லேசாக்கும் பெரும் வல்லமை இந்த இடத்திற்கு உண்டு" என மக்கள் ரசித்துப் பேசியதைக் கேட்க முடிந்தது.

Published:Updated:
திருச்சி காவிரி பாலம்

மலைக்கோட்டை மாநகரமாம், திருச்சியையும், ரெங்கநாதர் பள்ளி கொண்டுள்ள 108 திவ்ய தேசங்களில் முதன்மையான புண்ணிய ஸ்தலமான ஸ்ரீரங்கத்தையும் தரைவழி மார்க்கமாக இணைப்பது 'காவிரி பாலம்'. பரந்து விரிந்து, 'கடல்' போல் காட்சியளிக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே இந்த பாலம், கடந்த 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது. பின்னர், அது வலுவிழக்க, அது நடைபயிற்சிக்காக மாற்றப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே மற்றொரு பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பாலங்கள்தான் திருச்சி மக்களின் 'மீட்டிங் ஹாட்ஸ்பார்ட்' ஆக மாறியிருக்கிறது.

காவிரி பாலம்
காவிரி பாலம்

"மாலை நேரத்துல காவிரி பாலத்துக்கு அடியில், ஆத்து தண்ணிக்கு மேல சூரியன் மறையிற காட்சிலாம் நினைச்சி கூட பாக்க முடியாத அழகுங்க... அப்படியே ஆரஞ்சும், ஊதாவும் வானமும், சூரியனும், தண்ணியும் ஒண்ணா இருக்குற அழகே வேற..." என்று காவிரி பாலத்தின் அழகை வர்ணித்துச் சொல்கிறார்கள் திருச்சி மக்கள். சென்னை போன்ற கடற்கரையோர மாவட்டத்து மக்கள், லீவு நாள்களில் பொழுதைப் போக்க பீச், பார்க் எனப் போவார்கள். ஆனால், எங்களின் பொழுதைப் போக்கக் காவிரிப் பாலத்துக்குத்தான் போகிறோம் என்கிறார்கள் திருச்சிவாசிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எவ்வளவுதான் மனக்கஷ்டம், டென்ஷன் இருந்தாலும்... ஜில்லென்ற காற்று, தண்ணீர் பாய்ந்தோடும் சத்தம் ஆகியவை நம் மனதை இதமாக்கி விடும் அல்லவா? சரி, அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் பாலத்தில்..?

திருச்சி காவிரி பாலத்தில் மக்கள்
திருச்சி காவிரி பாலத்தில் மக்கள்

'கொள்ளிடம்', 'காவிரி' எனத் தமிழ்நாட்டிற்கே வளம் சேர்க்கும் இரு பெரும் ஆறுகளையும் தன் இரு கரையாகக் கொண்டு நடுவில் தீவு போல அமைந்திருக்கிறது 'ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில்'. இந்தக் கோயிலுக்கு வந்து செல்பவர்கள், இந்தப் பாலத்தைக் கடந்துதான் போக வேண்டும். ஆற்றங்கரையோரம் மாலை வேளையில் மனதை வருடும் காற்று, தண்ணீர் பாயும் ஓசை... ரம்மியமாக இருக்கும் 'திருச்சி காவிரி பாலம்' என்ற பெயரைப் படித்தவுடன் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சின்னதாக ஒரு சந்தோசம் மனதிற்குள் தோன்றுவதை நம்மால் பார்க்க முடியும். அந்த அளவிற்குத் திருச்சி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஹாட்ஸ்பாட்டில் திருச்சி காவேரி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருக்கும் பாலம் முக்கிய இடம்பெறுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முக்கியத்துவம் வாய்ந்த அந்த காவிரி பாலத்தைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கும்போதே அந்த காவிரியின் வாசமும், நீரின் குளுமையும், பாலத்தின் மீது விற்கப்படும் சூடான நெய் புட்டின் மனமும் நம்மைப் பாலத்திற்கு இழுக்க, கடிகாரமும் மணி இரவு 7 தான் என்பதை நமக்கு நினைவூட்டியது. இதற்கு மேலும் நாம் இங்கிருந்து கற்பனையில் சொல்ல வேண்டாம், நேராகப் பாலத்திற்கே சென்று ரசித்து பார்த்துவிட்டு மற்றவர்களுக்குச் சொல்லலாம் என்று கிளம்பினோம்.

