Published:Updated:

திருச்சி ஹேங்அவுட்: காணக் கண் கோடி வேண்டும்! திருச்சி வண்ணத்துப்பூச்சிப் பூங்காவில் என்ன ஸ்பெஷல்?

வண்ணத்துப்பூச்சி பூங்கா

ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூர் நடுக்கரை கிராமத்தில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே 27 ஏக்கர் பரப்பளவில் இப்பூங்கா அமைந்துள்ளது. இது தமிழ்நாடு அரசின் வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது.

திருச்சி ஹேங்அவுட்: காணக் கண் கோடி வேண்டும்! திருச்சி வண்ணத்துப்பூச்சிப் பூங்காவில் என்ன ஸ்பெஷல்?

ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூர் நடுக்கரை கிராமத்தில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே 27 ஏக்கர் பரப்பளவில் இப்பூங்கா அமைந்துள்ளது. இது தமிழ்நாடு அரசின் வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது.

Published:Updated:
வண்ணத்துப்பூச்சி பூங்கா
திருச்சி என்றாலே 'முக்கொம்பு', 'மலைக்கோட்டை', 'கல்லணை' போன்ற சுற்றுலா தளங்கள்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், திருச்சியில் புதிதாக களைகட்டும் பகுதியாக மாறியிருக்கிறது 'வண்ணத்துப்பூச்சி பூங்கா'. குடும்பம் குடும்பமாய் குழந்தைகளை அழைத்துவரும் சுற்றுலாத்தலமாக இது உருவெடுத்திருக்கிறது. தற்போது, கொரோனா ஊரடங்கால் மக்கள் கூட்டமின்றி கலையிழந்து காணப்படுகிறது.
வண்ணத்துப்பூச்சி பூங்கா
வண்ணத்துப்பூச்சி பூங்கா

மனிதனின் உணவுப்பொருள்களில் தாவரங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு பல்வேறு பூச்சி இனங்கள் உதவிபுரிந்தாலும், இதில் வண்ணத்துப்பூச்சிக்கு முக்கியமான பங்குண்டு. பெருகிவரும் நகரமயமாதல் காரணமாக, வனப்பகுதிகளின் பரப்பளவு குறைந்துவரும் இந்தக் காலகட்டத்தில் அழிந்துவரும் வண்ணத்துப்பூச்சி இனங்களைப் பாதுகாக்கவும், அதன் இனத்தைப் பெருக்கவும், திருச்சியில் 'வண்ணத்துப்பூச்சி பூங்கா' அமைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு, ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவாக இதனை அறிவித்தார். தற்போது இயற்கை அழகு மிகுந்த சுற்றுலா இடமாக இது மாறியுள்ளது. இங்கு, இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் ஆராய்ச்சி மற்றும் சுற்றுலாவுக்காக அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர்.

வண்ணத்துப்பூச்சி பூங்கா
வண்ணத்துப்பூச்சி பூங்கா

ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூர் நடுக்கரை கிராமத்தில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே 27 ஏக்கர் பரப்பளவில் இப்பூங்கா அமைந்துள்ளது. இது தமிழ்நாடு அரசின் வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது. எப்போதும் பசுமையாகக் காட்சியளிக்கும் இந்த வண்ணத்துப்பூச்சிப் பூங்காவுக்கு ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலாப் பிரியர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் குழந்தைகளோடு குடும்பங்கள் என அனைத்து தரப்பினரும் வர, இது ஒரு முழுமையான சுற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது.

இப்பூங்காவின் வாயிலில் ஒரு செயற்கை நுழைவு வாயில் வடிவமைத்திருக்கிறார்கள். அதன் உள்ளே நுழைந்தால் நீர் சலசலத்து விழும் ஓசை. ஆமாம், நுழைவு வாயிலின் பின்புறத்தில் ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி... அதன் எதிரே, ஒரு வட்ட வடிவ மேஜையில் மிகப் பெரிய செயற்கைப் பட்டாம்பூச்சி! இப்பூங்காவில் 46க்கும் மேற்பட்ட வகை பட்டாம்பூச்சிகள் இருப்பதாகத் தெரிகிறது.

வண்ணத்துப் பூச்சிகள்
வண்ணத்துப் பூச்சிகள்

புல்வெளிகளும், பூச்செடிகளும் அவற்றில் பூத்துக் குலுங்கும் பூக்களும் உங்கள் மனதில் மகிழ்ச்சி வெள்ளத்தினை ஏற்படுத்துகின்றன. இரண்டு பாதைகள் தெரிய, எப்புறம் செல்வது என்று சற்றே குழப்பம். இடது புறம், ஆங்காங்கே சில பதாகைகள் - பூக்கள்/செடிகளின் பெயர்கள், பட்டாம்பூச்சிகளின் வகைகள், அவற்றின் பெயர்கள் எனப் பார்வையாளர்களுக்குத் தகவல் தெரிந்துக்கொள்ளும் வகையில் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு இடமாகப் பார்த்து ரசித்தபடி செல்வார்கள் சுற்றுலாப்பயணிகள்.

