Published:Updated:

திருச்சி ஹேங்கவுட்: 9 குன்றுகள், குகைகள், கல்வெட்டுகள், அழகிய சிற்பங்கள்... நார்த்தாமலை அற்புதங்கள்!

நார்த்தாமலை அற்புதங்கள்

சமணர் குகையிலுள்ள ஸ்பிங்க்ஸ் எனப்படும் ஒரு சிற்பம் நம் சிந்தனையைத் தூண்டுகிறது. மனித முகமும் சிங்கத்தின் உடலும்கொண்ட இவ்வுருவம் எகிப்து பாணி சிற்பமாகக் கருதப்படுகிறது.

திருச்சி ஹேங்கவுட்: 9 குன்றுகள், குகைகள், கல்வெட்டுகள், அழகிய சிற்பங்கள்... நார்த்தாமலை அற்புதங்கள்!

சமணர் குகையிலுள்ள ஸ்பிங்க்ஸ் எனப்படும் ஒரு சிற்பம் நம் சிந்தனையைத் தூண்டுகிறது. மனித முகமும் சிங்கத்தின் உடலும்கொண்ட இவ்வுருவம் எகிப்து பாணி சிற்பமாகக் கருதப்படுகிறது.

Published:Updated:
நார்த்தாமலை அற்புதங்கள்
திருச்சியிலிருந்து, புதுக்கோட்டைச் செல்லும் பிரதான சாலையில் திருச்சியிலிருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வரலாற்றுச் சிறப்புமிக்க நார்த்தாமலை. மேலமலை, கோட்டை மலை, கடம்பர் மலை, உவக்கன் மலை, பறையர் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன்மலை என ஒன்பது வகையான மலைக் குன்றுகளால் சூழப்பட்ட மலைத்தொடர் இது.

இங்கு வரலாற்றுச் சிறப்புடைய கல்வெட்டுகளைச் சுமந்து நிற்கும் விஜயாலய சோழீஸ்வரம், விஷ்ணு குடவரை, பழியிலி ஈசுவரம் எனும் குடவரைக் கோயில், தலையருவிசிங்கம் என்னும் சுனை, அதிலிருக்கும் சிவன் ஆகியவற்றை நாம் கண்டு தரிசிக்கலாம். ராமன் - ராவணன் இலங்கைப் போரில் இறந்துபோன வீரர்களை உயிர்ப்பிக்க வடக்கிலிருந்து சஞ்சீவி மலையை அனுமன் தூக்கி வந்தபோது அதிலிருந்து விழுந்த சிறிய துகள்களிலிருந்துதான் இந்தக் குன்றுகள் உருவானதாகவும் கூறப்படுகிறது. இம்மலைகளில் பல அரிய மூலிகைகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

நார்த்தாமலை
நார்த்தாமலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கி.பி 7-ம் நூற்றாண்டிலிருந்து, 9-ம் நூற்றாண்டு வரை பாண்டியர் மற்றும் பல்லவர்களின் ஆளுகைக்குப்பட்டிருந்தது. இவர்களது மேலாண்மைக்குட்பட்டு முத்தரையர் என்னும் சிற்றரசர்கள் இப்பகுதியை ஆண்டு வந்துள்ளனர். அப்போது நார்த்தாமலை மேலமலையிலுள்ள பழியிலி ஈசுவரம் என்னும் குகைக்கோயில், சாத்தன் பழியிலி என்னும் முத்தரைய குறுநில மன்னரால் கட்டப்பட்டது. அதற்கான கல்வெட்டு ஒன்றும் உள்ளதாகக் கூறப்படுகிறது. கி.பி 9-ம் நூற்றாண்டின் இறுதியில் விஜயாலய சோழன் தஞ்சாவூரில் சோழர்களின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தியபோது இப்பகுதியும் அவனது ஆட்சிக்குப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தலையருவி சிங்கம்

நார்த்தாமலையின் மிக முக்கிய அடையாளமே மேலமலையில் உள்ள விஜயாலய சோழீஸ்வரம் கோயில்தான். மேலமலை அடிவாரத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. மெல்ல மலையில் ஏறிச் சென்றால் விஜயாலய சோழீஸ்வரத்தை அடையாளம். மேல மலைக்கு ஏறிச்செல்லும் போது வழியிலேயே தலையருவி சிங்கம் சுனை ஒன்று இருக்கிறது. இங்கு சுமார் 15 அடி ஆழத்தில் சிவபெருமானுக்காக வெட்டப்பட்ட குடைவரைக் கோயில் இருப்பதை நம்மால் காணமுடியும். சுனைக்குள் உள்ளே ஜீரஹரேஸ்வரர் என்னும் லிங்கம் ஒன்று இருக்கிறது. பாறையிலேயே உள்ளே குடைந்து லிங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே கல்வெட்டுகள் இருக்கின்றன.

தலையருவி சிங்கம் சுனை
தலையருவி சிங்கம் சுனை

அதில் ஒரு கல்வெட்டில் 1857-ல் ராஜா ராமச்சந்திர தொண்டைமான் ராணியால் இந்த சுனை நீர் இறைக்கப்பட்டு சிவலிங்கம் தரிசிக்கப்பட்டது என்ற செய்தி பதிவிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த 2019ஆம் ஆண்டு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற இளைஞர்கள் அமைப்பினர் இந்தியத் தொல்லியல் துறையின் அனுமதிபெற்று சுனைநீர் முழுவதையும் வெளியேற்றிவிட்டு அந்த ஜீரஹரேஸ்வரர் என்ற லிங்கப் பெருமானுக்கு வழிபாடு செய்தனர். அதன்பின் தொடர்ச்சியாக வழிபாடு நடந்தது. தற்போது இந்தச் சுனையில் மீண்டும் தண்ணீர் நிரம்பியிருக்கிறது. சுனையில் மூழ்கியிருக்கும் சிவபெருமானை வணங்கிவிட்டு மலையேறினால், சிறிது தூரத்திலேயே விஜயாலய சோழீஸ்வரம் வந்துவிடுகிறது.

விஜயாலய சோழீஸ்வரம்

இந்தக் கோயில் தமிழக கோயில் கட்டடக்கலை வரலாற்றில் முக்கிய இடம்பெறுகிறது. இதுபோன்ற கலைப்பாணியில் அமைந்த கோயில் தமிழகத்தில் இது ஒன்றுதான். வேசரா கலைப்பாணியில் இந்தக் கோயில் முழுமையடைந்திருப்பதை இங்குக் காணமுடியும். மேற்கு நோக்கியுள்ள இந்த சிவன் கோயில் 1240 சதுர அடிபரப்பில் முழுவதும் கற்களினாலான கற்றளி கோயில் ஆகும். பிரதானக் கோயிலுக்கு வெளியே நந்தி சிலை கம்பீரமாகக் காட்சியளிக்க, உள்ளே கருவறையில் விஜயாலய சோழீஸ்வரர் அருள்பாலிக்கிறார். கருவறையில் வீற்றிருக்கும் சிவபெருமானைச் சுற்றி வருவதற்குச் சாந்தார அறை காணப்படுகிறது. கருவறை விமானம் வேசரா கலைப்பாணியில் வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு முன்பு உள்ள அர்த்தமண்டபத்தை ஆறு தூண்கள் தாங்கி நிற்கின்றன. வாயிலில் துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன.

விஜயாலய சோழீஸ்வரம்
விஜயாலய சோழீஸ்வரம்

அர்த்த மண்டபத்தில் அழகான வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. விமானத்தில் சிற்பங்கள் அழகுடன் காணப்படுகின்றன. துவாரபாலகர் சிற்பத்தின் பீடத்தில் ஒரு கல்வெட்டு உள்ளது. இந்தக் கோயிலை முதலில் சாத்தம்பூதி என்று அழைக்கப்பட்ட இளங்கோவதி முத்தரையன் என்ற மன்னர் கட்டினார். பின்பு மழை மற்றும் இடியினால் ஆலயத்தின் சில பகுதிகள் சிதைந்துவிட, விஜயால சோழன் காலத்தில் மல்லன் விதுமன் என்று அழைக்கப்பட்ட தென்னவன் தமிழ் திரையன் என்பவனால் இந்தக் கோயில் மீண்டும் இப்போதிருக்கும் வடிவுடன் புனரமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தில் ஆறு சன்னிதிகள் காணப்படுகின்றன. அவற்றில் சிலைகள் எதுவும் தற்போது இல்லை. அருகிலேயே இரண்டு குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன.

பழியிலி ஈசுவரம்

விஜயாலய சோழீஸ்வரம் கோயிலுக்கு முன்பு பாறையில் குடையப்பட்டுள்ள குகைக்கோயில் பழியிலி ஈசுவரம். இது ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்கள் கீழ் ஆட்சி செய்த முத்தரையர் தலைவன் ‘சாத்தன் பழியிலி’ என்பவரால் கட்டப்பட்டது. இங்கு லிங்கம் மற்றும் துவாரபாலகர்கள் சூழக் கருவறைக்குள் பழியிலி சிவனார் அருள்புரிகிறார்.

சமணர் குகை

பழியிலி ஈசுவரம் குகைக்கு வடக்கு பக்கத்தில அதே குன்றில் சமணர் குடகு என்ற குகைக்கோயில் இருக்கிறது. முதலில் இது சமணர் குடவரையாக வெட்டப்பட்டுப் பிறகு திருமால் கோயிலாக மாற்றப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இந்தக் குகையின் அர்த்தமண்டபத்தின் சுவரில் திருமாலின் உருவங்கள் பன்னிரண்டு பொறிக்கப்பட்டுள்ளன.

சமணர் குகை
சமணர் குகை

திருமால் தனது சுதர்சன சக்கரத்தை ஏவும் காட்சிதான் இங்கே தத்ரூபமாக வெட்டப்பட்டுள்ளது. முதல் சிற்பத்தில் திருமாலுடைய கரத்தில் மேலிரு கரங்களில் சங்கு மற்றும் சக்கரம் இருக்கும். மண்டபத்தின் மேடையில் யானைகள், பலவிதமான யாழிகள், காமதேனு போன்ற சிற்பங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. இங்குள்ள ஸ்பிங்க்ஸ் எனப்படும் ஒரு சிற்பம் நம் சிந்தனையைத் தூண்டுகிறது. மனித முகமும் சிங்கத்தின் உடலும்கொண்ட இவ்வுருவம் எகிப்து பாணி சிற்பமாகக் கருதப்படுகிறது.

கடம்பர் மலை அடிவாரத்தில் திருக்கடம்பர் உடைய நாயனார் கோயில் உள்ளது. இங்கு ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டு, சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுகள் பத்து என நிறையக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

திருக்கடம்பூர் கோயிலுக்கு அருகில் நகரீச்சுரம் எனப்படும் மற்றுமொரு சிவன் கோயில் உள்ளது. இது மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். அக்காலத்தில் கொடுங்குற்றம் செய்தோர் இங்குள்ள உயரமான ஆளுருட்டி மலையிலிருந்து கீழே உருட்டிவிடப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதன் காரணமாக 'ஆளுருட்டி மலை' என்ற பெயரையும் பெற்றிருக்கிறது. இப்படி 8 மலைகளுக்கும் சிறப்புகள் இருக்கின்றன.

மலைக்குக் கீழே நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் இருக்கிறது. மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான கோயிலில் ஒன்றான இங்கு ஏப்ரலில் திருவிழா நடக்கிறது. மேல மலைக்கு தெற்கே மலையில் கீழ் நோக்கி குடையப்பட்டுள்ள ஒரு குகையில் தர்கா ஒன்று உள்ளது. இங்கு மாரியம்மன் கோயில் திருவிழாவின் 10ம் நாள் இரவு சந்தனக்கூடு விழா நடைபெறுகிறது.

நார்த்தாமலை
நார்த்தாமலை

இதில் முஸ்லீம் - இந்து மக்கள் மத பேதமின்றி கூடி வழிபாடு செய்கின்றனர். சிறப்புமிக்க வரலாற்றுத் தகவல்கள் புதைந்து கிடக்கும் நார்த்தாமலை சுற்றுலாத்தளத்திற்கு ஒருமுறையாவது சென்று வரவேண்டும். ஆன்மிக நண்பர்கள், சிற்பங்கள், வரலாற்றுத் தகவல்களைத் தேடிப் பயணிப்பவர்களுக்கு நார்த்தாமலை பெரும் தீனிபோடும்.

எப்படிச் செல்வது?

திருச்சி - புதுக்கோட்டைத் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 37 கி.மீ தொலைவில் இருக்கிறது நார்த்தாமலை. திருச்சி - புதுக்கோட்டை பேருந்துகளில் ஏறி நார்த்தாமலை ஸ்டாப்பில் இறங்க வேண்டும். அங்கிருந்து 2 கி.மீ தூரத்தில் இந்தச் சுற்றுலாத்தலத்தை அடையலாம். நகரப் பேருந்து வசதியும் உள்ளது. பெரும்பாலும், சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் தங்களது வாகனத்திலேயே வந்து பார்த்து ரசித்துச் செல்வது நலம்.