திருச்சி காவிரி பாலத்தில் மக்கள்
திருச்சி காவிரி பாலத்தில் மக்கள்

நாம் சென்ற நேரத்தில் பாலம் குடும்பங்களுடனும், நண்பர்களுடனும் கூட்டம் கூட்டமாகத் தெரிந்தது. வழக்கமான நேரத்தில் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும். கொரோனா காலம் என்பதால், மக்கள் கூட்டம் சிறிது குறைவாகவே இருந்தது. மக்கள் கூட்டத்துடன் நாமும் இணைந்து கொள்ளப் பாலத்தின் நடுவில் சென்று நின்றோம். ஒருபக்கம் ஸ்ரீரங்கத்தின் கோபுரம் மின்விளக்கில் ஜொலிக்க, மற்றொரு பக்கம் மலைக்கோட்டையின் வெளிச்சம் வேற லெவலில் இருந்தது. கூடவே காவிரியில் பாசனத்திற்காகத் திறக்கப்பட்ட நீரும், சில்லென்ற காற்றும் மனதை மயக்க ஆரம்பித்தது. இந்த இதமான சூழலுக்காகவே பல்வேறு தரப்பினரும் காவிரிப் பாலத்திற்கு அடிமையாகியுள்ளனர்.

திருச்சி காவிரி பாலத்தில் மக்கள்
திருச்சி காவிரி பாலத்தில் மக்கள்

திருச்சியில் உள்ள பாலங்களில் மிகப் பழைமையான பாலத்தில் ஒன்றாக இருப்பது இந்த காவிரிப் பாலம். ஆற்றங்கரையில் உள்ள ஊரான ஸ்ரீரங்கத்தையும், திருச்சியின் மாநகரப் பகுதியையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு சீரமைப்புப் பணிகளுக்கு இடையில் இன்றும் மக்களுக்கு போக்குவரத்து ரீதியாகவும், மாலை நேரங்களில் மக்களில் மனதை 'ரிலாக்ஸ்' ஆக்கும் இடமாகவும் மாறியிருப்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு.

மக்களின் பயன்பாட்டுக்கு வந்த ஆண்டிலிருந்து இளம் வயதினர் முதல் வயதானவர் வரை எல்லாருக்குமான மீட்டிங் ஸ்பாட். கூடவே 'நெய் புட்டு', 'காரப்பொரி', 'பானிபூரி', 'ஐஸ்கிரீம்' எனத் தள்ளுவண்டிக் கடைகளும் எப்போதும் ரவுண்டு கட்டி நிற்கும். இதைவிட பொழுதைப் போக்குவதற்கு வேறு என்ன வேண்டும்?

ஸ்ரீரங்கதத்தைச் சேர்ந்த ரமேஷ்
ஸ்ரீரங்கதத்தைச் சேர்ந்த ரமேஷ்

மழலைகளும், குழந்தைகளுமாகக் குழுமியிருந்த திரு.ரமேஷ் குடும்பத்திடம் பேசினோம், "நான் ஸ்ரீரங்கத்துல வசிச்சுட்டு வர்றேன். திருச்சி சிட்டிக்குள்ள பார்க்கைத் தவிர பெரிசா எந்த மீட்டிங் ஸ்பாட்டும் இல்லாததால், ஒட்டுமொத்த திருச்சி மக்களுக்கும் வரப்பிரசாதமா இந்தப் பாலம் இருக்குனு சொல்லலாம். என் பிள்ளைகளுக்கும் இங்க வர்றதுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால ஒவ்வொரு வாரமும் குடும்பத்தோட இங்க வந்துருவோம்.