இப்பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகள், முட்டையிடுதல், புழு வளருதல், தேன் குடித்தல் என அதன் வாழ்க்கை சுழற்சிச் சக்கரத்துக்காக ஒவ்வொரு தாவரத்தையும் தேர்வுசெய்யும். அப்படி வரும் வண்ணத்துப்பூச்சிகள் வருகைக்காக, பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு மிகவும் பிடித்த 'சின்யா', 'டிரைக்டரி', 'கொரட்டல் ஏரியா' 'பென்டாஸ்', 'கொன்றை', 'மேரி கோல்டு பூச்செடிகள்', 'செண்பக மரம்', 'மகிழ மரம்' எனச் சுமார் முண்ணூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு வகை வகையான தாவரங்கள் உள்ளன.

வண்ணத்துப்பூச்சி பூங்கா
வண்ணத்துப்பூச்சி பூங்கா

பூச்செடிகளும், குழந்தைகள் விளையாட ஊஞ்சல்களும், வண்ணத்துப்பூச்சியின் பல்வேறு பருவங்களைக் எடுத்துக் காண்பிக்கும் மாதிரிகளும், பெரிய பெரிய வண்ணத்துப் பூச்சிகளின் மாதிரிகளும், வண்ணத்துப்பூச்சி வளர்ப்புக்கு உள் அரங்குகளும் அமைத்திருக்கிறார்கள். இங்கிருக்கும் செயற்கை நீரூற்றுகள், மனதை இலகுவாக மாற்றுகிறது.

கூடவே புல்வெளிகள், குழந்தைகள் விளையாடத் தனியிடம், கொஞ்சம் இளைப்பாறிக்கொள்ள மலைவாழ் மக்கள் வசிப்பதுபோல வடிவமைக்கப்பட்டிருக்கும் குடில்கள், பார்வையாளர்கள் வலம்வர தனி நடைபாதை என வருபவர்களின் வசதிக்கும் பல இடங்கள் இருக்கின்றன.

வண்ணத்துப்பூச்சி பூங்கா
வண்ணத்துப்பூச்சி பூங்கா

வண்ணத்துப்பூச்சிகளின் மூல உருவத்தில் குகை வழிப்பாதைகள், மரங்கள் மற்றும் செடிகளுடன் கூடிய நட்சத்திர வனம், புல்தரைகள், பல்வேறு நீர்த் தாவரங்கள் அடங்கிய குட்டைகள், பிரமாண்ட வண்ணத்துப்பூச்சி சிலைகள், என அனைத்தும் அசத்தல்.

வண்ணத்துப்பூச்சி பூங்கா
வண்ணத்துப்பூச்சி பூங்கா

பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகளில் தண்ணீர் பீய்ச்சி அடிக்க, அந்தத் தண்ணீர் பார்வையாளர்கள் மீது பனித்துளியைப் போல் விழுந்து பரவும். சுற்றுலாத் தலமாகவும், ஆய்வு மையமாகவும் விளங்கும் இந்தப் பூங்காவுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் 2,000-க்கும் மேற்பட்டோரும், வார நாட்களில் 800 பேருக்கும் மேல் வந்து செல்கின்றனர். அரசுப் பேருந்தை அதிகமாக இயக்கினால், பூங்காவுக்கு வருவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

மன அழுத்தம் குறைகிறது!

பட்டாம்பூச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. வளர்ந்த பின்னரும் நாம் பட்டாம்பூச்சியைப் பார்த்து ரசிக்க இப்போதும் தவறுவதில்லையே! எனவே, இங்கே வருவதால் மன அழுத்தம் குறைவதாகவும் சொல்கிறார்கள் சுற்றுலாப்பயணிகள்.

வண்ணத்துப்பூச்சி பூங்கா
வண்ணத்துப்பூச்சி பூங்கா

எவ்வளவு கட்டணம்?

இப்பூங்காவில் நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு 10 ரூபாயும், சிறியவர்களுக்கு 5 ரூபாயும் வசூலிக்கிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்கள், கல்லூரியில் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் குழுவாக சீருடையுடன் மற்றும் அடையாள அட்டையுடன் வந்தால் கட்டணம் கிடையாது. திருமண போட்டோ ஷூட் என்றால் போட்டோ கேமராவிற்கு 500 ரூபாயும், வீடியோ கேமராவிற்கு 1,000 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனம் நிறுத்துவதற்கும் தனி கட்டணம் உண்டு.

வண்ணத்துப்பூச்சி பூங்கா
வண்ணத்துப்பூச்சி பூங்கா

திறந்திருக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை.

வண்ணத்துப்பூச்சி பூங்கா
வண்ணத்துப்பூச்சி பூங்கா

எப்படிச் செல்வது?

திருச்சி ஜங்சனிலிருந்து 15 கி.மீ தூரத்திலும், சத்திரம் பேருந்துநிலையத்திலிருந்து 13 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது இந்தப் பூங்கா. அதேபோல், முக்கொம்பிலிருந்து இது 6 கி.மீ. தூரம். பொதுப்போக்குவரத்து குறைவு. சொந்த வாகனத்தில் செல்வது கூடுதல் வசதி.

சென்று வர ஒரு நபருக்கு உணவுடன் சேர்த்து ரூ.50 இருந்தால் போதுமானது. லாக்டௌன் முடிந்ததும் ஒரு விசிட் போயிட்டு வாங்க!