Published:Updated:

திருச்சி ஹேங்கவுட்: ஆகாய கங்கை, மாசிலா அருவி, ஆன்மிக தலங்கள் - இது கொல்லிமலை டூர் டைரி!

திருச்சி ஹேங்கவுட் - கொல்லிமலை

மற்ற மலை வாசஸ்தலங்களை போல் இல்லாமல் எங்கும் பசுமை கொஞ்சும் இந்தக் கொல்லிமலையில் அருவிகள், ஆன்மிக தலங்களைத் தாண்டி சித்தர்கள் வாழ்ந்த குகைகள், மூலிகைத் தோட்டங்கள் என நாம் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம்.

திருச்சி ஹேங்கவுட்: ஆகாய கங்கை, மாசிலா அருவி, ஆன்மிக தலங்கள் - இது கொல்லிமலை டூர் டைரி!

மற்ற மலை வாசஸ்தலங்களை போல் இல்லாமல் எங்கும் பசுமை கொஞ்சும் இந்தக் கொல்லிமலையில் அருவிகள், ஆன்மிக தலங்களைத் தாண்டி சித்தர்கள் வாழ்ந்த குகைகள், மூலிகைத் தோட்டங்கள் என நாம் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம்.

Published:Updated:
திருச்சி ஹேங்கவுட் - கொல்லிமலை
கொல்லிமலை - இந்தப் பெயரின் பின்னே ஒளிந்திருக்கும் அதிசயங்களும் ஆச்சர்யங்களும் அழகியலும் ஏராளம். பயண காதலர்களோ, ஆன்மிகவாதிகளோ, இயற்கை விரும்பிகளோ யாராகினும் தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் செல்ல வேண்டும் என நினைக்கும் இடங்களில் நிச்சயம் கொல்லிமலை இடம்பிடித்திருக்கும்.

மாசுக்கே இடமளிக்காமல் மொத்தமும் மூலிகையால் நிறைந்த வனம், பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகள், அங்கங்கே கொட்டும் அருவிகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள் என இதன் பெருமைகளை அடுக்கி கொண்டே போகலாம். அடுக்கி கொண்டே இருந்தால் போதுமா? நேரில் போக வேண்டாமா என மனது கேட்க, ஒரு நாளை ரம்மியமாக செலவழிக்க காலை 6 மணி போல திருச்சியில் இருந்து கொல்லிமலையை நோக்கி பயணத்தைத் தொடங்கினோம்.

திருச்சியில் இருந்து இரண்டு மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் சேந்தமங்கலம் என்னும் ஊரை அடைந்துவிட்டோம். அங்கிருந்து கொல்லிமலையை அடைய காரவல்லி என்ற ஊருக்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து கொல்லிமலைக்கு 72 கொண்டை ஊசி வளைவுகளைக் கடக்க வேண்டும் என்பதால் காலை உணவை சேந்தமங்கலத்திலே முடித்து கொண்டு, மேற்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். 12 கிலோமீட்டரில் காரவல்லியை அடைய, அங்கிருக்கும் செக்போஸ்டை கடந்து மலையின் மேலே ஏற ஆரம்பித்தோம். மேல ஏற ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, அங்கு வருடிச்செல்லும் காற்றின் குளுமை நம்மை கைபிடித்து கூட்டிட்டு போக ஆரம்பித்தது.

ஒவ்வொரு வளைவும் மலையின் அழகை நமக்கு உணர்த்தி கொண்டே இருக்க, ஆகாய கங்கையையும், மாசிலா அருவியையும் மனதில் நிறுத்திகொண்டே செம்மடை என்னும் ஊரை அடைந்தோம். இங்கிருந்துதான் கொல்லிமலையின் அழகைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தோம். அறப்பளீஸ்வரர் கோயில் என்னும் பல நூற்றாண்டு கால அற்புதத்தை முதலில் பார்த்துவிட்டு சிறிது தொலைவில் இருக்கும் ஆகாய கங்கையை பார்க்கக் கிளம்பிவிட்டோம்.