ஆனா, இப்போ கொரோனா பயத்துல அடிக்கடி வர்றது இல்ல. என் நண்பர்கள் சிலர் வெளிநாட்டுல வேலை பாக்குறானுங்க. அவனுங்க திருச்சியில இருந்தபோது வாரத்துல சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகள்ல, எங்களுளோட மீட்டிங் ஸ்பாட்டே இதுதாங்க. இப்போ நண்பர்களுக்கு அடுத்த படியா, என் குடும்பத்தோட வந்துட்டு போறேன்" என்றவர், "ரணமான மனதைக் கூட லேசாக்கும் பெரும் வல்லமை இந்த இடத்திற்கு உண்டு" எனச் சொல்லி ரசித்துப் பேசியதைக் கேட்க முடிந்தது.

திருச்சி காவிரி பாலத்தில் மக்கள்
திருச்சி காவிரி பாலத்தில் மக்கள்

இன்னொரு இளம் தம்பதிகளும் காவிரி பாலத்தில் நின்று தங்களின் கனவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்க, அவர்களிடம் பாலத்தைப் பற்றி கேட்கவும், தன்னை மறந்து பேசத்தொடங்கினார்கள், ”நான் பிறந்து வளந்தது எல்லாமே திருச்சியிலதான். எனக்கு ரொம்ப பரிட்சையமா, நான் சின்ன வயசுல இருந்து ரசிச்ச இடம்ன்னா அது, இந்த பாலம்தான். என்னன்னே தெரியாத ஒரு உறவு இந்தப் பாலத்துடன் இருக்குற மாதிரியே எனக்கு ஒரு பீலிங். நான் ஸ்கூல் படிக்கும்போது காவேரில ரொம்ப நெறைய வெள்ளம் போய்ட்டு இருந்துச்சு. அப்போ அந்த தண்ணிய பாத்ததும் எனக்கு தோணின விஷயம் பாலத்துக்கு மட்டும் ஏதும் ஆகிட கூடாதுங்கிறதுதான்.

டீன்ஏஜ்ல பாலத்து மேலான காதல் இன்னும் அதிகமாச்சி. இரண்டு கெட்டான் வயசுல வீட்ல நான் கோச்சிக்கிட்டு நான் வந்த மொத இடம் இந்தப் பாலம்தான். அப்புறம் படிப்பு வேலைன்னு வாழ்க்கை போனாலும் என்னோட 'ஆல் டைம் ஃபேவரைட் ஸ்பாட்'ன்னா அது காவேரி பாலம்தான். என் மனைவிக்கும் இப்போ இதுதான் ஃபேவரைட் ஸ்பாட். சாயந்திர நேரத்துல ஆத்து தண்ணிக்கு மேல சூரியன் மறையிற காட்சிலாம் நினைச்சிக்கூட பாக்க முடியாத அழகு சார். கன்னியாகுமரியில கடலுக்கு இடையே சூரியன் அஸ்தமனமாகுறதைப் பாத்த ஃபீலிங் வரும். அப்படியே ஆரஞ்சும், ப்ளூவும் - வானமும், சூரியனும், தண்ணியும் ஒண்ணா இருக்குற அழகே வேற!" என்றார். அவர் சொல்வத்கைக் கேட்கவே நமக்கு காவிரி பாலம் இன்னமும் அழகாகத் தெரிந்தது.

திருச்சி காவிரி பாலத்தில் மக்கள்
திருச்சி காவிரி பாலத்தில் மக்கள்

இந்தச் சூழ்நிலைக்காகவே சில வருடங்களுக்கு முன் எப்படி சென்னைக்கு மெரினாவோ அதுபோன்று காவிரி பாலம் என்றுணர்ந்த அதிகாரிகள், நீர் இல்லாத கோடை காலத்தில் ஆற்றின் மணலில் 'சம்மர்பீச்' என்பதை உருவாக்கி கோடையிலும் காவிரி பாலத்தையும், காவிரியையும் அனுபவிக்க வைத்தனர். தற்போது 'சம்மர் பீச்' இல்லையென்றாலும், காவிரியை ரசிக்காத மக்கள் இல்லை எனலாம்.

திருச்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இயற்கை விரும்பிகள், ஒருமுறையேனும் காவிரி பாலத்தில் நின்று மனதார ரசித்துவிடுங்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism