Published:Updated:

திருச்சி ஹேங்க்அவுட்: சமணர் படுக்கைகள், குகை ஓவியங்கள், சிலிர்க்க வைக்கும் சித்தன்னவாசல் சிறப்புகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சித்தன்னவாசல் குடைவரை குகைக்கோயில்
சித்தன்னவாசல் குடைவரை குகைக்கோயில்

சித்தன்னவாசல் ஓவிய வேலைப்பாட்டின் உயிர் நாடியே இந்தத் தாமரைத் தடாகம்தான். அஜந்தா ஓவியங்களிலும், பல்லவர் கால ஓவியங்களிலும் காணப்படும் அழகினையும் சிறப்புகளையும் சித்தன்னவாசல் ஓவியங்களில் நாம் பார்க்க முடிவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருச்சியிலிருந்து 49 கி.மீ தொலைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது சித்தன்னவாசல். இங்குள்ள குகைக்கோயில் ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. தென்னிந்தியாவின் அஜந்தா குகை என்றும் சித்தன்னவாசல் வர்ணிக்கப்படுகிறது. இங்குள்ள கல்லறைகள், முதுமக்கள் தாழிகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியங்கள் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிறப்புகளைத் தன்னகத்தே புதைத்து வைத்துக்கொண்டிருக்கிறது.
சமணர் படுக்கை
சமணர் படுக்கை

சமணர் படுக்கை

சித்தன்னவாசல் மலையில் கிழக்கு முகப்பில் அமைந்திருக்கும் இயற்கையாகவே அமைந்த குகையின் பெயர்தான் ஏழடிப்பட்டம். மலையில் மடிப்பு மாதிரியான ஒரு அமைப்பு உடையது. இங்கு சமணத் துறவிகள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் தென்படுகின்றன. ஏழடிப்பட்டம், சமணர் படுக்கை என்றும் கூறப்படும் இந்த இடத்திற்கு மலையின் மேற்குப் பகுதியிலிருந்து மலைக்கு மேலே ஏற படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்குள்ள படிகளில் ஏறிக் கிழக்குப் பக்கமாக நகர்ந்தால் ஏழடிப்பட்டம் என்று சொல்லக்கூடிய குகை வந்துவிடும்.

குகைக்குள் நுழைந்த உடனே ஆங்காங்கே பாறைகளில் செதுக்கப்பட்ட படுக்கைகள் நம் கண்ணில் படுகின்றன. குகையின் தரையில் 17 படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. இவை வழவழப்பாகவும் ஆக்கப்பட்டுள்ளன. படுக்கைகளின் ஒரு பகுதியில் தலையணை பயன்படுத்துவது போன்ற அமைப்புடனும் மேடாக அமைத்துள்ளனர். படுத்துத் தூங்குவதற்கென்றே தனித்தனியாக ஏராளமான படுக்கைகளை ஏற்படுத்தியிருக்கின்றனர். இங்குள்ள சில படுக்கைகளைச் சுற்றிலும் கல்வெட்டுகள் இருக்கின்றன. அங்கிருந்தவர்களைப் பற்றிய தகவல்களும் நமக்குக் கிடைக்கின்றன. சில படுக்கைகளில் ஒன்றிற்கும் மேற்பட்டோர்களின் குறிப்புகள் கிடைத்திருப்பதால், ஒருவர் பின் ஒருவர் என ஏராளமானோர் இங்கு வந்து தங்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

சமணர் படுக்கை
சமணர் படுக்கை
கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகளும் இங்கு பொறிக்கப்பட்டுள்ளன. கி.பி 10-ம் நூற்றாண்டு வரை இங்கு சமணர்கள் தங்கியிருக்க வேண்டும் என்பதற்கான சான்றுகள் இங்குள்ள கல்வெட்டுகளின் மூலம் அறியமுடிகிறது.