மொத்தம் 1200 படிக்கட்டுகள். அருவிக்கு நம்மை அழைத்துச் செல்பவர்கள் நாம் செல்லவிருக்கும் வழி குறித்தும், படிக்கட்டுகளில் இறங்கி, ஏறுவது குறித்தும் ஐந்து நிமிடத்திற்கும் மேலாக விளக்கினர். அதற்கு சரி என்பவர்கள் மட்டுமே கீழே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இரண்டு பக்கமும் மலை, நடுவில் செல்லும் படிக்கட்டு, தூரத்தில் கேட்கும் அருவியின் சத்தம், துணைக்கு வரும் மக்கள் எனப் படிக்கட்டின் பயணம் நம்மை நிச்சயம் சந்தோஷப்படுத்தும். பாதி படிக்கட்டிலிருந்து பார்க்க, அங்கங்கே கொட்டிக் கிடக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் அரசியான கொல்லிமலையின் அழகு நம்மை வசீகரித்தது. ரசித்து கொண்டே கீழே செல்ல, 300 அடியில் பொத்தென்று விழும் நீரில் குளிக்க அப்படியொரு ஆனந்தம். கூடவே அந்த மூலிகையின் வாசம்! ஆனால், அருவியிலிருந்து மேலே வர சற்று சிரமப்பட வேண்டியிருந்தது.

அடுத்து அங்கிருந்து மாசிலா அருவிக்குச் செல்லலாம் என முடிவெடுத்து கிளம்பிவிட்டோம். வழியிலேயே எட்டுக்கை அம்மன் கோயிலைத் தரிசித்துவிட்டு தொடர்ந்து செல்லும் வழியில் சமவெளி போல வயலும் நெற்கதிரும் எனக் கண்களுக்கு விருந்தாக இருந்தன. மாசிலா அருவி, ஆகாய கங்கையை போல நம்மை அலைக்கழிக்காது என்பது தெரியவே மனதுக்கு இதமாக இருந்தது. மதிய உணவு சாப்பிடவில்லை என்பதால் அங்கு வாழும் மக்களால் உணவாகத் தரப்படும் பணியாரம் நம் பசியை அடக்கியது.

மற்ற மலை வாசஸ்தலங்களை போல் இல்லாமல் எங்கும் பசுமை கொஞ்சும் இந்தக் கொல்லிமலையில் அருவிகள், ஆன்மிக தலங்களைத் தாண்டி சித்தர்கள் வாழ்ந்த குகைகள், மூலிகைத் தோட்டங்கள் என நாம் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம்.

கூடவே இங்கு டிரிப் அடிக்கிறோம் எனத் தெரிந்தாலே உற்றார், உறவினர், நண்பர்கள் என ஒரு பெரும் படையே கண்டிப்பாக மசாலா பொருள்களையும், மிளகையும் வாங்கி வரச் சொல்வார்கள். அந்த அளவிற்கு இங்கு கிடைக்கும் சமையல் பொருள்களின் தரம் இருக்கும். ஆகாய கங்கைக்கு இதுதான் சீசன் என்று இல்லாமல் எப்போதும் அருவி கொட்டுவதால் எப்போது நினைத்தாலும் தாராளமாக இங்கு நீங்கள் வரலாம். ஆகஸ்ட்டில் வருபவர்கள் மற்றுமொரு சிறப்பாக வல்வில் ஓரிக்கு நடத்தப்படும் விழாவினை ரசிக்கலாம்.

இயற்கையின் கடினமான பிடியிலும், வாகன இரைச்சலிலும் வருடம் முழுவதும் சிக்கித் தவிக்கும் நம்மில் பலருக்கு கொல்லிமலை செல்லும் ஒரு நாள் உண்மையிலேயே ஆசுவாசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. திருச்சியில் இருப்பதால் ஒரு நாளில் சென்று வந்துவிடாலாம். வெகு தொலைவில் இருந்து வருபவர்களுக்கு சிரமம் என்பதால் அவர்கள் ஒரு நாள் தங்கி கொல்லிமலையை ரசிப்பது உகந்தது.