Published:Updated:

திருச்சி உலா: பீரங்கி, அகழிகள், குகைக்கோயில், எண்கோணக் குளம்... திகைக்க வைக்கும் திருமயம் கோட்டை!

திருமயம் கோட்டை
திருமயம் கோட்டை

திருமயம் கோட்டையில், பீரங்கிகள், பீரங்கிக் குண்டுகள், சங்கிலிப் போர் உடைகள், உடை வாள்கள், பூட்டுகள் ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

திருச்சியிலிருந்து 72 கி.மீ தொலைவில் புதுக்கோட்டையில் அமைந்திருக்கிறது திருமயம் கோட்டை. வட்டவடிவமாகக் கட்டப்பட்ட இந்தக் கோட்டையைச் சுற்றிலும் ஏழு சுற்று மதில்சுவர்கள் இருந்துள்ளன. கோட்டையைச் சுற்றிலும் அகழிகள் இருந்ததற்கான தடயங்கள் இப்போதும் தென்படுகின்றன. இந்தக் கோட்டையின் உச்சியில் பீரங்கி மேடையில் பீரங்கி ஒன்று கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. 40 ஏக்கர் சுற்றளவில் கோட்டை பரந்து விரிந்து கிடக்கிறது. கோட்டையின் உச்சியிலிருந்து பார்த்தால், மொத்த ஊரையும் ஏரியல் வியூவில் நாம் ரசிக்கலாம்.

திருமயம் கோட்டை
திருமயம் கோட்டை
வரலாற்றுச் சிறப்புமிக்க திருமயம் கோட்டை ராமநாதபுரம் சேதுபதி மன்னர் கிழவன் சேதுபதியின் காலத்தில் 1676-ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. வட்ட வடிவமான இக்கோட்டையைச் சுற்றி ஏழு சுற்று மதில்கள் இருந்துள்ளன. ஆனால், தற்போது மூன்று சுற்று மதில்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன.

வெளிச்சுவரைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்கள் தென்படுகின்றன. கோட்டைக்கு வடக்கு, தெற்கு, தென் கிழக்கு ஆகிய மூன்று திசைகளிலும் நுழைவு வாயில்கள் உள்ளன. வடக்கு வாயிலில் பைரவர், தென்கிழக்கு வாயிலில் கருப்பர், தெற்கு வாயிலில் அனுமன், சக்தி, கணபதி கோயில்கள் உள்ளன.

இந்த தெய்வங்கள் கோட்டைக் காவல் தெய்வங்களாகக் காத்து வருவதாகக் கூறுகின்றனர். முக்கிய நுழைவு வாயில் தற்போதுள்ள கோட்டையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டா் தெற்கே அமைந்துள்ளது. நுழைவு வாயிலில் டிக்கெட் வாங்கிக் கொண்டு பாறைகளில் செதுக்கப்பட்ட படிகளில் ஏற வேண்டும்.

குன்றின் மேல் காணப்படும் உள்கோட்டை ஒரு குன்றின் மேல் இயற்கை அரண்களுடன் அமைந்திருக்கிறது. அதைச் சுற்றிலும் மதில்கள் எழுப்பட்டிருக்கின்றன. உள் கோட்டைக்குச் செல்லும் பாதி வழியில் வலப்பக்கத்தில் பாறையிலேயே குடையப்பட்ட குகை ஒன்று காணப்படுகிறது. இது அந்தக் காலத்தில் ஆயுதக் கிடங்காக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. குகைக்கு எதிரே குகைக் கோயில் ஒன்றும் அமைந்திருக்கிறது. லிங்கமாக அமைந்திருக்கிறது.

திருமயம் கோட்டை பீரங்கி
திருமயம் கோட்டை பீரங்கி

குகைக் கோயிலுக்குள் உள்ளே செல்ல இரும்புப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கிருந்து மெல்ல நடந்து, கோட்டையின் உச்சிக்கு நடந்தால், கோட்டையின் உச்சியில் இருக்கும் பீரங்கி மேடை நம் கண்ணுக்குத் தென்படும். 20 அடி உயரமுள்ள மேடையில் பீரங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அருகிலேயே ஆழமான சுனை ஒன்றும் காணப்படுகிறது. நீர் நிரம்பிக் கிடக்கும் சுனையில் யாரும் தவறி விழாமல் இருக்க இரும்புக் கம்பிகள் போடப்பட்டிருக்கின்றன.

படிக்கட்டுகளில் மெதுவாக ஏறிப் போனால் உச்சியில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பீரங்கியைப் பார்க்கலாம். அங்கிருந்து மொத்த ஊரையும் ஏரியல் வியூவில் நாம் கண்டு ரசிக்கலாம்.
திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 8 | ‘காட்டு விவசாய’த்தின் முன்னோடி அமரதன்! இவர் செய்த சாதனை என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மன்னா்கள் மக்களை எதிரி நாட்டுப் படைகளிடமிருந்து காக்கவும் மன்னா்கள் குடும்பம் வசித்து வரவும்தான் மிகப்பெரிய கோட்டைகளை அமைப்பது வழக்கம். அந்த வகையில்தான் திருமயம் கோட்டையும் கட்டப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. திருமயம் கோட்டையின் உச்சியிலிருந்து பார்த்தால் பல மைல்களுக்கு அப்பால் வரும் எதிரி நாட்டுப் படைகளைக்கூட நாம் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது. ஊமையன் கோட்டை என்ற பெயருடனும் இந்தக் கோட்டை அழைக்கப்படுகிறது.

திருமயம் கோட்டை
திருமயம் கோட்டை

1799-ல் நடந்த முதல் பாளையக்கார போருக்குப் பிறகு கட்டபொம்மனும், அவரின் தம்பி ஊமத்துரையும் இக்கோட்டையில் வந்து தங்கி ஒளிந்துகொண்டிருந்தனர் என்பதும், பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பிய ஊமத்துரை மருது சகோதரர்களின் உதவியுடன் இங்கு மறைந்து வாழ்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. திருமயம் கோட்டையில், பீரங்கிகள், பீரங்கிக் குண்டுகள், சங்கிலிப் போர் உடைகள், உடை வாள்கள், பூட்டுகள் ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

கோட்டைக்குக் கீழே அருகே சத்தியகிரீஸ்வரர் என்னும் பெயர் கொண்ட சிவன் கோயில் இருக்கிறது. இதேபோல், சத்தியமூர்த்தி என்னும் பெயர் கொண்ட பெருமாள் கோயிலும் இருக்கிறது. குகைக் கோயிலினுள் விஷ்ணுபெருமான் அனந்தசயன மூர்த்தி மலையோடு சேர்ந்து பாறையிலேயே வடிமைக்கப்பட்டுக் காட்சியளிக்கிறார். இங்கு எண்கோண வடிவக் குளம், பல அடுக்குப் படிக்கட்டுகளோடு, கலை நயத்தோடு, அமைக்கப்பட்டிருக்கிறது.

திருமயம் கோட்டையைச் சுற்றிப்பார்க்கச் செல்வோர் இரண்டு கோயில்களுக்கும் சென்று வரலாம். அதோடு, எண்கோணக் குளத்தின் அழகைக் கண்டு ரசிக்கலாம். கோடம்பாக்கத்தினரின் முக்கிய சூட்டிங் ஸ்பாட் என்றும் திருமயம் கோட்டையைக் கூறலாம். 'முன் பனியா, முதல் மழையா' பாடல் தொடங்கி ஏராளமான பாடல்கள் இங்கு படமெடுக்கப்பட்டிருக்கின்றன.

திருமயம் கோட்டை கோயில்
திருமயம் கோட்டை கோயில்
திருமயம் கோட்டைக்குச் செல்ல ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் கோட்டை திறந்திருக்கிறது. தினமும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கோட்டையைக் காண வருகின்றனர்.

எப்படிச் செல்வது?

திருமயம் கோட்டை திருச்சியிலிருந்து 72 கி.மீ தொலைவிலும், திருச்சி விமான நிலையத்திலிருந்து 61 கி.மீ தொலைவிலும் இருக்கிறது. திருச்சி - ராமேஸ்வரம் மார்க்கமாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் திருமயம் வழியாகவே செல்கின்றன. தஞ்சாவூர் - மதுரை செல்லும் பேருந்துகள் திருமயத்தில் நின்று செல்கிறது. திருமயம் பேருந்து நிறுத்தத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கோட்டை. சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் வந்தால் பெரும்பாலும் காரில் வந்து செல்வது நலம்.

விகடன் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சின்ன quiz...

விகடன்
விகடன்

விகடன் நிறுவனர் தினம்: Quizல் கலந்து கொள்ள க்ளிக் செய்க... https://bit.ly/3DjBBxi

அடுத்த கட்டுரைக்கு