குகைக்கோயில்

மலையின் மேற்குப் பக்கம் நோக்கி நடந்தால், அறிவர் கோயில் என்னும் சமண குகைக்கோயில் அமைந்துள்ளது. கருங்கல் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள இந்தக் குகைக் கோயில் 160சதுர அடி அளவுள்ள முக மண்டபத்தையும், 100 சதுர அடி அளவுள்ள சிறிய ஒரு கருவறையும் கொண்டது. முன் மண்டபத்தின் முகப்பில் 2 தூண்கள் உள்ளன. மண்டபத்தின் வடக்குச் சுவர் மாடத்தில் ஒரு சமண ஆசிரியரின் சிற்பமும் காணப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிற்பங்களைவிட, இங்கு வரையப்பட்டுள்ள ஓவியங்களே நம் மனதைக் கவர்ந்திழுக்கின்றன. சித்தன்னவாசல் ஓவியமும் இந்தச் சிற்பங்களும் ஒரு பாறையைக் குடைந்து அமைக்கப்பெற்றவை.

குகைக்கோயிலின் தரை நீங்கலாக மற்ற பகுதிகள் அனைத்திலும் ஓவியங்கள் தீட்டப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. குகைக்கோயிலின் முன் மண்டபத்தின் விதானத்தை அண்ணாந்து பார்த்தால் அங்கு சித்திரிக்கப்பட்டுள்ள தாமரைத் தடாகம் நம் கண்ணிற்குள் விரிந்து நம் சிந்தனையைத் தூண்டுகிறது. சித்தன்னவாசல் ஓவிய வேலைப்பாட்டின் உயிர் நாடியே இந்தத் தாமரைத் தடாகம்தான்.

சித்தன்னவாசல் ஓவியங்கள்
சித்தன்னவாசல் ஓவியங்கள்

பசுமையான இலைகளுடன் தாமரையும் அல்லியும் இந்தத் தடாகத்தில் பூத்துக் குலுங்குகின்றன. பல விதமான மீன்கள் அங்குமிங்கும் ஓடி விளையாடுகின்றன. யானைகள் நீரைக் கலக்கிச் சுழித்திருக்கின்றன. சுற்றுச்சூழலை மறந்து அசைபோடும் எருமை மாடுகளின் தோற்றம் இயல்பாகத் தென்படுகிறது. துள்ளிக் குதிக்கும் மீன்கள், அன்னம், வாத்து போன்ற பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் குலாவிக் கொண்டிருக்கின்றன. இப்படித் தடாகம் முழுவதும் நம் கண்ணிற்குப் புலப்படும் ஓவியங்கள் உயிரோட்டம் நிறைந்ததாக இருக்கின்றன. குகைக்கோயில் முன் மண்டபத்தின் மேற்பரப்பில் வரையப்பட்டுள்ள ஓவியத்தை எப்படி வரைந்திருப்பார்களோ என்று எண்ணும்போது நமக்கு வியப்பு ஏற்படுகிறது.

இந்த ஓவியங்கள் சமணர்களால் மூலிகைகளில் தயாரிக்கப்பட்ட பல வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்டிருப்பது மேலும் நமக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. கருவறையின் உள் மண்டபத்திலும் ஓவியம் வரையப்பட்டிருக்கிறது.

முன் மண்டபத்தின் இடதுபக்கத் தூணில் நடன மங்கையின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. அவரது இடக்கை பெருமிதத்துடன் மார்புகளின் குறுக்கே நீட்டிக்கொண்டிருக்கிறது. வலக்கையில் உள்ளங்கையும் விரல்களும் மேல்நோக்கி இருக்கின்றன. இடக்கையில் விரல்கள் அழிந்து காணப்படுகின்றன. வலப்பக்கத் தூணில் நடன மங்கை தனது இடக் கையைத் துதிக்கைபோல் வளைத்திருக்கிறாள். இவளது முகம் சோகமாக இருக்கிறது.

சுற்றுலா பயணிகள்
சுற்றுலா பயணிகள்

இங்குள்ள ஓவியங்கள் இளங்கெளதமன் என்பவரால் கி.பி 9-ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. “சித்தன்னவாசல் ஓவியங்கள், பல்லவர் காலத்து ஓவியங்கள்" என்று வரலாற்று ஆசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் கூறிவந்த நிலையில். தற்போது கிடைத்துள்ள கல்வெட்டுகளிலிருந்து அந்த ஓவியங்கள் பாண்டியர் காலத்தவை என்று தெரியவந்துள்ளது.

கருவறை உள் மண்டபத்திற்குள் சென்று, அங்கு அடிவயிற்றிலிருந்து ‘ம்ம்ம்’ என்று நீண்ட சப்தம் எழுப்பினால் அது ஒருவித அதிர்வை நம் உடம்பில் உண்டு பண்ணிச் சிலிர்க்கவைக்கிறது. நல்ல அனுபவம் அது. ஓவியங்களைப் பார்த்து முடிந்த கையோடு செய்து பார்க்கலாம். கி.பி ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தா ஓவியங்களிலும், பல்லவர் கால ஓவியங்களிலும் காணப்படும் அழகினையும் சிறப்புகளையும் சித்தன்னவாசல் ஓவியங்களில் நாம் பார்க்க முடிவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தென்னிந்தாவைப் பொறுத்தவரை சித்தன்னவாசல் மட்டுமே முதற்கால சமண ஓவியங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

சமணர் படுக்கைகள், குகை ஓவியங்கள் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் சித்தன்னவாசல் தற்போது சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டிருக்கிறது.

சிறுவர் பூங்கா, தமிழன்னை சிலை, மகாவீரர் சிலைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இங்கு இசை நீரூற்று ஒன்று உருவாக்கப்பட்டது. தற்போது செயல்பாட்டில் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் 10 அடி ஆழம் உள்ள செயற்கைக் குளத்தை உருவாக்கி படகுக் குழாமாக மாற்றப்பட்டுள்ளது.

படகுக் குழாம்
படகுக் குழாம்

தற்போது படகுக் குழாம் திறக்கப்படவில்லை, மூடிக்கிடக்கிறது. தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளதால், ஆண்டு முழுவதும் சித்தன்னவாசலைச் சென்று பார்க்கலாம். தற்போது, கொரோனா ஊரடங்கால் சித்தன்னவாசலில் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் சித்தன்னவாசல் திறந்திருக்கிறது. சித்தன்னவாசலுக்குள் உள்ளே செல்வதற்குச் சுற்றுலாத்துறை உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் ரூ.10 வசூலிக்கப்படுகிறது. அதன்பின்பு குகைக்கோயில் ஓவியம், சமணர் படுக்கைகளைக் காண ரூ.50 வரையிலும் தொல்லியல் துறை சார்பில் பணம் வசூலிக்கப்படுகிறது.

பிரமிக்க வைக்கும் சித்தன்னவாசல் குகை ஓவியங்களைப் புகைப்படங்கள் எடுக்க அனுமதிப்பதில்லை. ஏழடிப்பட்டம் சமணர் படுக்கையைப் பார்க்கச் செல்பவர்கள் பெரும்பாலும், காலை அல்லது மாலை நேரத்தில் மலையேறி, இறங்குவதை வைத்துக்கொள்ளலாம்.மதிய நேரத்தைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவது நல்லது. குறிப்பாக, சமணர் படுகை வயதானவர்களுக்குக் கொஞ்சம் ரிஸ்க் என்பதால், குகைக்கோயில் ஓவியத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடலாம். வரலாற்றின் ஆச்சrயங்களை அறிய ஆவல் கொண்டிருப்பவர்களுக்கு சித்தன்னவாசல் சுற்றுலாத்தலம் பெருந்தீனி போடும்.

சித்தன்னவாசல் குடைவரை குகைக்கோயில்
சித்தன்னவாசல் குடைவரை குகைக்கோயில்

எப்படிச் செல்வது?

திருச்சியிலிருந்து 49 கி.மீ தொலைவில் இருக்கிறது சித்தன்னவாசல். புதுக்கோட்டையிலிருந்து விராலி மலை செல்லும் சாலையில், 16 கி.மீ தொலைவில் இருக்கிறது சித்தன்னவாசல். புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் சித்தன்னவாசல் வழியாகச் செல்கிறது. பேருந்து மூலம் வரும் சுற்றுலாப் பயணிகள் சித்தன்னவாசல் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரம் வரையிலும் உள்ளே நடந்தால்தான் நாம் குகை ஓவியங்களை ரசிக்க முடியும். சுற்றுலாப் பயணிகள் டூவிலர் அல்லது காரில் சென்று வருவது நலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு